வெளிச்சக்கீற்று 20 – 2 ( இறுதி அத்தியாயம் )

அவளின் ஒரு கையை எடுத்துத் தானே தன் கன்னத்தில் வைத்தான் அகத்தியன். ‘என்னவாம்?’ அவள் மனம் வெட்கம் கொண்டது. கையை இழுக்கப் பார்த்தாள். அவன் விடவில்லை. மீண்டும் அவள் கையைத் தன் கன்னத்தில் வைத்து வருடிக் காட்டி, அவள் செய்ய வேண்டியது என்ன என்று குறிப்புக் கொடுத்தான். அவளுக்கு இன்னுமே வெட்கமாயிற்று. அவன் மார்புக்குள்ளேயே புகுந்துவிடுகிறவள் போன்று முகத்தைப் புதைத்தாள்.

 

அவன் உடல் சிரிப்பில் குலுங்கிற்று. மிகப் பிடித்த பொம்மையை நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொள்வது போல, அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.

 

துளிர்க்க இனி வழியே இல்லை என்று எண்ணிய வாழ்க்கை. மிக அழகாக மீண்டும் கை சேர்ந்திருந்தது. தன் அன்பைச் சொல்கிறவனாக, அவள் நெற்றியில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.

 

*****

 

 

 

அடித்துப் போட்டதுபோன்று உறங்கிக்கொண்டிருந்தான் அகத்தியன். அவள் குளித்துவிட்டு வந்து பார்த்தும் எழுவதாக இல்லை என்றதும் நேரத்தைப் பார்த்தாள். நேரமாகிக்கொண்டு இருந்தது. இனி எழுப்ப வேண்டும். எப்படி எழுப்புவது? சும்மாவே அவன் முகம் பார்க்கப் படாத பாடெல்லாம் படுவாள். நேற்றைய இரவுக்குப் பிறகு, நிலை இன்னுமே மோசமாகித்தான் போயிருந்தது.

 

அவளுக்கு வேலை வைக்காமல் அவன் கைப்பேசியே அவனை எழுப்பிற்று. அவர்களை எழுப்பிவிடுவதற்காக சிந்தாமணி அழைத்திருந்தார். அவரோடு பேசிவிட்டு அவன் திரும்ப, மும்முரமாக எதையோ செய்கிறவள் போன்று அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றாள் யசோ. சின்னச் சிரிப்பரும்பிற்று அவன் முகத்தில். அவள் கூச்சத்தை மதித்து, சீண்டி விளையாடப் போகாமல் குளியலறைக்குள் நுழைந்துகொண்டான். அவன் வருவதற்கு முதல் சேலையைக் கட்டி முடித்திருந்தாள் யசோ.

 

அவன் வெளியே வந்தபோது, பட்டுச் சேலையில் பாந்தமாகத் தயாராகி நின்றவளைக் கண்டு விசிலடித்தான்.

 

வியப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள் யசோ. ஆரம்பத்தில் கடினமும் கடுமையுமாகப் பார்த்த அகத்தியனா இவன் என்றிருந்தது.

 

“என்ன பார்வை?”

 

“நீங்களா எண்டு நம்பேலாமா இருக்கு.”

 

“எனக்கும்தான். என்ன இப்பிடி மாத்தினது என்ர யசோதான்.” அவளைத் தன் அணைப்புக்குள் கொண்டுவந்தபடி சொன்னான்.

 

அவள் முகத்தில் செம்மை படர்ந்தது. அதை ரசித்தபடி அவள் முகத்தைக் கைகளில் தாங்கினான். “வடிவா இருக்கிறீங்க.” அவள் உதட்டில் அழுத்தமாய் முத்தம் பதித்துச் சொன்னான்.

 

அவன் பார்வையும் அதைத்தானே சொல்கிறது. அவள் முகம் மலர்ந்து விகசித்தது. அவன் கேசத்துக்குள் விரல்களை நுழைத்துக் கோதிவிட்டபடி, “தலையைத் துடைங்க. ஈரமா இருக்கு.” என்றாள்

 

அவளின் இந்தப் புதிய நெருக்கம் அவனைக் கிறங்க வைத்தது. முகம் தானாய் அவள் கழுத்து வளைவில் புதைய, “மனிசியப் பக்கத்தில வச்சுக்கொண்டு எவனாவது அவனே துடைப்பானா?” என்றான் கிசுகிசுப்பாக.

 

அவள் தேகம் தானாய் இயைந்துகொடுக்க, “அதுக்கு நீங்க என்ன விடோணும்.” என்று முணுமுணுத்தாள்.

 

“விடோணுமா?”

 

“நேரம் போகுது.”

 

“இரவு முழுக்க அதி எண்டு கூப்பிட்டீங்க.”

 

அவள் உதட்டைக் கடித்தாள். நேற்றைய அவனின் நெருக்கத்தையும் அவள் மயங்கிப்போனதையும் இப்படித்தான் நினைவூட்டுவானா?

 

அவளிடமிருந்து பதில் இன்றிப் போனதும் முகம் தூக்கிப் பார்த்தான் அகத்தியன். அவள் முகத்தை அவனுக்குக் காட்டாமல் திரும்ப முயன்றாள். “யசோ!” என்று குழைந்தவனின் விழிகளில் அழைப்பிருந்தது. நேரம் போவது தெரிந்தாலும் அவளால் மறுக்க முடியவில்லை. உடல் தீண்டி உயிர் தொட்டவனின் கைகளில் கரைந்தே போனாள்.

 

அரக்கப்பரக்கத் தயாராகி திருமண வீட்டுக்கு ஓடினார்கள். அங்கு, அவர்களுக்கு நல்ல வரவேற்பு. இவர்களும் புதிதாய்த் திருமணமானவர்கள் ஆயிற்றே! கணவன் மனைவியாக அனைத்திலும் பங்கேற்றனர். அமோகமாகத் திருமணம் நடந்து முடிந்தது. அனைத்தும் முடிந்து அவர்கள் வீடு வரைக்கும் போய்விட்டு மாலையானதும் புறப்பட்டனர்.

 

அறைக்கு வந்ததும் பிள்ளைகளுக்கு அழைத்தாள். அனுராதபுரத்தில் பார்த்தவற்றைக் கதை கதையாகச் சொன்னார்கள். அவர்கள் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு கவலையகன்றனர்.

 

இரவு ட்ரெயினில் மீண்டும் பயணம் என்பதில் அப்போதே அனைத்தையும் எடுத்துவைத்தாள் யசோ. நேரம் இருந்ததில் கொஞ்ச நேரம் உறங்கி எழுந்தார்கள்.

 

மீண்டும் அதேபோன்ற முதல்பெட்டிப் பயணம். இந்த முறை, அவர்களோடு சேர்த்து இன்னும் இரண்டு குடும்பத்தினரும் அந்தப் பெட்டியில் அமர்ந்திருந்தனர். என்ன, அவர்களும் இவர்களுக்கு முதுகு காட்டி, யன்னல் புறமாகத் திரும்பி இருந்தனர். உதட்டில் அரும்பிய சிரிப்போடு கணவனைப் பார்த்தாள் யசோ. விசமச் சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டினான் அவன்.

 

மீண்டும் அவன் கையணைப்புக்குள் மிக அழகானதொரு பயணம். இந்தமுறை, அவளுக்கு வெட்கமெல்லாம் இல்லை. அவளாகவே அவன் மார்பினில் சாய்ந்துகொண்டாள். சின்ன முறுவலோடு குனிந்து அவள் நெற்றியில் முட்டினான் அகத்தியன்.

 

புகையிரதம் புறப்பட்டது. நீண்ட நெடிய அவர்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பமாயிற்று.

 

*****

 

மூன்று வருடங்களின் பின்னர்…

 

அன்று சவீதாவுக்குத் திருமணம். மனைவியை இழந்து, ஒரு குழந்தையோடு இருக்கும் சத்யனைத் தேடிப் பிடித்திருந்தான் கஜேந்திரன்.

 

பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், நெருங்கிய சொந்த பந்தங்களோடு திருமணம் நிறைவாய் நடந்து முடிந்திருந்தது. தவமலரும் இந்திராவும் மேடை அருகிலேயே நின்று அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தனர். யாரையும் விட்டுவிடக் கூடாது என்கிற கவனத்தோடு, மணமக்களோடு புகைப்படம் எடுப்பதற்காக ஒவ்வொருவராகப் பார்த்து பார்த்து மேடைக்கு அனுப்பிக்கொண்டிருந்தான் கஜேந்திரன்.

 

அங்கே ஒரு இடத்தில் ஒரு வயது மகனைக் கையில் வைத்துக்கொண்டு, மனைவியோடு அமர்ந்திருந்தான் அகத்தியன். அவன் பெரிதாக மேடைப் பக்கம் வரவில்லை என்பது அப்போதுதான் புத்தியில் உரைக்க, “என்ன அகத்தியன், இங்கயே இருந்திட்டீங்க? வாங்க ஃபோட்டோ எடுப்பம்.” என்று வந்து அழைத்தான் கஜன்.

 

“இல்லை அத்தான். எங்களுக்கு வந்ததே சந்தோசம். நாங்க இங்கயே இருக்கிறம். மேடைக்கு வந்து ஆரையும் சங்கடப்படுத்த வேண்டாம்.” என்று இன்முகமாகவே மறுத்தான் அகத்தியன்.

 

“இதில சங்கடப்பட என்ன இருக்கு? எல்லாம் எல்லாருக்கும் தெரியும்தானே. நீங்க வாங்கோ. யசோ வாங்கோம்மா.”

 

“இல்லை அண்ணா. எங்களைப் பாக்கேக்க பழைய விசயங்கள் நினைவில வரலாம். அதெல்லாம் வேண்டாமே. சின்ன மனச்சிணுக்கம் கூட இல்லாம சவீதா தன்ர வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும். நாங்க இங்கயே இருக்கிறம்.” என்று அவளும் சொல்லிவிட, அதற்குமேல் அவனும் வற்புறுத்தவில்லை.

 

மனத்தில் மட்டும் மிகுந்த நிறைவு. கடினம் நிறைந்த காலங்கள் அவர்கள் எல்லோர் வாழ்விலும் வந்து போயிருந்தாலும் அமைந்தவர்கள் எல்லோருமே நல்ல உறவுகளே!

 

இவர்கள் பேச்சில் கவனமாக இருக்க, அகத்தியனின் மகன் விதுரன் அவன் கைகளில் இருந்து நழுவி இருந்தான்.

 

“அகத்தி அப்பா! நீங்க தம்பில கவனமே இல்ல. பாருங்க ஓடிட்டார்.” அவனைக் கடிந்தபடி தம்பியாரைத் தூக்கிக்கொண்டு வந்தாள் தூரிகா.

 

அகத்தியனின் உதட்டோரம் மெல்லிய முறுவல். அவனை அவள் எப்போது, எப்படி அழைப்பாள் என்று அவளுக்கும் தெரியாது, அவனுக்கும் தெரியாது. அப்பா, அகத்தி அப்பா என்று போகும் அவளின் அழைப்பு, அவள் கோபமாக இருந்தால் மிஸ்டர் அகத்தியன் வரையும் நீளும். சிந்தூரிக்கு விதுரனைப் போலவே அவன் அப்பாதான்.

 

“என்ர பிள்ளை இருக்கிறா எண்டுதான் அப்பா பாக்காம விட்டனான். தூரிக்குட்டி கவனம் இல்லாம இருக்க மாட்டா எண்டு எனக்குத் தெரியுமே.” என்றான் அவன் வாஞ்சையோடு.

 

“அப்ப நான் அப்பா?” உடனேயே கேள்வி எழுப்பினாள் சிந்தூரி.

 

விதுரன் அன்னையிடம் தாவியிருக்க, ஒரே மாதிரியான பட்டுப் பாவாடை சட்டையில், விரித்துவிட்ட கூந்தலுக்கு அழகாய்ப் பூச்சூடி, நெற்றிச் சுட்டி அணிந்து, கண்களுக்கு மை தீட்டி, பூத்துக் குலுங்கும் மலர்களென நின்ற இருவரையும் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, “இதென்ன கேள்வி, கமலா அம்மம்மா சொன்னவா பிள்ளைதான் அவாக்கு மருந்து எல்லாம் மறக்காம எடுத்துக் குடுக்கிறவாவாம். நல்ல கவனமாம் எண்டு. சிந்தாமணி அப்பம்மாவும் அப்பிடித்தான் சொன்னவா. என்ர ரெண்டு பிள்ளைகளும் எல்லாரிலயும் நல்ல பாசமும் கவனமும் எண்டு எனக்குத் தெரியுமே.” என்றான் அவன்.

 

“பிள்ளைகள் என்னவோ கவனம்தான். அப்பாதான் வரவர மோசமாகிக்கொண்டு போறார். ஒருத்தரையும் கவனிக்கிறேல்ல. வீட்டுக்கும் நேரத்துக்கு வாறேல்ல.” என்று கணவனைப் பற்றிப் பிள்ளைகளிடம் முறையிட்டாள் யசோ.

 

அது வருடக் கடைசி என்பதில் வியாபாரம் அதிகமாய் இருந்தது. அதைவிட, கணக்கெடுக்கும் வேலையும் நடந்துகொண்டு இருப்பதில் நடுச்சாமங்களில்தான் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அதற்குத்தான் இந்தக் குற்றச்சாட்டு என்று விளங்கிற்று.

 

அவன் விழிகள் பிரத்தியேகமாக அவளைச் சந்தித்து மீள, “அப்பிடியா? அப்பா மோசமா?” என்று சிந்தூரியிடம் வினவினான்.

 

உதட்டோரம் சிரிப்பில் துடிக்க, ஆம் என்று தலையை அசைத்தாள் சிந்தூரி.

 

“உண்மையாவா? அப்பா மோசமா? என்ர பிள்ளையை நான் கவனிக்கிறேல்லையா?” என்று கேட்டு கேட்டு அவன் கிச்சு கிச்சு மூட்ட, கிளுக்கிச் சிரிக்க ஆரம்பித்தாள் சிந்தூரி.

 

இதற்காகத்தானே அவள் ஆம் என்று சொன்னதே!

 

தூரிகா, தாமினி, விதுரன் என்று எல்லோரும் இணைந்துகொள்ள, யார் யாரைக் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் என்று தெரியாமல் நால்வரும் உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பித்தனர். பிள்ளைகள் மீதான பாசத்தில் கனிந்துகிடந்த அகத்தியன் முகத்திலும் அடங்காத நகைப்பு.

 

“பிள்ளைகள், விழுந்து எழும்புறேல்ல. உடுப்பு ஊத்தையாகிடும்.” அவர்களை எச்சரித்த யசோவும் சிரித்தபடி மகனைக் காப்பதில் முனைந்துகொண்டிருந்தாள்.

 

அருகில் அமர்ந்திருந்தவர்களின் முகத்திலும் இவர்களின் சிரிப்புத் தொற்றிற்று. மகளின் மகனை மடியில் வைத்திருந்த சிந்தாமணியும் சிரிப்புடன் சேலைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

 

தூரத்தில் இருந்து பார்த்திருந்த தவமலருக்கும் அவன் வாழ்க்கை நிறைவாய் இருப்பதைக் கண்டு சந்தோசம்தான்.

 

யாருக்கு யார் என்பது மேலிருக்கிறவன் போடும் முடிச்சாயிற்றே!

 

சடங்குகள் அனைத்தும் முடிய அகத்தியனின் குடும்பம் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டது. இப்போது சொந்தமாகவே கார் வைத்திருந்தான் அவன். யசோவின் வீட்டையே இன்னொரு அறையோடு சேர்த்துத் திருத்தி இருந்தான். கடை லோன் முடிந்திருந்தது. டவுனில் இருக்கும் அவனுக்குச் சொந்தமான காணியில் வீடு கட்டுவதற்கான ஆயத்தங்களில் இறங்கி இருந்தான்.

 

அன்றிரவு பிள்ளைகள் மூவரும் உறங்கிய பிறகு, மனைவியைத் தனியாகக் கடத்திக்கொண்டு வந்தவன், திருமண வீட்டில் வைத்து அவள் சொன்ன குற்றச்சாட்டுக்குத் தண்டனை கொடுக்க ஆரம்பித்தான்.

 

 

முற்றும்.

 

 

error: Alert: Content selection is disabled!!