வெளிச்சக்கீற்று 3 – 2

இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து, அவள் நிலை என்ன என்று சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.

 

“மனுசன் மனுசி எண்டு குடும்பமா வாழுற வீட்டிலேயே பிள்ளைகள் பக்கத்தில இல்லாட்டி வீடே வெறிச்சோடிப் போயிடும். தனியா வாழுற அம்மான்ரயோ அப்பான்ரயோ நிலைய யோசிச்சுப் பாருங்கோ. இப்பவே எனக்கு நான் ஏன் வாழுறன், ஆருக்காக வாழுறன் எண்டமாதிரி இருக்கு. வயசு 46 தான் ஆகுது. ஆனா, எல்லாமே வெறுத்துப் போச்சு. வாழ்ந்த காலத்திலயும் பெருசா எந்த சந்தோசத்தையும் அனுபவிக்க இல்ல. இனி வாழப்போற காலத்திலையும் அனுபவிக்க ஒண்டும் இல்ல. வயோதிகத்தில தனிமை எண்டாலே கொடுமை. அப்பிடியிருக்க வாழவேண்டிய காலத்திலயும் தனிமை எண்டா எப்பிடியம்மா?”

 

இடையிடையே ஆட்கள் வந்துபோனாலும் அவர் நிறுத்தவில்லை. தன் பெயர் சுசீலா என்று சொல்லி, அவள் பெயரையும் அறிந்துகொண்டார். நிறைய நாள்களாக நெஞ்சுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார் போலும். கொட்ட ஒரு இடம் கிடைத்ததும் கொட்டினார். அல்லது, தன்னைப்போல் அவளும் தனியாகவே நின்றுவிடக் கூடாது என்று எண்ணினார் போலும். சொல்லிக்கொண்டே போனார்.

 

“இப்பிடி முதல் வாழ்க்கை தவறின பெரும்பான்மையான பொம்பிளைகள் பிள்ளைகளோட தனியாத்தானம்மா வாழினம். அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா, மனதின்ர அடியாழத்தில ஒரு ஆசை நெருப்பாத் தகிச்சுக்கொண்டே இருக்கும். என்னை விளங்கிக்கொண்டு, என்னோடயும் என்ர பிள்ளையோடயும் அன்பா இருக்கிற ஒருத்தன் கிடைச்சிட மாட்டானா எண்டுற எதிர்பார்ப்பு இருக்குதானே… அது அந்தந்தப் பொம்பிளைகளுக்கு மட்டும்தான் தெரியும்.” என்றவர் மேலே பேசமுடியாமல் விட்ட பெரிய மூச்சில், தடுக்கவே முடியாமல் அவள் விழியில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விழுந்திருந்தது.

 

“சொறி!” என்றபடி வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.

 

அதையெல்லாம் உணரும் நிலையில் அவர் இல்லை. “ஏற்கனவே ஒரு வாழ்க்கை பிழைச்சதில எனக்கு நானே இன்னொரு வாழ்க்கையைத் தேடுற தைரியம் வரேல்ல. ஆரை நம்புறது, நம்பக்கூடாது எண்டு தெரியாத நிலை. வாறவன் தம்பிய எப்பிடிப் பாப்பானோ எண்டுற கேள்வி, தப்பித்தவறி அந்த வாழ்க்கையும் பிழைச்சுப் போயிற்றுது எண்டா என்ன செய்வன் எண்டுற பயம், தம்பி என்னைப் பிழையா நினைச்சிடுவானோ, வளந்து வந்து எதையாவது கேட்டுடுவானோ எண்டு ஆயிரம் கேள்விகள் வந்து வாயையும் மனதையும் கட்டிப் போட்டுட்டுது. ஆனா, அந்த மகனே இப்ப கேக்கிறான், நீங்க ஏனம்மா இன்னொரு கலியாணம் கட்டேல்ல, கட்டியிருக்க எனக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இருந்திருக்கும் எண்டு.” என்றுவிட்டு அவர் சிரிக்க, அவளுக்கு நெஞ்சுக்குள் எதுவோ அடைத்தது.

 

“உங்களிட்ட இப்பிடி மனம் விட்டுக் கதைக்கிற மாதிரி இப்ப கூட என்னால என்ர வீட்டில வெளிப்படையாக் கதைக்கேலாமா. சில நேரங்கள்ல ஆர் எண்டே தெரியாத மனுசரிட்ட இலகுவா மனதைத் திறக்கலாம். ஆனா, எங்களோடயே இருக்கிற சொந்த பந்தத்திட்டயோ, அயலட்டை மனுசரிட்டயோ மூச்சும் விடேலாது. பிறகு அத வச்சே எங்களைக் குட்டப் பாப்பினமோ(பார்ப்பார்களோ) எண்டுற பயம் இருக்கும்.” என்று அவர் சொன்னபோது, ஏன் அவளிடம் இதையெல்லாம் சொல்கிறார் என்று புரிந்து போயிற்று.

 

“எனக்குக் காலம் கடந்து போச்சுது. உங்களுக்கு அப்பிடி இல்ல. என்னை மாதிரி நீங்களும் அமைதியா இருக்காம கதைங்கோம்மா. உங்களுக்கு உண்மையாவே இன்னொரு கலியாணத்தில விருப்பம் இல்லாட்டி விடுங்கோ. இருந்தா தயவுசெய்து கதைங்கோ. சில விசயங்களை நாங்கதான் வாயைத் திறந்து சொல்லவேணும். இல்லாம ஒருத்தருக்கும் தெரிய வராது.”

 

அவள், கையில் இருந்த பேனையால் பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவர் முகம் பார்க்க முடியவில்லை.

 

வாழ்வின் பெரும்பான்மையான நாள்கள் சிரிக்கும் முகமூடி அணிந்த முகத்தோடு கழிகின்றன. அந்த முகமூடியைக் கிழித்தெறிந்துவிட்டு, இரத்தமும் தசையுமாக இருக்கும் அந்த முகத்தைப் பார் என்கிறார் சுசீலா. பலருக்கு, குறிப்பாக அவளைப்போன்ற பல பெண்களுக்கு உண்மையான அந்த முகத்தைப் பார்க்கத் தைரியமில்லை என்பதுதான் பரிதாபமான உண்மை.

 

நான் நன்றாக இருக்கிறேன், சந்தோசமாக வாழ்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, அதையே உண்மை என்று நம்பிக்கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட நினைக்கிறார்கள். அது வேண்டாம் என்கிறார். உண்மையை ஏற்று உன் வாழ்க்கைக்காக நீயே வாயைத் திற என்கிறார். சொல்வது எளிது, அதன்படி நடப்பது எவ்வளவு சிரமம் என்பதற்கு அவரே உதாரணமாக இருக்கையில் அவளால் என்ன செய்துவிட முடியும்?

 

“என்னம்மா? இப்பிடி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”

 

“தெரியேல்ல. பிள்ளைகளின்ர பொறுப்பு இருக்கு. மூத்தவாக்கு ஆறு முடிஞ்சு ஏழாகப் போகுது. அப்பிடி இருக்கேக்க ஒருத்தர் வருவாரா எண்டுறதே சந்தேகம். அப்பிடி வந்தாலும் என்ர பிள்ளைகளையும் தன்ர பிள்ளைகளாப் பாக்க வேணும். பிள்ளைகள் அவரை அப்பாவா ஏற்க வேணும். முதல் ஓம் எண்டுபோட்டு பிறகு அவர் மாறிட்டா பிள்ளைகளின்ர நிலை என்ன சொல்லுங்கோ? முதல், பிள்ளைகள் இதுக்கெல்லாம் ஓம் எண்டு சொல்லுவினமா தெரியாது.” என்று, தன் மனத்தில் இருக்கும் கேள்விகளை, குழப்பங்களை எல்லாம் அவர் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னாள்.

 

மெலிதாகச் சிரித்தார் சுசீலா. “என்னவோ பெத்த அப்பாக்கள் எல்லாருமே பிள்ளைகள உயிராப் பாக்கிற மாதிரியும், ரெண்டாவதா வாற அப்பாக்கள் எல்லாருமே கொடுமைக்காரர் மாதிரியும் இருகே நீங்க சொல்லுறது. பொறுப்பாப் பாக்காத, குடிகார அப்பா இல்லையா? எனக்கு மாதிரி மனுசியப் போட்டுப் பிள்ளைகளுக்கு முன்னாலேயே அடிக்கிற அப்பா இல்லையா? என்னை விடுங்கோ, நான் அவருக்குச் சரியில்லாத மனுசியாவே இருந்திட்டுப் போறன். தம்பி அவரின்ர மகன்தானே? இண்டு வரைக்கும் தான் பெத்த மகன் எப்பிடி இருக்கிறான், என்ன செய்றான் எண்டு அந்த ஆள் திரும்பியே பாத்தது இல்லையம்மா. அப்பிடியானவங்களை எல்லாம் என்ன சொல்லுவீங்க? இந்த சமூகத்தில மரியாதையா வாழுறதுக்காகவே, பேருக்குப் புருசனா இருந்திட்டுப் போகட்டும் எண்டு கூடவே வச்சிருக்கிற ஒண்டுக்கும் உதவாத ஆம்பிளைகள் எத்தனையோ வீடுகள்ல இருக்கம்மா. அதால ரெண்டாவதா வாறவன் மட்டும் பொல்லாதவனாவே இருப்பான் எண்டு நினைக்காதீங்க. சில ஆம்பிளைகள் அப்பிடி இருக்கினம்தான். இல்லை எண்டு சொல்லேல்ல. எல்லாரும் அப்பிடித்தான் எண்டுறது எல்லாம் பொய். அது ஒரு சும்மா பேச்சு. ரெண்டாவது கலியாணம் மாதிரியான விசயங்களைப் பொறுப்பெடுத்துச் செய்து வைக்கத் துணிச்சல் இல்லாத மனுசர் கதைக்கிற கத.”

 

அப்போதும் அவள் அமைதியாக இருக்க, தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களை எண்ணித் தயங்குகிறாள் என்று புரிந்தது.

 

“என்ன படிச்சும் மனப்பக்குவம் இல்லாத சமூகம் இது யசோ. புருசன் செத்ததும் உடன்கட்டை ஏத்துறன் எண்டு சொல்லி, ஒரு உயிரை உயிரோட வச்சு எரிச்ச கூட்டம்தானே. மனுசன் செத்த பிறகு அவள் உயிரோட இருக்கிறதே பெரிய விசயம் எண்டுதான் நினைக்குமா இருக்கும். அதுக்கு நாங்களும் பேசாம இருக்கிறதா? யோசிச்சுப் பாருங்கோ, ஆம்பிளைக்கு அவன் பிள்ளையோட இருந்தாலும் இல்லாட்டியும் ஏன் அவன் வேண்டவே வேண்டாம் எண்டு சொன்னாலும் விடாம இன்னொரு கலியாணம் கட்டி வைக்கிற சமூகம், பொம்பிளைக்கு எண்டதும் சத்தமே இல்லாமதானே இருக்கப் பாக்குது. எங்கயாவது ஒண்டு ரெண்டு பேர்தான் அதுக்கு மாறா இன்னொரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கினம். அதுவும் இப்ப இப்ப கொஞ்சம் பரவாயில்ல. நீங்க உழைக்கிறீங்கம்மா. பொருளாதார ரீதியா இன்னொருத்தர நம்பி இல்ல. அது எவ்வளவு பெரிய பலம் எண்டு சொல்லுங்கோ. பிறகும் ஏன் யோசிக்கிறீங்க? பெத்த தகப்பன் பாக்கிறத விடவும் பாசமாப் பாக்கிற எத்தினையோ பெறாத தகப்பன் எல்லாம் இருக்கினம். நம்பிக்கையை விடாம தேடுங்கோ. கிடைப்பார்.” என்றவர், ஒரு நம்பரை எழுதிக் கொடுத்து, “இவர் உங்களை மாதிரி ஆக்களுக்குக் கலியாணத்துக்கு மாப்பிளை, பொம்பிளை பாக்கிற புரோக்கர். அவரோட கட்டாயமாக் கதைங்கோ.” என்றுவிட்டுத் தன் மருந்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.

error: Alert: Content selection is disabled!!