Skip to content
அதன் பின் நாட்கள் வேகமாக ஓடின. வக்கிலிடம் பேசி, தனக்கு அந்த விளம்பரத்தில் இருக்கும் வேலையில் தோன்றிய ஆர்வம் பற்றியும், அந்த வேலை தனக்கு பொருத்தமாக இருக்குமா என்றும் விசாரித்தாள்.
அவருக்கு திகைப்பு தோன்றினாலும் இந்த வேலை… அதற்கு அவர்கள் சொல்லி இருந்த நிபந்தனைகள்? இவை எல்லாம் அவருக்கு உடனடியாக பதில் சொல்ல விடாமல் தடுத்தன. செம்பருத்தியின் நிலையில் அவள் மனம் மாறி வேறு இடம் செல்வதே நல்லது என்று மனதை தேற்றிக்கொண்டார். அவள் இங்கிருந்தால் இருக்கும் அந்த ஓட்டு வீட்டையும் பிடிங்கிக் கொள்வார்கள். அது மட்டும் காரணமல்ல.
செம்பருத்தியின் தந்தைக்கு என்ன ஒரு உள்ளுணர்வோ தெரியவில்லை ஓட்டு வீட்டைத் தவிர செம்பருத்தியின் சம்பளத்தில் ஒரு சிறு தொகையைப் பிடித்தம் செய்து ஒரு காலி மனை ஒன்று வாங்கிப் போட்டிருந்தார்.
அவளது பெயரில் ரிஜிஸ்டர் செய்துவிட்டு, அத்தையிடமும் குடும்பத்தினரிடமும் பிறகு சொல்லிக் கொள்ளலாம். இப்போதைக்கு யாரிடமும் சொல்லாதே என்றும் சொல்லி இருந்தார். என்னவோ கடைசி காலத்தில் அவருக்கு இறைவன் அறிவுறுத்தி எல்லாவற்றையும் வழித்தெடுத்து அடுத்தவர்களுக்கு கொடுத்துவிடாதே. உன் மகள் ஒருத்தி மட்டுமே உன்னிடம் உண்மையாக அன்பு செலுத்தும் ஒரே ஜீவன் என்று சொல்லி இதனை மறைக்க செய்தார் போலும்.
இப்போது இவருக்குக் கிடைத்த தகவலின்படி அந்த மனைக்கு அருகில் இருக்கும் நிலத்தில் ஒரு தொழில் நிறுவனம் தொடங்க இருக்கிறார்கள். அதற்கு ஏகப்பட்ட ஏக்கர்கள் தேவைப்படுகிறது. இவளது நிலமும் வாங்கியதை விடப் பலமடங்கு விலைக்குப் போகும்.
இந்தப் பெண்ணிடம் கொள்ளையடிக்க இன்னமும் இருக்கிறது என்று தெரிந்தால் அதனைப் பறிக்க ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு வருவார்கள். இவளோ உணர்ச்சிக் குவியலாக இருக்கிறாள். ஏதாவது செய்து பொல்லாதவர்களிடமிருந்து தப்பிக்க செய்ய வேண்டும் என்றே நினைத்தார். அவளே இந்த வேலையைப் பற்றிக் கேட்கவும் அவளைப் பாதுகாப்பாக காப்பது முக்கியம். இந்த வேலை அதற்கு சரியான தேர்வே.
“சரிம்மா, இந்த வேலைக்கு போட்டோவோட விண்ணப்பம் செய்யணும். விண்ணப்பப் படிவத்தை உனக்கு அனுப்புறேன். நிரப்பி, உன்னோட விலாசத்தையும், என்னோட பெயரையும் குறிப்பிட்டு நான் சொல்ற ஈமெயில் அட்ரெஸ்ஸுக்கு அனுப்பிடு. அவங்க பரிசீலிச்சுட்டு முடிவை சொல்லுவாங்க”
“அப்ப நீங்க ரெகமெண்ட் பண்ண மாட்டிங்களா சார்”
“ஈமெயில்ல என்னோட பெயரைக் குறிப்பிடும்மா… அவங்க என்னைக் கூப்பிட்டுக் கேட்டால் கண்டிப்பா உன்னை சிபாரிசு செய்றேன்”
“நன்றி சார்”
அன்று மாலையே விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, கடையில் ஓரிடத்தில் சுவரின் முன்னர் நின்று கொண்டு ஜலப்ரியாவை போட்டோ எடுக்க வைத்து, விண்ணப்பத்தில் இணைத்து அனுப்பினாள்”
“ஒருவேளை உனக்கு இந்த வேலை கிடைச்சுடுதுன்னு வச்சுக்கோ… அடுத்து உன்னோட குறிக்கோள் என்னவா இருக்கும்”
“கிடைச்ச வேலையை ஒழுங்கா செய்யணும். அவ்வளவுதான்”
“அவ்வளவுதானா? சரி, இன்னும் ஒரு வருஷம் கழிச்சு வேலை இல்லை போன்னு சொன்னா என்ன செய்வ?”
“முதல்ல வேலை கிடைக்கட்டும் சொல்றேன்”
இன்டெர்வியூ செல்லும் நாளும் வந்தது. வயது கூடின ஆளாக தெரிய வேண்டுமென்றால் புடவைதான் கட்டவேண்டும். அம்மாவின் புடவைகளில் ஒன்றை சுற்றிக் கொண்டு நேர்முகத் தேர்வுக்குச் சென்றாள்.
அவளது அளவினை விட பெரிதான, நீளக் கைகள் வைத்த ரவிக்கை, அழுது வடியும் நிறத்தில் ஒரு புடவை. அதையும் அங்கும் இங்கும் ஊக்குகள் குத்தி சுற்றி இருந்தாள்.நடக்கும் போது கால்கள் தட்டத் தட்ட ஒரு மாதிரியாக பஸ்ஸில் ஏறி செல்ல வேண்டிய இடத்தை அடைந்தாள்.
நேர்முகத் தேர்வு வக்கிலின் அலுவலகத்தில் தான் நடந்தது. வக்கில் அங்கிருந்தார். அவருடன் சுகுமாரன் என்ற ஒரு நபர். மூன்றாவது ஆள் அவள் ஓரளவு எதிர்பார்த்தவர்தான். காவ்யா தான் அது.
அந்த செய்தித்தாளில் விளம்பரத்தைக் கட்டம் போட்டு வைத்ததைப் பார்த்ததுமே இது போன்ற வேலைக்கு போக வேண்டிய நிலமை காவ்யாவிற்கு இருக்காது. ஆனால் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறதே என்று நினைத்திருந்தாள்.
அப்படி காவ்யா தந்திருந்த விளம்பரமாக இருந்தால் முதல் சந்திப்பிலேயே பிடிக்காமல் போன தனக்கு இந்த வேலை கிடைக்க ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்பதும் அவளுக்கு மிக நன்றாகவே தெரியும். இருந்தும் நேர்முகத் தேர்வு வரைக்கும் வந்ததற்கு தனக்கு தைரியம் அதிகம்தான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அவள் கடினமாக இருக்கும் என்று எண்ணிய வாறே நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ள கேள்விகள் அனைத்தும் சுலபமாகவே இருந்தது. இனிப்புக் கடையில் வேலை பார்த்த அனுபவம் அவளுக்கு கை கொடுத்தது எனலாம். சுகுமாரன் தன்மையாகவே கேள்வி கேட்டார். பலதரப்பட்ட மனிதர்களையும் முக்கியமாக கோபம் காட்டும் மனிதர்களையும் எப்படி சமாளிப்பாள் என்று பல கேள்விகள் கேட்டார்.
“எனக்கும் கோபம் வரும், ஆத்திரம் இருக்கும். எங்களை மரியாதை குறைவா நடத்த உங்களுக்கு உரிமை இல்லைனு சொல்லத் தோணும். ஆனாலும் சுவீட் கடைல வேலை பாக்குற எங்களுக்கு சுவீட்டா பேசவும் தெரியணும். அவங்க காரமாவோ கசப்பவோ பேசினாலும் நாங்க சுவீட்டாவே பதில் சொல்லுவோம்” என்று ஆரம்பித்து அவள் சொன்ன பதிலில் அவருக்கு வெகு திருப்தி.
அவளை வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களிடம் ஆலோசித்தார்.
“எனக்கு இந்தப் பொண்ணு செம்பருத்தி பொருந்தி வருவான்னு தோணுது. நீங்க என்ன நினைக்கிறிங்க” என்று மற்றவர்களிடம் கேள்வி கேட்டார் சுகுமாரன்.
“நல்லா யோசிச்சுட்டிங்களா. ஏன்னா இந்தப் பொண்ணுக்கு நான்தான் கிட்டத்தட்ட கார்டியன் மாதிரி. அவளோட அம்மா அப்பா கூட இல்லை”
மெலிதாக நக்கல் சிரிப்பு சிரித்தாள் காவ்யா “அதுதான் அவளுக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட். என்ன நடந்தாலும் ஏன்னு கேட்கக் கூட ஆள் இல்லாதவ”
வக்கில் சற்று உஷ்ணமான குரலில் “நான்தான் அவளுக்கு பாதுகாவலர் மா. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் தட்டிக் கேட்பேன்”
“ச்சு … காவ்யா சிறுபிள்ளைத்தனமான பேச்சு இது. வக்கில் சார் உங்களுக்கே தெரியும் அது அப்படி ஒண்ணும் ஆபத்தான வேலை இல்லை. ஆனால் கத்தி மேல நடக்குற மாதிரி ஜாக்கிரதையா செய்ய வேண்டிய வேலை. அதுக்கு இந்த செம்பருத்தியை விடப் பொருத்தமானவங்க யாராவது இந்த நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தா சொல்லுங்களேன் பார்ப்போம்”
இதற்கு அவர்களால் பதிலே சொல்ல முடியவில்லை. இன்று மட்டும் இல்லை இதற்கு முன்னர் நடத்திய தேர்வில் கூட யாரும் வரவில்லை. இப்போதைக்கு செம்பருத்தியைத் தவிர வேறு யாரும் இந்த வேலைக்குப் பொருந்தி வர மாட்டார்கள்.
error: Alert: Content selection is disabled!!