வெளிச்சக்கீற்று 6 – 1

அத்தியாயம் 6

 

 

அடுத்த நான்காம் மாதமே இந்திரா தாய்மையுற்றாள். எல்லோர் பார்வையும் எதிர்பார்ப்புடன் சவீதா புறம் திரும்பிற்று.

 

“அண்ணி பெத்தா நானும் பெற வேணுமா? முதல் அண்ணி பெத்து முடிக்கட்டும். இல்லாட்டி, என்னை ஒருத்தரும் கவனிக்காயினம்.” என்றுவிட்டாள் சவீதா.

 

அவள் அப்படித்தான். எல்லோரும் அவளைத் தாங்கவேண்டும் என்று நினைப்பாள். எல்லோரிடம் இருந்தும் அவளுக்கான கவனிப்புக் குறையாமல் கிடைத்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பாள். அதுவும், அகத்தியன் என்றால் எதிர்பார்ப்பின் அளவு பல மடங்கு.

 

தாய் தமக்கையிடம் சற்று நேரம் அதிகமாகப் பேசிக்கொண்டு இருந்துவிட்டால் போதும். அவள் பக்கத்தில் இருக்கையில் அவன் கவனம் வேறு எதிலும் குவிந்துவிட்டாலும் போதும். முகத்தைத் தூக்கிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவாள். நான் உனக்கு முக்கியமில்லை, என்னோடு நீ பாசமில்லை என்று முறுக்குகிறவளைக் கொஞ்சிக் குழைந்து சமாதானம் செய்வான் அகத்தியன்.

 

அவளுக்குத் தெரியாமல் சின்னதாக ஒரு காரியம் செய்யக் கூடாது. வெளியே எங்கும் மினக்கெடக் கூடாது. கடை, கடைவிட்டால் அவளோடுதான் இருக்கவேண்டும். வெளியில் எங்கு என்றாலும் அவளோடுதான் போக வேண்டும். தனியாகச் சென்று யாரோடும் கைப்பேசியில் பேசிவிட முடியாது. யார், என்ன, ஏன் தனியாகப் போய்ப் பேசினாய் என்று கேட்டுக் குடைந்து எடுத்துவிடுவாள். வார இறுதிகள் அவளுக்கானவை. கடையின் கணக்குவழக்கில் இருந்து அவனுடைய வைப்புச் சொப்பு வரை அனைத்தும் அவளுக்குக் கீழ் சென்றிருந்தது.

 

சில நேரங்களில் என்ன இது, இப்படி நெருக்குகிறாளே என்று இருக்கும். என்னவோ நாலு சுவற்றுக்குள் அடைத்து வைத்தது போன்று உணர்வான். அதுவும் அம்மா அக்காவுக்கு ஏதாவது அவன் செய்ய விரும்புகிறபோது முட்டுக்கட்டை போடுவதும், அங்குச் செல்வதைத் தடுக்கும்போதும் மெய்யாகவே கோபம் வந்துவிடும். பொறுமையாகத் தன்னை விளக்கவும் முயல்வான். ஆனாலும், அவனையே சுற்றி சுற்றி வந்து, அவனைத் தன் கைகளுக்குள் இழுத்துக்கொள்ள முனையும் மனைவியின் முயற்சிகள் கசந்ததில்லை. சின்ன சிரிப்புடன் அவள் இழுவைக்கே சென்றுவிடுவான். தன்னையே சுற்றிவரும் அவள் மீது அவனும் பித்தாகத்தான் இருந்தான்.

 

அவளையும் கூட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றினான். அவள் பார்க்க ஆசைப்படும் இடங்களுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு போனான். பொறுப்பும் இனிப் பெரிதாக இல்லை என்பதில் அவள் ஆசைப்படும் துணிமணி, நகைநட்டு எதுவாயினும் வாங்கிக் கொடுத்துவிடுவான். சேமித்த பணத்தில் வாங்கிய காணியைக்கூட அவள் பெயரில்தான் எழுதினான்.

 

அவள் வந்த காலமோ என்னவோ, அவ்வளவு காலமாக வாடகைக்கு நடத்திய கடையை, கடை உரிமைக்காரர் விற்கப் போகிறேன் என்றதும் லோன் எடுத்து, சொந்தமாகவே வாங்கிப் போட்டான். வியாபாரமும் சூடு பிடித்துவிட, அவர்கள் வாழ்வில் குறை என்று சொல்வதற்கு எதுவுமில்லை.

 

இந்திராவுக்கு மகள் தாமினி பிறந்தாள். மீண்டும் எல்லோர் கவனமும் சவீதா புறம் திரும்பிற்று.

 

“நாங்களும் அதுக்குத்தான் வெய்ட்டிங்.” என்றாள் சவீதா. அவள் சொல்லப்போகும் அந்த நல்ல செய்திக்காக மொத்தக் குடும்பமும் காத்திருக்க ஆரம்பித்தது.

 

மீண்டும் ஒரு மூன்று மாதம் கடந்தது. அப்போதும் அவள் ஒன்றும் சொல்லாததால், “எதுக்கும் ஒருக்கா டொக்ட்டரிட்ட போயிற்று வந்தா என்னம்மா?” என்று ஏக்கமாகச் சிந்தாமணி கேட்டது, சுற்றிச் சுழன்று சவீதாவின் அன்னை தவமலர் மூலம் இந்திராவிடம் வந்து நின்றது.

 

“உங்கட அம்மாவுக்கு அப்பிடி என்ன அவசரம்? ஒரு பேரக்குழந்தை இருக்குத்தானே. முதல் ஆஸ்பத்திரி, டொக்டர் எண்டு இப்பவே அலைய, கலியாணம் கட்டிப் பத்து வருசமா போயிற்றுது? நானும் என்ன உங்கட அம்மா மாதிரி, மூத்தது பேத்தி வேண்டாம், பேரன்தான் வேணும் எண்டு நிண்டேனா, இல்ல, உடனேயே ஒரு பேரனைப் பெத்துத் தாங்கோ எண்டு சொன்னேனா? செல்லமா வளத்த மகள் சந்தோசமா இருப்பா எண்டு நம்பித்தான் உங்கட தம்பிக்குக் கட்டி வச்சது. இப்பிடி அழவைக்க இல்ல!” என்று கோபப்பட்டுவிட, இதென்ன புதுப் பூகம்பம் என்று திகைத்துப்போனாள் இந்திரா.

 

அகத்தியனைத் தனியாகப் பிடித்து, “அம்மா ஆசையில தானேடா கேட்டவா. அதுவும், ‘நாங்களும் அதுக்குத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறோம்’ எண்டு அவள் சொன்ன பிறகுதானே. அத ஏன் இவள் மாமி வரைக்கும் கொண்டு போனவள்?” என்று கோபமும் ஆதங்கமுமாக வினவினாள்.

 

அவனுக்கும் அந்த விடயத்தில் மனைவி மீது அதிருப்திதான். அவனிடம் சொல்லியிருக்கலாம். “எனக்கு இது ஒண்டும் தெரியாதக்கா. இப்பதான் சவீதா சொன்னவள். ஆஸ்பத்திரிக்கு அம்மா போகச் சொன்னது அவளுக்குப் பிடிக்கேல்ல போல. எனக்கு ஏதும் குறை இருக்கும் எண்டு மாமி சொல்லாம சொல்லுறாவோ எண்டு கேட்டு அழுறாள்.” என்றவனுக்கும் அன்னை அதைக் கேட்காமல் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம்தான்.

 

“அடேய், உன்னையும் சேத்துத்தான் போய்ப் பாத்துக்கொண்டு வரச்சொல்லி அம்மா சொன்னவா. சரி விடு, நான் அம்மாட்டச் சொல்லுறன். இனிக் கேக்க மாட்டா. ஆனா நீ சொல்லு, இப்போதைக்கு வேண்டாம் எண்டு ஏதும் பாதுகாப்பா இருக்கிறீங்களா?” என்று வினவினாள்.

 

தமக்கையிடம் இதையெல்லாம் பேச ஒரு மாதிரி இருந்தாலும், “அப்பிடி ஒண்டும் இலையேக்கா. அவளும் என்னட்ட ஒண்டும் விவரமாச் சொன்னது இல்ல.” என்றவனுக்குக் குழப்பம்.

 

அவனறிந்து, திருமணமானதில் இருந்தே அவர்கள் எந்தக் கவனத்தோடும் இல்லை.

 

அவன் கேட்டபோது கூட, ‘அதைப்பற்றி எல்லாம் அம்மாவோடயும் மாமியோடயும் நான் கதைச்சிட்டன். என்ன செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும். நீங்க உங்கட மனுசிய எப்பிடிச் சந்தோசமா வச்சிருக்கிறது எண்டுறதை மட்டும் பாருங்க.’ என்று மையலுடன் சொல்லியிருந்தாள்.

 

பெரியவர்களின் வழிகாட்டலில் அவள் கவனமாக இருக்கிறாள் என்றதற்கு மேல் அவன் யோசிக்கப் போகவில்லை. அதையெல்லாம் தமக்கையிடம் சொல்லி, அவர்கள் மனத்தில் மனைவி மீதான அதிருப்தியை உருவாக்க விரும்பாமல் அவளிடமே சென்று நின்றான்.

 

அவள் அதற்கும் குதித்தாள். “என்ன இது, ஆளாளுக்குப் பிள்ளை இல்லையா, பிள்ளை இல்லையா எண்டு கேக்கிறீங்க? அத முடிவு செய்ய வேண்டியவள் நான். நீங்களோ உங்கட அம்மா, அக்காவோ இல்ல, விளங்கினதா? உங்கட அக்காக்கு வயசு போகுது. அதால, அவசரமா ஒரு பிள்ளையைப் பெத்தா. அதுக்காக நானும் உடனே பெற வேணுமா? என்ன அரியண்டம் இது? ஒரு வாழ்க்கையைச் சந்தோசமா வாழவிடாம!” என்று சினத்துடன் சீறினாள்.

 

சில நேரங்களில் இதே எண்ணம் அவனுக்கும் வருவதுண்டு. திருமணமாகி இரண்டு வருடங்கள் கூட முடியாத நிலையில் ஏன் இவ்வளவு அவசரம் என்று யோசித்திருக்கிறான்.

 

அதில், பதிலுக்குக் கோபப்படாமல், “நீ சொல்லுறது சரிதான். ஆனா, இவ்வளவு நாளும் எப்பிடிப் பாதுகாப்பா இருந்தாய் எண்டு சொல்லு. இப்பவும் அப்பிடித்தான் இருக்கிறியா? அப்பிடி ஏதும் எண்டா அதையும் சொல்லு. இன்னும் ஒரு வருசத்துக்கோ ரெண்டு வருசத்துக்கோ பிள்ள பெறுற ஐடியா எங்களுக்கு இல்லை எண்டு சொல்லிவிடுறன். அப்பிடிச் சொல்லீட்டா அவேயும் கேக்காயினம். நீ, நாங்களும் அதுக்குத்தான் வெயிட்டிங் எண்டு சொன்னதாலதான் இப்பிடிக் கேக்கினம்.” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

 

“அதுக்காக இப்பிடித்தான் ஆளாளுக்கு நோண்டுவீனமா? பிள்ளை தங்காட்டி நான் என்ன செய்ய? இப்ப நான் ஒண்டும் கவனமா இல்ல.” என்று அழுதவளைக் கண்டு, அவனுக்கும் கவலையாயிற்று.

 

அதற்குமேல் எதையும் கேட்க மனம் வராமல், “சரியம்மா. அதுக்கேன் அழுறாய்? இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம் எண்டு நான் சொல்லி விடுறன். நீ கவலைப்படாம இரு. என்ர மனுசியக் காலத்துக்கும் சந்தோசமா வச்சிருக்க வேணும் எண்டு நான் நினைச்சா, நீ இப்பிடித்தான் அழுவியா?” என்று அவளை அணைத்து, முகத்தைத் துடைத்துவிட்டான்.

 

“என்னை இப்பிடி அழ வைக்கிறது மாமியும் அண்ணியும்தான்.” சலுகையுடன் முறையிட்டாள் அவள்.

 

“சரி சரி, இனி அவே ஒண்டும் கேக்காயினம். நீ விடு.”

 

மீண்டும் ஒரு மூன்று மாதங்கள் ஓடிற்று. அகத்தியனும் இதைப் பற்றிப் பேசவேண்டாம், அவள் மிகவும் மனவுளைச்சலில் இருக்கிறாள் என்று சொல்லிவிட்டதால் அவன் வீட்டினர் வாயைத் திறக்கவே இல்லை.

 

ஆனால், இவர்களுக்கு இருக்கிற தவிப்பும் எதிர்பார்ப்பும் சவீதாவுக்கோ, அவள் அன்னைக்கோ இல்லை என்பது இந்திராவை நெருடிக்கொண்டே இருந்தது. அவர்கள் மீது ஐமிச்சம் உண்டாயிற்று. அதைவிட, அகத்தியனின் வாயைப் பிடுங்கியதில், பெரியவர்கள் சொன்னதின்படிதான் இத்தனை காலமும் அவள் கவனமாக இருந்திருக்கிறாள் என்கிற தகவலும் இடித்தது. அப்படி, அவள் அன்னையிடம் கேட்டிருந்தால், அவர் நிச்சயம் அதைப்பற்றி இவளிடம் சொல்லியிருப்பார். மறந்தாரோ என்று சும்மா விசாரித்துப் பார்த்தாள்.

 

“இல்லையேம்மா, சவீதா என்னட்ட ஒண்டும் கேட்டது இல்லையே. ஏன், ஏதும் சொன்னவளா?” என்று திருப்பிக் கேட்டார் சிந்தாமணி.

 

ஆக, சவீதா பொய் சொல்லியிருக்கிறாள். அது ஏன்? அவளிடம் கேட்க முடியாது. கேட்டால் அடுத்த பிரச்சனையைக் கிளப்பக் கூடும். தவமலர் கூட, இந்தப் பேச்சை அவள் எடுத்துவிடாதபடிக்குக் கொஞ்சம் இறுக்கமாக நடக்கிறாரோ என்கிற ஐமிச்சம் இந்திராவுக்கு வந்திருந்தது. என்ன செய்வது என்று யோசித்துவிட்டு, அகத்தியனைத் தனியாகச் சென்று செக் செய்யச் சொன்னாள்.

 

அன்றைக்கு அழுததின் பிறகு, இன்னும் குழந்தை தங்கவில்லையே என்று தன்னிடம் கூடச்

சொல்லிக் கவலைப்படாத மனைவியின் மெத்தனப் போக்கு, அவனையும் உறுத்தியதில் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்தினான் அகத்தியன். கூடவே, அவனுக்குத்தான் ஏதுமோ என்கிற கேள்விக்கான பதிலையும் கண்டுபிடிக்க விரும்பினான்.

 

ஆனால், அவனுக்கு எந்தக் குறையும் இல்லை என்று பரிசோதனை முடிவு சொல்லவும் அக்காவும் தம்பியும் இன்னுமே குழம்பிப் போயினர்.

 

இப்போது, அவளுக்குத்தான் ஏதோ கோளாறு என்று தெளிவாயிற்று. இது, அன்னை மகள் இருவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான், தானும் கஜேந்திரனும் காதலித்ததை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, தம்பிக்கு அவளைக் கட்டிவைத்தார்களோ என்று தோன்றியதும் மொத்தமாகத் தன் நிம்மதியைத் தொலைத்தாள் இந்திரா.

error: Alert: Content selection is disabled!!