வெளிச்சக்கீற்று 1 – 1

அத்தியாயம் 1

 

 

உச்சி வெயில் கொளுத்தி எரிக்கும் மத்தியானப் பொழுது. ஸ்கூட்டியை பெரும் பதட்டத்துடன் வீடு நோக்கிச் செலுத்திக்கொண்டிருந்தாள் யசோதினி. சின்ன மகளுக்கு உடல் அனலாகக் கொதிக்கிறது, மூச்சுப் பேச்சில்லாமல் கிடக்கிறாள் என்று அன்னை அழைத்துச் சொன்ன நிமிடத்திலிருந்து அவள் உயிர் அவளிடம் இல்லை.

 

காலையில் அவள் வேலைக்குப் புறப்படுகையில் உடல் இலேசாகச் சுட்டதுதான். சிரப் கொடுத்துவிட்டு வந்திருந்தாள். பார்மசியில் வேலை செய்துகொண்டிருந்த நேரம் முழுவதும் அவளின் நினைவுதான். அப்படி இருக்கையில்தான் கமலாம்பிகையின் அழைப்பு வந்திருந்தது. கடந்த நான்கு மணி நேரத்தில் அப்படி என்னாயிற்று? கொரோனாவோ? இல்லை… மேலே யோசிக்கக்கூட முடியாமல் மனம் பதறிப்போயிற்று.

 

அவர்கள் வசிப்பது வவுனியா, பூவரசங்குளத்தில். அவள் வேலை பார்ப்பது வவுனியா டவுனில். இறக்கையா இருக்கிறது, அடுத்த நிமிடமே பறந்து செல்ல? அவள் வீடு சென்று சேருவதற்கே முற்பது நிமிடங்களாயிற்று. உடல் சுட, உறக்கமா மயக்கமா என்று தெரியாமல் அசைவற்றுக் கிடந்த மகளைக் கண்டு கண்ணீர் பெருகிற்று.

 

“விடிய நல்லாத்தானேம்மா இருந்தா?” ஓட்டோவுக்கு அழைத்து அவசரமாக வரச்சொல்லிவிட்டு, சின்னவளுக்குத் தேவையானவற்றை எல்லாம் ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டே வினவினாள்.

 

“நீங்க போனபிறகு கொஞ்சம் பரவாயில்லாமத்தானம்மா இருந்தவா. கஞ்சியும் குடிக்கக் குடுத்து, நித்திரையாக்கிப்போட்டுத்தான் உடுப்புத் தோச்சுப் போடப் போனனான். எழும்பிற நேரமாகியும் எழும்ப இல்லையே எண்டு வந்து பாத்தா அணத்திக்கொண்டு இருக்கிறா.” அவளுக்குத் தேவையானவற்றை எடுத்து வைப்பதற்கு உதவிக்கொண்டே சொன்னார் கமலாம்பிகை.

 

சிந்தூரிக்கு மூன்று வயது; ஒரு இடத்தில் இராமல் துறுதுறு என்று திரிபவள். அப்படியானவள் அசைவற்றுக் கிடப்பது நெஞ்சை என்னவோ செய்தது. கவலைப்படவோ கண்ணீர் வடிக்கவோ நேரமில்லை. அவளைத் தூக்கி ஒற்றைத் தோளில் போட்டுக்கொண்டு, மறக்காமல் பேர்சையும் கைப்பேசியையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடினாள். அவள் எடுத்து வைத்த பையோடு தானும் பின்னால் விரைந்தார் கமலாம்பிகை.

 

பத்து நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று சொன்ன ஓட்டோ இன்னும் வரவில்லை. பரிதவிப்புடன் வீதியின் இருபுறமும் பார்த்தாள். சின்னவள் அணத்திக்கொண்டே இருந்தாள். அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தாள்.

 

இதற்குள், அவளின் தமக்கை நிசாந்தினியின் சின்னவள் சிணுங்கும் சத்தம், வீட்டுக்குள் இருந்து கேட்டது.

 

“பாக்கை இதில வச்சிட்டுப் போங்கம்மா. ஓட்டோ இப்ப வந்திடும். நான் போவன்.”

 

வேறு வழியற்று அவரும் உள்ளே ஓடினார். இல்லாவிட்டால் சின்னவளின் சத்தத்தில் நான்கு வயதான நிசாந்தினியின் மூத்த மகனும் எழுந்துவிடுவான்.

 

இன்னுமே ஓட்டோ வந்த பாடில்லை. அவசரமாக வரச் சொல்லியும் இப்படியா பொறுப்பற்று நடப்பது என்று மனம் பொருமிற்று. இதற்குள், அவளின் அத்தான் ஆனந்தனின் வேன் வந்து நின்றது. அவனைக் கேட்போமா என்று ஒரு நொடி நினைத்தாலும் வேண்டாம் என்று எண்ணியபடி, அவன் வாகனத்தை உள்ளே கொண்டு செல்வதற்கு வசதியாக, கேட்டை விட்டுத் தள்ளி நின்றாள்.

 

அவள் எண்ணத்திற்கு மாறாக வேனை அங்கேயே நிறுத்திவிட்டு, “ஏன் இங்க நிக்கிறீங்க? பிள்ளைக்கு என்ன?” என்று விசாரித்தான் அவன்.

 

“சிந்துக்குக் காய்ச்சல் காயுது அத்தான். மூச்சுப் பேச்சில்லாமக் கிடக்கிறா. அதுதான் ஓட்டோவப் பாத்துக்கொண்டு நிக்கிறன்.” சொல்லும்போதே குரல் உடைந்து அழுகை வந்தது. குழந்தை கொஞ்சமேனும் நன்றாக இருந்திருக்க அவளே ஸ்கூட்டியில் கூட்டிக்கொண்டு போயிருப்பாள். இப்படி, இன்னொருவரை நம்பி நிற்கும் நிலை நெஞ்சை அறுத்தது.

 

“பிறகு என்னத்துக்கு என்னைக் கூப்பிடேல்லை? ஒரு ஃபோன் போடமாட்டீங்களா? வாங்க, வேன்லயே போகலாம்.” தாமதிக்காமல் வாகனத்தை ரிவர்ஸ் எடுத்துத் திருப்பியபடி சொன்னான் அவன்.

 

“இல்ல அத்தான். இப்ப ஓட்டோ வந்திடும்…” சொன்னவளுக்கே அந்த நம்பிக்கை இல்லை. பத்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லியே பத்து நிமிடங்களுக்கு மேலாயிற்று.

 

அவனுக்குக் கோபம் வந்தது. “உங்களுக்கு என்ன விசர் பிடிச்சிட்டுதோ? என்ர குரல் கேட்டும் பெரியப்பா எண்டு ஓடி வராம இருக்கிறதிலேயே தெரியுது, அவவுக்கு நல்ல காய்ச்சல் எண்டு. இதில இன்னும் வராத ஓட்டோவப் பாத்துக்கொண்டு நிப்பீங்களா? வேகமாப் போகலாம். வந்து ஏறுங்கோ!” என்று அதட்டினான்.

 

அதற்குள், அங்கே சின்னவளைத் தட்டிக் கொடுத்துவிட்டு ஓடிவந்த கமலாம்பிகைக்கும் மருமகன் சொல்வதே சரியாகப் பட்டது.

 

“ஓமாச்சி, ஓட்டோவப் பாத்துக்கொண்டு நிக்காம அத்தானோட போங்கோமா. நேரம் போக போகப் பயமா இருக்கு. பிடிவாதம் பிடிக்கிற நேரமில்லை இது. வரேக்க தூரியையும் கூட்டிக்கொண்டு வந்திடலாம்.”

 

அதற்குமேல் மறுக்க அவளுக்கும் தைரியமில்லை. அந்தளவில், சிந்தூரியின் தேகத்தில் சூடு ஏறிக்கொண்டே போயிற்று. பேசாமல் பின்னுக்கு ஏறி அமர்ந்தாள். மறக்காமல் பாக்கைத் தூக்கி அவள் காலடியில் வைத்துவிட்டார் கமலாம்பிகை.

 

அந்த நேரத்திலும் இந்தப் பயணம், புதிதாக என்ன பிரச்சனைகளைக் கொண்டு வரப் போகிறதோ என்றெண்ணி மனம் கலங்கிற்று.

 

வைத்தியசாலையில் சிந்தூரிக்கு அதிதீவிர வைரஸ் தொற்று என்பதில் வோட்டில் நிற்க வேண்டும் என்றனர். கடைசியில் ஆனந்தன்தான் மூத்தவள் தூரிகாவைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு, கமலாம்பிகை கொடுத்துவிட்ட அவளுக்கும் பிள்ளைக்குமான உடைகள் அடங்கிய பையைக் கொண்டுவந்து தந்தான். அவளுக்குச் சாப்பிடுவதற்கும் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனான்.

 

அந்த உணவு கேட்பாரற்று அப்படியே கிடந்தது.

 

இதற்குள் மாலையாகிப் போயிருந்தது. இன்னுமே கண் திறக்காமல் இருக்கும் மகளின் நிலை கண்டு மிகவும் பயந்தாள். என்னென்னவோ நினைவுகள் எல்லாம் வந்து அலைக்கழித்தன.

 

எத்தனை நாள்களுக்கு இங்கே நிற்க வேண்டி வருமோ, அதுவரை மூத்தவள் தாக்குப் பிடிப்பாளா, அக்காவின் குழந்தைகள் இருவரோடு சேர்த்துத் தூரிகாவையும் பார்க்க அம்மா என்ன பாடு படுவாரோ என்று ஓராயிரம் சிந்தனைகள்.

 

அடுத்தது வேலை. ஆறேழு வருடங்களுக்கு மேலாக வேலை செய்வதால் சொந்தப் பெண்ணைப் போன்றுதான் முதலாளி பார்த்துக்கொள்வார். நல்ல மனிதர். அவளுக்கென்று சில சலுகைகளும் உண்டு. அவளும் இதுதான் என் வேலை நேரம், இவ்வளவுதான் என் வேலை என்றில்லாமல் சொந்தக் கடைபோன்று உண்மையான அக்கறையோடு கவனித்துக்கொள்வதில், பொறுப்பனைத்தும் கிட்டத்தட்ட அவளிடம்தான். இப்படி, அத்தனையும் வசதியாக இருந்தாலும் அடிக்கடி விடுமுறை எடுத்தால் மட்டும் அவருக்குப் பிடிக்காது. காரணம், அவள் இல்லாவிட்டால் அந்த இடத்துக்கு அவர் நிற்கவேண்டும்.

 

இரண்டு சின்ன பிள்ளைகளை வைத்திருப்பவள், குறைந்தது மாதத்தில் இரண்டு முறையாவது விடுமுறை எடுத்துவிடுவாள். இந்தமுறை எத்தனை நாள்களாகுமோ தெரியாது. அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்கிற கலக்கத்துடனேயே அழைத்து, விடயத்தைச் சொன்னாள்.

 

“என்னம்மா நீங்க? இப்பிடி அடிக்கடி லீவு எடுத்தா நான் என்ன செய்ய எண்டு நீங்களே சொல்லுங்க பாப்பம்? இனி நீங்க வாறவரைக்கும் நான் நிக்கோணும்.” என்றார் அவர் அதுகொடுத்த எரிச்சலுடன். “ஆனா ஒண்டம்மா, இது இப்பிடியே தொடர்ந்தா உங்கட இடத்துக்கு வேற ஆளைத் தேடவேண்டி வந்திடும். பிறகு என்னைக் குறை சொல்லக் கூடாது. யோசிச்சு நடவுங்கோ! அவ்வளவுதான் சொல்லுவன்” என்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்திருந்தார்.

 

அந்தச் செய்கையில் அவளுக்கு ஒருமாதிரி ஆகிப்போனது. வேறு வழியில்லை. இதையெல்லாம் கடந்துதான் வரவேண்டும். ஒரு பெருமூச்சுடன் மீண்டும் வந்து மகளருகில் அமர்ந்துகொண்டாள்.

 

கார்மெண்ட்சில் வேலை பார்க்கும் நிசாந்தினி, வேலையை முடித்துக்கொண்டு இவளைப் பார்க்க வந்தாள். வந்தவளின் முகம் சரியில்லை. இவளுக்கு முகம் கொடுக்கவும் இல்லை. சிந்தூரியின் அருகில் அமர்ந்து, அவளை வருடிக்கொடுத்தாள். அதுவே, இவளின் அடிவயிற்றைக் கலக்கப் போதுமாக இருந்தது.

 

“நான் அத்தானை எதுவும் கேக்கேல்லை அக்கா. ஓட்டோக்குப் பாத்துக்கொண்டு நிக்க அத்தானாத்தான் வற்புறுத்திக் கூட்டிக்கொண்டு வந்தவர். பிள்ளை கிடந்த கிடையப் பாத்த பயத்தில என்னாலயும் வேண்டாம் எண்டு சொல்லேலாமப் போயிற்றுது.” தானே முந்திக்கொண்டு சொன்னாள்.

 

“இப்ப என்னத்துக்கு என்னட்ட இதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறாய்? உன்னட்ட நானேதும் கேட்டனானா? அத விட்டுப்போட்டு உனக்கு ஏதும் வேணுமா எண்டு சொல்லு. சாப்பாடு?” அந்தப் பேச்சையே கத்தரித்துப் பேசினாள் தமக்கை.

 

அதுவே, கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டன. “இல்ல, இங்க கண்டீனிலேயே நான் வாங்கிச் சாப்பிடுவன்.” என்றாள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு

 

“காசு?”

 

“இருக்கு.”

 

“உண்மையச் சொல்லு. இருக்கா?”

 

“இருக்கக்கா. நேற்றுத்தான் சம்பளமும் வந்தது. அதை நான் இன்னும் பாங்க்ல போடேல்ல.”

 

“சரி, அப்ப கவனமா இரு. என்ன எண்டாலும் கோல் பண்ணு.” சின்னவள் தலையைத் தடவிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள் அவள்.

 

அதன் பிறகுதான் மூச்சை இழுத்துவிட்டாள் யசோதினி.

 

என்னவோ, கையில் பிரம்புடன் நின்று மிரட்டிய ஆசிரியையின் கையால் அடி வாங்காமல் தப்பிய உணர்வு.

 

ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? கேட்பவர்களின் கேள்விகளுக்கு அடக்கமாகப் பதில் சொல்லிக்கொண்டு, யார் வாயிலும் விழுந்துவிடக் கூடாது என்கிற கவனத்தோடு, அத்தனை பாரங்களையும் தனியொருத்தியாய்ச் சுமந்துகொண்டு எப்போதும் ஒருவிதப் பயத்துடனேயே வாழும் வாழ்வு ஏன்?

 

காரணம், அவள் ஒரு கைம்பெண்! இரண்டு பெண் குழந்தைகளோடு தனியாக இருப்பவள்.

error: Alert: Content selection is disabled!!