“ஏய் லூசு என்ன சொல்ற, அந்த வேலைக்கு ட்ரை பண்ணப் போறியா?”
“ஆமா ப்ரியா. எனக்கு இந்த ஊரில் என்னை ஏமாத்தினவங்களைப் பாக்கும் போது ஆத்திரம் ஆத்திரமா வருதுடி. பைத்தியமே பிடிச்சுரும் போலிருக்கு. என்னையும் மறந்து உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செஞ்சுக்குவேனோன்னு என்னை நினைச்சே எனக்கு பயம்மா இருக்குடி”
“என்னடி சொல்ற?”
“நேத்து என் அத்தை மகனுக்கு ஊரே கூட்டி நிச்சயம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே”
“ஊருக்கே தெரியுமே. நாங்கல்லாம் காறி முகத்துக்கு நேர துப்பல அவ்வளவுதான். நில்லு, அவனை இன்னமுமா நீ மறக்கலையா?”
“அந்த குடும்பம் செஞ்ச துரோகத்தை இன்னமும் மறக்கல. ஊரே அவங்க செஞ்சது நம்பிக்கை துரோகம்னு சொன்னுச்சு. ஆனால் ஒரு துரோகத்தின் மேல நடக்குற கல்யாணத்தில் கோலாகலமா தானே எல்லாரும் கலந்துக்கிட்டாங்க”
அவளது கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டாள் ஜலப்பிரியா “உலகம் அப்படித்தான். பேச்சை நின்னு கேக்குற மக்களை உக்கார வச்சு காதே பொசுங்குற அளவுக்கு அறிவுரை சொல்லும். மரியாதை தந்து கேக்குறவங்களை நீ தான் விட்டுக் கொடுக்கணும்னு சொல்லி, நம்மை கம்பெல் பண்ணும்”
“பழமொழியை விட்டுட்டியேடி… விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” புன்னகைத்த செம்பருத்தியின் பெரிய கண்களில் குளம் கட்டி நின்றது கண்ணீர்.
“நீ அந்த அளவுக்கு உன் அத்தை மகனை காதலிச்சியா?”
“ஏண்டி அது பேரு காதலா? நல்ல வேளை அந்தப் பச்சோந்தியை கல்யாணம் பண்ணிக்கலைன்னு நிம்மதியா இருக்கேன்”
“அப்பறம் என்னதான் பிரச்சனை? எதுக்கு வேற வேலைக்குப் போற?”
“என்னவோ ஒரு இடமாற்றம் தேவை படுது. கொஞ்சம் தைரியம் வேணும். இந்த ஊரில் என்னை பலவீனப்படுத்த நிறைய விஷயங்கள் இருக்கு. முக்கியமா இந்த கோபமும் ஆத்திரமும் என்னோட உடம்புக்குத் தான் கெடுதல் பண்ணுது.
நேத்து ராத்திரி அவ்வளவு கோபம்டி அந்தக் கோபத்தில் சாப்பாடுதான் ஒரே ஆறுதல். நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேல எந்திரிச்சு கத்திரிக்காய் காரக் குழம்பு வச்சு சோறு வடிச்சு சாப்பிட்டேன்”
இதைக் கேட்டதும் ஜலப்பிரியாவிற்கே கவலையாகிவிட்டது. அவளது குடும்பமே அப்பாவின் குடிப்பழக்கம் காரணமாக கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து பஞ்சம் பிழைக்க இங்கு வந்திருக்கிறது.
அவளுக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. அவளது அம்மா, அண்ணன்கள், இவள் என எல்லாரும் சிறு சிறு வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அதில் ஓரளவு மாதாமாதம் சம்பளம் என்று வருவது இவளுக்குத்தான்.
அம்மா சம்பாத்தியத்தை அப்பா பிடிங்கிக் கொள்வார். தந்தையின் வழியில் தமையன்களும் ஆரம்பித்து விட்டனர் என்று செம்பருத்தியிடம் வருத்தப்படுவாள். சரியாக வாடகை கூட தர முடியாத நிலையில் ஆறு மாதத்திற்கு ஒரு வீடு என்று குடும்பமே இடம் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் அவளால் எப்படி செம்பருத்திக்கு உதவ முடியும்?
“பேசாம காலேஜில் சேர்ந்து படியேன். ஹாஸ்டலில் சேர்ந்துக்கோ. உன் செலவுக்கு வேணும்னா வீட்டை வாடகைக்கு விடு. அதுவும் கூட இடமாற்றம் தானே”
“அந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு… எனக்கு லீவு விட்டால் எங்க போவேன்?”
ஜலப்பிரியாவிற்கு கண்களில் நீர் வந்தது “என்னடி இப்படி சொல்ற… உன்னை என் வீட்டில் வச்சுக்க முடியாது. என் சூழ்நிலை அப்படி. ஆனால் நீ வீட்டுக்கு வந்தா ஒரு நாலு நாள் பாத்துக்க மாட்டேனா?”
“ஏய், நிலைமை புரியாம பேசாதே ப்ரியா. எனக்கு துணை இல்லைன்னு தெரிஞ்சு வாடகை சரியா தரலைன்னா எப்படி போய் கேட்க முடியும்? லீவுன்னா ஒரு வாரத்தில் முடிஞ்சு போற விஷயமா வருஷாவருஷம் பண்டிகை, பரீட்சை லீவுன்னு ஏகப்பட்டது இருக்கே. அதுக்கெல்லாம் உங்க வீட்டுக்கு வர்றது சரி பட்டு வராதுடி. அதெல்லாம் யோசிச்சுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்”
“சரிடி, விளம்பரத்தில் பார்த்த வேலை எப்படி உனக்கு பொருத்தமா இருக்கும்னு நினைக்கிற?”
“அதில் கேட்டிருக்குற தகுதிகள் எல்லாம் எனக்கு இருக்கே”
“இருக்குதான் ஆனால் அந்த வேலை இங்க பக்கத்தில் எங்கேயும் இல்லையே…”
“வேற எங்க?” திகைத்தாள் செம்பருத்தி.
“அன்னைக்கு நம்ம பார்த்த அந்த பேப்பர் கேரளா எடிஷன். கேரளாவில்தான் எங்கயாவது இருக்கும்”
கேரளமா? யோசித்தாள்.
“எங்க இருந்தாலும் நான் போறேன். என்னை எவனும் எதுவும் செய்ய மாட்டான்”
“இது அசட்டுத் துணிச்சல். தப்பு செய்றவனுக்கு ஒரு தூணுக்கு புடவை சுத்தினாலே போதும். ஒரு மனுஷனுக்கு அழகைத் தவிர கண்ணு, கிட்னி, இதயம்னு எத்தனையோ உறுப்புகள் இருக்கே. எல்லாத்துக்கும் மேல உயிர். அதுக்கு சேதாரம் வந்துறாம இருக்கணும். ”
“இல்ல ப்ரியா. இது வக்கீலுக்குத் தெரிஞ்ச இடமாத்தான் இருக்கும். அதனாலதான் அவரோட நம்பரைத் தொடர்பு எண்ணா தந்திருக்காங்க. அவருக்கு தெரிஞ்ச இடம்னா எனக்கும் பாதுகாப்பா இருக்கும்னு நம்புறேன்”
“அப்ப அவர்கிட்ட முதல்ல பேசு. மத்ததை பிறகு முடிவு செய்யலாம்”