வெளிச்சக்கீற்று 7 – 2

பதிலற்று அவர்கள் நிற்க, “என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நீங்க செய்ற எல்லாத்தையும் பாத்துக்கொண்டு மேல ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு எல்லாரும் பதில் சொல்லியே ஆகோணும். ஆனா, என்ன நடந்தாலும் உன்ர மனுசிய விட்டுப்போட்டு வா தம்பி எண்டு, என்ர மகனை நான் கூப்பிட மாட்டன். அவனும் அப்பிடிப் பொறுப்பைத் தட்டிக் கழிச்சுப்போட்டு வரமாட்டான். என்ர பிள்ளைகளை நான் அப்பிடி வளக்கவும் இல்ல.” என்றுவிட்டுப் போனார் அவர்.

 

அன்னையும் மகளும் மூச்சு விடக்கூட முடியாதவர்களாக அமர்ந்திருந்தனர். அன்னையின் பேச்சில் பெரிதாக உடன்பாடு இல்லாத போதிலும் நடுவில் தங்கையின் வாழ்க்கை இருப்பதில் கஜேந்திரனாலும் மனைவி வீட்டினருக்காகப் பேச முடியாமல் போயிற்று. “விடு, கொஞ்ச நாள் போக எல்லாம் சரியாப் போகும்.” என்று இந்திராவைத்தான் சமாதானப்படுத்தினான்.

 

இப்படி, அவர்கள் வாயைத் தவமலர் அடைத்துவிட்டதில் சவீதாவுக்கு மிகுந்த ஆனந்தம். இனி அடங்கி, நல்ல பிள்ளையாக இருப்பான் என்று நம்பினாள்.

 

அவளின் நம்பிக்கைக்கு மாறாக, அகத்தியன் அன்றைக்குப் பிறகு இன்னுமே விலகிப்போனான். அவனால் முடியவில்லை. மனத்தில் இருப்பதைக் கொட்ட முடியாமல், ஒரு வடிகால் இல்லாமல் அவன் நெஞ்சைப் போட்டுப் பெரும் பாரம் அழுத்தியது. இவர்களை எல்லாம் பாராத தூரம் சென்றுவிட முடியாதா என்று துடித்தான்.

 

ஒருமுறை கடைக்குச் சாமான்கள் கொள்முதல் செய்ய என்று கொழும்பு சென்றவன், மூன்று நாள்களுக்கு ஹோட்டல் அறையிலேயே தங்கிவிட்டான். உண்மையில் பெரும் ஆசுவாசமாக இருந்தது. அந்த மூன்று நாள்களும்தான் கொஞ்சமேனும் நிம்மதியாக மூச்சுவிட்டான். அவன் திரும்பி வந்தபோது, எல்லோரையும் அழைத்து வைத்து, மீண்டும் ஒரு பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருந்தாள் சவீதா.

 

அவன் தன்னை விட்டு விலக முயல்கிறான் என்றாள். கொழும்பில் யாருடனோ தொடர்பு என்றாள். கொள்வனவு விசயமாக அவன் ஒரு பெண்ணுடன் பேசியதைக் குறித்து அவளோடு தொடர்பு என்றாள்.

 

அதற்குமேல் அவனால் பொறுக்க முடியாமல் போயிற்று. செய்வதை எல்லாம் செய்துவிட்டு அவன் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கும் அவளைச் சும்மா விட மனம் வராமல், “என்னை என்ன உன்ன மாதிரி ஏமாத்துக்காரி எண்டு நினைச்சியா? கண்டவளோடயும் கதைக்க. நான் இப்பிடித்தான் இருப்பன். உனக்கு இருக்க விருப்பம் இல்லாட்டி நீ எங்கயாவது போ!” என்று வெடித்துவிட்டுப் போனான்.

 

வாழும் வீடே வெறுத்துப்போனது. அடுத்தடுத்த நாள்களில் கடையிலேயே தங்கிக்கொண்டான். அந்தக் கோபத்தில் சிந்தாமணிக்கு அழைத்துக் கத்தினாள் சவீதா. தவமலரும் நியாயம் கேட்டுக்கொண்டு வந்தார். கஜேந்திரனுக்கு நிம்மதி பறிபோனது. யார் பக்கம் நிற்பது என்று தெரியாத நிலை. “வரவர உன்ர தம்பி செய்றதும் சரியில்ல இந்திரா!” என்றான் மனைவியிடம் கடுமையாக.

 

மகளின் வாழ்விலும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்று பயந்தார் சிந்தாமணி. மகனுக்கு எடுத்து இந்திராவிடம் கஜேந்திரன் கோபப்பட்டதைச் சொன்னார். தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் அகத்தியன்.

 

எவ்வளவு நேரம் கடந்ததோ, ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு எழுந்து வீட்டுக்குச் சென்றான்.

 

அதன்பிறகு நேரத்துக்கு வீட்டுக்கு வந்தான், அவள் தருவதைச் சாப்பிட்டான், அவள் என்ன கதைத்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்கப் பழகினான்.

 

அத்தனைக்கும் காரணம் அவன் தமக்கை. அதோடு, அவனைத் தேடிவந்து, தனியாகச் சந்தித்து, அன்னையும் தங்கையும் நடந்துகொள்ளும் முறைக்கு மன்னிப்புக் கேட்ட கஜேந்திரன், தன் தங்கையை விட்டுவிடாதே என்று மறைமுகமாகக் கேட்டுக்கொண்டதும் காரணமாயிற்று.

 

அடிமனத்திலிருந்து அவளை வெறுத்தாலும் கூட, விவாகரத்து வரை அவனும் யோசித்ததில்லை. என் மனம் ஆறுகிற வரைக்கும், நான் சமாதானமாகிற வரைக்கும் என்னை என் பாட்டுக்கு விட்டால் போதும் என்பதுதான் அவன் தேவையாக இருந்தது. அதைக் கஜேந்திரனிடம் சொல்லியிருந்தான். அவனும் தங்கையோடு கதைப்பதாகச் சொன்னான்.

 

ஆனால், யார் என்ன சொன்னாலும் விளங்கிக்கொள்ள சவீதா தயாராயில்லை. அவனை இன்னுமின்னும் நெருக்கினாள். பழையபடி அவள் ஆடு ராமா என்றதும் ஆடும் கணவனாக அவனை மாற்றிவிடும் வேகம் இருந்தது அவளிடம்.

 

எல்லாவற்றையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டவனால் அவள் தன்னுடன் இழைய வந்ததைத்தான் பொறுக்கவே முடியாமல் போயிற்று.

 

வெறுப்புடன் விலகிப் போனான். அப்போதும் பிடித்து வைத்து, “இவ்வளவு நாளும் இனிச்சது இப்ப கசக்குதா? ஒழுங்கு மரியாதையாப் பழையமாதிரி இருங்க. இல்லையோ, உங்கட அக்கான்ர வாழ்க்கையையும் வீணாக்கி விட்டுடுவன். அண்ணாக்கு முன்னால எல்லாத்தையும் சொல்லிக் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிண்டன் எண்டா காணும். உங்கட குடும்பமே அழும்.” என்றதும் அவனால் முடியவே இல்லை. அருவருப்புடன் அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.

 

“என்ன பொம்பிளையடி நீ? உனக்கு வெக்கமாவே இல்லையா? உன்ர பேச்சும் செயலும் சீ எண்டு போகுது எனக்கு!” என்றுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவனுக்கு மூச்சு முட்டிப் போயிற்று.

 

தரையில் விழுந்து அடிபட்டவளின் முகம், அவமானத்திலும் ஆத்திரத்திலும் சிவந்து கொதித்தது.

 

முற்றத்தில் வந்து நின்றான் அகத்தியன். மனம் முழுக்கப் புழுக்கம். தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருந்த இருளுக்குள் தனக்கான வெளிச்சத்தைத் தேடினான். கீற்றாய்க் கூட எதுவும் தென்பட மறுத்தது.

 

ஆசைப்பட்டுக் கட்டியவளை, உயிராய் நேசித்த மனைவியை அடி மனத்திலிருந்து வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டதை எண்ணித் துடித்தான். மனம் மெல்ல மெல்ல முடியாது முடியாது என்று முரண்ட ஆரம்பித்திருந்தது.

இப்படியே எத்தனை நாள்களுக்கு அவனால் வாழ்ந்துவிட முடியும்? அவன் அடங்கிப் போக போக, அவள் இன்னுமின்னும் மிதிக்கிறாளே!

 

அப்படியே எவ்வளவு நேரம் நின்றானோ! ஒரு கட்டத்தில் உடலும் மனமும் சோர்ந்து துவண்டது. வீட்டுக்குள் சென்று, மீண்டும் அவளை எதிர்கொள்வதை நினைக்கவே கசந்தது. வேறு வழி இல்லை. அவனுக்கு விதித்தது இதுதான் போலும். கலைந்து கிடந்த கேசத்தை இரண்டு கைகளாலும் கோதியபடி உள்ளே வந்தான்.

 

அங்கே, அவர்கள் அறையின் கதவு உட்புறமாகத் தாழிடப் பட்டிருந்தது. இத்தனை நாள்களாக மிரட்டிக்கொண்டிருந்தது போன்று, தன்னைத் தானே எதுவும் செய்து கொண்டாளோ என்று நினைத்ததும் அவனுக்கு நெஞ்செல்லாம் உலர்ந்து போயிற்று.

 

ஓடிப்போய்ப் படபடவென்று கதவைத் தட்டினான். சத்தமே இல்லை. பயந்தே போனான். தொண்டை எல்லாம் வறண்டு போனது.

 

நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டு, இனி இப்படி நடக்கமாட்டேன் என்று சொல்லி, உன் விருப்பம் போலவே நடக்கிறேன் என்று கெஞ்சியும் அவளிடமிருந்து பதிலே இல்லை.

 

அவனுக்குக் கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. கதவை உடைக்கப் பார்த்தான். தேக்குமரக் கதவு. அசைந்து கொடுக்கவே இல்லை. அவன் உடம்பு புண்ணானதுதான் மிச்சம். வீட்டைச் சுற்றி ஓடிப்போய் யன்னல் கதவைப் படாத பாடுபட்டுத் திறந்தான்.

 

அங்கே அவள், கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். காதுகளில் ‘ஹெட்போன்ஸ்’.

 

அவனால் நம்பவே முடியவில்லை. இப்படி, முழுதாக இருந்துகொண்டா அவன் கத்திய கத்தலுக்கும் பதறிய பதற்றத்துக்கும் அசையாமல் இருந்தாள்? இருந்த பதற்றமெல்லாம் வடிய உடலிலிருந்து ஆறாய் வழிந்தோடியது வியர்வை. அப்படியே மண் தரையில் சரிந்தவனுக்கு எல்லாமே விட்டுப்போன உணர்வு. கழிவிரக்கம் கொண்டான். தன் நிலையை எண்ணிக் கண்ணீர் கூட வரப்பார்த்தது. அப்படியே கண்களை மூடிச் சுவரில் தலையைச் சாய்த்தான்.

 

ஒரு கெட்ட பழக்கம் இல்லை; எந்தப் பெண்ணையும் தவறாகப் பார்த்தது இல்லை; கோபப்பட்டுக் கத்துவதைக் கூட விரும்பாதவன்; இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக வாழ விரும்புகிறவன்; நல்ல உழைப்பாளி; கட்டியவளைக் குறை இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன். அவனுக்கா இப்படி ஒரு நிலை?

 

நெஞ்சின் நடுக்கமும் உடலின் பதற்றமும் அடங்க நெடுநேரமாயிற்று. மீண்டும் எழுந்து அவளைப் பார்த்தான். இப்போது படுத்திருந்தாள்.

 

“ஏன் சவீதா இப்பிடி எல்லாம் செய்றாய்?” மனம் விட்டுவிட்ட குரலில் வினவினான்.

 

“கதவைத் திற ப்ளீஸ். ஏன் இப்பிடி என்னைப்போட்டு வதைக்கிறாய்?” கோபப்படக்கூட அவனால் முடியவில்லை.

 

“நான் என்ன பிழை செய்தனான் உனக்கு? நீ செய்த துரோகத்தைக் கூடக் கடந்து வரத்தானே பாக்கிறன். ஆனாலும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்கிறாய்?”

 

அவள் பதில் சொல்லவே இல்லை.

 

“சவீதா.” அவள் பெயரையே கெஞ்சலாக்கினான்.

 

“கதவைத் திற சவீதா.”

 

அவள் திரும்பிப் படுத்தாள்.

 

“நீ ஏதும் செய்திடுவியோ எண்டு எனக்குப் பயமா இருக்கு. ப்ளீஸ், கதவை மட்டும் திறந்து விடு. நான் உள்ளுக்க வரக்கூட இல்ல.” என்று கூடச் சொல்லிப்பார்த்தான்.

 

அவள் அப்படியேதான் இருந்தாள்.

 

எக்கேடாவது கெட்டுத் தொலையட்டும் என்று போகப் பயந்தான். இவ்வளவு தூரத்துக்கு வீம்பு பிடிக்கிறவள் அவனை அடக்குவதற்காக என்னவும் செய்வாள்.

 

ஒரு கட்டத்துக்குமேல் அவளிடம் கெஞ்சுவதற்குக் கூட அவனிடம் வலுவில்லாமல் போயிற்று. மீண்டும் தலையைப் பற்றியபடி அங்கேயே அமர்ந்துகொண்டான்.

 

எதையும் சிந்திக்கக்கூட முடியவில்லை. பனியில் உறைந்த சிலையைப் போன்று அங்கேயே அமர்ந்திருந்தான்.

 

விடிந்தது. அவள் கழிவறை செல்வதற்காக அறையை விட்டு வெளியே வந்த நேரத்தில் ஓடிப்போய் அறையின் தாழைக் கழற்றி எறிந்தான். அவனை மிரட்ட நினைக்கிறவளுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தெரிந்தாலும் ஒரு ஆத்திரம்.

 

அவனுக்கான அன்றைய சோதனைகள் முடிந்த பாடில்லை போலும். அவளிருக்கும் அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் கடைக்கு வந்தவனை காவல்துறை வந்து அழைத்துக்கொண்டு போனது.

 

மனைவியை அடித்துக் கொடுமை செய்தானாம் என்று அவன் மனைவியே புகார் கொடுத்திருந்தாள். சான்றாக, அவன் தள்ளிவிட்டுக் கட்டிலிலிருந்து விழுந்தபோது தேய்த்த காயத்தையும் காட்டியிருக்கிறாள். கேட்டவனின் முகம் செத்துச் சுண்ணாம்பாயிற்று.

 

ஏன், எதற்கு என்று விசாரித்தவர்களிடம் என்ன சொல்வான்? என்னை நெருங்கினாள், தள்ளிவிட்டேன் என்றா? ஒன்றுமே சொல்லாமல் அமர்ந்திருந்தான். வீட்டினருக்குக் கூடத் தெரியப்படுத்தவில்லை. ஒருவித ஆத்திரம். அதை, யார் மீதும் இறக்கிவைக்க முடியாமல் போனதில் தன்னையே தண்டித்துத் தீர்க்க முயன்றான்.

 

இது, கணவன் மனைவி சண்டை என்பதில் அன்றைய நாள் முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்திருந்துவிட்டு, இரவான பிறகு இனியாவது ஒழுங்காக இரு என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

 

ஆனால், அந்த இடைவெளிக்குள் காண்கிற காவலர்கள் எல்லோரும் கேட்ட கேள்விகளிலும் பார்த்த பார்வையிலும் கூனிக் குறுகிப் போனான்.

 

இனி முடியாது. அவன் மனது அடித்துச் சொன்னது. அக்காவுக்காகக் கூட அவனால் அவளைப் பொறுத்துப் போகவே முடியாது. அறுந்து விழுகிறேன் என்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கயிறு அறுந்தே போயிற்று.

 

அடுத்தநாள் காலையில் எழுந்து வந்து கதவைத் திறந்த இந்திரா கண்டது, கசங்கிய ஆடைகளோடு தலை கலைந்து, கண்கள் சிவந்து, உறக்கமே இல்லாத முகத்துடன் ஒரு பைத்தியக்காரனைப் போல் வாசலில் நின்றிருந்த அகத்தியனைத்தான்.

 

“ஐயோ தம்பி, என்னடா உனக்கு நடந்தது?” ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு அழுதவளிடம், “இதுக்கு மேலயும் என்னால ஏலாக்கா. எனக்கு எதையாவது செய்து இந்தக் கொடுமையில இருந்து விடுதலை வாங்கித் தாங்க. மூச்சு முட்டியே செத்திடுவன் போல!” என்றான் எல்லாம் வெறுத்த குரலில்.

 

மகளின் சத்தத்தில் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த சிந்தாமணி, மகன் சொன்னதைக் கேட்டு இடிந்துபோனார். அவனை இப்படிப் பார்க்கவா அவர் உயிரோடு இருக்கிறார்?

 

அப்போதுதான் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்த கஜேந்திரனும் அகத்தியனைக் கண்டு அதிர்ந்துதான் போனான். அதைவிட, அவன் சொன்னவை? அந்த வீட்டிலிருக்கும் யார் முகத்தையும் அவனால் பார்க்க முடியாமல் போயிற்று.

 

இத்தனை நாள்களாகத் தங்கைக்காக என்று மனச்சாட்சியை மறைத்து வைத்துவிட்டு நடமாடியது உறுத்தியது.

 

அதன்பிறகு எதையும் யோசிக்கவில்லை இந்திரா. சவீதாவிடமிருந்து அவனுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டே ஓய்ந்தாள். கொடுக்கவே மாட்டேன் என்று நின்ற சவீதாவையும், அவளோடு சேர்ந்து இவர்களை ஒருவழியாக்கிய தவமலரையும் கஜேந்திரன் சமாளித்திருந்தான்.

 

இப்படி, முதல் பாதி பொய்யான சந்தோசத்திலும், அடுத்த பாதி கசப்பான நரகத்திலும், கடைசிப் பாதி காலைச் சுற்றிய பாம்பிடமிருந்து விடுபடுவதிலும் என்று அவன் திருமண வாழ்வு, வாழ்க்கை முழுவதற்குமான பெரும் பாடத்தைக் கற்பித்துவிட்டுத்தான் போயிருந்தது. அப்படியிருக்க, இன்னொரு பெண்ணை நம்பித் தன் வாழ்க்கையை மீண்டும் கொடுப்பானா?

error: Alert: Content selection is disabled!!