இப்படி, மகனிடமே நேரடியாக மறுப்பான் என்று எதிர்பாராத தவமலர், அடுத்து என்னவிதமாக இந்தப் பேச்சைத் தொடர்வது என்று தெரியாமல் திணறிப்போனார். வேறு வழியில்லை. பேசித்தான் ஆக வேண்டும். வெளிநாடு, உள்நாடு, சீதனம் அதிகமாகத் தருகிறோம் என்று என்ன முயன்றும் குழந்தை பிறக்காது என்கிற ஒற்றை விடயத்தில் எல்லாமே தட்டிப் போயிருந்தது.
அதில், “நீங்க இப்பிடிச் சொல்லக் கூடாது தம்பி. முதலே வேண்டாம் எண்டு சொல்லியிருக்க, நான் வேற நல்ல இடமாப் பாத்துக் கட்டிக் குடுத்திருப்பன். இப்ப வேற எங்க பாத்தாலும் அவாக்கு அது ரெண்டாவது கலியாணம் எண்டுதான் சொல்லுறீனம்(சொல்கிறார்கள்). வாற சம்மந்தங்களும் ஒண்டுக்கும் உதவாததாத்தான் இருக்கு. எங்கட பிள்ளைக்கு இந்த நிலைமை உங்களாலதான் வந்தது. அதத் தீர்க்கிற பொறுப்பு உங்களுக்கும் இருக்கு.” என்றதும் வெகுண்டுபோனான் அகத்தியன்.
“நீங்க முதலே உள்ளதைச் சொல்லியிருந்தா வேண்டாம் எண்டுதான் மாமி சொல்லியிருப்பம். மறைச்சுக் கட்டி வச்சுப்போட்டு உங்கட மகளின்ர இந்த நிலைமைக்கு நான் காரணம் எண்டு சொல்லுறீங்க. அப்ப, என்ர நிலைமைக்கு ஆரு காரணம்? நான் என்ன பிழை செய்தனான் எண்டு இப்பிடி இருக்கிறன்?”
அவன் விழிகளில் தெறித்த கோபத்தைக் கண்டு திகைத்துப் போனார் தவமலர்.
“ஏன் தம்பி, திரும்ப திரும்பப் பழசையே கதைப்பான்…” என்று அவர் சொல்லும்போதே, “அதையேதான் நானும் சொல்லுறன். பழைய விசயங்களை நான் மறக்க விரும்புறன். அதால இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம்.” என்று முடித்துவைத்தான்.
“இப்பிடிச் சொன்னா என்ர பிள்ளையின்ர நிலைமை என்னப்பு? காலம் முழுக்க அவள் இப்பிடியேதான் இருக்கோணுமா? இதே நிலைமை உங்கட அக்காக்கு வந்திருந்தா என்ன செய்திருப்பீங்க?” என்றதும், “மாமி!” என்றவனின் குரல் உயர்ந்து, மேலே பேசாதே என்பதுபோல் அவரை எச்சரித்தது.
அவள் கருவுற்றிருக்கும் இந்த நேரத்தில் என்ன வார்த்தைகளைச் சொல்கிறார்? அவன் நெஞ்சு பதறியே போயிற்று. வேகமாகத் திரும்பித் தமக்கையைப் பார்த்தான். கண்ணீரை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
சிந்தாமணியால் தாங்கவே முடியவில்லை. வயது பிந்திய காலத்தில் உண்டான தாய்மையை எண்ணிப் பயந்து, அவள் நல்லபடியாகப் பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோயில் கோயிலாகத் திரிகிறார். இதில், இப்படி ஒரு பேச்சா? நெஞ்சுக்குள் அடைப்பது போலிருக்க சுவரோடு சுவராக ஒடுங்கினார்.
கஜேந்திரனும் அன்னையின் பேச்சில் ஒரு கணம் ஆடித்தான் போனான். அவசரமாகப் பார்வை இந்திராவிடம் சென்றது. ஒரு கை வயிற்றைப் பற்றியிருக்க, முகமெல்லாம் சிவந்து, கண்ணீரை அடக்கியபடி இருந்தவள் தோற்றம் அவன் நெஞ்சைத் தாக்க, “என்னம்மா கதைக்கிறீங்க? அதுவும் எந்த நேரத்தில? நீங்க கதைச்சவரைக்கும் போதும். நடவுங்க. அப்பா, அம்மாவைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிடுங்க.” என்றான் வேறு பேச விரும்பாமல்.
தவமலர் பொலபொலவென்று கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார். “நான் வேணுமெண்டு சொல்லேல்ல தம்பி. என்ர நிலைமையை விளங்கப்படுத்தத்தான் அப்பிடிச் சொன்னனான். மற்றும்படி என்ர மகனுக்கு ஒரு கெட்டது நடக்கோணும் எண்டு நினைப்பனா?” என்று கேட்டார்.
கஜேந்திரனுக்கு அவர் கண்ணீரையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதில், “இப்ப என்னத்துக்குத் தேவையில்லாம அழுறீங்க? அகத்தியனுக்கு விருப்பமில்லாட்டி விடுங்க. வேற இடம் நான் பாக்கிறன்.” என்றான் முடிவாக.
“அமையோணுமே தம்பி. இந்த மூண்டு வருசமாத் தேடிக்கொண்டுதானே இருக்கிறம். ஒண்டு கூடச் சரிவரேல்லையே! இதாலதானே மறைச்சனான். கடைசில ஏன் மறைச்சேனோ அதுதான் நடந்திருக்கு. உன்ர மச்சானே அவளோட வாழமாட்டன் எண்டு சொன்னா வேற ஆர் ஓம் எண்டு வருவீனம்?”
கதைத்துச் சரிவரவில்லை என்றதும் அவர் கண்ணீரைக் கையில் எடுத்துவிட்டது அகத்தியனுக்குப் புரிந்தது. இதற்குமேலும் இதை விடக் கூடாது என்று முடிவு கட்டி, “ஆரம்பத்தில ஒரு நல்லது நடக்கோணும் எண்டுறதுக்காக மறைச்சிருக்கலாம். அது, சரி பிழை எண்டுறதைத் தாண்டி ஒரு அம்மாவா அவாவை எனக்கு விளங்குது. அதெல்லாம் கலியாணத்துக்கு முதல். அதுக்குப் பிறகு உங்கட தங்கச்சி எனக்கு மனுசி. எனக்கு உண்மையா இருந்திருக்க வேணும். கிட்டத்தட்ட என்னோட ரெண்டு வருசம் வாழ்ந்தும் உண்மை சொல்லேல்ல. இதில, என்ர அம்மா அப்பிடிச் சொல்லிப்போட்டா, அக்கா இப்பிடிச் சொல்லிப்போட்டா எண்டு ஆயிரம் சண்டை. எல்லாம் தெரிய வந்த பிறகும் அமைதியா இருக்கேல்ல. என்னவோ நான்தான் பிழை செய்தவன் மாதிரி என்னைப் போட்டுப் படுத்தின பாட்டில எனக்கு எல்லாமே வெறுத்துப் போச்சுது. அப்பிடி அடிமனதில இருந்து வெறுக்கிற ஒருத்தியோட என்னால வாழ ஏலாது!” என்று கஜேந்திரனின் முகம் பார்த்து நேராகச் சொன்னவன், மனத்தின் புழுக்கம் தாளமாட்டாமல் விருட்டென்று எழுந்து வெளியே நடந்தான்.
சரியாக அந்த நேரம் பார்த்து வந்து நின்றாள் யசோதினி. கடைசியாக அவன் பேசியது அவள் காதிலும் விழுந்திருந்தது. அதுவே, அவள் வந்த நேரம் சரியில்லை என்று சொல்லிற்று.
ஒரு தயக்கத்ததுடன் உள்ள வந்தாள். வா என்று சொல்லக்கூட முடியாமல் அமர்ந்திருந்தாள் இந்திரா.
தவமலருக்கு அவள் வருகை பிடிக்கவில்லை. அன்றைக்கும் வீட்டுப் பெண்ணைப் போன்று எல்லா வேலைகளையும் பார்த்தாளே. சவீதாவுக்கு அவளைக் கண்டு முகம் கடுத்தது. தமையனின் முன் எதையும் காட்ட முடியாமல் அமர்ந்திருந்தாள்.
எல்லோருக்கும் சிறு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு, “இந்தாங்கோ அன்ட்ரி, நீங்க கேட்ட மருந்து.” என்று மாத்திரைகள் அடங்கிய பையை எடுத்து நீட்டினாள் யசோ.
“காசம்மா…” சிந்தாமணிக்கு உள்ளே சென்று பணத்தை எடுத்துக்கொடுக்க முடியும் போலில்லை.
உதடுகள் வறண்டு, கண்களில் கலக்கத்தைச் சுமந்திருந்தவரைப் பார்க்க, அவர் நன்றாக இல்லை என்று அவளுக்கும் புரிந்துபோனது. அதில், “அதப் பிறகு பாப்பம். நீங்க முதல் வந்து ஒரு குளிசையைப்(மாத்திரை) போடுங்கோ.” என்று அவரைக் குசினிக்குள் அழைத்துச் சென்று, ஒரு நாற்காலியில் அமரவைத்தாள். அப்படியே, கொண்டுவந்த மாத்திரைகளில் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்து, அருந்தத் தண்ணீரும் கொடுத்தாள்.
அவள் செய்வதையெல்லாம் பார்த்திருந்தவருக்கு விழிகள் கரித்துக்கொண்டு வந்தன. மாத்திரையை விழுங்கிவிட்டு நெஞ்சை நீவிவிட்டார்.
“எதையும் யோசிக்காதீங்கோ அன்ட்ரி. கொஞ்சம் அமைதியா இருங்கோ.” என்றாள் இதமான குரலில்.
அவளை நிமிர்ந்து பார்த்தவரின் விழிகளில் பெரும் கலக்கம். “எப்பிடியம்மா அப்பிடி இருக்கிறது, சொல்லுங்கோ? இவளைக் கட்டி அவன் பட்ட பாடெல்லாம் வாயால சொல்லேலாது ஆச்சி. ஒரு இரவு முழுக்க விசரன் மாதிரி ரோட்டுல நிண்டுபோட்டு வந்து, அக்காக்காரின்ர கையப் பிடிச்சு அழுதவனம்மா. அந்த நிமிசமே நான் செத்திட்டானாச்சி. இப்ப வந்து திரும்பவும் அவனுக்கே அவளைக் கட்டி வைப்போமாம். என்ர பிள்ளை என்ன செய்யப் போறானோ தெரியேல்ல. என்னதான் விருப்பம் இல்லாட்டியும் அக்கான்ர வாழ்க்கையா, அவன்ர சந்தோசமா எண்டு வந்தா என்ர பிள்ளை எங்கட நிம்மதியத்தானம்மா பாப்பான்.”
அவர் அழுவதைப் பார்க்க முடியாமல், “எனக்கு விளங்குது அன்ட்ரி. ஆனா, இப்பிடி நீங்க அழுது, உடம்பைக் கெடுகிறதால ஒண்டும் நடக்காது. நிதானமா இருங்கோ.” என்றவள் பார்வையில், மாமரத்தின் கீழே நின்றிருந்தவனின் முதுகுப்புறம் தெரிந்தது.
நொடியில் முடிவு செய்தவளாக, “ஒரு நிமிசம் அன்ட்ரி.” என்றுவிட்டு அவனை நோக்கி நடந்தாள்.
காலடிச் சத்தம் கேட்டுத் தமக்கையாக்கும் என்று திரும்பிப் பார்த்தான் அகத்தியன். இவளைக் கண்டு, இவள் எங்கே இங்கே என்று புருவம் சுருக்கினான். அவனுக்கு அவள் வந்தது கருத்திலேயே இல்லை.
“ஏன் இப்பிடிக் கோவப்படுறீங்கள்? அங்க, உங்கட அம்மாவையும் அக்காவையும் பாருங்கோ. பயந்துபோய் இருக்கினம். அவேக்கு ஏதும் நடந்தா என்ன செய்வீங்க?” மெல்லிய கோபம் தொனிக்கும் குரலில் கேட்டாள் யசோ.
சுளித்திருந்த புருவங்களோடு பார்வையை எங்கோ பதித்திருந்தானே தவிர பதில் தரவில்லை.
“முதல் ஏன் இவ்வளவு டென்சன்? உங்கட வாயில இருந்து ஓம் எண்டுற வார்த்த வெளில வராம, இங்க எதுவும் மாறாதெல்லா? பிறகென்ன? நிதானமா இருங்க.”
‘அதுதானே…’ ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்து தன்னை நிதானப்படுத்தினான் அகத்தியன். அவன் புருவங்களின் சுளிப்பு எடுபட்டிருந்தது.
“நீங்க நிதானமாவும் தெளிவாவும் இருந்தாத்தானே உங்கட அக்காவும் அம்மாவும் தைரியமா இருப்பினம்.” என்றவளை நேராக நோக்கி, “என்னை நீங்க கட்டுறீங்களா?” என்றான் நிதானமாக.
அவள் முகத்தில் அப்பட்டமான திகைப்பு. “என்ன விசர்க் கதை கதைக்கிறீங்க? நான் என்ன சொல்லுறன், நீங்க என்ன கேக்கிறீங்க?” என்றுவிட்டு வந்ததை விடவும் வேகமாகத் திரும்பி நடந்தாள்.
“நான் சும்மா கேக்கேல்ல. உண்மையாத்தான் கேக்கிறன். எனக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை வேணும். அமைதியான நித்திரை வேணும். ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு சந்தோசம் வேணும். முக்கியமா எனக்கொரு குடும்பம் வேணும். அது உங்களிட்டக் கிடைக்கும் எண்டு நம்புறன். என்னைக் கட்டுறீங்களா?” போகிறவளைப் பார்த்துத் திரும்பவும் கேட்டான்.
இதற்குள் அவள் தன்னைச் சமாளித்திருந்தாள்.

