Skip to content
“இந்தா வாறன் எண்டு போட்டு இப்ப என்ன பிள்ளை உன்ர கத?” இவள் சொன்னதும் அதிர்ந்து போனார், அம்மம்மா. எரிச்சலோடு தொடங்கியவர், பேத்தி வலு அமைதியாகப் பார்த்திருக்கவும் பட்டென்று சுதாகரித்திருந்தார். நினைத்ததை முடித்தே தீரும் தோற்றம். அதற்காக விடுவதா என்றிருந்தது, அவருக்கு.
“சும்மா விளையாடாம வெளிக்கிட்டு வாற வழியப் பாரன, என்ர குஞ்சு எல்லா!” கெஞ்சல் தான்; அதட்டலை விட இதுதான் எடுபடும்.
“இஞ்சாருங்க, உங்கட பேத்தி சொல்லுறத வந்து கேளுங்கோவன்.” கணவரையும் அழைத்தார்.
“அம்மம்மா! எனக்கும் உங்களையும் தாத்தாவையும் பாக்க ஆசையில்லையா? இது ஒண்ணும் செய்யேலாத நிலை. இப்ப இந்தக் கொரோனாவால அங்க இருந்து ஆக்களக் கூப்பிடுறது சரியான கரைச்சல். அதான் எங்கள இன்னும் கொஞ்சக் காலம் இருக்கச் சொல்லிக் கிடக்கு.”
மேலும் இரு வருடங்கள் இங்கிருப்பது சுயவிருப்பில் என்பதை மறைத்து, வேலையிடத்தில் கட்டாயம் என்றாள்.
“நீ இவ்வளவு சொன்னாப்பிறகு என்ன செய்யிறது சொல்லு? வேலையும் முக்கியம்தான். அதுக்காக…அங்க இருந்து தான் செய்ய வேணும் எண்டும் இல்ல எல்லா பிள்ள? ஏதோ வயசு போன நாங்க உயிரோட இருக்கேக்க திரும்பி வந்தியோ ஒருக்கா கண்ணாரக் கண்டிட்டுப் போவம்.” அழுதுவிட்டார், அவர்.
திடுதிப்பென்று மகள் இறந்தபோது அப்படியொரு வைராக்கியத்தோடு இவளைத் தம்மோடு தங்க வைத்துக் கொண்டார்கள். கரன், வேதாவை முழுமையாக நம்பி மகளை அழைத்த போதும் இவர்களால் அப்பெண்ணை நம்ப முடியாதிருந்தது. தம் பேத்திக்கு எல்லாமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள், விரும்புகிறார்கள். அதை நிறைவேற்றிட முயற்சிகள் அனைத்தையும் எடுக்கவும் செய்தார்களே! நல்லபடி படிப்பு, பழக்க வழக்கம், தைரியம் என்று எல்லாம் கொடுத்தே வளர்த்தார்கள்.
இப்போ பார்த்தால்…அவள் வருங்காலமே கேள்விக்குறியாகியது போலுணர்ந்தார்கள்.
மாறி மாறிக் கெஞ்சிக் கொஞ்சி எல்லாம் கடந்து கோபப்பட்டு, அழுது ..ம்ம்ம் பிரயோசனமே இருக்கவில்லை; அவள் பிடிச்ச பிடியிலேயே நின்றாள். அவர்களைச் சமாதானம் செய்யப் படாதபாடு பட்டாளே ஒழிய, ‘சரி வீட்டுக்குக் கிளம்பி வாறன்’ என்று மட்டும் சொல்லவேயில்லை.
இனி என்னதான் செய்வது? இறங்கி வந்தார், அம்மம்மா.
இருந்தாலும், “அப்ப நீ முதல் இருந்த அறையிலேயே போயிறன், இன்னும் ரெண்டு வருசத்துக்கு இங்க ஏனன? அவை அவை அவேட சோலிகளப் பாக்க வேணும்.” கதையோடு கதையாகச் சொல்லிவிட்டார்.
“அதான் பிள்ள நல்லம்…” தாத்தாவும் இடையிட, “இல்ல நான் இங்க தான் இருக்கப் போறன்!” தீர்மானம் செய்துவிட்ட குரலில் சொல்லிவிட்டாள், கயல்விழி. சட்டென்று பெரியவர்கள் முகம் மாறிற்று.
“வயசும் ஏறுது? வெளிநாட்டு மாப்பிள்ள எண்டா வேணாம் எண்டு சொல்லுற நீ இங்க எப்ப வாறது கலியாணம் எப்ப செய்யிறது?” இதற்கு என்ன பதில் சொல்லி அவர்களைச் சமாதானம் செய்விக்க ஏலும்? வாயை மூடிக்கொண்டிருந்தாள், கயல்விழி.
“கதைக்க மாட்டியே! எல்லாம் உன்ர விருப்பத்துக்குத்தான் செய்யிற பிள்ள. உன்ர அப்பாவும் சித்தியும் எங்களக் குற்றவாளி ஆக்கிற மாதிரி நடந்திராத சொல்லிட்டன். நாங்க கடைசிக்காலத்தில கிடந்து கவலைப்படுற மாதிரி நடந்துகொள்ள மாட்ட எண்டு நம்புறம்.” தாத்தா தான். எப்போதாவது தான் இப்படிக் கோபம் வரும். கைபேசித்திரையின் ஊடாகத் தீர்க்கமாகப் பார்த்த பார்வை கயல்விழியைத் தடுமாறச் செய்திட்டு.
“நம்மள ஒறுத்து எவ்வளவு பிரச்சினைகள் சிரமங்கள் வந்தாலும் அதால பிள்ளைகள் பாதிச்சிரக் கூடாது எண்டு எல்லாத்தையும் நாங்களே தாங்கி உங்கள வளத்து விடுறது…” சொல்கையில் அவர் குரல் நடுங்கிற்று.
“தாத்தா நான்…”ஆரம்பித்தவளுக்கு இடம் கூடாது வந்து விழுந்தன வார்த்தைகள்.
“உங்களிட்ட இருந்து அதிக பட்சமா எதிர்பார்க்கிறது காசோ பணமோ எங்கள வச்சுப் பாக்க வேணும் எண்டோ இல்லப் பிள்ளை. நீங்க நேர்சீரா வாழுற வாழ்க்கையில தான் எங்கட சந்தோசமும் நிம்மதியும் கிடக்கு. அத எப்பவும் நினைவில இருத்தி என்ன செய்யிறது எண்டாலும் செய்து கொள்!” விசுக்கென்று எழுந்தும் சென்றுவிட்டார்.
கண்களில் நீரோடு பார்த்த அம்மம்மாவும் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
அப்படியே அசையாது அமர்ந்திருந்தாள், கயல்விழி. அடுத்த பத்து நிமிடங்களும் கடந்திராது கைபேசி சிணுங்கியது.
“நானே எடுக்க இருந்தன் சுடர்…” சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கைபேசி வேதாவின் கைக்குச் சென்றிருந்தது.
“இந்தா வாற எண்டு நாங்க எல்லாருமே ஆவலா இருந்தம் கயல், இப்ப இன்னும் பிந்துமாமே! இப்பத்தான் அம்மம்மா எடுத்து விபரம் சொன்னவா.” என்றவர், “அப்ப நீ முதல் இருந்த அறையில போயிரு என்ன?” என்று விட்டார்.
“இங்க தொடர்ந்து இருந்து அதும் இன்னும் ரெண்டு வருசங்களுக்கு, பூபாலன் வீட்டு ஆக்களுக்கு நீ எந்த வகையிலும் நம்பிக்கை குடுக்க வேணாம் கயல்.” நேரடியாகவே விசயத்துக்கு வந்தார்.
கேட்டிருந்தவளுக்கு பட்டென்று கதைக்க வரவில்லை. எப்போதுமில்லாது அவர் குரலில் ஒரு பதற்றமும் அதைப் பிடித்து நிறுத்தும் வகையில் கட்டளையும் ஒட்டி நின்றதை உணர்ந்தவளுள் எதுவோ செய்திட்டு.
“நீ அங்க இருந்து போய்ட்ட எண்டா அவே தங்கட குடும்பத்துக்கு ஏற்றமாதிரி ஏதாவது வழி செய்து கொள்ளுவினம் எல்லா? அந்தப் பிள்ளைகளுக்கும் அதான் நல்லது கயல். நீ எப்பவும் அவேக்கு நிரந்தரத் தீர்வு இல்ல.” முகத்துக்கு நேரே அவர் கதைக்க கதைக்க, முகம் மாறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அவளுக்கு.
அதைக் கவனித்து விட்டார், வேதா. “இதையெல்லாம் சொல்ல நீ ஆர்? என்னை வளத்து ஆளாக்கினியா எண்டு எல்லாம் கேட்டிர மாட்ட எண்டு நம்புறன்.” தொடர்ந்தவரை இடையிட்டு, “நான்…உண்மையா அப்பிடி நினைக்கேல்ல…” என்றவளுக்கு, அவரிடம் இன்னும் நிறையவே கதைக்க வேண்டும் போலிருந்தது. அதுதான் பழக்கமற்ற செயலாச்சே! வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.
“நீ அங்க இருக்கிற வரைக்கும் இங்க பூபாலன்ட அம்மா ஆக்களுக்கு மனசில ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் கயல். இதவிட உள்ள நிலையை எப்படி வெளிப்படையாக் கதைக்கிறது சொல்லு?”
கயல், வீட்டாரோடு கதைக்கச் சென்ற நேரம் தொட்டு பூபாலன் காதுகள் அவள் அறைக்குள் இருந்து வரும் பேச்சில் தான். ‘ஒட்டுக்கேக்கிறீங்களா?’ என்று அவள் கேட்டாலும் கவலையில்லை என்ற மாதிரி அமைதியற்று நடமாடிக் கொண்டிருந்தவனுக்கு, வேதாவோடு கதைக்கிறாள் என்று புரிந்தது.
error: Alert: Content selection is disabled!!