நட்சத்திரா 7 -2

 

அவன் நண்பர்கள் கலகலப்பாகத் தம்மை அறிமுகம் செய்தபடி கரம் நீட்டினார்கள். புன்முறுவலோடு நின்று அறிமுகமாகிக் கொண்டவள்,பொரிக்கப்போட்ட ரோல்ஸை காரணம் காட்டி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். 

“சுட சுட ரோல்ஸ் ஒண்டு நான் எடுக்கலாமா கல்யாணி?” என்று, ஆங்கிலத்தில் கேட்டபடி பின்னால் வந்திருந்தான், சுனிமல். 

எடுக்கலாம் என்பதாகத் தலையாட்டிவிட்டு வேலையைப் பார்த்தாள், அவள். அவனோ, ஸ்ஸ் என்றபடி சூட்டு ரோல்ஸ் மட்டும் எடுக்காது, நீங்க சிங்கிளா மிங்கிலா கல்யாணி என்ற ஆராய்ச்சியில் வேறு இறங்கிவிட்டான். 

காதே கேளாத பாவனையில் எத்தனைக்கு நிற்பது? விடாக்கண்டன் நான் என்று அவனும் அவ்விடத்தில் வேரோடி நின்று வளவளத்துக்கொண்டு நின்றான். கல்யாணியின்  நெருப்புப் பார்வை பாய்ந்தது டேமியனை நோக்கித்தான்.

அங்கு நின்றபடியே என்னவென்று விசாரித்தவனுக்கு நண்பன் மனம் பற்றித் தெரியாதா என்ன ? இருந்தாலும் அசையவில்லை. அங்கிருந்தே, கடைக்கண் பார்வை  இவளை நோக்கி அப்பப்போ வந்தாலும் தன் வேலையில் கவனமாக இருந்தான்.

 இங்கோ, பொரித்து விட்டு உள்ளே சென்றாலும் பின்னால் வருவேன் என்றகணக்கில் அறுத்தெடுத்தான், சுனிமல். தன்னைப்பற்றி ஆதியோடு அந்தமாகச் சொல்லியும் இருந்தான். மூன்று அக்காக்களாம். போன வருடம் தான் மூன்றாவது அக்காவின் கல்யாணம் முடிந்ததாம். தாய் தந்தை வசிக்க வீடும் கட்டிக் கொடுத்துவிட்டானாம். அடுத்து, அவன் மனம் கவர்ந்த பெண்ணைக் கலியாணம் செய்வது மட்டும் தானாம். 

சிலோன் டேஸ்டில் உன்னை அடிக்கடி கண்டிருக்கிறேன். உன் அம்மாவுக்கு என்னை நன்றாகவே தெரியும். அநேக காலைகளில் உன் அம்மா கையால்தான்  உண்பேன் என்றவன், அவள் பற்றி அறிய ஆவலாக இருப்பதை மறைக்கவில்லை. உன்னை எனக்குப் பிடித்திருக்கு என்பதை மறைமுகமாகத் தெளிவாகவே உணர்த்தினான், சுனிமல். 

மொத்தத்தில், உன்னைச் சந்திக்கும் நாளுக்காகக்  காத்திருந்தேன் என்றும் சொல்லிவிட்டான். 

“நான் விளையாட்டுக்குக் கதைக்கிறன் எண்டு நினைச்சீங்கள் எண்டா, உங்கட நண்பன் டேமியனைக் கூப்பிட்டுக் கேட்டுப் பாருங்க.” என்றும் சொல்லிவிட்டானா?

அதற்குப் பிறகும் அவனைத்  தன்னிடம் அறிமுகம்  செய்து வைத்திருக்கிறானே என்று, டேமியனில் எக்கச்சக்கக்  கோபம் அவளுக்கு. 

உன்னுடைய  கதை பேச்சு எதையும் நான் ரசிக்கவில்லை என்று செய்கையால் உணர்த்தியவள், மரம் போல் நின்றவனை நேரே பார்த்தாள்.

 “என்ர தனிப்பட்ட விசயங்கள உங்களோட கதைக்க, பகிர்ந்துகொள்ள நான் விரும்பேல்ல. எக்ஸ்கியுஸ் மீ!” என்ற வேகத்தில், பொரித்த ரோல்ஸ்களோடு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

சுனிமல் முகம் தொங்கிவிட்டது. அடிவாங்கிய மனம் கோணிக்கொண்டது. அவனுடைய ஊரில் அவன் சிறு தலையாட்டலுக்கு எத்தனை பேர் காத்திருக்க, தனக்குப் பிடித்தவள் இப்படிப் பொருட்டாக நினைக்காது கதைத்துவிட்டாளே! 

சுனிமலின்  நண்பர்களுக்கு அவன் மனம் நன்றாகத் தெரியும். அவன் ஆவலோடு சென்று கதைக்க கதைக்கக் கல்யாணி வினையாற்றாது நின்றதையும் வெடுக்கென்று உள்ளே சென்றதையும்   பார்த்துக்கொண்டுதானே நிற்கிறார்கள். சுனிமலுக்கு, அவர்களைப்  பார்க்கவே பெரும் சங்கடமாக இருந்தது. சமாளித்தான். அது கட்டாயமும் கூட. மெல்லத் திரும்பி அவர்களைப் பார்த்தான். அங்கிருந்து கேள்விகள் சைகைகளாக  வந்தன. ஒரே பதிலாக, கட்டைவிரலைக் கவிழ்த்துக் காட்டினான். அதேவேகத்தில்  சென்று மதுக்கோப்பையை கடகடவென்று நிறைத்து அப்படியே வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டான். 

உள்ளே சென்ற மது கோபமாக எண்ண வைத்தது. கல்யாணி இல்லையோ சுனந்தா. நாங்களாகப் போனால் இப்படித்தான் தலையில் கொம்பு முளைத்த கணக்கில் நிற்பாள்கள். வேற்று இனமாக இருந்தும் விருப்பத்துக்குத்  தலைசாய்க்க நினைத்த எனக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும். தன்னில் தானே மிகவும் எரிச்சல் கொண்டான், அவன்.

இத்தனைக்கும் அவன் இத்தாலி நாட்டுக்  கடவுச் சீட்டு வைத்திருக்கிறான். ஒற்றைப் படுக்கையறையே என்றாலும் சொந்தமாக வீடு உண்டு. அவள்தான் இன்னமும் லோங் டேர்ம் விசாவில் இருக்கிறாள். டேமியனின்  தோட்ட வீட்டில் இருந்து கொண்டு, ‘இதில நினைப்பு மட்டும் பெரிசு’ என்று, மனத்துள் கல்யாணியை ஏசித்  தீர்த்தவனுக்கு, இவ்வளவு  எரிச்சலையும் மீறி அவளை, அவள் அமைதியை, குளிர்ந்த நிலவு போன்ற தோற்றத்தை, எப்போவாவது எட்டிப்பார்க்கும் முறுவலை, ஒரு மெல்லிய ஹெயார் பாண்ட் பிடியில் அடங்க மறுத்துப் பறந்து திரியும் நீண்ட சிகையை என்று எல்லாமே பிடித்திருக்கிறதே!

 சரி, ஒரே ஒரு தவிர்ப்புக்கு இப்படி ஒதுங்கி வந்து விடுவியா சுனிமல்? ஒரு வருடத்துக்கும் மேலாக விரும்புகிறாய். இன்னொரு முறை முயன்று பார் என்று  முடிவெடுத்தபின்னர் மெல்ல மெல்ல மதுவை உறிஞ்சியபடி நண்பர்களோடு கலைகலத்தான்.

உள்ளே சென்ற கல்யாணியின் சிலமன் இல்லை. 

பார்த்து வருவோமே என்று வந்தான், டேமியன். சமையலறையில் தான் நின்றாள். சிற்றுண்டி வகைகளை அடுக்குத் தட்டுகளில் நேர்த்தியாக வைத்துக்கொண்டு  நின்றவள், தன்னருகில் வந்து நின்ற டேமியன்  முகத்தையும் பார்க்கவில்லை. 

“கல்யாணி…” தொண்டயைச் செருமிக்கொண்டு அழைத்தான்.

அப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை. “அவன்…அதான் சுனிமல், உங்கட  அம்மாட்டக் கதைச்சிருக்கிறான்.”என்றதும் விசுக்கென்று திரும்பி, அவன் முகத்தில் பார்வை பதித்தாள். வாய் திறக்கவில்லை.

“உங்களப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லியிருக்கிறான். சுமதி அம்மா என்ன சொல்லுறது எண்டு தெரியாம நிற்கிறா. ஆனா, அவாக்கு  நல்ல விருப்பம். சிங்களப்பெடி எண்ட ஒண்டுதான் , மற்றும்படி அருமையானவன். அதுக்கு நான் பொறுப்பு. இதெல்லாம் தெரிஞ்ச பிறகு என்னால அமைதியா இருக்க ஏலேல்ல. நேரில வந்து கதைச்சுப் பார் எண்டனான். அவனுக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும்  ஒரு நண்பனா, நல்லது நடந்தா சந்தோசப்படுற மனுசனா அப்பிடிச் சொன்னன்.” அமைதியாகச் சொல்லிக்கொண்டு வந்தவன், அவள் விழிகள் தளும்பி வழியவும்  பதறிப்போனான்.

“உண்மையாவே அவன் நல்லவன், கல்யாணி. பிழையா ஏதாவது கதைச்சவனா என்ன? சொல்லுங்க கல்யாணி?”பதற்றத்தோடு கேட்டான். அவள் எங்கே சுனிமல் கதைத்தவற்றை நினைத்தாள்?

பல வருடங்கள் பின்னோக்கிச் சென்ற மனம் சூர்யாவைச் சுற்றி வந்தது. அவள் நின்ற வீட்டு  அன்ரியிடம் தன்  விருப்பைச் சொல்லிவிட்டுப்  பதிலுக்குக்  காத்திருப்பதாகச் சொன்ன கணத்தில் சென்று நின்றாள், கல்யாணி.

 அன்று, அவனோடு குடித்த தேநீர்ச் சுவை வேறு, நாக்கில் தன்னிருப்பை உணர்த்தி நின்றது. மறக்காதிருக்கும் சூர்யாவின் இதமான அருகாமை, இழப்பின் வீரியத்தை எப்போதும்  போலவே முகத்தில் அடித்து உணர்த்தியது. 

வெடித்துக் கிளம்பிய விம்மலோடு, “அந்தாள்… ஒண்டும் சொல்லேல்ல. நான்… ஒரு பத்து நிமிசத்தில… வாறன்.” திக்கியபடி சொல்லிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக தங்கள் வீடு நோக்கிச் சென்றாள், கல்யாணி.

error: Alert: Content selection is disabled!!