வெளிச்சக்கீற்று 12 – 3

திரும்பி வந்து, “இப்ப நடந்த பிரச்சினைகளால நீங்க இப்பிடிக் கேக்கிறீங்க எண்டு நினைக்கிறன். கொஞ்சம் நிதானமாகுங்கோ. அதுக்குப் பிறகு, இப்ப நீங்க கதைச்சது எல்லாமே அர்த்தம் இல்லாதது எண்டு உங்களுக்கே விளங்கும்.” என்றாள்.

 

இப்போது, அவனும் நிதானத்துக்கு வந்திருந்தான். ஒரு முடிவுக்கு வருகிற வரையில்தானே போராட்டம் எல்லாம்.

 

“உண்மையா இல்ல. ஒரு நிமிசத்துக்கு முதல் வரைக்கும் உங்களோட என்ர வாழ்க்கையை இணைச்சு நான் யோசிக்க இல்லதான். ஆனா, ரெண்டு பிள்ளைகளோட இவ்வளவு அமைதியாவும் நிம்மதியாவும் நீங்க உங்கட வாழ்க்கையைக் கொண்டுபோறதைப் பாத்து நிறைய நாள் வியந்திருக்கிறன். என்னால ஏன் இப்பிடி இருக்கேலாம இருக்கு எண்டு யோசிச்சிருக்கிறன். உங்களிட்ட வந்திட்டா அந்த அமைதியும் நிம்மதியும் எனக்கும் கிடைக்கும் எண்டு நம்புறன்.” என்றான் அமைதியான குரலில்.

 

அது, அவன் சும்மா சொல்லவில்லை என்று சொல்ல, “முதல், இப்ப நடக்கிற பிரச்சினையைத் தீர்க்கிறது எப்பிடி எண்டு பாருங்கோ.” என்றாள் அவள், அவன் முகம் பாராமல்.

 

“அதுக்கான தீர்வாத்தான் இந்தக் கலியாணத்தைக் கேக்கிறன்.”

 

அவனே இப்படிக் கேட்பது அவளைச் சங்கடப்படுத்தியது. “ப்ளீஸ்… இப்பிடி எல்லாம் கதைக்க வேண்டாமே.” எனும்போதே சிந்தாமணி அங்கு வந்தார். அவர்கள் பேச்சு அதோடு நின்றுபோயிற்று.

 

“அன்ட்ரி, எனக்கு நேரமாகுது. நான் வெளிக்கிடப்போறன். நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ!” என்றுவிட்டு, கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடினாள்.

 

வீதியில் ஸ்கூட்டியை ஏற்றியவளின் தேகம் எங்கும் நடுக்கம். கொஞ்சத் தூரம் ஓட்டிச் சென்றுவிட்டு அதற்குமேல் முடியாமல் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டாள்.

 

இங்கே, அழுத முகத்தோடு நின்ற அன்னையைக் கண்டவனுக்கு அப்போதுதான் யசோதினி சொன்னது நினைவு வந்தது.

 

“என்னம்மா?” என்றான் இதமாக.

 

அவருக்கு அதற்கே விழிகள் மீண்டும் உடைப்பெடுக்க ஆரம்பித்தன. “கொஞ்சம் பொறுமையாக் கதையப்பு. உன்ர வாழ்க்கைய நாசமாக்கினது காணாது எண்டு உன்ர அக்கான்ர வாழ்க்கையையும் கெடுக்கப் பாக்கினம். அதுக்கு நீயே வழி செய்து குடுத்திடாத.”

 

அவனுக்கும் புரிந்தது. ஆனால், இப்போது ஒரு முடிவை எடுத்துவிட்டவனுக்குப் பதற்றமில்லை. அதில், “இனி அப்பிடி ஒண்டும் நடக்காது. நீங்க வாங்கம்மா.” என்று நடந்தவன் மீண்டும் நின்று, “அம்மா, நான் அவாவை… அதான் யசோதினியைக் கட்டுறது உங்களுக்கு ஓகேயா?” என்று கேட்டான்.

 

அவர் முகம் பூவாக மலர்ந்துபோயிற்று. “தம்பி, விளையாட இல்லையே. உண்மையாத்தானே கேக்கிறாய்?” என்றார் நம்பப் பயந்து.

 

“இதில எல்லாம் விளையாடுற நிலைமைலயா அம்மா நான் இருக்கிறன்?”

 

“உண்மையாப்பு முதல் என்னென்னவோ நினைச்சு வேண்டாம் எண்டுதான் இருந்தனான். ஆனா இப்ப, அந்தப் பிள்ளை ஓம் எண்டு சொல்லமாட்டாவா எண்டு இருக்கு.” என்றார் ஆர்வமும் ஆசையுமாக.

 

“அத நான் பாக்கிறன். நீங்க இனி நிம்மதியா இருங்க.” என்றுவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

 

மீண்டும் தமக்கையின் அருகில் அமர்ந்துகொண்டு, “சொறி அத்தான் கோவப்பட்டதுக்கு. ஆனா, நான் சொன்னதில மாற்றமில்லை.” என்றான் தெளிவாய்.

 

“இனி மாறாதுதான். அதுதான் அவள் வந்து மாய மந்திரம் போட்டுட்டாளே.” யசோதினி அவனைத் தேடிச் சென்றதையும், இருவரும் பேசியதையும் பார்த்துவிட்ட சவீதா, தமையன் இருப்பதையும் மறந்து கொதித்தாள்.

 

இப்படியான பேச்சுகள் பிடிக்காத கஜேந்திரன் முகத்தைச் சுளித்தான். அவனைக் கவனித்துவிட்டு, “சும்மா இரு பிள்ளை!” என்று தவமலர் தடுத்ததைக்கூட உணரும் நிலையில் சவீதா இல்லை.

 

“என்னத்தை அம்மா சும்மா இருக்கச் சொல்லுறீங்க? அண்டைக்கும் இப்பிடித்தான், ரோட்டுல நிண்டு கொஞ்சினவே. இண்டைக்கும் இவர் முன்பக்கத்தால போவாராம், அவா வீட்டின்ர பின்பக்கத்தால வருவாவாம். ரெண்டுபேரும் கதைப்பீனமாம். பிறகு ஒண்டுமே நடக்காத மாதிரி அவா போவாவாம். இதையெல்லாம் பாக்கிற நாங்க என்ன லூசா?” என்று சீறினாள்.

 

ஒருகணம் நம்பமுடியாமல் திகைத்தாலும், “சீச்சீ! என்ன கதையெல்லாம் கதைக்கிறாய்?” என்றான் கஜேந்திரன்.

 

“நான் ஒண்டும் சும்மா சொல்லேல்ல அண்ணா…” என்று ஆரம்பித்தவளை இடைமறித்து, “இப்ப விளங்குதா அத்தான், உங்கட தங்கச்சியைப் பற்றி?” என்று கேட்டான் அகத்தியன்.

 

கஜேந்திரனின் முகம் கன்றியது.

 

“எல்லாருக்கும் முன்னால வச்சே இப்பிடிக் கதைக்கிற ஒருத்தி, தனிமைல என்ன எல்லாம் கதைச்சிருப்பா எண்டு யோசிங்க. அதையெல்லாம் திரும்பவும் அனுபவிக்க என்னால ஏலாது. இனியும் இதைப் பற்றி நீங்க என்னட்டக் கதைக்க மாட்டீங்க எண்டு நம்புறன் அத்தான்.” என்றுவிட்டு எழுந்தவன், “எனக்கு இப்ப யசோதினியக் கட்டத்தான் விருப்பமா இருக்கு. அதால இனி ஆரும் என்ர கலியாணத்தைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு வர வேண்டாம்.” என்று அறிவித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

 

மூச்சுவிட்டால் கூடக் கேட்குமோ என்னுமளவில் அந்த வீடே நிசப்தமாயிற்று. சந்தோசத்தில் வெடிக்கப் பார்த்த விம்மலை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் இந்திரா.

 

தவமலருக்குத் தன் அத்தனை முயற்சிகளும் வீணாகிப்போன ஏமாற்றம். கஜேந்திரனுக்கு இனி இந்தப் பேச்சைப் பேசுவதில் அர்த்தமே இல்லை என்று தெளிவாயிற்று.

 

அதில், “இனி இது சரி வராதம்மா. விடுங்க, சவீதாக்கு வேற இடத்தில பார்ப்பம்.” என்று முடித்துக்கொண்டான்.

 

*****

அடுத்தநாள் யசோதினிக்கு அழைத்தான் அகத்தியன். நேற்றில் இருந்தே தன் நிம்மதியைத் தொலைத்திருந்தவள் இப்போது இன்னுமே பயந்தாள்.

 

அதற்கென்று அழைப்பை ஏற்காமல் இருக்க முடியாதே. நேராக வந்து நின்றாலும் நிற்பான். அவள் ஏற்க, “நான் அகத்தியன்.” என்றது அவனுடைய அழுத்தமான குரல்.

 

“சொல்லுங்கோ.” தன்னைத் திடமாகக் காட்டிக்கொள்ள முயன்றபடி சொன்னாள்.

 

“எனக்கு உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும். தொந்தரவு இல்லாம. எங்க பாக்கலாம்?”

 

“அப்பிடி என்ன…” எனும்போதே இடைமறித்து, “நேற்றுக் கதைச்சதைப் பற்றித்தான். எனக்கு என்ர முடிவில மாற்றமில்லை. உங்கட எண்ணத்தை மாத்த எனக்கு டைமும் நீங்களும் வேணும்.” என்றான் அவன் உறுதியான குரலில்.

 

இது என்ன விதமான பிடிவாதம்? அதைவிட, அவன் கேட்கும் விதம்? அவளும் தானாக நிமிர்ந்தாள்.

 

“என்ர முடிவை நான் ஒண்டும் உங்களை மாதிரி நிமிசத்தில எடுக்கேல்ல. ஆற அமர யோசிச்சு, எனக்கும் பிள்ளைகளுக்கும் எது நல்லது எண்டு பாத்து எடுத்தது. அதில எனக்கு மாற்றமில்லை. அதால, நானும் நீங்களும் கதைக்கிறதுக்கு ஒண்டும் இல்ல.” என்றாள் தெளிவாக.

 

“ஆனா, எனக்கு உங்களோட கதைச்சே ஆகவேணும். எங்க எண்டு நீங்க சொல்லாட்டி நான் பார்மசிக்கே வாறன்.” பிடிவாதமாக அவன் சொல்ல, பெருஞ்சினம் மூண்டது அவளுக்கு.

 

“என்ன, வெருட்டிப் பாக்கிறீங்களா? உங்களிலயும் உங்கட குடும்பத்திலயும் நல்ல மதிப்பு வச்சிருக்கிறன். உங்களுக்குப் பொறுமையாப் பதில் சொல்லுறதும் அதாலதான். தயவுசெய்து அதைக் கெடுக்கிற மாதிரி எதுவும் செய்யாதீங்க. பிறகு வீண் பிரச்சினைகள்தான் வரும்.” என்றாள் அவளும் எதற்கும் அசராமல்.

 

“நான் ஏன் உங்களை வெருட்ட? எனக்கு உங்களோட கதைச்சே ஆகவேணும். அதைத்தான் கொஞ்சம் அழுத்திச் சொன்னனான். உங்கட முடிவில மாற்றம் இல்லை எண்டால் என்னத்துக்கு என்னைப் பாக்க யோசிக்கிறீங்க? கடைசியா எண்டு நினைச்சு வந்திட்டுப் போங்களன்.” என்று தணிந்து வந்தான் அவன்.

 

அவன் சொல்வதுபோல் செய்வோமோ என்று அவள் யோசிக்க, “ஒரு முறை பாத்துக் கதைக்கிறதில இவ்வளவு யோசிக்க என்ன இருக்கு?” என்று இடையிட்டது அவன் குரல்.

 

“எங்க பாக்கிறது? வெளில எங்கயும் எனக்கு விருப்பம் இல்ல. இங்க பார்மசிலயும் சரிவராது.” அவன் வீட்டுக்கே போவோமா என்கிற யோசனையுடன் சொன்னாள்.

 

“என்ர கடைக்கே வாறீங்களா?”

 

அவள் தயங்கினாள்.

 

“வேற எங்கயும் பாக்கிறதைவிட கடையில பாக்கிறதுதான் சரியா இருக்கும். இங்க நான் தனியாவும் இல்ல. இன்னும் ரெண்டுபேர் வேலைக்கு இருக்கினம்.” என்று அவன் சொன்ன பிறகுதான் சம்மதித்தாள்.

 

“தூரியும் வருவாவா?”

 

“இல்ல, அவா இண்டைக்கு வரேல்ல.”

 

“ஏன், பிள்ளைக்கு என்ன?”

 

“கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதால ஸ்கூல் விடேல்ல.”

 

“ஓ! ஆஸ்பத்திரில காட்டினதா?”

 

“இல்ல, லேசாத்தான் உடம்பு சுட்டது. நாளைக்கும் சுகமாகாட்டிக் காட்ட நினைச்சன்.”

 

“சரி, அப்ப பின்னேரம் வாங்க. நான் கடை அட்ரெஸ் மெசேஜ் பண்ணிவிடுறன்.”

 

“ம்…”

 

இன்னும் அவளுக்கு இருக்கும் தயக்கத்தை அந்த, ‘ம்’ சொல்ல, “பயப்பிடாதீங்க. நீங்க சங்கடப்படுற மாதிரி எதுவும் கதைக்கமாட்டன்.” என்றான் அவன்.

 

“இல்லயில்ல, அப்பிடி இல்ல.” இதுவரையில் பார்வை, செயல், பேச்சு என்று எதிலுமே அவன் தவறியது இல்லை என்பதில் அவசரமாகச் சொன்னாள்.

 

“ஓகே! அப்ப பின்னேரம் பாப்பம்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அகத்தியன்.

error: Alert: Content selection is disabled!!