அது என்னவோ உண்மைதான். குடும்பப் பொறுப்பு அவள் தலையில் விழுந்த பிறகு, வீட்டின் முடிவுகள் எல்லாம் அவள் கைக்கே போய்ச் சேர்ந்திருந்தது. சில நேரங்களில் அவருக்கே மனம் வாடிவிடும். ஆனாலும், சின்ன வயதில் இருந்தே இந்தக் குடும்பத்தைக் கொண்டு ஓடியவள், அவளிடம் போய் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நிற்பதா என்று விட்டுவிடுவார்.
“இதே அப்பா இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா? அப்பா செய்யப்போறன் எண்டு சொல்லுறார், செய்யட்டும் விடு எண்டு இந்த விசயத்தில நீங்க முடிவு எடுத்திருப்பீங்க. யோசிச்சுப் பாருங்க, இதைப்பற்றி என்ன நினைக்கிறாய், உனக்கு விருப்பமா எண்டு அக்கா என்னைக் கூப்பிட்டுக் கேக்கக்கூட இல்லையே. இன்னொரு கலியாணத்தைப் பற்றி நான் யோசிக்க இப்பிடியான விசயங்களும் ஒரு காரணம்.” என்று முடித்துக்கொண்டாள் அவள்.
துணையற்று நிற்கிறாள்தான். இவள் நிலைகுலைந்து நின்றபோதெல்லாம் கைகொடுத்ததும் அவள்தான். அதற்கென்று இவளின் முடிவுகளையும் அவளே எடுப்பது என்பது சரி கிடையாதே!
கமலாம்பிகைக்கு மனம் சரியில்லாமல் போயிற்று. அவள் சொன்னதுபோன்று, கணவர் இருந்தவரையிலும் அவருக்கிருந்த அதிகாரம் வேறு. அதன் பிறகான அதிகாரம் வேறு. அவராவது வயதான காலத்தில்தான் கணவரைப் பறிகொடுத்தார். ஆனால் அவள்? அவளுக்காகவே ஒரு முயற்சி எடுப்பதில் தவறில்லை என்று துணிந்து முடிவெடுத்தார். அடுத்தநாள் அவரே அழைத்து புரோக்கரோடு பேசினார்.
புரோக்கரும், “ரெண்டும் பொம்பிளைப் பிள்ளைகளோ?” என்று உறுதி செய்ய எண்ணித் திருப்பிக் கேட்க, அப்போதே கமலாம்பிகைக்கு நம்பிக்கை இல்லாமல் போயிற்று.
அதைக் காட்டாமல், “ஓம் தம்பி.” என்றார்.
“சரி அம்மா. தேடிப் பாக்கிறன். அப்பிடியே அவா என்ன படிச்சிருக்கிறா, என்ன வேலை செய்றா, சீதனம் ஏதும் குடுப்பீங்களா, உங்கட எதிர்பார்ப்பு என்ன எண்டு எல்லாம் சொல்லுங்கோ.” என்று தகவல்களைத் திரட்டினார்.
“ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகளுக்கும் சீதனமாக் குடுக்கக் காணிகள் இருக்குத் தம்பி. அவாவும் கனகாலமா வேல செய்றதால நல்ல சம்பளத்திலதான் இருக்கிறா. வாறவர் நல்லவரா இருந்து, இந்தப் பிள்ளைகளைத் தகப்பனா இருந்து பாத்தாலே போதும். எங்களுக்கு வேற ஒண்டும் வேண்டாம்.”
“கொஞ்சம் வயசு வித்தியாசம், ஏலாத ஆக்கள், மூண்டாவது கலியாணம் எண்டு இருந்தா பரவாயில்லையோ?”
பலபேரைக் கையாளும் அவருக்கு அவை சாதாரணக் கேள்விகள். ஆனால், கேட்ட கமலாம்பிகைக்குப் பேச்சே வரமாட்டேன் என்றது. அப்படியானவர்கள் வேண்டாம் என்று முடிவாக மறுக்கும் இடத்தில் அவரும் இல்லையே. “கொஞ்சம் நல்ல மாதிரி…” என்று இழுத்தார்.
“எல்லாரும் இப்பிடியே ஆசைப்பட்டா எப்பிடியம்மா? நான் எதுக்கும் தேடிப் பாத்துக் கிடைச்சாச் சொல்லுறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
அவ்வளவுதான். அந்த விடயம் கடலில் போட்ட கல்லாகவே இருந்தது. ஆரம்பத்தில் மாதத்துக்கு ஒருமுறை அழைத்து, ஏதும் அமைந்ததா என்று விசாரிப்பார் கமலாம்பிகை. நல்ல பதில் வந்ததே இல்லை. ஒரு முறை கேட்டபோது, மூன்றாம் தாரம் வந்ததாம், அவர்களும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றதும் யோசிக்கிறார்களாம், அப்படி அவர்கள் சம்மதித்தால் சொல்கிறேன் என்று அவர் சொல்லவும் மனமே விட்டுப்போயிற்று.
அன்று மாலை, “நீங்க பேசாம ஒரு கலியாணத்தைக் கட்டுங்கோம்மா. பிள்ளைகள் இருக்கிறதைச் சொல்லாம விடுவம். நான் இருக்கிற வரைக்கும் அவே ரெண்டுபேரையும் நான் பாக்கிறன். பிறகு… பிறகு எப்பிடியும் அக்கா அப்பிடியே விட்டுடமாட்டாதானே.” என்று சொன்னார் கமலாம்பிகை.
தோய்ப்பதற்காக உடுப்பு வாளிக்குள் கிடந்த அழுக்கு உடைகளை அள்ளப்போன யசோதினி, அப்படியே நின்றுவிட்டாள். அவளால் அசையக்கூட முடியவில்லை. என்ன வார்த்தை சொல்லிவிட்டார்? உணர்வுகளைத் தொலைத்த முகத்தோடு திரும்பி அவரைப் பார்த்தாள்.
அவரையும் அந்தப் பார்வை தாக்கியது. அதற்கென்று அவரும் என்னதான் செய்வார்?
“இனி எடுத்துக் கேக்க வேண்டாம் அம்மா. இத இதோட விடுங்க!” என்றுவிட்டுத் தோய்க்கவேண்டிய உடுப்புகளை அள்ளிக்கொண்டு, விறுவிறு என்று கிணற்றடிக்கு நடந்தாள்.
சலவைத்தூள் கரைத்த தண்ணீரில் அவற்றை நனைய வைத்தாள். அவற்றிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கல்லில் தட்டி தட்டித் தோய்த்தவளின் விழிகளில் இருந்து, கண்ணீர் இறங்கிக்கொண்டே இருந்தது.
கமலாம்பிகைக்கும் மனத்தில் பாரம் ஏறாமல் இல்லை. ஆனால், இதை இதோடு விடுவதைத்தான் அவரும் விரும்பினார்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஓடியே போயின. தூரிகா எட்டு வயதை எட்டியிருந்தாள்.
மீண்டும் ஒரு நாள் பார்மசிக்கு வந்து நின்றார் சுசீலா. நிறைய நாள்களுக்குப் பிறகு கண்டதில் முகம் மலர்ந்தாள் யசோ.
நல விசாரிப்புகளுக்கிடையே அவள் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் கவனித்தார் சுசீலா.
“என்னம்மா புரோக்கரோட கதைக்கேல்லையா?”
தன்னிச்சையாய் அன்னையின் வார்த்தைகள் நினைவில் வந்து போக, “நீங்க தந்த நேரம் அம்மா கதைச்சவா. ஆனா, ஒண்டும் அமைய இல்ல. அப்பிடியே விட்டாச்சு. அத விடுங்கோ. எனக்கும் இப்ப அந்த ஐடியா இல்ல. நீங்க எப்பிடி இருக்கிறீங்க? மகன் படிப்பு முடிச்சிட்டாரா? நிறைய நாளாக் காணவே இல்ல. இங்க வராட்டி ஒரு வருத்தமும் இல்லாம, சுகமா இருக்கிறீங்க எண்டு நினைச்சன்.” என்று முறுவலித்தாள்.
“அதை ஏனம்மா கேக்கிறீங்க? மகனைப் பாக்கக் கொழும்புக்குப் போன நேரம் ஒரு அக்சிடெண்ட். கார் இடிச்சு நடக்கேலாம போயிற்றுது. என்ன வைத்தியம் பாத்தும் சரி வரேல்ல. பிறகு, ஆறு மாதத்துக்கு மேல சிங்கள ஏரியால கைவைத்தியம் செய்துதான் நடக்கிற அளவுக்கு வந்திருக்கிறன். இன்னும் ஸ்கூட்டி எல்லாம் ஓட ஏலாது.” என்றவர், தனக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்து புரோக்கருக்கு அழைத்தார்.
“சொல்லுங்கோ தங்கச்சி, சுகமா இருக்கிறீங்களா? கனநாளா எடுக்கேல்ல.” ஏற்கனவே அவர்களுக்குள் அறிமுகம் இருந்ததில் வினவினார்.
விபத்தைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லிவிட்டு, “ஒரு பிள்ளை. ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கினம். நான்தான் உங்கட நம்பர் குடுத்தனான். அவாக்கு ஒண்டும் சரி வரேல்லையோ?” என்று விசாரித்தார் சுசீலா.
“ஆரு… அந்த பார்மசில வேல செய்ற பிள்ளையோ? ஒரு மூண்டாம் தாரம் வந்தது. அவேக்கும் பெருசா விருப்பம் இல்ல. இவேயும் பிறகு எடுக்கேல்ல. எங்க, நானும் தேடிக்கொண்டுதான் இருக்கிறன். பொருத்தமா ஒண்டும் அமைய இல்ல. இப்ப, ரெண்டாவது கலியாணத்துக்கு ஓவர் டிமாண்ட்டாக் கிடக்கு.” என்றார் அவர்.
“கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துப் பாருங்கோ அண்ணா. நல்ல பிள்ளை. வாழவேண்டிய வயதில இப்பிடி இருக்கிறது பாவமெல்லோ. அதுதான்…”
“உங்களுக்காகவே கூடக் கவனம் எடுத்துப் பாக்கிறன் தங்கச்சி.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

