ஒரே பார்வையில் உள்ள நிலையைப் படம் பிடித்துவிட்டான். “நீர் உம்மட அலுவலப் பாரும், நான் வந்து தீத்துறன்.” சொல்லிக்கொண்டே மாடியேறியவன், அடுத்த ஐந்தாவது நிமிடம் தலையில் தண்ணீர் கசிய வந்து நின்றான்.
“நீங்க என்ன தலை துடைக்கேல்லையா? ஈரமாக் கிடக்கு!” தன்னை மறந்து வாய்விட்டுவிட்டாள். முறைத்தான்.
“இல்ல, நான் தீத்திறன், நீங்க சாப்பிடுங்கவன்.”
“நானே தீத்துறன்.” அவள் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி, மகன் முன்னால் கதிரையை நன்றாக இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.
“சூட்டி…” நெளிந்தான், அவன்.
“இதுக்குத்தான் தீத்த வேணாம் என்டனான். காதில் வாங்க மாட்டீரே!” அங்கிருந்த தன் மடிக்கணினியோடு தன்னறை நோக்கிச் சென்றவள் காதுகளை உரசியது, அலுப்புக்கலந்த அவன் குரல். திரும்பிப் பார்க்காது அறைக்குள் உள்ளிட்டுவிட்டாள், அவள்.
“அக்கா சாப்பிட்டுட்டனே! நீங்களும் அச்சாப்பிள்ள போல சாப்பிடோணும்.” எழுந்து கைகழுவச் சென்றாள், லாதி.
“அதானே! சூட்டி போனா என்ன எங்கட குட்டியனுக்கு அப்பா இருக்கிறன் டா. அப்பா தீத்தி விடுவன் தானே? ஆ சொல்லுங்கோ!” கரண்டியால் கிள்ளி வாயருகில் கொண்டுபோக முதல், முன்னால் இருந்த உணவுத்தட்டில் பட்டுப் பட்டென்று அடித்தான், ஆதித். அதில் இருந்த உணவு அவ்விடமெல்லாம் தெறித்திட்டு.
“அடேய் அடேய்” தட்டை எடுத்து அருகில் சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு, கயலின் அறையைத் தான் பார்த்தான். அவள் தலை தெரியவில்லை.
“உன்னடா …நல்ல செல்லம் குடுத்து பழக்கம் பழக்கி வச்சிருக்கிறா உன்ர சூசூட்டி! அக்காவும் தம்பியும் ஸ்வீட்டி சூட்டி எண்டு கொண்டு எனக்கு விளையாட்டுக் காட்டுறியல் என்ன?”
குழந்தை அமர்ந்திருந்த மேசைத் தட்டில் சிதறிக் கிடந்த உணவை டிசுவினால் ஒற்றி எடுத்தபடி அவன் கதைத்தவை அறைக்குள் இருந்தவள் முகத்தில் சிறு முறுவலைத் தோற்று வித்தது என்றால், அப்போது ‘டொங்’ என்று வந்து விழுந்த அலுவலக மெயில்?
திறந்து பார்த்த கயல் ஒரு கணம் கண்களை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள், மறுநொடி, எழுந்து ஒரே ஓட்டமாக வெளியில் வந்தாள்.
அதேநேரம், குழந்தையின் இடப்பக்க மேல்கையில் பளீரென்று அடித்திருந்தான், பூபாலன். அவனோ வீரிட்டு அழுதான்.
“ஆஆஆ!” அசைவின்றி நின்றுவிட்டாள், கயல்.
அச் சத்தத்தில் திரும்பிப்பார்த்த பூபாலனுக்கு அடித்த பின்னரே தான் என்ன செய்தோம் என்று விளங்கிட்டு.
“தம்பிக்குட்டியன் ஏன் அழுறார்? அப்பா ஏசினவரா? அவருக்குச் சாப்பாடு தீத்தவே தெரியா. தாங்கோப்பா நான் தீத்துறன்.” பெரியவளாக ஓடி வந்தாள், லாதி.
“அப்பா ஹா..ஹா..” அவள் சிரிக்க, விறுவிறுவென்று வந்து பிள்ளையைத் தூக்கி அணைத்துக்கொண்டு நேராக கயல் பார்த்த பார்வையில் தடுமாறிவிட்டான், பூபாலன்.
‘நீ பிள்ள பார்க்கிற லட்சணம் நல்லா இருக்கு!’ அவள் பார்வை அப்பட்டமாக இப்படித்தான் சொல்லிற்று.
உண்மையில் வெட்கமாக இருந்தது. “இல்ல கயல், இங்க பாரும் அப்பிடியே துப்பிட்டான்.” பூபாலன் மீது மசித்த உணவுக் கோலம்.
“முதல் ப்ளேட்டில இருந்தது எல்லாம் தட்டி விட்டான். நான் பொறுமையாத் தீத்துவம் எண்டு குடுத்தா…களைச்சிப்போய் வந்தனான் கோபம்…வந்திட்டு” தடுமாறிவிட்டு, “வாடா என்ர ராசுக்குட்டி!” மகனை நோக்கிக் கைநீட்டவே அவன் கயலின் தோளில் படுத்துவிட்டான்.
“நிறைய வச்சி அடசினா அவன் துப்புவான். நீங்க தந்திட்டுப் போங்க நான் குடுக்கிறன்.” அவன் முகம் பாராது உணவுக் கிண்ணத்துக்குக் கை நீட்டினாள், கயல்விழி.
“இல்ல, நானே குடுக்கிறன். எத்தனை நாளுக்கு அழுவான்? பழகினாச் சரி. தாரும் நீர் போய் வேலையைப் பாரும்.” ஆதித்தை வலுக்கட்டாயமாகத் தூக்க முனைந்தான்.
அவனோ, வாயால் உணவு வடிய கயல் கழுத்தைப் பிடித்தபடி வீரிட்டு அழுதான். பட்டென்று விட்டுவிட்டான் பூபாலன். அவன் கண்கள் கலங்கிற்று.
“நான் வேணும் எண்டு எல்லாம்…”
“எனக்கு என்னத்துக்கு விளக்கம் சொல்லுறீங்க? அவனுக்கு நல்ல பசி, தயவு செய்து…” அவன் கையில் இருந்த உணவுக் கிண்ணத்தை வாங்கிக்கொண்டு திரும்பியவள், “இன்னொருக்கா…” ஆரம்பித்தவள் லாதியைப் பார்த்துவிட்டு நிறுத்தினாள். லாதி கண்டிருந்தால்…
“அதான் அப்பா அங்கால போங்கோ! அப்பாக்கு அக்கா ஏசிட்டன், நீங்க அழாதீங்கோ செல்லக் குட்டியன்!” தகப்பனை அப்பால் தள்ளிச் சென்றாள், லாதி.
குழந்தையும் சிணுங்கிக் கொண்டே இருந்தான். அவ்வளவாகச் சாப்பிடவும் இல்லை. பாலைக் குடித்துவிட்டுத் தூங்கிவிட்டான்.
ஒருமுறை, ஏதோ ஒரு விசயத்தில் கயலின் மாமா இவள் தலையில் தட்டி விட்டார். அதற்கு, “ தாயில்லாப் பிள்ளையில கை வைப்பியோ?” என்று பெரிய பிரச்சினையே உருவாக்கியிருந்தார், அவள் அம்மம்மா. அன்று, எதற்காகத் தன் மாமா கண்டித்தார் என்பதை மறந்து விட்ட போதும், அம்மம்மாவின் பரிவின் பின்னாலிருந்த ‘தாயில்லாப் பிள்ளை’ என்பது அவள் மனதில் கல்வெட்டெனப் பதிந்து விட்டிருந்தது.
அதே நிலையில் இன்று லாதியும் இவனும். ‘இண்டைக்கு தகப்பன் தட்டினார், நாளைக்கு?’ மெல்ல அவன் நெற்றியில் சிதறிக்கிடந்த தலைமயிரை ஒதுக்கி விட்டாள்.
“உங்களிட அப்பாவாவே இருக்கட்டும், இனிக் கைவைக்க வேணும் அப்ப இருக்கு!” முணுமுணுத்தவள் தோளில் மெல்லத் தட்டினாள் லாதி.
திரும்பியவளிடம், “அப்பா…” இரகசியமாகச் சொல்லி கதவடியைக் காண்பித்தாள்.
நெற்றி சுருங்க முறைப்பாகப் பார்த்தாள், இவள்.
“சாப்பிடேல்லையா? ”
“பெரிய அக்கறை, ஆருக்கு வேணும்?” முணுமுணுத்தபடிதான், “நான் சாப்பிட்டுட்டன்.” வெடுக்கென்று சொல்லிவிட்டு எழுந்தாள்.
“பச், பசிக்குது வாருமன் சாப்பிடலாம்.” அவன் குரலைக் காதிலும் வாங்கவில்லை, அவள். சென்று கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்த வேகத்தில் அலுவலகத்திலிருந்து வந்திருந்திருந்த மின்னஞ்சலுக்குப் பதில் போட்டுவிட்டே மறு வேலை பார்த்தாள்.
இப்படி அவள் வேலை என்று இருந்து விட்டால் நிச்சயம் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு வந்து வைத்துவிடுவான், பூபாலன். அது உறைக்க, விறுவிறுவென்று எழுந்து வெளியே சென்றாள். அவள் நினைத்தது போலவே அவன் அவளுக்காகப் பரிமாறிக் கொண்டிருந்தான்.
“நான் சாப்பிட்டுட்டன் எண்டு சொன்னனான் எல்லா?”
“அது பொய் எண்டு எனக்குத்தான் தெரியுமே!” இலகுவாகச் சொல்லி முறுவலித்தான்.
“திரும்பவும் சொல்லுறன், நான் சாப்பிட்டுட்டன், தயவு செய்து உங்கட அலுவலப் பாருங்க. ஒகே!”
“ஒகே… நானும் சாப்பிடேல்ல.”
“இருங்க, ஆர் வேணாம் எண்டது? குழந்தைப் பிள்ளைய சாப்பிட விடாமல் பண்ணின நீங்க நாலு நாளுக்குப் பட்டினியா இருந்தாலும் ஒண்டும் குறைஞ்சிராது.” வந்த வேகத்தில் சென்று கதவைச் சாத்திவிட்டாள்.
“ப்பூ!” பரிமாறிய உணவை மேசையில் வைத்துவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டான், அவன்.
நித்திரையால் எழுந்த சின்னவன் குடுகுடுவென்று தகப்பனிடம் சென்றுவிட்டான். சாப்பிட, குளிக்க, நித்திரைக்கு மட்டுதானே அவனுக்கு கயல் வேண்டும். கயலோ, அடுத்தடுத்த நாட்களும் அவனோடு முகம் கொடுக்கவில்லை.