முடிவே இல்லை. ஊரின் வாயை எதைக்கொண்டும் மூட முடியாதே! அவரும் சேர்ந்துதான் அவளை அனுப்பி வைத்தார். போனது ஓர் அவசரத் தேவைக்கு. அங்கே யார் அவளோடு சென்றிருந்தாலும் ஆனந்தன் செய்த உதவிகளைச் செய்துதான் இருப்பார்கள். அப்படியிருக்க இதற்கு முடிவு என்று எதைச் சொல்வது?
நிமிடங்கள் சில மௌனத்திலேயே கழிய, “இன்னொரு கலியாணம் கட்டட்டோ எண்டு யோசிக்கிறன் அம்மா.” என்று மெல்லச் சொன்னாள் யசோதினி.
“என்னம்மா சொல்லுறீங்க?” காதில் கேட்டதை நம்ப முடியாத கமலாம்பிகை விலுக்கென்று எழுந்து அமர்ந்தார். என்னவோ கேட்கக் கூடாத செய்தியைக் கேட்டுவிட்டது போன்று அவர் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.
இந்த அதிர்ச்சியை அவரிடமிருந்து எதிர்பார்த்தாள்தான். என்றாலும் சங்கடப்பட்டுப் போனாள். அவர்களைச் சூழ்ந்திருந்த இருள், அவர் பார்வையை நேரே எதிர்கொள்ள விடாமல் தடுத்துவிட்டதில் சமாளித்துக்கொண்டாள்.
“இப்பிடியே நான் ஒருத்தியா இன்னும் எவ்வளவு காலத்துக்கு எண்டு பயமா இருக்கம்மா. அதவிட, எல்லாரும் மனுசன் மனுசி எண்டு சந்தோசமா வாழ, நான் மட்டும் ஏனம்மா இப்பிடியே இருக்கோணும்?” என்றாள் தழுதழுத்த குரலில்.
கமலாம்பிகையின் மனம் கலங்கிப் போயிற்று. விழிகளில் மளுக்கென்று கண்ணீர் சேர்ந்துபோனது. இரண்டு கைகளாலும் துடைத்துக்கொண்டார். ஆனந்தன் வீட்டினர் சொன்னது சரிதானோ என்று வேறு உள்ளே ஓடிற்று. சின்ன வயதில் கணவனை இழந்த அவள் பாவம்தான். அது கொடுமைதான். அதற்கென்று இன்னொரு திருமணத்திற்கு ஆசைப்படுவாளா?
“என்னம்மா கதைக்கிறீங்க? உங்களுக்கு ரெண்டு பிள்ளைகளாச்சி. அந்தக் குஞ்சுகளைப் பற்றி யோசிக்கமாட்டீங்களா?”
“அவேயப் பற்றி யோசிக்கேல்ல எண்டு நினைக்கிறீங்களாம்மா?” மெல்லிய குரலில் திருப்பிக் கேட்டாள் யசோ.
“யோசிச்சிருந்தா இப்பிடிக் கேட்டே இருக்க மாட்டீங்க. உங்களுக்கு உங்கட சந்தோசம் முக்கியமாப் போயிற்றுது!” கோபத்துடன் குற்றம் சாட்டினார் அவர்.
மௌனமாய்க் கண்ணீர் உகுத்தாள் யசோ. அப்படியன்று என்று அவரிடம் எப்படிச் சொல்வாள்?
“உங்களுக்கு வாழவேண்டிய வயதுதான். இல்லை எண்டு சொல்லேல்ல. பிள்ளைகள் இல்லாட்டி அது வேற. இப்ப நீங்க உங்கட சந்தோசத்தப் பாக்கிறதவிட பிள்ளைகளப் பற்றித்தான் யோசிக்கவேணும்!” என்றார் சற்றே கடினப்பட்டுவிட்ட குரலில்.
ஒரு பக்கமாகச் சரிந்து படுத்திருந்தவளின் மூக்கை ஊடறுத்துக்கொண்டு கண்ணீர் ஓடிற்று. சிந்தூரியைத் தன் மார்போடு சேர்த்தணைத்தாள். முதுகுப் பக்கத்தில் தூரிகா உறங்கி இருக்க, ஒற்றைக் கால் இவள் மீதிருந்தது. அவர்களைப் பற்றி அவள் யோசிக்கவில்லையா? அல்லும்பகலும் அவள் சிந்தனை முழுக்க முழுக்கச் சுற்றிச் சுழல்வது அவர்களைப் பற்றித்தானே.
இப்படித் தவறாகச் சொல்லி விடுவார்களோ, எள்ளி நகையாடுவார்களோ, ஆணுக்கு அலைகிறாள், பிள்ளைகளை விடவும் அவள் சந்தோசம்தான் முக்கியம் என்று எண்ணிவிடுவார்களோ என்று பயந்து பயந்துதான், இந்த எண்ணம் உதித்த நாளிலிருந்து வெளியே காட்டாமல் வைத்திருந்தாள்.
இதோ இன்று, அவள் பயந்ததுதான் நடந்திருக்கிறது.
“முதல், ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகளோட இருக்கிற உங்களை ஆர் கட்டுவீனம்? கலியாணத்துக்குப் பாக்கிற பொம்பிளைக்கு ஒரு தங்கச்சி இருந்தாலே அந்தப் பொறுப்பும் தன்ர தலைல விழுந்திடுமோ எண்டு ஓடுற காலம் இது.” அவளிடமிருந்து அந்த எண்ணத்தையே அகற்றிவிடும் வேகத்தோடு சொன்னார் அவர்.
“என்னை மாதிரியே இருக்கிற ஆரும் இல்லாமையா இருப்பீனம்?” கண்ணீர்க் குரலில் மெல்லக் கேட்டுப் பார்த்தாள்.
“என்னம்மா கதைக்கிறீங்க? உங்கள மாதிரி இருக்கிற ஆம்பிள கூட உங்கள மாதிரி ஆக்களைக் கட்ட நினைக்காயினம். புதுப் பொம்பிளைதான் தேடுவினம். இல்லையோ பிள்ளை இல்லாத பொம்பிளையத்தான் கட்டுவீனம்.” என்றவருக்கு அழுகையே வந்தது.
அவள் பாவம்தான். அவளைவிட பேரப்பிள்ளைகள் இன்னும் பாவமே! அவர்களை எண்ணி மிகவும் பயந்தார். மகளின் மனத்தை அவரால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்ன தாயிவள் என்று கோபம் வந்தது.
“தேடிப் பாக்காமையே இப்பிடிச் சொன்னா எப்பிடியம்மா?”
“எங்க போய்த் தேடச் சொல்லுறாய்?” என்றார் வெடுக்கென்று. எவ்வளவு சொன்னாலும் விளங்கிக்கொள்கிறாள் இல்லையே என்கிற சினம் அவருக்கு. “முதல், இந்தப் பிள்ளைகளை என்ன செய்யப் போறாய்? அநாதை இல்லம் எதிலேயும் கொண்டுபோய்ச் சேர்க்கப் போறியோ?” என்றார் எரிச்சலுடன்.
“அப்பிடிச் செய்வன் எண்டு நினைக்கிறீங்களா அம்மா?” என்று கேட்டவள் குரல் உடைந்திருந்தது. அவரே அவளை விளங்கிக்கொள்ளவில்லை என்றால் வேறு யார்தான் விளங்கிக்கொள்வார்கள்?
“இப்பிடிக் கேப்பாய் எண்டுகூடத்தான் நான் நினைக்கேல்ல.” அவ்வளவு சொல்லியும் இன்னொரு திருமணம் செய்தே ஆவேன் என்பதுபோல் பேசும் மகள் மீது, வெறுப்பு உண்டாயிற்று அவருக்கு.
“என்னம்மா இது? என்ர பிள்ளைகளுக்கும் அப்பா எண்டு ஒருத்தர் வேண்டாமா? பயமா இருக்கம்மா. இப்பவே இவ்வளவு கதை. நாளைக்கு இந்தப் பிள்ளைகள் வளந்து, அவேன்ர காதிலயும் விழுந்தா என்ன ஆகும்? அக்கா இப்பவே முகத்தக் காட்டுறா.”
அவள் சொல்வது உண்மைதான். அதற்கென்று நெருப்புக்குப் பயந்து எண்ணெய்ச் சட்டிக்குள் விழுவதா?
“இருக்கிற நிம்மதியும் கெட்டுடும் பிள்ளை.”
“அந்தப் பயத்தோடயே காலம் முழுக்க வாழச் சொல்லுறீங்களா?”
“அதுக்காகப் பெத்த பிள்ளைகளின்ர வாழ்க்கையையே பாழாக்க நினைப்பியாம்மா நீ?” என்றவர் அதற்குமேல் அவளோடு பேசப் பிடிக்காதவர் போன்று, அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டார்.
அவரின் அந்தச் செய்கையில் அவள் முகம் கன்றிப் போயிற்று. கண்ணீர் உடைப்பெடுத்தது.
ஆனால் பாதுகாப்பின்மை, பாலியல் தொந்தரவு, பொருளாதாரப் பிரச்சனை, ஈவு இரக்கமே இல்லாமல் இந்தச் சமூகம் அவளை நோக்கி வீசும் அபாண்டமான பழிகள் என்று எத்தனையோடுதான் அவளும் போராடுவாள்? அவளும் ஓர் இல்லற வாழ்வுக்கு ஆசைப்பட்டால்தான் என்ன தவறு? அவளும் ஒரு மனுசிதானே! அவளுக்கும் ஆசாபாசங்கள் உண்டுதானே! எவன் என்றாலும் வரட்டும் அவனோடு வாழ்கிறேன் என்றா சொல்கிறாள்? நல்லவன் ஒருவன் கிடைத்தால் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிடுமே என்றுதானே சொல்கிறாள்.
தன்னையும் பாதுகாத்து, குழந்தைகளையும் பார்த்து, குடும்பத்துக்குத் தேவையான பொருளாதாரத்தையும் ஈட்டியென்று அவள் படுகிற பாடுகளும், மனத்தின் அழுத்தங்களும் எத்தனை பேருக்குப் புரியும்?
கடந்துபோன இந்த நான்கு நாள்களில் அவள் பட்டவை எத்தனை? மாதவிடாயோடு, கையை விட்டு இறங்கவே மாட்டேன் என்ற மகளோடு, முதுகு வலிக்க வலிக்க, மூத்தவள் எப்படி இருக்கிறாளோ என்கிற கலக்கத்தோடு அவள் அனுபவித்த சிரமங்கள் எத்தனை?
இதுவரையில் இப்படி எத்தனைகளைக் கடந்துவிட்டாள்? அப்படியான நாள்களில் உடலும் மனமும் புண்ணாக வலிப்பது இவர்களுக்குத் தெரியுமா? வெளியில் யாரிடமும் சொல்லி ஆறவும் முடியாமல், தனக்குள் போட்டுப் புதைக்கவும் இயலாமல் வெளியில் அமைதியாக இருக்கிற அவளுக்குள் நடப்பவை அனைத்தும் பூகம்பத்தின் வெடிப்புகளாயிற்றே!
இதோ, உடம்பு புண்ணாக வலிக்கிறது. இன்னும் இரண்டு நாள்கள் வீட்டிலிருந்து தன்னையும் தேற்றிக்கொண்டு, மகளையும் பக்கத்திலேயே இருந்து பார்த்துவிட்டு வேலைக்குப் போனால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறாள். முடியுமா? முடியாதே!
விடிந்ததும் விடியாததுமாக அவளை அவரிடம் விட்டுவிட்டு ஓடவேண்டும். அங்கு வேலை செய்யும் நொடிப்பொழுதும் மனமும் சிந்தனையும் இங்கேதான் இருக்கும். நொடிக்கொரு முறை சுவர் மணிக்கூட்டையே பார்ப்பாள். நேரம் வேறு போகவே போகாது. மாலையில் வீடு திரும்புகிறபோது பிள்ளைகளைப் பார்க்கும் அளவுக்கு உடம்பில் தெம்பே இராது. ஓய்வுக்குக் கெஞ்சும் உடலையும், ஓய்ந்துகிடக்கும் மனத்தையும் இழுத்துப் பிடித்துக்கொண்டு அத்தனை வேலைகளையும் முடிப்பாள்.
தன்னைத் தேடும் குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களுக்கான தேவைகளைப் பார்க்க வேண்டும். மீண்டும் அடுத்தநாள் காலையில் அதே ஓட்டம். இனிக் கொஞ்ச நாள்களுக்கு வேலையில் விடுமுறையே கேட்க முடியாது. இதையெல்லாம் அவளால் யாரிடம் சொல்லமுடியும்?
கண்ணீர் அரும்ப விழிகளை மூடிக்கொண்டாள்.

