வெளிச்சக்கீற்று 19 – 1

அத்தியாயம் 19

 

 

அகத்தியன் யசோதினி திருமணம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கோயிலில் வைத்து வெகு எளிமையாக நடந்து முடிந்தது.

 

சவீதா வரவில்லை. தவமலரும் கதிரேசனும் மட்டும் வந்திருந்தார்கள். ஒரு பொருளின் அருமை, அதை இழந்த பிறகுதான் தெரியும் என்பதன் முழு அர்த்தத்தை, அன்றைய நாளில் முழுமையாக உணர்ந்தார் தவமலர். அவர் மகள் இருந்த அதே இடம். இன்று இன்னொருத்தி வந்துவிட்டாள். இனி அவர் மகளுக்கு அந்த இடம் இல்லவே இல்லை!

 

அவரிடமிருந்து பெரும் அனலாக மூச்சொன்று வெளியேறியது.

 

அவர்கள் எல்லோருக்கும் அவர் ஒரு துரோகி, பொய் சொன்னவர், ஏமாற்றியவர். ஆனால், ஒரு அன்னையாய் அவரால் அப்படித்தான் நடக்க முடிந்தது.

 

அவளின் கருப்பையை அகற்றியதில் இருந்தே எப்படி அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகிறேன் என்று தனக்குள்ளேயே மருகிக்கொண்டு இருந்தார். அப்போதுதான், மகன் காதல் அவர் காதில் விழுந்தது. காதல் என்றதுமே கண்ணை மூடிக்கொண்டு மறுக்கும் எண்ணமெல்லாம் அவருக்கில்லை. பெண்ணைப் பற்றி விசாரித்தார். அகத்தியனைப் பற்றியும் தெரிய வந்திருந்தது. அன்றில் இருந்தே மனத்தில் ஒரு கணக்கைப் போட்டபடி காத்திருந்தார். அந்தக் கணக்குப்படிதான் அனைத்தும் நடந்தது. மகளும் நிறைவாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்தாள்.

 

அதைப் பார்த்து ஒரு அன்னையாக அவர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. அதன்பிறகு நடந்தவை அனைத்தும், வாழ்க்கை எப்போதும் நாம் போடும் வட்டத்துக்குள் மாத்திரமே இருப்பதில்லை என்று அவருக்குக் கற்றுத் தந்திருந்தது.

 

அவளுக்கு இன்னொரு திருமணத்துக்குப் பார்த்தபோது கூட, மொத்த சொத்தையும் சீதனமாகத் தருகிறோம் என்று சொல்லியும், குழந்தை பெறமுடியாதவள் என்கிற ஒன்றின் முன்னே அவர் தோற்றுத்தான் போனார்.

 

இதோ, மொத்தமாகத் தோற்று நிற்கிறார். இனி அவர் மகளின் நிலை என்ன? நினைக்க நினைக்க ஐயோ ஐயோ என்று மனத்தில் ஒருவிதப் பரிதவிப்பு. நெஞ்சு அடைத்துக்கொண்டு வந்தது. வாயைத் திறந்து கதைத்தால் கதறிவிடுவோம் எனும் நிலை. நெஞ்சை அடைக்கும் அந்த வேதனையோடு அங்கு அவர் நிறைய நேரம் நிற்கவில்லை. திருமணம் முடிந்த கையோடு தம்பதியை வாழ்த்திவிட்டுப் புறப்பட்டிருந்தார்.

 

பிள்ளைகளைக் கருத்திற்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் எதுவும் வேண்டாம் என்றிருந்தான் அகத்தியன். அதன்படி, அவர்களின் வீட்டுக்குப் போய்விட்டு, அன்று மாலையே யசோவின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

 

இரவுணவு அவர்கள் எல்லோருக்கும் அங்கேதான். கமலாம்பிகையும் நிசாந்தினியும் ஆனந்தனின் உதவியோடு எல்லோரையும் மிக மிக நன்றாகவே கவனித்துக்கொண்டனர். அகத்தியனும் ஆனந்தனுக்குக் கை கொடுத்தான்.

 

நிசாந்தினிக்குள் மெல்லிய குற்றவுணர்வு. எதிர்காலம் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால் இன்று, யசோவின் முகத்தில் தெரியும் மலர்ச்சியையும், சின்னவர்கள் இருவரின் கொண்டாட்டத்தையும், அகத்தியன் மாமா என்று அவன் பின்னாலேயே அவர்கள் திரிவதையும் பார்க்கையில் மிக மிக நிறைவாய் உணர்ந்தாள். இப்படியே அவர்கள் காலத்துக்கும் வாழ்ந்துவிட வேண்டும் என்றும் விரும்பினாள்.

 

யசோ கணவனை இழந்து தனியாக இங்கு வந்தபிறகு, ஆனந்தனையும் யசோவையும் குறித்து அனாவசியப் பேச்சுகள் எழுந்தபோது அதிர்ந்துபோனாள். தன் கணவனோடு தங்கை இணைத்துப் பேசப்படுவதை அவள் விரும்பியதில்லை. அப்படியான நேரங்களில் முகம் திருப்பியிருக்கிறாள்தான்.

 

தங்கை மீதும் அவள் பிள்ளைகள் மீதும் அன்பும் அக்கறையும் இருந்தாலும்கூட, தன் வாழ்வில் ஒரு பிரச்சனை வருவதில் அவளுக்கு உடன்பாடில்லை. அதனாலேயே, என் வாழ்க்கை பாதிக்காத தூரத்திலேயே நின்றுகொள் என்று விலக்கி நிறுத்தியிருக்கிறாள்.

 

இளம் வயதிலிருந்தே தனி ஒருத்தியாக அந்தக் குடும்பத்தைக் கொண்டு ஓடியவளுக்கு, அமைந்த அருமையான வாழ்க்கையை எதன்பொருட்டும் கெடுத்துக்கொள்வதில் உடன்பாடில்லை.

 

ஏற்கனவே தங்கைக்குக் கணவன் இல்லை. அப்பாவும் இல்லை. ஆண் சகோதரர்களும் இல்லை. அவர்கள் நிலையறிந்து சொந்த பந்தங்களும் தள்ளித்தான் நிற்கின்றன. இப்படி இருக்கையில், என் வாழ்க்கைக்கும் எதுவும் நடந்துவிட்டால் என்னாகும் என்கிற பயமும் இருந்தது.

 

அதேபோன்றுதான் இந்தத் திருமணப் பேச்சு வந்தபோது நடந்ததும்.

 

யசோவே உழைத்து, தன்னையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்ட போதிலும் அவர்கள் மூவரினதும் பொறுப்பு இவளுக்கும் இருந்தது. கூடவே, இரண்டு பிள்ளைகளோடு இருக்கிறவளைக் கட்ட எவன் வருவான் என்கிற கேள்வியும், அப்படி வருகிறவன் நல்லவனாக இருப்பானா என்கிற பெரும் சந்தேகமும் இருந்தது. தப்பித்தவறி இன்னொரு பிள்ளை பிறந்த பிறகு, அவன் விட்டுவிட்டுப் போய்விட்டால் மூன்று பிள்ளைகளோடு என்னாவாள் என்கிற பயமும், பிறகு அதையும் நான்தானே பார்க்கவேண்டும் என்கிற எண்ணமும் சேர்ந்துதான் கோபப்பட்டுக் கத்த வைத்தது.

 

இது எல்லாவற்றையும் விட, வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பாதபோதும், இந்தக் குடும்பத்தைக் கொண்டு ஓடியவள் நான், அதனால் யார், எது செய்வதாக இருந்தாலும் என்னைக் கேட்டு, என் அனுமதி பெற்றுத்தான் செய்யவேண்டும் என்கிற ஒருவித அதிகார எண்ணம் அவளறியாமலேயே அவளுக்குள் வந்துவிட்டிருந்தது.

 

அந்த எண்ணம்தான் முதலும் தனக்கு முதலே காதலித்து மணந்ததையும், இப்போதும் தன்னைக் கேளாமல் திருமணத்துக்குச் சம்மதம் சொல்கிற வரை போனதையும் ஏற்க முடியாமல் வார்த்தைகளால் அவளைப் பந்தாட வைத்திருந்தது.

 

இன்றைக்கு யோசித்துப் பார்க்கையில் மிகவும் சின்னத்தனமாக நடந்துவிட்டோமோ என்று மனம் குன்றிற்று.

 

என்ன செய்து இதை நிவர்த்தி செய்யலாம் என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்கையில், “அக்கா, மாமியாக்கள் வெளிக்கிடப் போயினமாம்.” என்றபடி வந்தாள் யசோ.

 

திரும்பிப் பார்த்தாள். கழுத்தில் தாலிக்கொடியும், நெற்றியில் குங்குமமுமாக மங்களமாக நின்றிருந்தாள் அவள். தன்னிச்சையாக இவள் விழிகள் பனித்தன. அவள் கையைப் பற்றி, “அண்டைக்கு நான் கோபத்தில கதைச்சதுகளை மனதில வச்சிருக்காதயடி. உண்மையாவே பிள்ளைகளின்ர நிலைமை என்ன ஆகுமோ எண்டுற பயம் இருந்தது. என்னட்ட சொல்லாம இந்தளவுக்குப் போயிருக்கிறாளே எண்டுற கோபத்திலையும்…” என்றுவிட்டு மேலே சொல்ல வராமல் அவள் தடுமாற, யசோவுக்கு அந்தளவுமே போதுமாயிருந்தது.

 

“எனக்குத் தெரியும் அக்கா. நீங்க என்னை விளங்கிக்கொள்ளுறீங்க இல்லையே எண்டு மட்டும்தான் கவலையா இருந்தது. இப்ப அதுவும் இல்ல. அதால ஒண்டையும் யோசிக்காம வாங்க.” என்று கையோடே அவளை அழைத்துச் சென்றாள்.

 

தானும் புறப்படுவதற்கு முதல் அகத்தியனைத் தனியாகப் பிடித்தார் சுசீலா.

 

“தம்பி, சொல்லுறன் எண்டு குறை நினைக்கக் கூடாதப்பு. இந்தக் கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லுறதுக்கு முதல் அவாக்கு நிறையப் பயம் இருந்தது. கலக்கம் இருந்தது. அதையெல்லாம் தாண்டித்தான் உங்களைக் கட்டி இருக்கிறா. அந்தப் பிள்ளை எடுத்திருக்கிறது சாதாரண முடிவு இல்ல. மிகப் பெரிய விசயம். சரியாச் சொல்லப்போனா அவான்ர வாழ்க்கையோட சேர்த்து ரெண்டு பிள்ளைகளின்ர வாழ்க்கையையும் தூக்கி உங்கட கைல தந்திருக்கிறா. ஒரு பொம்பிளை வேணுமெண்டால் சாதாரணமா ஒரு ஆம்பிளையை நம்பி வருவாவா இருக்கலாம். ஒரு அம்மா கடைசி வந்தாலும் அப்பிடிச் செய்ய மாட்டா. அப்பிடி இருந்தும் யசோ துணிஞ்சு உங்களைக் கட்டி இருக்கிறா எண்டா அந்தளவுக்கு உங்களை நம்பிறா எண்டு அர்த்தம். அந்த நம்பிக்கையை நீங்க காப்பாத்த வேணும். உங்கள என்ர பிள்ளை மாதிரி நினைச்சுக் கேக்கிறன். அவே மூண்டு பேரையும் சந்தோசமா வச்சிருங்கோ.” என்றார் உள்ளார்ந்த அன்புடன்.

 

அகத்தியனின் மனம் கனிந்து போயிற்று. “கட்டாயம் அக்கா.” அவர் கரம் பற்றிச் சொன்னான். கூடவே, “நாங்க நாலுபேரும் நிச்சயம் சந்தோசமா வாழுவோம். அத நீங்களும் பாப்பீங்க.” என்றான் மிகுந்த நம்பிக்கையோடு.

 

இந்தத் திருமணத்துக்காக அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தான் பெற்ற பிள்ளைகளைக் கரைசேர்க்கும் முனைப்போடு அனைத்தையும் பார்த்தவர். அதன் பின்னே இருந்தது சுயநலமற்ற பேரன்பு மட்டுமே! தான் அனுபவிக்கும் துன்பத்தை இன்னொரு பெண்ணும் அனுபவித்துவிடக் கூடாது எனும் பரிதவிப்பு. அப்படியான அவரின் உள்ளம், அவன் வார்த்தைகளில் நிறைந்து போயிற்று.

 

“இந்தளவும் போதுமையா எனக்கு. மனம் நிறைஞ்சு இருக்கு.” என்றவர் யசோ, அவள் வீட்டினர், சின்னவர்கள் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு சிந்தாமணி குடும்பத்தினரோடு புறப்பட்டார்.

 

உறங்கும் நேரம் தாண்டியிருந்தது. இத்தனை நாள்களும் இவர்களோடு உறங்கிய கமலாம்பிகை, மூத்தமகள் வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

 

திடீரென்று அவர்கள் நால்வர் மட்டுமே என்றாகிவிட்டதில் யசோவினுள் ஒரு தயக்கம் வந்து அமர்ந்தது. அறைக்குள் புகுந்து அன்று முழுக்க அணிந்திருந்த சேலையைக் களைந்துவிட்டு, வீட்டுடையில் வெளியே வந்தாள்.

 

சொன்னது போலவே அகத்தியன் தங்கள் வீட்டுக்கு வந்துவிட்ட குதூகலத்தில் பிள்ளைகள் இருந்தனர். அவனும் விறாந்தையின் தரையில் அமர்ந்திருந்து, அவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தான்.

 

“உங்களுக்குக் கட்டில் அறைக்க போட்டிருக்கு.” அறையைக் காட்டிச் சொன்னாள்.

 

“நீங்க மூண்டுபேரும்?”

 

“நாங்க எப்பவும் இங்கதான், பாய்ல படுக்கிறனாங்க.”

 

“அப்ப எனக்கும் இங்கயே ஒரு பாய விரிங்க.” என்றுவிட்டு எழுந்துபோய், அவனும் வீட்டுக்கு அணியும் இலகு பாண்ட் சட்டையில் வந்தான்.

 

அதற்கிடையில் மூன்று பாய்களை அடுத்தடுத்து விரித்து, தலையணை பெட்ஷீட்களையும் கொண்டுவந்து போட்டிருந்தாள் யசோ.

 

வீட்டைப் பூட்டி, விளக்கணைத்து, சின்னவர்களுக்காக என்று மேசை விளக்கு ஒன்றை மெல்லிய வெளிச்சத்தில் கசியவிட்டுவிட்டு அவள் வந்தபோது, சிந்து அவன் மார்பிலும் தூரிகா அவனின் ஒற்றைக் கையணைப்பிலும் படுத்திருந்தனர்.

 

உள்ளூர அவளுக்கு வியப்பு உண்டாயிற்று. அதுநாள் வரையில் இரவில் உறங்குவதற்கு அவர்களுக்கு அவள் வேண்டும். இன்று, அவளொருத்தி இருப்பதையே மறந்திருந்தனர். கையில் கொண்டு வந்திருந்த தண்ணீர் போத்தலை அவனுடைய தலைமாட்டில் வைத்தாள்.

 

“குட் நைட் யசோ.” மெல்லிய குரலில் அவள் முகம் பார்த்துச் சொன்னான்.

 

ஒருநொடி இருவர் பார்வையும் கலந்து கவ்விற்று. “குட் நைட்!” தானும் மெல்ல முணுமுணுத்துவிட்டு வந்து தன்னிடத்தில் சரிந்துகொண்டாள். மூடிய விழிகளுக்குள் அவன் பார்த்த பார்வையே நின்றது.

 

உடலில் மிகுந்த களைப்பு. ஆனாலும், உறங்க முடியவில்லை. மீண்டும் கழுத்தை அலங்கரித்திருக்கும் தாலிக்கொடியை வருடிக்கொடுத்தாள். அதைப் பூட்டியவனும், சற்றுமுன் அவன் பார்த்த பார்வையும் நினைவில் வர திரும்பிப் பார்த்தாள். மூவரின் பேச்சுச் சத்தமும் நின்றிருந்தது.

error: Alert: Content selection is disabled!!