சூர்யாவுக்கு உள்ளே வியர்க்காமல் இல்லை. ஆனாலும் கூட முதல் நாள் இரவு வேலைகள் முடிந்து தானும் அவனும் ஒன்றாக மாளிகைக்குத் திரும்பியதாகவும், விடிந்ததும் ராயனைக் காணாமல் தேடிக்கொண்டு புறப்பட்டதாகவும் சொன்னான்.
தம் ஆட்களாலேயே நிலாவினிக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்று அவளையும் தன்னோடு வைத்துக்கொண்டதாகவும் சொன்னான்.
அதற்கு வலு சேர்க்கும் வகையில் அதுவரையில் அவனுக்கும் நிலாவினிக்கும் வந்த அழைப்புகளை, ‘அண்ணா, உங்களுக்குத் தெரியாம அண்ணா எங்கயும் போக மாட்டார். உள்ளதைச் சொல்லுங்க. அண்ணா எங்க?’ என்று மிரட்டல் தொனியில் வந்திருந்த குரல் பதிவுகளையும் காட்டினான்.
“எனக்கும் என்ன செய்றது எண்டு தெரியேல்ல சேர். என்னட்டச் சொல்லாம எங்கயும் போக மாட்டான். முதல் காரை விட்டுட்டு அவன் மட்டும் எங்க போனவன்? ஒண்டுமே விளங்குது இல்ல. அவனுக்கு முதல் என்ர உயிர் போகோணும் எண்டு நினைக்கிறவன் நான். நான் போய் அவனுக்கு தீங்கு செய்வனா?” என்று பெரும் நடிப்பு நடித்தான்.
ராயனின் மாளிகையின் சிசிடிவி புட்டேஜ்ஜை காவல்துறை ஏற்கனவே எடுத்திருந்தது. அதில் முதல் நாள் இரவு வரை அனைத்துப் பதிவுகளும் இருந்தன. அதன் பிறகான எதையும் காணவில்லை. கடைசியாக அன்று இரவு சூர்யா சொன்னது போன்று ராயனும் சூர்யாவும் ஒன்றாக மாளிகைக்குள் வருவது மட்டுமே இருந்தது. அதில் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. இருவரும் எப்போதும் போன்றே இருப்பதில் காவல்துறையால் அவனை மேலும் விசாரிக்க முடியவில்லை.
அவர்களும் ராயனைத் தேட ஆரம்பித்தார்கள். கூடவே ஆதிக்கும் விசாரணைக்கு அழைப்புப் போனது.
*****
முற்றிலுமாகக் களைத்துப்போய் அதிகாலைப் பொழுதில் வீடு வந்த மகளைக் கண்டு, “என்னம்மா?” என்றார் சிவசுந்தரி.
அவள் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் பொறுப்பில் இருப்பதால் விபத்துக்கு ஆளாகி வருகிறவர்களை, உயிருக்குப் போராடும் நிலையில் வருகிறவர்களை உடனடியாகக் கவனிக்க வேண்டியது அவள் பொறுப்பு. அதில் பெரும்பாலும் இப்படித்தான் மொத்த சத்தையும் இழந்தவள் போல் வருவாள்.
ஆனால், களைப்பு இருந்தாலும் ஒரு உயிரைக் காப்பாற்றிவிட்ட திருப்தி அவள் முகத்தில் இருக்கும். ஆனால் இன்று அப்படி எதுவுமில்லை. இரவே, “ஒரு சீரியஸ் கேஸ் அம்மா. இரவுக்கு வரமாட்டன்!” என்று சொல்லியிருந்தாள்.
அந்த நபருக்கு ஏதுமோ என்று உள்ளே ஓடினாலும், களைப்புப் போக அந்த அதிகாலையிலேயே தலைக்குக் குளித்துவிட்டு வந்தவளைக் கண்டு கடிந்துகொள்ள மனம் வரவில்லை. பேசாமல் போய் டிரைலரை எடுத்துவந்து அடர்ந்த நீண்ட கூந்தலை உணர்த்தினார்.
அவளுக்குச் சொர்க்க சுகமாக இருந்தது. அப்படியே சோபாவிலேயே உறங்கி விடலாமா என்கிற அளவில் கண்கள் சொக்கின. அதற்குள் இதமான சூட்டில் பால் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அவள் அருந்தி முடித்ததும் உணவும் கொடுத்தார்.
“அம்மா!” இந்த நேரத்தில் வேண்டாமே என்கிற மறுப்பு சோர்வுடன் வெளிப்பட்டது அவளிடமிருந்து.
“இரவு எப்பிடியும் ஒழுங்கா சாப்பிட்டிருக்க மாட்டாயாம்மா. வயிறு நிரையாட்டி நித்திரை வராது. ரெண்டு வாய் சாப்பிட்டுப் போய்ப் படு!” என்று அவரே கொடுத்தார்.
ஒரேயொரு மகள். அவள்தான் அவர்களின் உலகமே. கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்வார்கள். அன்னையின் கை, உணவின் சுவையை இரண்டு மடங்காக்கிவிட வயிறு நிறைய உண்டுவிட்டு, “ஒன்பதுக்கு எழுப்பி விடுங்கம்மா. பத்துக்கு அங்க நிக்கோணும்.” சோர்வுடன் சொன்னாள்.
“ஆக சீரியஸா பிள்ளை?” இல்லாமல் மறுபடியும் இத்தனை நேரத்துக்குப் போகத் தேவையில்லை என்று தெரியுமென்பதால் வினவினார்.
அதற்கே அவள் முகம் மாறிற்று. கத்தியைக் காட்டி மிரட்டிக் காரியம் சாதித்த ஆதி நினைவில் வந்தான்.
அந்தக் கலிங்கராயனுக்கு அவள் பார்க்கிற வைத்தியத்தில் எந்த மாற்றமும் இல்லை. யாராய் இருந்தாலும் கரிசனையோடும் அவன் பிழைத்துவிட வேண்டும் என்கிற தவிப்போடும் அவர்களைக் கவனிப்பாள்.
வெளியில் இருக்கிறவர்களுக்குத் தம் உறவை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்கிற தவிப்பு என்றால், அவளுக்குத் தன் நோயாளியைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற துடிப்பு இருக்கும்.
இப்போதும் அது உண்டுதான். அது இயல்பாக அவளுக்குள் வருவது. அதோடு கூடவே இவனைக் காப்பாற்றுவதற்காக இன்னொரு உயிரின் மீது கத்தியை வைக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா இவன் என்கிற கேள்வி அவளுக்குள் புறுபுறுத்துக்கொண்டிருந்தது.
இணையத்தில் அவனைக் குறித்துத் தேடவேண்டும் என்று கைகள் துறுதுறுத்தாலும் அவள் தேடவில்லை. ஒரு கோபம். அவன் எவ்வளவு பெரிய எவனாக இருந்தாலும் அது அவனோடு. அவளுக்கு அவன் ஒரு நோயாளி. அவ்வளவுதான்.
என்றாலும் கலிங்கராயன் என்கிற பெயருக்கு முன்னால் அப்பா என்கிற இடத்தினை வெறுமையாகவே விட்டிருந்தது அவளை என்னவோ செய்யாமல் இல்லை. அப்பா இல்லையோ? அல்லது குடும்பமே இல்லையோ? ஒரு ரவுடிக்கு எதற்கு குடும்பம் என்று கோபம் எழுந்தாலும் அவள் புறப்படுகிற வரை அவனைத் தேடி வேறு யாரும் வரவில்லை என்பதையும் கவனித்திருந்தாள்.
அன்னையிடம் சொன்னது போலவே காலையில் ஒன்பது மணிக்கே எழுந்து தயாராகி வந்தவளிடம், “அம்மாச்சி, கலியாணத்துக்கு தேவையான உடுப்புகள் எடுக்கப் போகோணும்டா.” என்று, அவளின் வேலைப் பளுவை அறிந்திருந்த அவள் தந்தை மதியழகன் நினைவூட்டினார்.
அவர்கள் ஊரின் பாடசாலை அதிபராக இருக்கிறார். அன்பும் பண்பும் நிறைந்த மனிதன்.
“இந்தக் கிழமை சரியா வரும் எண்டு நினைக்கேல்ல அப்பா. வாற கிழமை பாப்பம்.”
இப்படி அவள் சொல்வது இதோடு மூன்றாவது முறை என்பதில், “மாறன் என்ன நினைப்பாரோ தெரியாம்மா.” என்றார் தந்தை.
அவளின் வருங்காலக் கணவன் மாறன். அவனும் திருகோணமலை அரச வைத்தியசாலையில் வைத்தியராகப் பணிபுரிகிறேன்.
“அவருக்கு விளங்கும் அப்பா. கோவிக்க மாட்டார். அவரிட்ட நானே சொல்லுறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டவள் பத்து மணிக்கு மறுபடியும் வைத்தியசாலையில் இருந்தாள்.
வேறு ஆட்களுக்கு வைத்தியசாலைச் சூழல் வழமைபோன்று தெரிந்தாலும் அப்படி இல்லை என்று அவள் கண்டுகொண்டாள். நடுச்சாமத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்குப் பிறகும் அங்கே சாதாரண மனிதர்கள் போன்று நடமாடிக்கொண்டிருந்த முகங்களைக் கண்டு அவளுக்கு முகம் இறுகிற்று. வைத்தியசாலை முற்று முழுதாக அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது புரிந்தது.
அவள் வைத்தியசாலைக்குள் வேகமாய் நடந்துவர, எதிர்ப்பட்ட ஊழியர்கள் இன்முகத்துடன் காலை வணக்கம் சொன்னார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டு வந்தவள் முகம், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியைக் கண்டதும் கடுத்தது.
இவளைக் கண்டுவிட்டு வேகமாக எழுந்து நின்று, “குட் மோர்னிங் டொக்டர்.” என்று சொன்னான் அவன். திரும்பியே பார்க்கவில்லை அவள்.
அவளாவது வீட்டுக்குப் போய்விட்டு வருகிறாள். அவன் போட்டிருந்த உடையைக் கூட மாற்றவில்லை. இரவு முழுக்க அவன் உறங்கவில்லை என்றும் அவளுக்குத் தெரியும். அணிந்திருந்த உடையில் படிந்திருந்த இரத்தக் கறைகளைக் கழுவிவிட்டு அப்படியே நிற்கிறான் என்று இரவு இரத்தக் கறைகளுடன் இருந்த உடை இப்போது அது இல்லாமல் இருப்பதில் தெரிந்தது.
அதுவே அவன் அவனுடைய ‘அண்ணா’ மீது வைத்திருக்கும் பற்றைச் சொல்லாமல் இல்லை. அதற்கு அவளை மிரட்டுவானா, அதுவும் ஒரு உயிரை வைத்து. அது போதாது என்று அந்த வைத்தியசாலையின் நிர்வாகியையே அடக்கிவிட்டானே. அந்த ஆத்திரம் அவனை பொருட்படுத்த அவளை விடவில்லை.
அவள் கோபம் அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், அவன் அவ்வளவு செய்த பிறகும் கூட, விடிய விடிய நேரம் தவறாமல் ராயனை அவள் கவனித்துக்கொண்டதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அதில் அவள் கூப்பிட்டு வைத்துக் கன்னம் கன்னமாக அறைந்தால் கூட வாங்கிக்கொள்ளும் முடிவில்தான் இருந்தான் ஆதி.
நேரே சென்று மூத்த சத்திரசிகிச்சை நிபுணரோடு கலிங்கராயனின் உடல்நிலை குறித்துப் பேசினாள். அவர் சொன்ன அறிவுரைகளையும் அறிவுறுத்தல்களையும் கேட்டுக்கொண்டு வந்து, இரத்த அழுத்தம், சுவாசம், இரத்த இழப்பு, காயங்களின் நிலை போன்றவற்றைக் கண்காணித்து குறித்துவைத்தாள்.

