யசோவால் அதற்குமேல் முடியவே இல்லை. செத்துவிட்டால் கூடப் பரவாயில்லை போலிருந்தது. அத்தனை அவமானம். இனியும் தமக்கை சொல்கிற எதையும் கேட்கிற துணிவற்று அங்கிருந்து போக முனைய, “எங்க போறாய்? எங்க போறதா இருந்தாலும் நான் கேக்கிற கேள்விக்குப் பதிலச் சொல்லிப்போட்டுப் போ. நீ எக்கேடோ கெட்டுப் போ. இனி எனக்கு உன்னைப்பற்றி அக்கறை இல்ல. ஆனா, உன்ர ரெண்டு பிள்ளைகளையும் என்ன செய்யப் போறாய்? ஏதும் அநாதை இல்லத்தில சேர்க்கப் போறியா? இல்ல, கையக் கழுவி விடப்போறியா? சொல்லு!” என்று அதட்டினாள்.
துடித்து நிமிர்ந்தாள் யசோ. அன்றைக்கு கமலாம்பிகை சொன்ன அதே வார்த்தைகள்! விழிகளை ஒருமுறை மூடித் திறந்து தன்னைச் சமன் செய்துகொண்டு, “என்ர பிள்ளைகள் எண்டைக்கும் என்னோடதான் இருப்பினம்.” என்றாள் அடைத்த குரலில்.
“உன்னோட வச்சிருந்து அவன் அதுகளைக் கொடுமை செய்றதைப் பாத்து ரசிக்கப் போறியா? இல்ல, பெத்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு நினைக்கிற அளவுக்கு, உனக்கு ஒரு கலியாணம் தேவையா இருக்கா?” என்றதும் அவமானத்தில் குறுகிப்போனாள்.
கமலாம்பிகைக்குமே பொறுக்க முடியவில்லை. “நிசா, நீ வரம்பு மீறிக் கதைக்கிறாயம்மா. போதும் நிப்பாட்டு” என்று அதட்டினார்.
யசோவுக்கு எல்லாம் விட்டுப்போன உணர்வு. “அவர் அப்பிடியெல்லாம் செய்ய மாட்டார். அந்த நம்பிக்கையை எனக்குத் தந்திருக்கிறார். என்ர பிள்ளைகள் சந்தோசமா வாழுவீனம்.” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.
“எவ்வளவு உறுதியாச் சொல்லுறாள் பாத்தீங்களா? இவளுக்கு எப்பிடி அது தெரியுமாம்? அந்தளவுக்கு அவனோட பழக்கம் இருக்கா?” தமக்கையின் வார்த்தைகள் அவளைப் பின்னால் துரத்த, அவை கேட்டுவிடாத தூரத்துக்குக் கிட்டத்தட்ட ஓடினாள் யசோ.
பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். வாய்விட்டு அழவும் வழியில்லை. “ரெண்டுபேரும் எங்கயும் போறேல்ல. இங்கேயே இருங்கோ. அம்மா குளிச்சிட்டு ஓடி வாறன்.” என்றுவிட்டுக் கிணற்றடிக்கு ஓடினாள். தலைக்கு அள்ளி ஊற்றிய தண்ணீரோடு சேர்த்துக் கண்ணீரும் கரைந்தோடியது.
இங்கே கொதித்துக்கொண்டிருந்த நிசாந்தினியைச் சற்றே நிதானிக்கச் செய்து, “ஆனந்தனோட கதைங்கோம்மா. கதைச்சு என்ன செய்யலாம் எண்டு கேளுங்கோ.” என்று சொன்னார் கமலாம்பிகை.
“என்னெண்டு அம்மா சொல்லுவன்? என்ன நினைக்கிறாரோ தெரியாது.” அவளுக்கு அவனிடம் இதைப்பற்றிப் பேசுவதை நினைக்கவே ஒரு மாதிரி இருந்தது.
“அம்மாச்சி, சும்மா சும்மா யோசிக்காமக் கோவப்படுறேல்ல. தனக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கு எண்டுறதும், நாளைக்கு ஒரு பிரச்சினை வந்தா அவேன்ர வாழ்க்கை பாதிக்கும் எண்டுறதும் யசோவுக்குத் தெரியாதா? ஆனாலும் இன்னொரு கலியாணத்துக்கு ரெடியாகி இருக்கிறா எண்டா, அவவின்ர மனதில என்ன எல்லாம் இருக்கோ ஆருக்குத் தெரியும்? சும்மா நாங்க வாய்க்கு வந்ததைக் கதைக்கக் கூடாது பிள்ளை. முதல் எனக்கும் கோபமாத்தான் இருந்தது. ஆனா இப்ப, அவவின்ர விருப்பப்படியே செய்து வைப்பம் எண்டுதான் நினைக்கிறன். நீங்களும் அப்பிடியே இருங்கோ!” என்று சொல்லிவிட்டு எழுந்தவர் சின்னவர்களைக் கவனிக்கச் சென்றார்.
அங்கே, இருட்டிய பொழுதில் தலைக்கு ஊற்றிவிட்டு வந்த மகளைக் கண்டு, அவருக்கும் நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது. ஏற்கனவே நொந்துபோய் இருப்பவளிடம் எதையும் கேட்கவோ, விசாரிக்கவோ போகாமல், அவள் வாழ்க்கையைக் கடவுள்தான் காத்தருள வேண்டும் என்று மட்டும் மனத்தில் வேண்டிக்கொண்டார்.
அதன்பிறகு இரவுச் சமையலைப் பார்த்து, பிள்ளைகளுக்கு உணவைக் கொடுத்து, அவர்களைக் கவனித்து, உறங்க வைக்கவே நேரம் போதுமாய் இருந்தது. வேண்டாம், பசியில்லை என்று சொன்ன யசோதினியைக் கமலாம்பிகை விடவில்லை.
“சண்டை, சச்சரவு, பிரச்சினை எல்லாம் எந்த வீட்டிலதான் இல்ல? அதுக்கெண்டு சாப்பிடாம இருக்கிறதா? நாளைக்கு வேலை செய்ய உடம்பில தெம்பு வேண்டாமா?” என்று கேட்டு, அவளைச் சாப்பிட வைத்தே படுக்கவிட்டார்.
பிள்ளைகளுக்கு நடுவில் பாயில் சரிந்தவளுக்கு கண்ணோரம் கசிந்துகொண்டே இருந்தது. தமக்கையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசியாகக் குத்திக்கொண்டே இருந்தன. நெஞ்சு புண்ணாக வலித்தது.
இதையெல்லாம் நினைக்கக் கூடாது என்று எண்ணியபடி வழிகளை மூடி உறங்க முயன்று பார்த்தாள். முடியவேயில்லை.
*****
இரவு நேரம் பத்தைக் கடந்திருந்தது. அன்னை, தமக்கை மூலம் யசோ வீட்டில் நடந்தவற்றை அறிந்த அகத்தியனுக்கு யசோவின் நினைவுதான். நிச்சயம் இவர்கள் புறப்பட்டு வந்தபிறகு, அங்கே ஒரு வாக்குவாதமோ, சண்டையோ நடந்திருக்கும். அவளும் காயப்பட்டிருப்பாள். இப்போது என்ன செய்கிறாளோ? அவளோடு கதைக்க மனம் உந்தியது. எடுப்பாளா, கதைக்கும் சூழ்நிலை உண்டா என்றெல்லாம் யோசித்துவிட்டு, “ஒரு பிரச்சினையும் இல்லையே.” என்று ஒரு குறுந்தகவலைத் தட்டிவிட்டான்.
சற்று நேரத்தில், “ம்.” என்று மட்டும் வந்தது பதில்.
“என்ன செய்றீங்க?”
“எல்லாரும் படுத்தாச்சு.”
“ஒரு ரெண்டு நிமிசம் கதைக்கேலுமா?”
அவளுக்கு அவனோடு கதைக்க முடியும் போலில்லை. அழுதுவிடுவோமோ என்று பயந்தாள்.
“இல்ல, நாளைக்குக் கதைப்பமா?”
“ரெண்டே ரெண்டு நிமிசம்தான். ஏலாதா?”
தலையைத் தூக்கி அன்னையையும் பிள்ளைகளையும் பார்த்தாள். அவர்கள் ஆழ்ந்து உறங்குவது தெரிந்தது. சத்தம் கொடுக்காமல் எழுந்து, மெதுவாக வெளியே வந்து அவனுக்கு அழைத்தாள்.
உடனேயே ஏற்று, “யசோ?” என்றான்.
அதுவே அவள் விழிகளை உடைப்பெடுக்க வைக்க, “ம்?” என்றாள்.
“என்ன?”
“இல்ல, ஒண்டும் இல்ல.” தழுதழுத்த குரலில் சொன்னாள்.
அவன் அதற்கே தவித்துப்போனான். “என்னம்மா? என்ன எண்டு சொன்னாத்தானே தெரியும்.” அவன் குரல் பரிதவித்தது.
இந்த ஒரு சின்ன பரிவுக்காகத்தானே இவ்வளவு நேரமாகத் தனக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தாள். வெடித்துக்கொண்டு அழுகை வந்தது. உதடு கடித்து அடக்க முயன்றாள்.
“யசோ?” என்றான் மீண்டும்.
“ம்.”
“மனம் நோகிற மாதிரி ஏதும் கதைச்சவையா?”
“ம்…” என்றாள் கன்னத்தில் இறங்கிய கண்ணீரோடு.
“ஓ!” என்றவனுக்கு அதை விடுத்துக் கேட்க முடியவில்லை. அப்படிக் கேட்பதே அவளைச் சங்கடப்படுத்தும்.
“சரி, அதுக்கு ஏன் இப்பிடி உடைஞ்சுபோய் இருக்கிறீங்க? இதெல்லாம் நாங்க எதிர்பாத்ததுதானே. நீங்க கொஞ்சம் உங்கட அம்மா, அக்கான்ர இடத்தில இருந்து யோசிங்கோ. இதக் கொஞ்சமும் எதிர்பாத்திருக்க மாட்டினம். அந்த அதிர்ச்சி இருக்கும். உங்கட பிள்ளைகளைப் பற்றித்தான் உங்கட அக்கா கதைச்சவாவாம் எண்டு அம்மா சொன்னவா. அப்ப, பாசம் இல்லாம இல்லதானே? பாசம் இருக்கு. என்ன, உங்கள, உங்கட மனதை அவேக்கு விளங்குது இல்ல. அதால உங்களைப் பிழையா நினைக்கினம். நான் அண்டைக்குச் சொன்னதுதான், அவேக்கும் நாங்க எதிர்காலத்தில வாழுற வாழ்க்கை பதில் சொல்லும். நீங்க பிழையான எந்த முடிவையும் எடுக்கேல்ல எண்டு அப்ப தெரியவரும். அதால கவலைப்படாதீங்க. அவேயையும் குறை நினைக்காதீங்க. சரியா?” என்றான் கனிந்த குரலில்.
“ம்.” அவன் வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தன.
“இப்பவும் ம் தானா? ஏதாவது வாயத் திறந்து கதைங்கோவன். உங்கட அக்காக்கு முகமே சரியில்லயாம், கோவமாக் கதைச்சவாவாம் எண்டு அம்மாவும் அக்காவும் சொன்னதில இருந்து, உங்களுக்கு ஃபோன் பண்ணுவமா, வேண்டாமா எண்டு யோசிச்சு யோசிச்சே எனக்கு விசர் பிடிச்சிட்டுது. எப்பிடியும் இப்ப கதைச்சு முடிச்சுப் படுக்க வந்திருப்பீங்க எண்டுதான் மெசேஜ் போட்டனான்.” அவளை எண்ணித் தான் பட்ட பாட்டைச் சொன்னான் அவன்.
அது, தனக்காக யோசிக்க, கவலைப்பட அவன் இருக்கிறான் என்கிற தெம்பைத் தர, “தேங்க்ஸ்.” என்றாள் கரகரத்த குரலில்.
“என்னத்துக்கு?” காரணம் தெரிந்திருந்தாலும் வேண்டுமென்றே வினவினான்.
“இல்ல, இவ்வளவு நேரமும் அக்கா கதைச்சதுகளை மறக்கவே ஏலாம இருந்தது. இப்ப உங்களோட கதைச்ச பிறகு பரவாயில்ல.” கம்மிய குரலாக வந்தாலும் கொஞ்சம் தெளிந்திருந்தது.
“அப்ப, முதலே எனக்கு எடுத்திருக்கலாம்தானே? நான் எடுக்கிற வரைக்கும் பாத்துக்கொண்டு இருப்பீங்களா? இனி எப்பவும் மனதுக்குப் பாரமா இருந்தாலோ, கவலையா இருந்தாலோ எனக்கு எடுங்க. எடுத்து என்ன எண்டு சொல்லுங்க. அப்பிடி, நீங்க மனம் விட்டுக் கதைக்கிற ஆளா நான் இருக்க ஆசைப்படுறன் யசோ. விளங்குதா?” வாஞ்சையுடன் சொன்னான்.
“ம்.”
“திரும்பவுமா?” என்றான் சன்னச் சிரிப்புடன்.
“இல்ல… விளங்குது.”
“இனி எனக்கு நீங்களா எடுப்பீங்கதானே?”
“ம்… அது எடுப்பன்.”
அவள் அவசரமாகத் தன்னைத் திருத்திக்கொண்டதில் அவன் மெலிதாக நகைத்தான். அந்தச் சத்தம் அவள்
காதிலும் விழுந்து, அவள் முகத்திலும் மெல்லிய முறுவலை மலர வைத்தது. மனதும் இலேசாகிற்று.
“அவ்வளவுதான் விசயம். எதையும் யோசிக்காம நிம்மதியாப் போய்ப் படுங்க. முதல் கலியாணம் எண்டாலே ஆயிரம் பிரச்சினைகள் வரும். இது எங்களுக்கு ரெண்டாவது. ஓராயிரம் பிரச்சினைகள் வருமா இருக்கும். இதுக்கே இப்பிடிச் சோர்ந்து போனா எப்பிடி? எல்லாத்தையும் ரெண்டுபேருமாச் சேந்து சமாளிக்கலாம், சரியா?” என்று, அவள் மனத்தை ஆற்றிவிட்டே அழைப்பைத் துண்டித்தான் அகத்தியன்.

