வெளிச்சக்கீற்று 17 – 1

அத்தியாயம் 17

 

 

 

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையிலேயே பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச் சொல்லியிருந்தான் அகத்தியன். குட்டி பிக்னிக் மாதிரி எங்காவது போகலாம் என்றிருந்தான்.

 

தம் திருமணத்தைப் பற்றிப் பிள்ளைகளோடு கதைக்கப் போகிறான் என்று புரிந்தது. எப்படிச் சொல்வான், பிள்ளைகள் அதை எப்படி விளங்கிக் கொள்வார்கள் என்று மனத்தில் மீண்டும் ஒரு பதற்றம். அவள் அதைக் கேட்டபோது, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முடித்துக்கொண்டிருந்தான்.

 

இதையெல்லாம் அறியாத பிள்ளைகள், அகத்தியனோடு போகிறோம் என்றதும் பெரும் கொண்டாட்டத்துடன் தயாராகியிருந்தனர்.

 

முதல் நாளே கமலாம்பிகை, நிசாந்தினி இருவரிடமும் சொல்லியிருந்தாள். காரணத்தையும் சொன்னதில் அவர்களும் மறுக்கவில்லை. தானும் நேரத்திற்கே எழுந்து, சமைப்பதற்கு உதவி செய்தார் கமலாம்பிகை. உணவு, குடிப்பதற்குத் தண்ணீர், இடையில் கொறிப்பதற்குக் கொஞ்சம், எதற்கும் இருக்கட்டும் என்று மாற்றுடைகள், துவாய், விரிப்பு என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து எடுத்துவைத்தாள்.

 

அவனின் கடை வாசலில் சந்திப்பதாக ஏற்பாடு. இவள் சென்றபோது அங்கே காரில் காத்திருந்தான் அகத்தியன். யசோதினிக்கு வியப்பு. காரில் போகிற அளவுக்கு எங்கே போகப் போகிறார்கள்? வவுனியா பார்க் என்று எண்ணியிருந்தாளே!

 

தூரிகாவைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. “கார்லயா போகப்போறம் அகத்தியன் மாமா?” என்று கேட்டுக்கொண்டே ஸ்கூட்டியில் இருந்து இறங்கி அவனிடம் ஓடினாள்.

 

“ஓமடா. கார்லதான் போகப்போறம். ரெண்டுபேரும் உள்ளுக்க ஏறுங்கோ.”

 

அவர்கள் தாமினியோடு சேர்ந்துகொள்ள, யசோதினியின் ஸ்கூட்டியை வாங்கித் தன் கடையின் முன்னால் ஒதுக்கி நிறுத்தினான். அவள் கொண்டுவந்த பைகளை இருவருமாகச் சேர்ந்து கார் டிக்கியினுள் எடுத்து வைத்தனர்.

 

“கார்ல போற அளவுக்கு எங்க போறம்?”

 

“கிம்புலாகல பாறைக்கு. போனா பிள்ளைகள் சந்தோசப்படுவினம். வெயிலுக்கு முதல் மலை ஏறிட்டம் எண்டா நல்லம்.”

 

“சின்னாக்கள் ஏறுவினமா? பாறை எண்டு சொல்லுறீங்க.”

 

“ஏன் ஏறாம? இல்லாட்டியும் தூக்கிக்கொண்டு போகலாம். நீங்க வாங்க.”

 

அங்கே காரில், சின்னவர்கள் மூவரும் பின்னிருக்கையைப் பிடித்திருந்தனர். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. மெல்லிய திகைப்புடன் நின்றவளைச் சிறு சிரிப்புடன் நோக்கி, “ஏறுங்க.” என்றுவிட்டுத் தன் பக்கம் ஏறி, சீட் பெல்ட்டை மாட்டினான் அவன்.

 

வேறு வழியற்று அவளும் ஏறிக்கொண்டாள். இப்படி, அவனருகில் அமர்ந்திருப்பது ஒரு விதமான சங்கடத்தை உண்டாக்கிற்று. கியரை மாற்றுகையில் அவன் கை உரசிவிடுமோ என்கிற பயத்திலேயே அமர்ந்திருந்தாள். என்னதான் அவனோடு திருமணம் என்கிற பெரும் முடிவை எடுத்திருந்தாலும் கூட, எதிர்பாராமல் உருவான அவனுடைய அருகண்மையை ஏற்கத் தடுமாறுகிறோம் என்பதை அப்போதுதான் யசோவே உணர்ந்தாள்.

 

மனம் கலங்கிப் போயிற்று. ஒரே வீட்டில் வசிப்பது வரைக்கும் பேசிவிட்டு ஒரு காரில் பயணிப்பதற்கே இந்தப் பாடா? ஏனோ கிசோர் நினைவில் வந்து கண்களைக் கரிக்க வைத்தான்.

 

தன் சிந்தனையிலேயே உழன்றவள், தன் முகம் மாறிப்போய் இருப்பதையும், அதை அவன் கவனிப்பதையும் கவனிக்கத் தவறினாள்.

 

அகத்தியனின் புருவங்களும் முடிச்சிட்டுக் கொண்டன. கிம்புலாகல மலை சற்றே தூரத்தில் இருந்தது. வீணாக எதற்கு இரண்டு பைக்குகளில் பயணிப்பான் என்பதும், திரும்பி வரும்போது எல்லோருமே நன்றாகக் களைத்துவிடுவார்கள் என்பதாலும்தான் ஒரு நாளுக்கு என்று இந்த காரை வாடகைக்கு எடுத்திருந்தான். அவன் நோக்கம் அவ்வளவுதான்.

 

அதைவிட, நாம் எல்லோரும் ஒரு குடும்பம், இனி இப்படித்தான் நம் வாழ்க்கை இருக்கும் என்பதை மறைமுகமாகப் பிள்ளைகளுக்கு உணர்த்தும் ஒரு முயற்சியாகவும் எண்ணியிருந்தான். இவளானால் பக்கத்து இருக்கையில் அமர்ந்ததற்கே தன்னை ஒடுக்கிக்கொண்டுவிட்டாள்.

 

காலையில் இருந்து அவனுக்குள் வியாப்பித்திருந்த அந்த உற்சாகம் வடிந்த உணர்வு. அதன்பிறகு, அவனும் அவள் பக்கம் திரும்பவில்லை.

 

பின்பக்கம், இவர்களுக்கு முற்றிலும் மாறாக, உச்சபட்சக் கொண்டாட்டமாக இருந்தது. இப்படி, காரில் எல்லோரும் ஒன்றாகப் பயணிப்பதும், மலையேறப்போகிறோம் என்கிற குதூகலமும் என்று சிரிப்பிலும் பேச்சிலும் அதிர்ந்தது.

 

மெல்ல மெல்லத் தன் சிந்தனை கலைந்து, பிள்ளைகளின் கொண்டாட்டம் கவனத்தை எட்டிய பிறகே சுயத்துக்கு மீண்டாள் யசோ. முகத்தில் அரும்பிய முறுவலோடு அவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் திரும்பியவள் பார்வையில், சுளித்திருந்த புருவங்களும் சிரிப்பற்ற முகமுமாக வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தவன் பட்டான்.

 

என்னாயிற்று இவனுக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்கிறான்? அதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல், “இன்னும் கனதூரம் போகவேணுமா?” என்று வினவினாள்.

 

அவள் பேசியது போலவே காட்டிக்கொள்ளவில்லை அவன். காரில் மென்மையாய் ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் சத்தத்தைச் சற்றே கூட்டிவிட்டான்.

 

யசோதினியின் விழிகள் விரிந்தன. அவன் கோபம் அவள் மீது! அப்படி என்ன செய்தாள்? அப்படியே ஏதாவது செய்திருந்தால் கூட இப்படித்தான் அவளைத் தவிர்ப்பானா?

 

அவனுடைய அந்தப் புறக்கணிப்பு, அவளே எதிர்பாராத அளவில் பாதித்தது. அதன்பிறகு, அவள் அவன் புறமாகத் திரும்பவே இல்லை.

 

கிட்டத்தட்ட நாற்பது நிமிடப் பயணத்தின் பின்னே, பெரிதாக ஆளரவமற்ற, காடுகள் தொடங்குவது போன்ற பகுதிக்கு வந்து காரை நிறுத்தினான் அகத்தியன்.

 

“இந்த மலைலதான் ஏறப்போறம். எல்லாரும் ரெடியோ? இல்ல, கால் நோகுது, கை நோகுது எண்டு சொல்லுவீங்களோ?” பின்னால் திரும்பி வினவினான்.

 

“இல்ல இல்ல, நாங்க ஏறுவம். ஆர் முதல் ஏறுறது எண்டு பாப்பமா?” அப்போதே இறங்கி ஓடத் துடித்தாள் தாமினி.

 

“அதுதான் இல்ல. இங்க ஓடக்கூடாது. போட்டி போட்டுக்கொண்டு நான் முந்தி, நீ முந்தி எண்டு நடக்கக் கூடாது. கவனமா, ஒவ்வொரு காலடியா எடுத்து வச்சு ஏறவேணும். தப்பித்தவறி விழுந்தீங்களோ கைகாலில எல்லாம் கல்லுத் தேச்சுக் காயம் வந்திடும். அதால பாத்து பாத்து ஏறவேணும். சரியோ?”

 

“ஓகே ஓகே!” அவர்களுக்கு இறக்கிவிட்டால் போதும் என்கிற பரபரப்பு.

 

“மாமா சொன்னதை எல்லாம் கேப்போம், ஓட மாட்டோம், அவசரப்பட மாட்டோம், விழுந்தெழும்ப மாட்டோம் எண்டு சொல்லுற ஆக்கள் எல்லாரும் கையை வைங்க பாப்போம். கைய வச்சாச் சொன்னத மீறக்கூடாது.” என்று சொல்லி, அவன் தன் கையயை அவர்கள் முன்னே நீட்டினான்.

 

கிழுக்கிச் சிரித்தபடி மூன்று பிஞ்சுக் கரங்களும் ஒன்றின் மீது ஒன்றாக அவன் கையின் மேலே வந்து அமர்ந்தன.

 

பார்த்திருந்த யசோவின் முகம், தன்னாலே முறுவலைச் சிந்திற்று. மிக இலாவகமாக அவன் பிள்ளைகளைக் கையாளும் விதம், அவளைக் கவர்ந்தது.

 

அதன் பிறகுதான் இறங்கி, அவர்கள் பக்கக் கதவைத் திறந்துவிட்டான். மூவரும் சின்னவர்கள் என்பதால், உள்ளிருந்து திறக்க முடியாதபடிக்குப் பின்பக்கக் கதவு இரண்டையும் பூட்டியிருந்தான்.

 

கடைசியாக இறங்கி வந்த சிந்தூரியின் முன்னே குனிந்து, “என்ன மேடம், ஏறுவீங்களா?” என்று கேட்டான்.

 

சின்ன வெட்கச் சிரிப்புடன் அன்னையின் பின்னே ஒளிந்தாள் அவள். அவன் முறுவல் விரிந்தது.

 

“என்னடா அது எப்ப பாத்தாலும் ஒரு வெக்கம்?” என்று அவள் கைப்பற்றி அருகில் இழுத்து, “கவனமாக ஏறவேணும். ஏலாட்டிச் சொல்லோணும், மாமா தூக்கிக்கொண்டு போவன். சரியா?” என்றான் வாஞ்சையோடு.

 

அவளும் சரி என்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டாள்.

 

யசோதினிக்கு மலையைப் பார்க்கவே மலைப்பாயிற்று. அந்தளவில் பரந்து விரிந்து, உயர்ந்து நின்று பயமுறுத்தியது. சின்னவர்கள் ஏறுவார்களா என்கிற சந்தேகம் மீண்டும் உண்டாயிற்று.

 

“அவே ஏறுவினம். எங்களுக்குத்தான் கஷ்டமா இருக்கும்.” அவள் மனவோட்டம் அறிந்தவனாகப் பதில் சொன்னான் அகத்தியன்.

 

அப்படி, கோபம் விடுத்துத் தன்னோடு கதைப்பான் என்று எதிர்பாராத யசோ, அவன் முகம் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

 

இருவர் பார்வையும் சந்தித்துக்கொண்ட நொடியில் அவளுக்குள் என்னவோ உடையும் உணர்வு. ஏன் இவ்வளவு நேரமாக என்னிடம் முகம் திருப்பினாய் என்று கேட்கவேண்டும்போல் எழுந்த உந்துதலைச் சமாளிக்க முடியாமல், கவனத்தைப் பிள்ளைகளிடம் திருப்பினாள். அவர்கள் மூவருக்கும் முடியை ஒன்றாக்கி போனிடெயில் போட்டுவிட்டாள்.

 

அப்படியே, முதுகில் மாட்டும் குட்டி பாக்குகளில், பெரிதாகப் பாரம் இல்லாத வகையில் கொறிப்பதற்கும் அருந்துவதற்கும் எடுத்து வைத்துக் கொடுத்தாள்.

 

மூவரும் அதை முதுகில் மாட்டிக்கொண்டு, மலையேறத் தயாராக நின்ற காட்சி, பெரியவர்கள் இருவர் முகத்திலும் முறுவலைத் தோற்றுவித்தது.

error: Alert: Content selection is disabled!!