அத்தியாயம் 18
நடந்த நடையும், வயிறு நிறையச் சாப்பிட்டதும், உச்சியில் அமோகமாக வீசிய காற்றும், முதலைப் பாறையின் கீழ் கிடைத்த சுகமான நிழலும் சேர சின்னவர்கள் தமக்குள்ளேயே சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர். பெரியவர்கள் இருவருக்கும் கூட உண்ட களையும், மலையேறிய களைப்பும் இருந்ததில் சின்னவர்களைப் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருப்பது நன்றாகவே இருந்தது.
“அகத்தியன் மாமா, நீங்களும் வாறீங்களா, சேந்து விளையாடுவம்.” என்று அழைத்தாள் தூரிகா.
பார்வை ஒருமுறை யசோவிடம் சென்று வர, “அதுக்கு முதல் எனக்கு ஒரு கேள்வி இருக்கு. அதுக்குப் பதில் சொன்னா, மாமா விளையாட வருவன்.” என்று பேரம் பேசினான் அவன்.
“என்ன கேள்வி? கேளுங்கோ சொல்லுறன்.” ஓடி வந்து அவன் முன்னே சப்பாணி(சம்மணம்) கொட்டி அமர்ந்தபடி வினவினாள் தூரிகா.
இங்கே, யசோவுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது. அவ்வளவு நேரமாக அடிமனத்தில் அகழாமலேயே இருந்த பயம், இப்போது அதிகரித்துப்போனது.
“நீங்களும் வாங்க!” மற்ற இருவரையும் அழைத்து அவளின் இரு பக்கமும் அமரவைத்தான்.
“தாமினியோட மாமா முதலே கதைச்சிட்டன். அதால, எனக்கு இப்ப சிந்துக்குட்டியும் தூரிச் செல்லமும்தான் பதில் சொல்லோணும், சரியா?” என்று கேட்டு, அவர்களின் சரி என்கிற தலையசைப்பை வாங்கிக்கொண்டு, “உங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பிடிக்குமா?” என்று வினவினான்.
“பிடிக்குமே.” கேள்வி முடிய முதலே பதில் சொன்னாள் தூரிகா.
“உங்களுக்கு மேடம்?” சிந்துவைப் பார்த்துச் சிரிப்புடன் வினவினான்.
அவள் தலையும் பிடிக்கும் என்பதுபோல் ஆடியது.
“அத வாயத் திறந்து சொல்ல மாட்டீங்களா?” என்றவன் அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.
அவளும் விலகவில்லை.
“சரி சொல்லுங்கோ ரெண்டுபேரும், எவ்வளவு பிடிக்கும்?”
“நிறைய நிறைய நிறைய! இந்த மலையளவுக்குப் பிடிக்கும்.” கைகள் இரண்டையும் விரித்துச் சொன்னாள் தூரிகா.
அகத்தியனின் முறுவல் விரிந்தது.
“உண்மையாவோ? நம்பலாமோ?”
“உண்மையாத்தான் சொல்லுறன். பொய் சொன்னா அம்மா பேசுவா.” என்று அவனிடம் சொன்னவள், உடலை மட்டும் வளைத்துத் திருப்பி, “ஓம் எல்லாம்மா?” என்று யசோவிடம் வினவினாள்.
ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாள் யசோ.
பார்வை மீண்டும் யசோவிடம் சென்று வர, “அப்ப உங்கட அகத்தியன் மாமாவை உங்கட வீட்டுக்கே கூட்டிக்கொண்டு போறீங்களா?” என்று, வெகு சாதாரணக் குரலில் வினவினான் அகத்தியன்.
“ஓ!” என்று துள்ளிக்கொண்டு எழுந்த தூரிகா பின் நிதானித்து, “ஆனா… சிந்தாமணி அம்மம்மா அழமாட்டாவா? அவா பாவம் எல்லா.” என்று திடீரென்று முளைத்த கேள்வியை வினவினாள்.
“அவாக்கு வயசு போயிட்டுதாம். அவவால என்னைப் பாக்கேலாதாம். எப்ப பாத்தாலும் பிரஷர் கூடிப்போய் நிக்குதாம். அதால என்னைத் தனியாப் போய் இருக்கச் சொல்லிச் சொன்னதே அவாதான்.” என்றான் அவன் சோகக் குரலில்.
கிளுக் என்று தாமினி சிரிக்க, மற்ற இருவர் முகத்திலும் அந்தச் சிரிப்புத் தெறித்தது.
“இந்திரா அன்ட்ரி இருக்கிறாவே.”
“அவாக்கும் இன்னொரு குட்டி பேபி வரப்போகுது எல்லா. வந்தா அவாக்கும் நேரம் இல்லையாம்.”
“அப்ப நீங்க எங்கட வீட்டையே வாங்கோ.” என்றவள் மீண்டும் அன்னையின் புறம் திரும்பி, “அம்மா, மாமாவைக் கூட்டிக்கொண்டு வரலாம் எல்லா? நீங்க ஒண்டும் சொல்ல மாட்டீங்கதானே?” என்று வேறு வினவினாள்.
யசோவின் நெஞ்சுக்குள் பெரும் சத்தம். அதைக் காட்டாமல் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள்.
“நீங்க? உங்களுக்கும் நான் உங்கட வீட்டை வாறது விருப்பமா?” மடியில் இருந்த சிந்தூரியிடம் வினவினான் அகத்தியன்.
அவளும் சம்மதமாகத் தலையை ஆட்டினாள்.
“பிறகு தாமினிக்கு?”
“எனக்கு ஒண்டும் இல்ல. மாமா உங்கட வீட்டையே இருக்கட்டும். நான் அப்பப்ப உங்கட வீட்டை வருவன். நீங்களும் எங்கட வீட்டை மாமாவோட வரலாம். அப்ப நாங்க எல்லாரும் சேந்து விளையாடலாம்.” என்ற தாமினியின் பதில், அவளுக்கு அனைத்தும் முதலே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்கிற யசோவின் சந்தேகத்தை உறுதி செய்தது.
“ஓம் என்ன.” என்று குதூகலித்தாள் தூரிகா.
“அப்ப நான் உங்கட வீட்டை வரலாம் தானே?”
“ஓம் வரலாம்.”
“ஆனா, நான் சும்மா வந்து இருக்கேலாதே.”
“ஏன்?” அவளுக்குக் குழப்பம். வருகிறேன் என்றவன் சும்மா வந்திருக்க முடியாது என்றால் என்ன அர்த்தம்? சிந்தூரியும் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
பார்வை அவளிடமும் சென்றுவர, “அப்பிடி ஆரும் வந்து உங்கட வீட்டிலேயே இருந்திருக்கினமா?” என்று விசாரிப்பதுபோல் கேட்டான் அகத்தியன்.
“இல்லயே.”
“உங்கட பெரியம்மா வீட்டில?”
“இல்ல.”
“ஆனா, உங்கட பெரியப்பா பெரியம்மாவோடதானே இருக்கிறார்.”
“ஓம்.”
“அது எப்பிடி?”
“எப்பிடி?” அவளின் குட்டிப் புருவங்கள் இரண்டும் சுருங்கிற்று.
“ஏன் எண்டால் உங்கட பெரியம்மா பெரியப்பாவைக் கோயில்ல வச்சுக் கலியாணம் கட்டி இருக்கிறா.” என்று முடித்தான் அவன்.
“ஓ!” அவள் இழுவை அவன் சொன்னதை உள்வாங்க முயல்கிறாள் என்று சொல்லிற்று.
அள்ளியணைக்க மனம் உந்தினாலும் தன்னை அடக்கிக்கொண்டான்.
“கஜன் மாமாவும் அப்பிடித்தான். அவர் தவமலர் அம்மம்மான்ர மகன். ஆனா, அவர் உங்கட இந்திரா அன்ட்ரிய கலியாணம் கட்டின பிறகுதான் அங்க வந்து இருக்கிறார். அவேய மாதிரி நான் வந்து உங்களோடயே இருக்கிறது எண்டால், உங்கட அம்மா கோயில்ல வச்சு என்னைக் கலியாணம் செய்யோணும். உங்களுக்கு அது விருப்பமோ?”
இப்போது சின்னவள் முகத்தில் குழப்பம். அவன் சொல்கிற அந்தக் கலியாணம் அவள் அறிந்தும் அறியாததுமான பகுதியாக இருந்தது. அன்னையைத் திரும்பிப் பார்த்தாள்.
யசோவின் இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து நின்று துடித்தது. இமை சிமிட்டாமல் மகள் என்ன சொல்லப்போகிறாளோ என்று பார்த்திருந்தாள்.
“ஆனா, அம்மா எங்கட அப்பாவை முதலே கலியாணம் கட்டிட்டாவே.” அவள் முகத்தில் பெரும் குழப்பம்.
“கெட்டிக்காரி. எங்கட தூரிக்குட்டிக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.” என்று பாராட்டிவிட்டு, “ஆனா, இப்ப உங்கட அப்பா இல்லை எல்லோ. அவர் திரும்பி வரவும் மாட்டார் என்ன? அவர் இருந்திருந்தா உங்கட பெரியப்பா மாதிரி, கஜன் மாமா மாதிரி உங்களோடதானே இருந்திருப்பார். இப்ப அவர் இல்லாததால, அவருக்குப் பதிலா, உங்க ரெண்டுபேருக்கும் அப்பா மாதிரி இருக்க எனக்கு ஆசையா இருக்கு. உங்களோடயே இருந்து, உங்களோடயே சாப்பிட்டு, உங்களோடயே விளையாடி, உங்க ரெண்டுபேரையும் பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டுபோக எல்லாம் விருப்பமா இருக்கு. நான் உங்களோடயே வந்து இருந்தாத்தானே அதெல்லாம் நடக்கும்.” என்றதும் தூரிகாவுக்கு உருகியே போயிற்று.
ஓடிவந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “நீங்க எங்களோட வந்தா எங்களுக்கும் சந்தோசம் மாமா.” என்றாள் அவன் முகம் பார்த்து.
அகத்தியன் தன்னைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டான். ஏற்கனவே சிந்தூரி அவன் மடியில் இருக்க, பனித்த விழிகளோடு அவளையும் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
அவர்களிடம் பேசுகிறவரைக்கும் அவனுக்குள்ளும் ஒரு பயம் இருந்துகொண்டுதான் இருந்தது. இப்போதோ எல்லாம் நன்றாகவே நடக்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது. தாமினியையும் இன்னொரு கையால் அணைத்துக் கொண்டு, “ஆனா உங்கட அம்மா ஓம் எண்டு சொல்லுறா இல்லையே. என்ன செய்வம்?” என்றான் சோகமாக.
அப்படியா என்பதுபோல் மூவர் பார்வையும் ஒன்றாக இவள் புறம் தாவிற்று. மெல்லிய சிரிப்பும் படபடப்புமாக அவள் அமர்ந்திருக்க, “ஓமா அம்மா? உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்று, அவனிடம் இருந்தே வினவினாள் தூரிகா.
“நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களுக்கு விருப்பமா?” தன்னைச் சாதாரணமாகக் காட்ட முயன்றுகொண்டே திருப்பிக் கேட்டாள்.
அகத்தியன் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, “மாமா பாவம்தானே. கூட்டிக்கொண்டு போவம். சிந்து உனக்கு?” என்றாள் தங்கையிடம்.
அவள் அகத்தியனையும் அன்னையையும் மாறிமாறிப் பார்த்தாள்.
“ஓம் எண்டு சொல்ல மாட்டீங்களா? அப்ப உங்களுக்கு மாமாவப் பிடிக்காது என்ன?” என்று அவன் உதடு பிதுக்க, “கூட்டிக்கொண்டு போவம்.” என்றாள் சிந்தூரி.
“அப்பாடி, இவ்வளவு நேரத்துக்கு இப்பதான் வாயத் திறந்து கதைச்சிருக்கிறா. அவ்வளவுக்குப் பெரிய ஆள் நீங்க?” என்றவன் அவளுக்குக் கிச்சு கிச்சு மூட்டினான்.
அவள் அடக்கமாட்டாமல் அவன் மடிக்குள்ளேயே உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பித்தாள். சின்னவர்களும் அவனோடு சேர்ந்துகொண்டனர். மூவருக்கும் மாறி மாறிக் கிச்சு கிச்சு மூட்டி, அதை ஒரு விளையாட்டாகவே மாற்றி, அதற்குமேல் அந்தப் பேச்சை வளரவிடாமல் சூழ்நிலையையே மாற்றி இருந்தான் அகத்தியன்.
காரியம் சாதித்துவிட்டானே! யசோவின் உள்ளம், தன் இறுக்கம் தளர்த்தி வெகுவாக நெகிழ்ந்திருந்தது. விழிகளின் ஓரம் மெலிதாகக் கரித்திருக்க அவனையே பார்த்திருந்தாள்.
என்னவெல்லாமோ கதைத்தார்கள். எதற்கெல்லாமோ சிரித்தார்கள். அவன் மீதே உருண்டு பிரண்டார்கள். அவர்களுக்குள் யசோ போகவே இல்லை. ஒருவித சுகமான மயக்க மனநிலைக்குள் மூழ்கிப் போயிருந்தாள்.
இதற்கிடையில் எப்போது, எப்படி நடந்தது என்றெல்லாம் அவள் கருத்தில் பதியவே இல்லை. பாறையின் தரையில் கொண்டுவந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்க, அதில் ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து, கால் நீட்டிப் படுத்திருந்தான் அகத்தியன். அவன் மார்பில் சிந்தூரி நல்ல உறக்கத்தில் இருந்தாள். மற்ற இரண்டு பக்கமும் தாமினியும் தூரிகாவும். பார்க்கவே மனத்துக்கு இதம் சேர்த்தது. அவன்தான் அவர்களுக்கு இனி அப்பாவின் இடத்தில் இருக்கப் போகிறான் என்று அறிந்ததில் இருந்து, தூரிகாவும் சிந்தூரியும் ஒரு படி அதிகமாக அவனோடு ஒட்டிக்கொண்டது போலொரு மாயை.
அவள் மிக மிகப் பயந்த தருணம். அதை எத்தனை இலாவகமாகக் கையாண்டுவிட்டான். ஆக, எல்லாவற்றுக்கும் வழியிருக்கிறது. கொஞ்சம் நிதானமும் புத்திசாலித்தனமும் இருந்தால் போதுமானது.
அவள் பார்வை, அவர்களிலேயே நிலைத்திருப்பதைக் கண்டு, “இன்னும் இடமிருக்கு.” என்றான் அவன் மெல்லிய குரலில்.
முதலில் விளங்காமல் புருவம் சுருக்கியவள், விளங்கியதும் அவனை முறைக்கப் பார்த்து முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
மனத்தில் ஒரு விதமான இனிமை. காற்றின் தாலாட்டும் சேர்ந்துகொள்ள, இந்த நொடிகளை அனுபவிக்கத் தனிமை வேண்டும் போலிருந்தது. எழுந்து வந்து தனியாக நின்றிருந்த ஒற்றைக் கல்லில் சாய்ந்துகொண்டாள். மனத்தில் எந்தச் சலனமும் இல்லை. பயம், பதற்றம், யோசனை என்று எதுவுமில்லை. இப்படி, நிர்சிந்தையாய் அவள் இருந்து எத்தனையோ வருடங்களாயிற்றே!

