வெளிச்சக்கீற்று – 5

அத்தியாயம் 5

 

 

மகனை விட்டுவிட்டு இங்கே வந்ததில் மீண்டும் ஒருமாதிரித் தனிமையாக உணர்ந்தார் சுசீலா. அதில், அன்றைக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலுக்கு வந்திருந்தார். மனதாரக் கும்பிட்டுவிட்டு மண்டப வாசலிலேயே அமர்ந்துகொண்டார். அவசர அவசரமாக வீட்டுக்குச் சென்றும் என்னதான் செய்யப் போகிறார்? கூடவே, கோயிலைச் சுற்றி நடந்ததில் கால்களும் வலித்தன.

 

அவரின் மகன், கொழும்புக்கே வந்துவிடச் சொல்லித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறான். காலம் முழுக்க ஓடியே பழகியவருக்கு ஒற்றை அறைக்குள் அடைந்து கிடக்கும் அந்த வாழ்க்கை பிடிக்கவே இல்லை. மகனை விட்டுவிட்டு இருக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தவரின் தோளைத் தட்டியது ஒரு கரம்.

 

திரும்பிப் பார்த்த சுசீலா, தன்னருகில் நின்றவர்களைக் கண்டு ஆனந்தத்தில் முகம் மலர்ந்தார். “மணியக்கா! இந்திரா எப்பிடி இருக்கிறீங்க ரெண்டுபேரும்? பாத்து எவ்வளவு காலமாயிற்றுது?” என்றார் உற்சாகமாக.

 

“எங்களுக்கு என்ன? ஏதோ இருக்கிறம். நீ எப்பிடி இருக்கிறாய்? கனகாலமா வீட்டுப் பக்கம் வரவும் இல்ல. தம்பி என்ன செய்றான்?” அவரருகில் தானும் அமர்ந்தபடி விசாரித்தார் சிந்தாமணி.

 

அவரின் சலிப்பும் அலுப்புமான பேச்சில் சுசீலா புருவங்களைச் சுருக்கினார்.

 

இரு தரப்பும் ஒரு காலத்தில் பக்கத்து பக்கத்து வீடு. நல்ல உறவும் இருந்தது. கடைசியாக அவர்கள் வீட்டுத் திருமணத்துக்குப் போய் வந்திருந்தார். நன்றாகத்தான் இருந்தார்கள். இப்போது என்னாயிற்று?

 

உள்ளே ஓடிய யோசனையைக் காட்டிக்கொள்ளாமல், “எத்தின பிள்ளைகள்?” என்று இந்திராவிடம் விசாரித்தார்.

 

“ஒரு மகள் அக்கா. இப்பதான் முதலாம் வகுப்புப் போறா.”

 

அதைக் கேட்டு அவருக்குச் சிரிப்பு. “கேளுங்கோவன் அக்கா கதைய. இந்திரா முதலாம் வகுப்புப் போனது எனக்கு இன்னும் நினைவிருக்கு. இப்ப இந்திரான்ர மகள் போறாவாம்.” என்றவர், “அப்ப அகத்தியனுக்கு எத்தின பிள்ளைகள்?” என்று, அவள் தம்பியைப் பற்றியும் விசாரித்தார்.

 

அன்னை, மகள் இருவர் முகமும் வாடிப் போனது.

 

“என்ர பிள்ளைக்குக் கலியாண வாழ்க்கையே நிலைக்கேல்ல. இதில பிள்ளைக்கு எங்க போக? அவன் அவளை டிவோர்ஸ் செய்திட்டான். அது நடந்து மூண்டு வருசமாயிற்றுது. பாவம் அவன். அவனுக்கு ஒரு நல்லது நடக்காதா எண்டுதான் கோயில் கோயிலாத் திரியிறன். எங்க…” நெஞ்சின் பாரத்தோடு பெருமூச்செறிந்தவர், “எங்கயாவது நல்ல குணமான பிள்ளை இருந்தா சொல்லம்மா. உனக்குப் புண்ணியமாப் போகும்.” என்றார் வேண்டுதலாக.

 

சுசீலாவால் நம்பவே முடியவில்லை. இந்திரா தமையனையும் அகத்தியன் தங்கையையும் என்று பெண்ணெடுத்துப் பெண் கொடுத்துத் திருமணம் செய்தவர்கள். இரண்டு தரப்புக்கும் மிகவும் பிடித்து, நல்லபடியாகத்தான் எல்லாம் நடந்தது. பிறகு என்னாயிற்று?

 

“அப்பிடி டிவோர்ஸ் ஆகிற அளவுக்கு என்ன நடந்தது? நான் பாத்தவரைக்கும் இந்திராவை விட அகத்தியன்தானே சந்தோசமா இருந்தான்.” என்று வினவினார்.

 

“அதையேன் பிள்ளை கேக்கிறாய். எல்லாம் நடிப்பு…” என்று அவர் ஆரம்பிக்கையிலேயே அகத்தியனின் பைக், கோயில் வாசலில் வந்து நிற்பது தெரிந்தது.

 

உடனேயே, “அம்மா, அவன் வந்திட்டான். நீங்க கதைக்கிறது காதில விழுந்துதோ கத்துவான். பேசாம இருங்க.” என்று, அவர் பேச்சை நிறுத்தினாள் இந்திரா.

 

“ஓமாச்சி. இப்ப எல்லாம் அவனுக்குத் தொட்டதுக்கும் கோவம் வருது. நீ உன்ர நம்பரத் தா, நான் உனக்கு எல்லாத்தையும் பிறகு விவரமாச் சொல்லுறன். மறக்காம ஒரு பொம்பிளை இருந்தா பார். இதைப்பற்றி அவனிட்ட வாய விட்டுடாத. இன்னொரு கலியாணம் வேண்டவே வேண்டாம் எண்டு நிக்கிறான்.” அவர்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொன்னவர் கையோடு சுசீலாவின் நம்பரையும் வாங்கிக்கொண்டார்.

 

கோயிலுக்குள் வந்த அகத்தியனும் அவரைக் கண்டு முகம் மலர்ந்து, நலன் விசாரித்தான்.

 

பதில் சொன்னவருக்கு வாலிப வயதில், இளமை துள்ள இருந்த ஒரு ஆண்பிள்ளை, இன்று முற்றிலும் உடைந்து, ஏனோ தானோ என்று இருப்பதைக் கண்டு கண்ணீரே அரும்பிற்று.

 

தவறிப்போகிற திருமண வாழ்க்கை, ஆண் பெண் பேதமின்றி எல்லோர் வாழ்வையும் சிதைத்துத்தான் விடுகிறதுபோலும். நெடிய மூச்சு ஒன்றை இழுத்துவிட்டவர், “நான் கிழவி. நானே நல்லா இருக்கிறன். நீங்க ஏனப்பு இப்பிடி உடைஞ்சு போயிட்டீங்க.” என்று, அவன் கையைப் பற்றித் தன்னருகில் அமர்த்திக்கொண்டு கேட்டார்.

 

ஒருகணம் அவன் முகம் இருண்டு போயிற்று. வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “எனக்கும் வயது போகுது தானேக்கா. 34 ஆகுதே.” என்று முழுவலித்தான்.

 

இப்படி, பேச்சு ஒரு பக்கமாகப் போக, சுசீலாவுக்கு அவனும் இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட மனமில்லை. யசோதினிக்கு அழைத்து, கால் வலிக்குப் போடுகிற ஒரு மருந்தின் பெயரைச் சொல்லி, கோயிலுக்குக் கொண்டுவந்து தர முடியுமா என்று நயமாக வினவினார்.

 

பத்து நிமிடத்தில் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வைத்தாள் அவள்.

 

அழைப்பைத் துண்டித்து, கைப்பேசியைத் தன் கைப்பைக்குள் வைத்தவரின் கண்கள், சிந்தாமணியிடம் சங்கேதமாக எதையோ உணர்த்திற்று.

 

அதைச் சரியாக விளங்கிக்கொண்டவருக்குள் மெல்லிய பரபரப்பு. பார்வை வேகமாக இந்திராவிடம் சென்று வந்தது. அதன்பிறகு, பேச்சு அதுபாட்டுக்கு நடந்தாலும் மூன்று பெண்களின் கவனமும் கோயில் வாசலுக்கே அடிக்கடி தாவிற்று.

 

அதைக் கவனித்த அகத்தியனின் புருவங்கள் முடிச்சிட்டுக்கொண்டன. அப்படி என்ன என்று அறிய அவனும் காத்திருந்தான்.

 

தூரிகாவைப் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வருகையில்தான் சுசீலா அழைத்திருந்தார். வயதானவர்களோ முடியாதவர்களோ இப்படிக் கேட்டால் கொண்டுபோய்க் கொடுப்பது நடப்பதுதான் என்பதில், அவளும் அவர் சொன்ன மருந்தை எடுத்துக்கொண்டு கோயிலடிக்கு வந்தாள்.

 

அப்படி, மகளோடு வந்து நிற்பாள் என்று சுசீலா எதிர்பார்க்கவில்லை. வெள்ளைச் சீருடையில் நின்ற தூரிகா வேறு, எட்டு வயதிற்குப் பொருத்தமாக வளர்ந்து நின்றாள். பெண்ணைப் பிடித்தால் பிறகு பிள்ளைகளைப் பற்றிச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தார். இனி அதற்கு வழியில்லை. தன் ஏமாற்றத்தை முகத்தில் காட்டாமல் மறைத்துக்கொண்டார்.

 

“மகளும் இருக்கோ?” சுசீலாவின் காதோரமாகச் சரிந்து வினவிய சிந்தாமணிக்கு அவ்வளவு நேரமாக இருந்த ஆர்வம் அப்படியே வடிந்து போயிற்று. பக்கத்தில் மகன் இருப்பதையும் மறந்துபோயிருந்தார்.

 

அந்த ஒற்றைக் கேள்வியே நடப்பதைச் சொல்லிவிட, அகத்தியனின் முகம் கோபத்தில் சிவந்தது. தமக்கையை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, விருட்டென்று எழுந்துபோனான்.

 

முழுக் காரியமும் கெட்டுப்போன கவலையுடன், “இன்னொரு சின்ன மகளும் இருக்கிறா.” என்றார் சுசீலா.

 

“ஓ!” சிந்தாமணியின் பார்வை யசோதினியை அளந்தது.

 

மனத்தை நிறைக்கும் முகம். ஒடிசலான, உயர்ந்த தேகம். உண்மையில் அவர் மகனுக்கு மிகுந்த பொருத்தமாக இருப்பாள். இரண்டு பெண் பிள்ளைகள் என்றதுதான் இடித்தது. சும்மாவே இன்னும் கலியாணத்துக்கு அவன் சம்மதிக்கவில்லை. இதோ, இப்போதுகூட கோபத்தோடுதான் எழுந்து போனான். இதில், இரண்டு பிள்ளைகள் என்றால் ஊரைவிட்டே ஓடிவிடுவானாக இருக்கும்.

 

சுசீலாவை மட்டுமே எதிர்பார்த்து வந்த யசோதினி, அங்கிருந்த புதியவர்களைக் கண்டு, சுசீலாவுக்குத் தெரிந்தவர்கள் போலும் என்றுதான் முதலில் எண்ணினாள். ஆனால், அவள் மேல் ஆராய்ச்சியாகப் படிந்த அவர்கள் பார்வையும், விருட்டென்று எழுந்துபோன அந்த மனிதனின் செயலும் அப்படியில்லை என்று சொல்லிற்று.

 

அப்படி என்ன என்கிற கேள்வி உள்ளே ஓடினாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. மூவருக்கும் பொதுவான ஒரு முறுவலோடு மருந்தை எடுத்து சுசீலாவிடம் கொடுத்தாள்.

 

“நன்றியம்மா கொண்டுவந்து தந்ததுக்கு. இந்தக் காலாலதான் இவ்வளவும். இல்லாட்டி நானே வந்து வாங்கி இருப்பன்”.

 

“இதில என்ன இருக்கு? பக்கத்திலதானே. நான் சில நேரம் பூந்தோட்டம் வரைக்குமே கொண்டுபோய்க் குடுத்திருக்கிறன். இண்டைக்கு மகிளாவும் பார்மசில நிக்கிறதால ஒரு பிரச்சினையும் இல்ல.” மருந்தின் தொகையைச் சொல்லி, அவர் தந்த பணத்தை எண்ணி வாங்கிக்கொண்டாள்.

 

“அது மருந்துக்கு. இது கொண்டுவந்து தந்ததுக்கு.” பெட்ரோலுக்கும் பணம் கொடுத்தார் சுசீலா.

 

“அதெல்லாம் வேண்டாம் அக்கா. பார்மசில நோட் பண்ணிவிட்டா மாத முடிவில காசு தருவினம். சரியக்கா, நேரமாகுது நான் வெளிக்கிடப்போறன்.” நயமாகவே மறுத்தவள் மற்ற இருவருக்கும் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.

 

அவள் கண்ணுக்கு மறையும் வரையில் அமைதியாக இருந்துவிட்டு, என்ன சொல்வார்கள் என்று தெரிந்திருந்தாலும் அவர்களைக் கேள்வியாக ஏறிட்டார் சுசீலா.

 

“ரெண்டு பிள்ளைகளோட, அதுவும் இவ்வளவு வளந்த பிள்ளையோட எங்களுக்குச் சரி வராது சுசீலா.”

 

“பரவாயில்லை அக்கா. எனக்குத் தெரிஞ்ச, நல்ல பிள்ளை எண்டதும் சும்மா உங்களுக்குக் காட்டிப் பாத்தனான்.” தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சொன்னவர், அதே புரோக்கரின் நம்பரை அவர்களுக்கும் கொடுத்தார்.

 

இவை அனைத்தும் நடந்து முடிந்த பிறகுதான் அங்கு வந்தான் அகத்தியன். அவன் முகம் இறுகிக் கிடந்தது.

 

“தம்பி, சும்மா சும்மா கோவப்படாத. நான் உனக்கு நடந்ததச் சுசீலாக்குச் சொன்னனான். அப்பதான் இந்தப் பிள்ளையை வரச் சொன்னவள். அந்தப் பிள்ளைக்கே இங்க என்ன நடந்தது எண்டு தெரியாது. அதால நீ எதையாவது சொல்லாத!” என்றார் சிந்தாமணி வேகமாக.

 

சுசீலாவும் இருந்ததில் அவனாலும் தன் கோபத்தை அவரிடம் வெளிப்படையாகக் காட்ட முடியாமல் போயிற்று.

 

*****

 

பார்மசிக்கு வந்த யசோதினிக்கு அவர்கள் பற்றிய யோசனைதான். அந்த ஆண் எழுந்துபோன வேகமும், பெண்கள் இருவரும் பார்த்த பார்வையும் சாதாரணமாகத் தெரியவில்லை. அடுத்தமுறை சுசீலாவைப் பார்த்தால் கேட்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு தன் வேலைகளைப் பார்த்தாள்.

 

கோயிலில் இருந்து வீடு வந்த சுசீலாவுக்கு மனதே சரியில்லை. இரு தரப்பும் நல்ல மனிதர்கள். அவர்களை இணைக்க முடியாமல் போயிற்றே! இரண்டு சின்னக் குழந்தைகள். அவர்களை ஒரு பெரும் தடையாகப் பார்ப்பது மனத்தைப் பிசைந்தது. கூடவே, இதை யசோதினியிடம் சொல்லாமல் இருப்பது தவறு என்று மனம் எடுத்துரைக்க, அவளுக்கு அழைத்து நடந்ததைச் சொன்னார்.

 

“சொல்லாம கொள்ளாம உங்களைக் கூப்பிட்டுக் காட்டினதுக்குக் குறை நினைக்காதீங்கோம்மா. உங்கள நேராப் பாத்தா சில நேரம் பிடிக்கும் எண்டு நினைச்சன். அதைவிட, அவே ஓம் எண்டு சொல்லாம உங்களுக்கு நம்பிக்கையைத் தாறதும் பிழை எல்லோ. ஆனா, அவன் கலியாணமே வேண்டாம் எண்டு நிக்கிறான்.” என்றார் நயமாக.

 

அதுதான் அவ்வளவு வேகமாக எழுந்து ஓடினானா என்று உள்ளூர ஓட, “எனக்கு விளங்குது அக்கா. நான் குறையும் நினைக்கேல்ல. ஆனா, இனி இது வேண்டாம். எனக்கு உண்மையா இப்ப அந்த ஐடியா இல்ல.” என்று நல்ல மாதிரியே சொல்லிவிட்டு வைத்தாள்.

 

சுசீலாவுக்கு மிகுந்த ஏமாற்றம். அதற்குமேல் செய்வதற்கும் ஏதுமில்லை என்று புரிந்ததில் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டார்.

 

*****

 

அன்று, இரவு உணவுக்கு வந்த அகத்தியன் மிகுந்த இறுக்கத்துடன் இருந்தான். அம்மாவும் மகளும் அவனறியாமல் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். அமைதியாகவே உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் புகுந்துகொண்டான் அவன்.

 

ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சென்றவனின் செயல் பாதிக்க, “என்னம்மா இவன் இப்பிடி இருக்கிறான்?” என்று கவலையோடு வினவினார் சிந்தாமணி.

 

“விடுங்கம்மா. இவ்வளவு நாளும் பேசாம இருந்த நாங்க, இண்டைக்குத் திடீர் எண்டு பொம்பிளை பாக்கிற அளவுக்குப் போய்ட்டம் எண்டுற கோவம் போல. அதுக்கெண்டு இப்பிடியே விடேலுமா? மூண்டு வருசம் விட்டது காணாதா?” என்ற இந்திரா, அவரை உறங்க அனுப்பிவிட்டுத் தானும் உறங்கச் சென்றாள்.

 

கட்டிலில் சரிந்திருந்த அகத்தியன் மிகுந்த கோபத்தில் இருந்தான். அவனுக்கும் அப்பா இல்லை. அவனுடைய இருபத்தி நான்காவது வயதில் காலமாகியிருந்தார். அதன்பிறகு, வவுனியா டவுனில் அவர் நடத்திக்கொண்டிருந்த பலசரக்குக் கடையை அவனே பொறுப்பெடுத்து நடத்த ஆரம்பித்திருந்தான். அந்த நேரம், அவனை விடவும் மூன்று வயது மூத்த இந்திராவும் சுகாதாரத் திணைக்களத்தில் வேலையில் இருந்தாள்.

 

தந்தை இறந்து ஒரு வருடம் கழிந்த பிறகு, வயதாகிறது, இனியும் விட முடியாது, திருமணத்துக்குப் பார்ப்போம் என்று சொன்னபோதெல்லாம் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள் இந்திரா. திடீரென்று ஒருநாள், கஜேந்திரனை அழைத்து வந்து காதலிக்கிறேன் என்று சொல்லவும் கலங்கிப்போனார் சிந்தாமணி.

 

அதுவும், பல்கலையில் படிக்கும் காலத்திலேயே பார்த்துப் பழகியதாகவும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அவன், கடந்த மூன்று வருடங்களாக இங்கிலாந்தில் வேலை பார்த்தான் என்றும், அதனால்தான் திருமணத்தைத் தள்ளிப்போட்டாள் என்றும் சொன்னதை அம்மா மகன் இருவராலும் நம்பவே முடியவில்லை.

 

கஜேந்திரனைப் பற்றி விசாரித்தார்கள். அவர்கள் இவர்களை விட வசதியில் பல மடங்கு உயர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அதுவேறு கலக்கத்தை உண்டாக்கிற்று. ஆனால், அந்தப் பயத்திற்கு அவசியமே இல்லை என்பதுபோன்று, அவன் வீட்டினர் இவர்கள் காதலுக்குப் பச்சைக் கொடியைக் காட்டினர். கூடவே, பெண்ணெடுத்துப் பெண் கொடுக்கும் முகமாக, பொறுப்பான, நல்ல பிள்ளையான அகத்தியனுக்குத் தம் செல்ல மகளைக் கொடுக்க விரும்புகிறோம் என்று சொன்னபோது, ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். பொருத்தமும் அமோகமாகப் பொருந்தி இருந்தது. சவீதாவுக்கும் அகத்தியனுக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப்போனது வேறு, தித்திப்பின் அளவைக் கூட்டிற்று.

 

இரண்டு திருமணங்களும் ஒரே நாளில் எந்தக் குறையும் இல்லாமல் நடந்தன. அவர்கள் வாழ்க்கையும் இனிதாகவே நகர்ந்தது.

 

 

error: Alert: Content selection is disabled!!