33 – 2

“ஐயோ சித்தி, மற்றவை என்ன நினைக்கினம் எண்டு எல்லாம் யோசிச்சு நான் நடக்கேலா. அம்மம்மா ஆக்களுக்குச் சொன்ன அதே பதில்தான் சொல்லப் போறன், நான் இங்க இருக்கேக்க சின்னாக்கள் ரெண்டு பேரையும் அம்போ எண்டு விட்டுப்போட்டு அங்க ரூமில போயிருக்க ஏலவே ஏலாது! மற்றும் படி வேற எந்தவிதமான எண்ணமும் எனக்கு இல்ல. இனியும் வராது சித்தி. அந்த விசயமா நீங்க ஆரும் யோசிக்கவோ கவலைப்படவோ தேவையே இல்லை.” உறுதியாகச் சொல்லிவிட்ட பின்னர் என்ன செய்வது?

கேட்டிருந்த பூபாலனுக்கு, வேதா எதைப் பற்றிக் கதைத்திருப்பார் என்று ஊகிக்க முடிந்தது. அவள் தான் ஏற்கனவே முகத்துக்கு நேரேயே இரண்டாம் தாரமா கல்யாணம் செய்யிற மாதிரி எவ்வித எண்ணமும் இல்லை என்றாளே! அதோட, ‘எனக்குமே ரெண்டாம் கலியாணம் செய்யிற எண்ணம் இல்ல!’  அவரிடம் சொல்ல வேண்டும் போலிருந்து விட்டுவிட்டான்.

கிட்டத்தட்ட ஒரு கிழமை, மாறி மாறிக் கதைவழிப்பட்டு, கடைசியில் ஒருவாறு வீட்டினரைச் சமாளித்து விட்டாள்,  கயல்விழி.

அதன் பிறகான நாட்கள் ஒவ்வொன்றும் இதுவரை போலவே வேலை, பிள்ளைகள் என, கலகலப்பாகவே சென்றிட்டு. 

காயுவின் அன்னையின் முப்பத்தியொன்றுக்கு, பூபாலன் தனியாகவே சென்றுவிட்டு அதே கையோடு திரும்பியிருந்தான். அவனோடு வர இருந்த சரசுவால் சுகயீனம் காரணமாக வரமுடியவில்லை. நான்கு மாதங்களுக்கும் மேலே சென்ற பின்னரே வந்து சேர்ந்திருந்தார்.  

அந்த இடைவெளியில் பூபாலன் கயல் நல்ல நண்பர்களாகியிருந்தார்கள். பிள்ளைகள் சம்பந்தமான அவர்களின் பேச்சுவார்த்தைக்கு முன்னர் சரசு இருந்தது போல் இப்போ  இடையில் ஒருவர் தேவைப்படவில்லை.

கொரோனாவோடு பழக்கப்பட்ட மக்கள் சில சில கட்டுப்பாடுகளோடு இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியிருந்ததில், பாடசாலைகள் திறக்கப்பட்டன. 

லாதி பாடசாலை சென்று வரத் தொடங்கியிருந்தாள்.

அதன் பிறகான ஒவ்வொரு விடுமுறைகளுக்கும் காயுவின் சகோதரியும் சகோதரனும் குடும்பமாக இங்கு வரத்தொடங்கியிருந்தார்கள்.

“இலங்கை போக முதல் எல்லாம் சுத்திப் பார்க்க வேணும் என்டனிர் எல்லா?” என்ற பூபாலனும் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் சென்று  காட்டினான்.

வீட்டில் ஒரு இயல்பு நிலை வந்திருந்தது.

அப்படி, கிட்டத்த ஒரு வருடம் கடந்த நிலையில்…

ஒருநாள் மாலை பூபாலன் அன்னை சாந்தா அழைத்தார். நலம் விசாரித்தவளிடம், “தம்பி நிக்கிறானே ஆச்சி?” தாழ்ந்த குரலில் ஆரம்பித்தார். 

அவள் பார்வை முன்னால் சென்றிட்டு. நேர் முன்னால்தான் பூபாலன் அமர்ந்திருந்தான். 

இந்தா இருக்கிறார் சொல்ல முதல், “தம்பியோட கதைக்கக் கேட்கேல்லம்மா, உம்மோட ஒரு விசயம் கதைக்கக் கிடக்கு அதான்.” என்றார்  அவர்.

அதற்கிடையில் அவர்தான் என்றதும் மைக்கையும் போட்டிருந்தாள், கயல்விழி! தாய் கூறிய விதத்தில் பூபாலன் நெற்றி சுருங்கிற்று.

அவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு. “இல்ல, வெளில போனவர் இன்னும் வரேல்ல ஆன்ட்டி சொல்லுங்கோ!” சிரிப்பை வாய்க்குள் நெரித்தடக்கிவிட்டு சொல்ல, அவள் பாவனையில் பூபாலன் முகத்தில் முறுவல் விரிந்தது. 

“இல்ல ஆச்சி, இப்பிடி நேரடியாக் கேக்கிறன் எண்டு என்னில குறகிற நினையாதேயும் சரியா! மனசுக்க இருக்கிறத நேர கேட்டுட்டா பிறகொரு நாளைக்கு ஐயோ கேக்காமல் போனமே எண்டு வருந்தத்  தேவேல்ல  பாரும்!” பலமான முன்னேற்பாடோடு தொடங்கினார்.

“நான் என்ன நினைக்கப் போறன்? என்னெண்டு சொல்லுங்கோ ஆன்ட்டி.”

“அதில்ல பிள்ள, எங்கட வீட்டுக் குஞ்சுகளுக்கு நீர்  செய்யிற உதவிகளுக்கு  ஆயுளுக்கும் நாங்களும் தம்பியும் உமக்குக் கடமைப்பட்டு இருக்கிறம்மா. அந்த மனசுக்கே நீர் சீரும் சிறப்புமா வாழுவீர் இருந்து பாருமன்.” என்றவர், இவள் முகத்தில் முறுவலைப் படர  வைத்தார்.

“மனிசி என்னவோ குண்டு போடப் போகுது நீர் ஈ எண்டு கேளும்.” மெல்ல, அவளுக்கு கேட்கும் படி முணுமுணுத்தான், பூபாலன்.

“நான் என்ன கேக்கிறன் எண்டா… உம்மட விருப்பம் தான் முக்கியம் ஆச்சி…உமக்குப் பிள்ளைகளை எந்தளவுக்குப் பிடிக்கும் எண்டது அவையள நீர் பாத்துக்கொள்ளுறதிலயே தெரியும். அது…அதான்… உம்மட கவனிப்பும் அன்பும் அப்பிடியே காலத்துக்கும் அவேக்கு இருக்க வேணும் எண்டு நினைக்கிறம் ஆச்சி. உமக்குத் தம்பியக் கட்ட விருப்பமா? நீர் ஓம் எண்டா நான் இங்க உம்மட வீட்டில கதைப்பன். அவன் பற்றி நான் சொல்லவே தேவேல்ல,  தங்கமானவன்.”அவர் சொல்லி முடிக்கவில்லை, விருட்டென்று எழுந்தான், பூபாலன்.

முகத்துக்கு நேராகவே அவர் கேட்டதில், கயல்விழியால் சட்டென்று வினையாற்ற முடியவில்லை. பார்வை பூபாலனை நோக்கிப் பாய்ந்திட்டு.

தாயிடம் சீறப் போகிறானென்றுணர்ந்தவள், “ச்சே ச்சே! ஐயோ என்ன ஆன்ட்டி  நீங்க?! உண்மையாவே எனக்கு அப்பிடி எல்லாம் ஒரு எண்ணம் இல்ல. இனியும் வரவே வராது. எனக்குச் சின்னாக்களப் பிடிக்கும்; எந்தளவுக்கு எண்டு நான் சொல்லத் தேவேல்ல. அவே..நான் இங்க இருக்கேக்க..பச் எப்பிடிச் சொல்ல,  நான் இங்க இருக்கிற வரைக்கும் அவையோட இருப்பன் ஆன்ட்டி. அவ்வளவும் தான். இன்னும் மிஞ்சிப் போனா ஒரு வருசம் அதுக்குப் பிறகு நீங்க இங்க வாங்கோவன். குட்டியனுக்கும் மூன்று வயசு தாண்டிரும் பள்ளிக்குப் போகத் தொடங்க பிரச்சினை இல்ல.” வலு இலகுவாகச் சொல்லி அவர் முகத்தை சட்டென்று கூம்பிப் போக வைத்துவிட்டாள். அது மட்டுமா? பூபாலன் முகத்திலும் இறுக்கம். பட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

சாந்தாவைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருந்தவள் அவர் முகம் சுருங்கி விட்டத்தைப்பார்த்துவிட்டு, “சொறி ஆன்ட்டி!” என்றாள், மென்மையாக.  அதேநேரம் விசுக்கென்று பூபாலன் சென்றுவிட்டதில் ஒரு நிம்மதி. ‘ஆன்ட்டி இண்டைக்கு என்னால நீங்க தப்பிச்சீங்க அதோட என்ர ஃபோனும்!’ மனதுள் சொன்னவளுக்கு, அன்றொருநாள் இவர் கல்யாணக் கதை தொடங்க  ஐபாட் சிதறித் தெறித்தது தான் நினைவிலாடியது. 

இந்நிகழ்விற்குப் பிறகு சாந்தா இவளோடு கதைப்பதை வெகு சாமர்த்தியமாகத் தவிர்த்து விடுவார். தினமும் பிள்ளைகளோடு கதைப்பவரோடு வழமைபோல் கதைத்து அதற்கான பதில் தொடர்ந்து வராது போன பின்னரே அதைப் புரிந்து கொண்டாள், கயல்.

‘உன்ர விருப்பம் தான் முக்கியம் எண்டு கேட்டார், சொன்னா இப்பிடி முகத்தத் திருப்பிறாரே!’ எண்ணியவள், பூபாலன் எப்போதும் போலவே இருக்க அதைப் பற்றி எண்ணுவதையே விட்டுவிட்டாள்.

எப்படிப்போனதென்று தெரியாதே ஒரு ஆறுமாதம் சென்றிருக்கும். ஒரு நாள் சுடர்விழி அழைத்தாள்.

“அம்மம்மாக்குச் சரியான வருத்தம் எண்டு பாக்கப் போயிருந்தனான் அக்கா.” இழுத்தபடி ஆரம்பிக்க, “என்னடி சொல்லுற? நேற்றுக் கதைச்சனே…” என்றவளுக்கு, முதல் நாள் மாலை கதைக்கையில் அவள் மாமா குடும்பம் வந்து நின்றதையும் அவர்களோடு கதைத்ததில் தூரமாக இருந்த அம்மம்மா, “சுகமா இருக்கிற தானே பிள்ள?” என்றதோடு நிறுத்திவிட்டதும் நினைவில் வந்திட்டு. 

“என்னடி திடீரென்று? கொரோனா ஏதும்…” பதற்றமாகக் கேட்க, “ச்சே ச்சே அப்பிடியெல்லாம் இல்ல, அவாக்கு…அவா உன்ன நினைச்சுத்தான் அக்கா ஏங்குறா! ஒழுங்காத் தூங்கிறதும் இல்லையாம். என்னமாதிரி வெட்டொண்டு துண்டு ரெண்டு எண்டு கதைக்கிறவா இப்பத் தொட்டத்துக்கும் கண்கலங்கிக் கொண்டு …” தங்கை தொடர்ந்து சொல்ல சொல்ல, கயல்விழி முகம் பாறைபோலாகிற்று.  

‘ஆக மொத்தம் என்னைப் பாசமா வளத்து விட்டவேக்கு என்னால வீண் மனக்குறையும் நிம்மதியின்மையும்.’ மனதுள் வெகுவாகவே குன்றிப் போனாள். அவளால் அதன் பிறகு ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. அக்கணம் முடிவே எடுத்து விட்டாள்.

அதுவே, அன்று மாலை வீடு வந்த பூபாலனிடம், “நான் வாற வெள்ளி இரவு இங்க இருந்து இலங்கைக்குப் போறதுக்கு டிக்கெட் போட்டிருக்கிறன்.” சொல்ல வைத்திட்டு. 

“எங்க சின்னாக்களக் காணேல்ல? லாதி சந்தோசமா பள்ளிக்கூடத்தில இருந்து வந்தவாவோ, சின்னவன் கரைச்சல் தந்தவனா?” என்று கதைக்க ஆரம்பித்த பூபாலனோ, அவள் சொன்னதைக் கேட்டு என்ன ஏதென்று விளங்காது அதிர்ந்து நின்றான்.

error: Alert: Content selection is disabled!!