வெளிச்சக்கீற்று 11 – 1

அத்தியாயம் 11

 

 

 

சுசீலா அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கூட அவர்களுக்குள் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. அகத்தியனுக்கு வேறு பெண்ணைத்தான் தேடினார்கள். அவன் வயதும் ஒரு காரணமாகி, பெண் அமையவே மாட்டேன் என்றது.

 

தவமலரும் அவர்களை விடுவதாக இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் நெருக்கினார். அடிக்கடி அதைப்பற்றிச் சிந்தாமணியோடு கதைத்தார்.

 

இவர்கள் பிடிகொடுக்க மறுக்கவும் மகனோடு பேசினார்.

 

அவனும் ஒருநாள், “அம்மா சொல்லுறதும் சரி மாதிரித்தான் இருக்கு இந்திரா. ரெண்டுபேரும் தனித்தனியா இருக்கிறதுக்குத் திரும்பவும் சேர்ந்து வாழ்ந்தா என்ன? ஒரு பிள்ளை வேணுமெண்டால் தத்தெடுக்கிறதுதானே.” என்றதும் இந்திரா திகைத்தாள்.

 

தன் நெஞ்சின் தடதடப்பை அடக்கி, “இதில நான் சொல்ல என்ன இருக்குக் கஜன். முடிவெடுக்க வேண்டியது அவன்.” என்றாள்.

 

“உண்மையா எனக்கு இன்னும் அம்மாவிலயும் சவீதாவிலயும் சரியான கோவம் இருக்கு இந்திரா. அதாலேயே அவன் நல்ல மாதிரி வாழுறதைப் பாக்கவேணும் எண்டுற ஆசையும் இருக்கு. நடந்ததையே பிடிச்சுத் தொங்கி ஆகப்போறது என்ன சொல்லு? அவளுக்கும் ஒண்டும் சரிவருது இல்ல. இவனுக்கும் அப்பிடித்தான். அதுதான் ரெண்டு பேரையுமே திரும்பவும் சேர்த்துவைச்சா என்ன எண்டு யோசிச்சன். ஏற்கனவே பிடிச்சு வாழ்ந்த ஆக்கள்தானே. அவனோட ஒருக்காக் கதைச்சுப்பார். இல்லாட்டிச் சொல்லு, நான் கதைக்கிறன்.” என்றான் அவன்.

 

இது அத்தனையும் தவமலரின் வார்த்தைகள் என்று புரிந்துவிட, உள்ளுக்குள் விழித்துக்கொண்டாள் இந்திரா. “முதல் எதுக்கும் அவனோட நான் கதைக்கிறன் கஜன். அதுக்குப் பிறகு வேணுமெண்டால் சொல்லுறன், நீங்க கதைங்க.” என்று அவனை அகத்தியனோடு கதைக்கவிடாமல் தடுத்துவிட்டு, அடுத்த நாளே அன்னையிடம் இதைப் பகிர்ந்தாள்.

 

“அம்மா, இது சரி வராதம்மா. அந்த மனுசி இதைச் செய்து முடிக்காம விடாதுபோல. சவீதாவுக்கு யசோ எவ்வளவோ பரவாயில்ல. ரெண்டு பிள்ளை இருக்கிறதுதானே பிரச்சினை? எதிர்காலத்தில அவனுக்கு ஒரு தேவை வந்தா நான் குடுக்கிறன். இவரும் அவனை அப்பிடியே விடமாட்டார். இப்ப முதல் வேலையா அந்தச் சவீதாட்ட இருந்து அவனைக் காப்பாத்த வேணும். யசோவையே கேப்பம்.” என்றாள் முடிவாக.

 

இதற்கிடையில், ஒரு குழந்தையோடு இருக்கும் ஒரு பெண்ணின் சம்மந்தம் வந்தது. அவள் கொழும்பில் வேலையாம், இவனும் அங்கே நிரந்தரமாக வந்துவிட வேண்டுமாம், இன்னொரு பிள்ளை பெறமாட்டாளாம் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்க அன்னைக்கும் மகளுக்கும் மனம் விட்டே போயிற்று.

 

சுசீலாவிடம் தம் சம்மதத்தைச் சொல்லிக் குறிப்பைக் கேட்டனர்.

 

பெரும் சந்தோசத்துடன் அடுத்த நாளே யசோதினியிடம் ஓடிவந்தார் சுசீலா. விசயம் அறிந்தவள் முகம் மாறிப்போயிற்று. “அக்கா ப்ளீஸ், குறை நினைக்காதீங்கோ. அண்டைக்கே சொன்னேனே, எனக்கு இப்ப அந்த ஐடியா இல்லை எண்டு.” என்றாள்.

 

இதை அவரும் எதிர்பார்த்ததில் சோர்ந்துவிடவில்லை. “அம்மாச்சி யசோ, எல்லாம் பொருந்தி வரேக்க ஏனம்மா வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? அவன் நல்லவனம்மா. உங்கட வாழ்க்கை நல்லாருக்கும். தானாத் தேடி வாற வாழ்க்கையைத் தள்ளிவிடாதீங்கோம்மா.” என்றவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.

 

“சவீதாவைப் பற்றி யோசிக்கிறீங்களா?”

 

“அவாவைப்பற்றி நான் ஏன் யோசிக்க? எனக்குத்தான் விருப்பம் இல்ல.”

 

“ஏனம்மா? பிள்ளைகளுக்கும் அருமையான தகப்பனா இருப்பான். நல்ல உழைப்பாளி. கெட்ட பழக்கம் ஒண்டும் இல்ல. நல்ல குடும்பம். உங்களுக்கும் ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்கும். இதத்தானேம்மா இவ்வளவு நாளும் தேடினனீங்க. இப்ப கிடைக்கேக்க வேண்டாம் எண்டு சொன்னா என்ன அர்த்தம்?” கையில் கிட்டும் அருமையான வாழ்க்கையைத் தூக்கி எறிகிறாளே என்கிற கவலை அவருக்கு.

 

உண்மைதான். அவர் சொல்வது எல்லாமே உண்மைதான். ஆனால்…

 

“ஓம் எண்டு சொல்லுங்கோம்மா.”

 

இப்படி அவர், அவளுக்காக அவளிடமே கெஞ்சுவது சங்கடமாக இருக்க, “ப்ளீஸ் அக்கா.” என்றாள் அவளும் கெஞ்சலாக.

 

“என்னம்மா நீங்க? இப்பிடி, முன்னுக்கு நிண்டு செய்து வைக்க ஒரு ஆள் இல்லாமப் போனதாலதான் நான் இண்டைக்குத் தனியா நிக்கிறன். என்னைப் பாத்துமா வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? இது உங்க ரெண்டு பேருக்கும் ரெண்டாவது கலியாணம் யசோ. இப்பிடி நல்ல இடம் ஈஸியா அமையாது. தவறவிட்டாலும் திரும்பக் கிடைக்காது. கொஞ்சம் யோசிங்கோம்மா.” என்று கெஞ்சினார்.

 

அவள் விழிகளில் கண்ணீர் அரும்பிற்று. வேகமாகத் துடைத்துக்கொண்டாள். எல்லா நேரமும் மனத்தில் இருப்பதைப் பகிரும் வரம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லையே!

 

அவளின் அந்தக் கண்ணீரே வெளியே சொல்ல முடியாத அல்லது, சொல்ல விரும்பாத எதையோ மனத்துக்குள் வைத்து மருகுகிறாள் என்று சொல்ல, “அகத்தியனைப் பிடிக்கேல்லையா?” என்றார்.

 

“சேச்சே! அப்பிடியெல்லாம் இல்ல.” அவசரமாகச் சொன்னாள்.

 

“பின்ன என்னம்மா?”

 

அப்போதும், அவள் தன் கை விரல்களை ஆராய்ந்தாளே தவிர எதையும் பகிர்ந்தாள் இல்லை.

 

சுசீலாவுக்கு ஒற்றை நாளில் எதுவும் மாறிவிடாது என்று தெரிந்துதான் இருந்தது. “எனக்காகக் கொஞ்சம் யோசிங்கோம்மா.” என்றுவிட்டுப் போனார்.

 

விடயம் அறிந்த இந்திராவுக்கும் சிந்தாமணிக்கும் மனமுடைந்தே போயிற்று. கையில் கிடைத்தபோது தவற விட்டுவிட்டுத் தவிக்கிறார்களே!

 

சிந்தாமணி நேராக அழைத்துக் கேட்டுப் பார்த்தார்.

 

நயமாகவே மறுத்தாள் யசோ.

 

“நான் அண்டைக்கு அப்பிடிச் சொன்னதாலயாம்மா?”

 

“சேச்சே! அப்பிடியெல்லாம் இல்லை அன்ட்ரி. இந்த வாழ்க்கையே நிம்மதியா இருக்கு. அதுதான். உங்கட மகனுக்குக் கட்டாயம் வேற நல்ல வாழ்க்கை அமையும். கவலைப்படாதீங்கோ.” என்றுவிட்டு வைத்தாள் அவள்.

 

செய்தி அகத்தியனின் காதுக்கும் வந்தது. “என்னம்மா நீங்க, இன்னுமா இத விடேல்ல?” அலுப்புடன் கேட்டான் அவன்.

 

இந்திரா இருந்த மனநிலைக்குக் கோபம்தான் வந்தது. “என்னத்த விடச் சொல்லுறாய்? அப்பிடியெல்லாம் விடேலாது. உன்ர பழைய மாமியார் திரும்பவும் உன்ன மருமகனாக்க ஆசைப்படுறா. போறியா?” என்றாள் சினத்துடன்.

 

“என்ன சொல்லுறீங்க?” என்று முதலில் அதிர்ந்தாலும், “அவா கேட்டா நான் ஓம் எண்டு சொல்லிடுவனா? இதுக்கா உங்கட உடம்பப் பாக்கிறத விட்டுட்டு, இந்த வேலை பாத்துக்கொண்டு திரியிறீங்க?” என்றான் சாதாரணமாக.

 

“அவா கேட்டா ஓம் எண்டு சொல்ல மாட்டாய், சரி. இவர் கேட்டா?”

 

புருவங்கள் சுருங்க தமக்கையைப் பார்த்தான் அகத்தியன்.

 

“நீ வேற கட்டாட்டி அவளையே கட்டலாமே எண்டு கேட்டவர். இதைப் பற்றி என்னை உன்னோட கதைக்கட்டாம். இல்லாட்டித் தான் கதைக்கிறாராம்.” என்றதும் இது என்ன அடுத்த பிரச்சனை என்று நெற்றியைத் தேய்த்துவிட்டான் அகத்தியன். ஒருவித எரிச்சலும் உள்ளூரப் பொங்கிற்று.

 

“தம்பி, சொல்லுறதைக் கேளடா. ஒரு அளவு தாண்டி முகத்தில அடிச்சமாதிரி எங்களால அவேட்ட மறுக்கேலாது. உன்னால ஏலுமெண்டா யசோவோட கதை. முதல், ரெண்டாவது கலியாணத்துக்கு ரெடியா இருந்த பிள்ளைதான் அவா. இப்ப ஏனோ விருப்பமில்லை எண்டு சொல்லுறா. கொஞ்சம் கதைச்சா மனம் மாறுவா. இல்ல, ரெண்டு பிள்ளைகள் எண்டுறது உனக்கும் பிடிக்கேல்லையா?”

error: Alert: Content selection is disabled!!