“இதெல்லாம் சந்தோசமான விசயமாடா? நோய்நொடி வந்து கஷ்டப் படும்போது தெரியும்”
“விடுடா! உடம்பைப் பாதுகாத்து மட்டும் என்ன குடும்பம் குட்டி என்று சந்தோசமாகவா வாழப் போகிறோம்? சாகும் வரைக்கும் இப்படி எவனோ ஒருத்தன் ஏவும் வேலைகளைச் செய்து செய்தே ஓடாய்த் தேயப் போகிறோம். அதற்கு எதற்கு உடம்பைப் பாதுகாத்து.” என்றான் சுகந்தன் விரக்தியோடு.
இவனுக்கு என்ன ஆகிற்று என்று கேள்வியாக அவனைப் பார்த்தான் ரஞ்சன். இவர்களோடு கதைத்தால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்றுதான் அவன் இங்கு வந்ததே! சுகந்தனோ இப்படிச் சொல்கிறான்.
“என்னடா..? ஏன் இப்படி எல்லாம் சொல்கிறாய்?”
“பிறகு என்ன மச்சான்? எங்கள் கோலத்தைப் பார். உடம்பில் அழுக்கு. உடுத்தியிருக்கும் உடையில் அழுக்கு. இங்கு இருக்கும் அழுக்கோடு ஒரு அழுக்காகத்தான்டா கிடக்கிறோம். யாருமே ஒரு பொருட்டாக நம்மை மதிப்பதே இல்லை. ஒரு பெண் கூட நம்மை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. ஏன்டா, இந்த வேலை செய்தால் நாங்கள் மனிதர்கள் இல்லையா? எங்களுக்கு மனது இல்லையா? அல்லது அதில் ஆசைதான் வராதா? போ மச்சான். எல்லாமே வெறுப்பா இருக்கடா. படிச்ச பெண்கள் எங்களைத் திரும்பியே பார்க்கமாட்டார்கள். படிக்காதவள் ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டாள். பிறகு எங்கேடா சந்தோசமாக வாழ்வது. கனவில் மட்டும் தான்டா நாங்கள் வாழ்வது. இந்த டயர், டியூப், சைக்கிள், வண்டி என்று இதுகளோடு நம் வாழ்க்கை கழியப் போகிறது. இதில் உடம்பைக் காத்து எதைக் கிழிக்கப் போகிறோம்?” என்றான் சுகந்தன் வெறுத்த குரலில்.
ரஞ்சனின் பார்வை மெல்லிய அதிர்ச்சியோடு ஜீவனைப் பார்த்தது. அவனும் எங்கேயோ வெறித்தபடி டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தான். அந்தப் பாவனையே அவனும் அதைத்தான் நினைக்கிறான் என்று காட்டியது.
சுகந்தனிடமே மீண்டும் திரும்பி, “ஏதும் பிரச்சினையாடா? திடீரென்று எதற்கு இப்படிக் கதைக்கிறாய்?” என்று கேட்டான்.
“திடீரென்று எல்லாம் ஒன்றும் இல்லையடா. பார், எங்களுடைய பதினாறு வயதில் இங்கே வேலைக்கு வந்தோம். கிட்டத்தட்ட ஏழு வருஷமாக வேலை செய்கிறோம். ஏதாவது முன்னேற்றம் இருக்காடா வாழ்க்கையில்? ஒன்றுமே இல்லை. இப்படியே நாள் போகுது மச்சான். வயதும் போகுது. இன்னும் எத்தனை நாளைக்குடா?” விரக்தியும் சலிப்பும் கலந்து கிடந்தது அவன் குரலில்.
“என்றாவது ஒருநாள் விடிவு வரும் என்று தெரிந்தாலாவது அந்த நம்பிக்கையில் வாழலாம். இது ச்சு!”
அதற்குமேல் எதையும் கேட்க ரஞ்சனாலும் முடியவில்லை. மூன்று வருடங்கள் வேலை செய்தே மூச்சு முட்டிப் போய் நிற்கிறான் அவன். அப்படியானால் அவர்களின் நிலை?
அதுவரை தற்காலிகமாக தன் பிரச்சினையை மறந்திருந்தவனின் நினைவுகள் காலை நடந்தவைகளை மீண்டும் அசைபோட கண்கள் சிவந்தது. அவனின் தன்மானத்தை அல்லவா சீண்டிப் பார்த்துவிட்டாள் அவள்!
அவன் முகத்தையே பார்த்திருந்த சுகந்தன், “என்னடா..?” என்று இப்போது அவனிடம் கேட்டான்.
என்னவென்று சொல்வான்? தலையை ஒன்றும் இல்லை என்பதாக அசைத்தான்.
இப்போது ஜீவனின் பார்வையும் அவனைக் கேள்வியாக ஏறிட, “வேலையில் ஏதாவது பிரச்சினையாடா..?” என்று ஊகித்துக் கேட்டான் சுகந்தன்.
“ம்.. வேலை போய்விட்டது”
“என்னது? ஏன்டா? ஆனால் நீ வேலையை விடமாட்டாயே?” என்று நண்பனைப் பற்றி முழுதாக அறிந்திருந்த ஜீவன் கேட்டான்.
கோபமாக நிமிர்ந்து, “நான் எங்கேடா விட்டேன். அவர்களாக என்னை வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள்.” என்றான் ஆத்திரத்துடன்.
“அப்படி என்ன நடந்தது? நீ எந்தப் பிழையும் செய்திருக்க மாட்டாயே.”
“அது உனக்குத் தெரிகிறது. ஆனால் அந்த அப்பனுக்கும் மகளுக்கும் தெரியவில்லையேடா.” என்றான் குமுறலாக.
“மகளா? யாருடா அது?”
“திமிர்பிடித்தவள்!” என்று பல்லைக் கடித்தவன், கண்கள் சிவக்க அவமானத்தில் சிவந்த முகத்தோடு நடந்ததைச் சொன்னான்.
அதைக் கேட்டதும் பொங்கிவிட்டார்கள் அவன் உயிர் நண்பர்கள்.
“அவளைச் சும்மாவாடா விட்டாய்? கன்னம் பழுக்கத் திருப்பிக் கொடுக்காமல் வந்துவிட்டாயேடா..” என்றான் சுகந்தன் ஆத்திரத்தோடு.
“எழும்பு மச்சான். மூன்று பேரும் போய் அப்பனுக்கும் மகளுக்கும் நல்ல பாடம் கற்பித்துவிட்டு வரலாம்..” என்று எழுந்துவிட்டான் ஜீவன்.
இது எதற்கும் அசையாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான் ரஞ்சன்.
“என்னடா அப்படியே இருக்கிறாய். வாடா போகலாம்..” என்ற சுகந்தனை நிமிர்ந்து பார்த்து, “போய்?” என்று கேட்டான் ரஞ்சன்.
“போய் என்ன போய்? போய் அப்பனுக்கும் மகளுக்கும் நாலு போட்டுவிட்டு வரலாம்.”
“பிறகு?” அப்போதும் சுருக்கமாகக் கேட்டவனின் கேள்வியில் சுகந்தனுக்கு எரிச்சல் வந்தது.
“என்னடா கேள்வி கேட்கிறாய்? பிறகு என்ன பிறகு?”
“கேட்காமல்? இவ்வளவு நாட்களும் கூலிகளாகத்தான் இருந்தோம். இனி என்ன ரவுடிகளாக மாறவேண்டுமா?” என்று நிதானமாகக் கேட்டான் ரஞ்சன்.
“அதற்காக உன்னை அடித்தவளைச் சும்மா விடச் சொல்கிறாயா?”
அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை அவன். அதற்கிடையில் அவன் கைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தால் அழைப்பது கண்ணன் என்று விழுந்தது. அழைப்பை ஏற்காமலேயே சட்டைப் பைக்குள் கைபேசியை மீண்டும் போட்டான்.
“யாருடா?” என்றான் ஜீவன்.
“கண்ணன் அண்ணா..”
“என்னவாம்?
“யாருக்குத் தெரியும்?” என்றான் தோளைக் குலுக்கி.
சற்று நேரம் அமைதியில் கழிய, “இனி என்ன செய்யப் போகிறாய்..?” என்று கேட்டான் ஜீவன்.
“வேறு வேலைதான் தேடவேண்டும்.” என்றான் மரத்த குரலில்.
அவன் வேதனை அவர்களுக்குப் புரிந்தது. இனி ஒவ்வொரு இடமாகச் சென்று வேலை கேட்கவேண்டுமே. கேட்டாலும் கிடைக்க வேண்டுமே! அப்படிக் கிடைத்தாலும் நல்ல சம்பளம் கிடைக்குமா?
இதை எல்லாம் யோசித்த ஜீவனுக்கு சித்தாராவின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “அவளை என்னவாவது செய்ய வேண்டும் மச்சான். எவ்வளவு திமிர் இருந்தால் உன்னை அடிப்பாள். அவளை!” என்று பல்லைக் கடித்தான் அவன்.
அதற்கும் ரஞ்சன் அமைதியாக இருக்க, “ஏன்டா, எங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறதே. நீ பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்கிறாயே. உனக்கு சூடு சுரணையே இல்லையா?” என்று கேட்டான் சுகந்தன்.
ஒரு சின்னச் சிரிப்பை விரக்தியோடு சிந்தியவன், “அவளை எப்போது வேண்டுமானாலும் என்னவும் செய்யலாம். ஆனால், எனக்கு இப்போது உடனடியாக வேலை வேண்டுமேடா..” என்றவனின் கைபேசி மீண்டும் அடித்தது.

