வெளிச்சக்கீற்று 3 – 1

அத்தியாயம் 3

 

 

அதன் பிறகான நாள்கள் அவைபாட்டுக்கு நகர்ந்தன. விறுவிறு என்று காலையில் எழுந்து தன் வீட்டுக்கான சமையலைப் பார்ப்பதும், கமலாம்பிகையிடம் சிந்தூரியை விட்டுவிட்டுத் தூரிகாவை அழைத்துச்சென்று பள்ளிக்கூடத்தில் விடுவதும், பள்ளிக்கூடம் முடிந்ததும் மீண்டும் கூட்டிக்கொண்டு வந்து தன்னுடனேயே வைத்திருந்து வேலை பார்ப்பதும், வேலை முடிந்து வீடு திரும்புகையில் தூரிகா ஸ்கூட்டியிலேயே உறங்கி வழிவதுமாகக் கழிந்தன.

 

அன்றைக்குப் பிறகு, கமலாம்பிகை அதைப் பற்றிப் பேசாதது மாத்திரமன்றி, அவளோடு பேசுவதையும் முகம் பார்ப்பதையும் குறைத்துக்கொண்டது அவளை ஒடுங்க வைத்தது. உள்ளுக்குள் அழுதாள்.

 

அப்படி என்ன தவறாகக் கேட்டுவிட்டாளாம்? அந்தளவில் அவருக்கு அவளைப் பற்றித் தெரியாமல் போயிற்றா?

 

அப்படி முகம் திருப்புகிறவரிடம் சென்று, மீண்டும் அதைப் பற்றிக் கதைக்கத் தைரியமற்று அவளும் விட்டுவிட்டாள். கூடவே, அவர் சொன்னது போன்று, இது இருக்கிற நிம்மதியையும் கெடுக்கிற வேலையோ என்றும் ஓடிற்று.

 

கணவனை இழந்தவள் என்றாலே ஒரு பெண்ணின் நிலை பின்னுக்குத்தான். ஒரு குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே, இவளுக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டும் பெண் பிள்ளைகள். அவளுக்கு வேறு முப்பதாயிற்று. யார் விரும்பி வருவார்கள்? இப்படியே இருந்துவிடலாமா, இன்னும் கொஞ்ச வருடங்கள் போனால் பிள்ளைகளும் வளர்ந்துவிடுவார்கள் என்றும் யோசனைகள் ஓடின.

 

அன்று, ஒரு பெண்மணி மருந்து வாங்க பார்மசிக்கு வந்திருந்தார். அவருக்குத் தேவையான மருந்து இன்னும் பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடும் என்பதில், அருந்தக் குளிர்பானம் கொடுத்துக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, மற்றவர்களைக் கவனித்தாள்.

 

கிடைத்த இடைவெளியில், “இப்ப மகளுக்குச் சுகமாம்மா?” என்று வினவினார் அவர்.

 

வியப்புடன் அவரைத் திரும்பிப் பார்த்தாள் யசோ. “ஓம், சுகமா இருக்கிறா.” சின்ன புன்னகையோடு சொன்னவளுக்குள் இவருக்கு எப்படித் தெரியும் என்கிற கேள்வி ஓடிற்று.

 

“நீங்க லீவுல நிண்ட நேரம் வந்தனான். அப்ப வேலைக்கு நிண்ட மற்றப் பிள்ளை மருந்த மாத்தித் தந்திட்டா. நீங்க நிண்டிருந்தா இப்பிடி எல்லாம் நடக்காது எண்டு சொல்லத்தான் சொன்னவா.”

 

“ஓ! நான் கிட்டத்தட்ட ஏழு வருசத்துக்கும் மேல இங்கயே வேலை செய்றன். அவா புதுசு. அதுதான்.” என்றாள் சமாதானமாக.

 

“அதுக்கு என்னம்மா? வீட்டில தனியாத்தானே இருக்கிறன். இதால எனக்கு ஒரு நாள்ப்பொழுது அலுப்படிக்காம ஓடிட்டுது.” என்று சிரித்தார் அவர்.

 

“ஆனா உங்களுக்கு ஒரு மகன் இருக்கோணும் எல்லா.” முன்னர் எல்லாம் அவரை மகனுடன் பார்த்த நினைவிருந்ததில் கேள்வியாக இழுத்தாள்.

 

“ஓமோம். இருக்கிறார்தான். படிக்கிறதுக்காகக் கொழும்புக்குப் போய்ட்டார். அதால நான் இங்க தனியாத்தான்.”

 

அதற்குள் இன்னொரு வயதான பெண்மணி வரவும் அவரைக் கவனித்தாள். எந்த வேளையில், எத்தனை மாத்திரைகள், எப்படியெப்படி எடுக்க வேண்டும் என்று அவள் சொன்னது அவருக்குப் புரியவே இல்லை. அவர் வாசிக்கக் கூடிய மாதிரி பெரிய பெரிய எழுத்தில் விவரமாக எழுதி, “இந்தத் துண்டைத் துளைச்சுப் போடாதீங்கோ அம்மா. பக்குவமா வச்சுப் பாத்துப் போடுங்கோ.” என்று நீட்டினாள்.

 

“நன்றியாச்சி. வயசு போனதில எல்லாமே மறந்து மறந்து போகுது. இதெண்டா ஒவ்வொரு முறையும் எடுத்தெடுத்துப் பாத்துப் போடுவன்.” என்று சொல்லிவிட்டுப் போனார் அவர்.

 

“உங்களுக்கு ஒரு மகள் மட்டும்தானோ?” அந்தப் பெண்மணி மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

 

“இல்ல, இன்னொரு மகளும் இருக்கிறா.”

 

“அவர்?”

 

“அவர் இல்ல. மூண்டரை வருசத்துக்கு முதல் காய்ச்சல் வந்து காலமாயிற்றார். இப்ப அக்கா, அம்மாவோட இருக்கிறன்.” சம்பிரதாய முறுவலுடன் சொன்னாள்.

 

“ஓ! சொறியம்மா. எனக்குத் தெரியாது.”

 

“அதுக்கு ஏன் நீங்க சொறி சொல்லுறீங்கள்? தெரியாததாலதானே விசாரிச்சனீங்க.”

 

அதன்பிறகு, இருவருக்கிடையிலும் ஒருவித அமைதி. அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. ஒருசில வாடிக்கையாளர்களும் வந்து போயினர். மீண்டும் அவர்கள் இருவரும் மட்டும் என்றானதும், “கேக்கிறன் எண்டு குறையா நினைக்காதீங்கோமா. இன்னொரு கலியாணத்தைப் பற்றி யோசிக்க இல்லையோ?” என்று வினவினார்.

 

யசோதினியும் அவர் அப்படிக் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை. யோசித்தேன் என்று சொல்ல ஒருமாதிரி இருக்க, “ரெண்டு பிள்ளைகளோடயோ?” என்று, அன்று அன்னை சொன்னதை அவள் கேட்டாள்.

 

“இருந்தா என்னம்மா? உங்களுக்கு எத்தின வயசு? ஒரு முப்பது?”

 

“ஓம் முப்பதுதான்.”

 

“பிறகு என்னம்மா? இப்ப இப்பிடி இருந்துபோட்டுப் பிற்காலத்தில என்ன செய்யப்போறீங்க?”

 

அது தெரியாமல்தானே அவளும் கலங்கிக்கொண்டு இருக்கிறாள். அதைச் சொல்ல முடியாமல், “பிள்ளைகள் இருக்கினம்தானே.” என்றாள்.

 

“அவே வளர மட்டும்தான் எங்களோட இருப்பினம். பிறகு, அவே அவேன்ர வாழ்க்கையத்தானே பாப்பீனம்.”

 

உண்மைதான். அதற்கென்று அவளால் என்ன செய்ய இயலும்?

 

“இது உங்கட தனிப்பட்ட வாழ்க்கை. அதுக்க நான் மூக்கை நுழைக்கிறது சரியா எண்டு தெரியேல்ல. ஆனா, எனக்கும் மனுசன் இல்ல. நான் ஒரு டிவோர்சி. அது ஒரு இருவது வருசத்துக்கு முதல்.” என்றார் அவர்.

 

“ஓ!”

 

“அவர் கொஞ்சம் சரியில்லை. அப்ப நான் ரெட்குரஸ்ல வேல செய்தனான். அவருக்கு ஒரே சந்தேகம். என்னோட வேலை செய்ற அத்தின ஆம்பிளைகளோடயும் சேத்துவச்சுக் கதைப்பார். நெடுக சண்டை. அடிக்கிறது, காது கூசுற வார்த்தைகளால பேசுறது எண்டு வெளில சொல்லேலாத அளவுக்குத் துன்பம். சிலவுக்கு ஒரு ரூபா தரமாட்டார். ஆனாலும், மகனுக்காக எண்டு பொறுத்துத்தான் போனனான். எனக்குத்தான் வாழ்க்கைல ஒரு சந்தோசமும் இல்லை, தம்பியாவது அம்மா அப்பா எண்டு ஒரு குடும்ப அமைப்பில, நிம்மதியா வளரவேணும் எண்டு நினைச்சன். பிறகு பிறகு அவனுக்கு முன்னாலேயே அடிக்க வெளிக்கிட்டுட்டார். அதுக்கு மேல நான் பொறுக்கேல்ல. அவர் கதைக்கிற கெட்ட வார்த்தைகளையும், நடக்கிற முறையையும் பாத்துப் பிள்ளையின்ர மனமும் பாதிச்சு, எதிர்காலமும் கெட்டுப் போயிடும் எண்டு வெளில வந்திட்டன்.” என்றதும் மலைப்புடன் பார்த்தாள் யசோதினி.

 

அவர் எப்போதுமே அவர்களின் பார்மசிக்குத்தான் வருவார். பார்க்கிறவர்களுக்கு இவருக்கு என்ன குறை என்று நினைக்கும் தோற்றம். அந்தளவில் உடையில், நடத்தையில், பேச்சில் எல்லாம் மிகுந்த தரமும் கண்ணியமும் நிமிர்வும் இருக்கும். அந்தத் தோற்றத்துக்குள் இப்படி ஒரு வலி மறைந்து கிடக்கிறதா?

 

“அவர் அதுக்கெல்லாம் கவலைப்படவே இல்ல. இன்னொரு கலியாணம், ரெண்டு பிள்ளைகள் எண்டு ஒதுங்கிட்டார். அந்த நேரம் ஒரு வைராக்கியம், நீ எனக்குத் தேவையே இல்ல, என்ர பிள்ளைக்காக நான் வாழ்ந்து காட்டுறன் எண்டு. அதேமாதிரி வேலைல நல்ல முன்னேற்றம். சொந்த வீடு வாசல் இருந்தது. தம்பியையும் ஒரு குறை இல்லாமதான் வளத்தனான். ஆனா, கொஞ்சக் காலத்தில தனிமை கொல்ல ஆரம்பிச்சிட்டுதம்மா. அப்பதான் இன்னொரு வாழ்க்கை அமைஞ்சா நல்லாருக்கும் எண்டு நினைச்சன். அவரே குடும்பம் குட்டி எண்டு வாழ, நான் மட்டும் ஒரு பிழையும் செய்யாம ஏன் இப்பிடி எண்டு இருந்தது. ஆனா, இதையெல்லாம் ஆர் வீட்டில சொல்லுறது? முதல், எப்பிடிச் சொல்லுறது? ஒருமாதிரி வெக்கம். என்னைப்பற்றி என்ன நினைப்பீனம், கேவலமாக் கதைச்சுப் போடுவினமோ, ஒதுக்கி வச்சிடுவினமோ, ஊர் சிரிக்குமோ எண்டு ஆயிரம் தடைகள்.” என்றவரின் தொண்டை, ஒருமுறை ஏறி இறங்கிற்று. கையில் இருந்த குளிர்பானத்தை அருந்தினார்.

 

என்ன சொல்வது என்று தெரியாது அவரையே பார்த்திருந்தாள் யசோதினி.

 

“அம்மா, அப்பா எண்டு ஆராவது அவேயா இந்தக் கதையை எடுக்காயினமா, பொறுப்பா நிண்டு ஒரு நல்லவனத் தேடிப் பிடிச்சுப் பிடிவாதமாக் கட்டிவைக்க மாட்டினமா எண்டு அந்த நேரம் ஒரு ஆசை, எதிர்பார்ப்பு இருந்தது. அது நடக்கவே இல்ல. ஒரு பிள்ளையோட இருக்கிறவளக் கட்ட எவனும் வரமாட்டான், அவளின்ர வாழ்க்கை இவ்வளவுதான் எண்டு அவேயே ஒரு முடிவை எடுத்திட்டினம். வேலையும் கைல இருந்தபடியா சொந்தக் காலில வாழுவன் எண்டு விட்டுட்டினம். பிறகு காலமும் போயிற்றுது, தம்பியும் வளந்திட்டான். நானும் எனக்கு அவன் மட்டும் போதும் எண்டு விட்டுட்டன். ஆனா இப்ப, அவன் படிப்புக்காகக் கொழும்புக்குப் போய்ட்டான். இனி வேல, கலியாணம் எண்டு அவன்ர வாழ்க்கை போயிடும். ஆனா நான்?” என்று கேட்க, அவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்தது.

 

“இப்பவும் மனுசன் இல்லாட்டியும் தனி ஒருத்தியா நிண்டு மகனை வளத்துப்போட்டாள், கெட்டிக்காரி, ரோசக்காரி எண்டு பெருமையாக் கதைக்கினம். அத வச்சு நான் என்னம்மா செய்ய? என்ர காலம் இப்பிடியே போச்சே.” என்று கேட்டு, சிறிதாக அவர்சிந்திய சிரிப்பின் பின்னிருந்த வலியை உணர்ந்து, உறைந்து நின்றாள் அவள்.

 

error: Alert: Content selection is disabled!!