இணைபிரியா நிலை பெறவே 23

அத்தியாயம் 23

ஒரேயொரு நாள். அவன் வாழ்வில் வந்தே இருக்கக் கூடாத அந்த நாள். அன்று ஒரு கணம் கட்டுப்பாட்டை இழந்து வெடித்ததற்கான தண்டனையை மூன்று வருடங்கள் கடந்தும் அனுபவிக்கிறான்.

அவளின் இதயத்தை எரித்தானாமே. அவனுக்கு இப்போது அவனையே எரிக்க வேண்டும் போலிருந்தது. அன்பு மென்மையானது என்று யாரோ ஒரு மடையன்தான் சொல்லியிருக்க வேண்டும். அதைப் போன்று வன்மையானது எதுவுமே இல்லை என்பான் சகாயன்.

அவனுக்கும் அவளுக்குமிடையில் இருந்தது கவர்ச்சியும் ஈர்ப்புமாம். அன்பு இல்லையாம். இருந்திருந்தால் அவன் இப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டானாம். அவன் உதட்டோரம் கசப்பான ஒரு முறுவல்.

அவள் மேல் அவனுக்கிருந்த அளவுக்கதிகமான அன்புதான் அவளிடத்தில் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளை வைத்து, அது நிறைவேறாமல் போன கோபத்தில் வெடித்திருக்கிறது என்று அவளிடம் யார் சொல்வது?

அத்தனையும் முடிந்துவிட்டது. காலத்துக்கும் நீதான் என்று சொன்ன அவனே அவன் வாயால் சொல்லிவிட்டு வந்துவிட்டான். ஆனால், உள்ளம் கிடந்து அழுதுகொண்டே இருக்கிறதே என்ன செய்வான்?

“நான் போய் மன்னிப்புக் கேக்கவா? என்னாலதானே எல்லாம்.” இப்போதெல்லாம் அவனையும் தவிர்த்துவிட்டுத் தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் நண்பனைத் தேடி வந்து வினவினான் கிரி.

நிறுத்திவைத்திருந்த பைக்கின் மீதே, தலைக்குக் கீழே கைகளைக் கொடுத்து மல்லாந்து படுத்திருந்தவன் விழிகளைத் திறக்காமலேயே, “எல்லாமே முடிஞ்சுது கிரி. திரும்பவும் எதையாவது ஆரம்பிச்சு வைக்காத!” என்றான் வெறுமையான குரலில்.

கிரியைச் சுருக்கென்று தைத்தது அவன் வார்த்தைகள். திரும்பவும் ஆரம்பித்து வைக்காதே என்றால் இதற்கு முதல் ஆரம்பித்தது அவன் என்பதுதானே பொருள். அதில் இருந்த உண்மையும், அதை அவன் குத்திக் காட்டியதும் சேர்ந்து அவன் வாயை ஒரு கணம் அடைத்திருந்தன. அதற்கென்று பேச்சை இப்படியே விட முடியவில்லை.

“அப்பிடி எப்பிடி மச்சான் விடுறது?” என்று கேட்டான்.

அவள் விட்டுவிட்டாளே. தவறான இடத்தில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டாளாம். சட்டென்று தலையை உலுக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தான். அவனையே பார்த்திருந்த கிரியைக் கவனத்தில் கொள்ளாமல் பைக்கில் புறப்பட்டிருந்தான்.

ஆரபி மட்டக்களப்புக்குப் புறப்பட்டுச் சென்று ஒரு வாரம் முடிந்திருந்தது. அன்று வீடு வந்தவனைக் கலைமகள் கேள்வியோடு ஏறிட்டார். எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான் அவன். சற்று நேரத்தில் வீடு வந்த வினோதினிதான் அனைத்தையும் சொன்னாள். கலைமகளுக்குக் கவலையாயிற்று.

சகாயனைத் தேடிச் சென்று ஆரபியோடு தான் பேசிப் பார்க்கட்டுமா என்று கேட்டுப்பார்த்தார். சகாயன் மறுத்துவிட்டான். நவரத்தினத்துக்கும் மகனை எண்ணிக் கவலைதான். அப்படி என்ன பிடிவாதம் என்று ஆரபி மீது மெல்லிய அதிருப்தியும்.

அவரும் பெண்ணைப் பெற்றவர். அவர் காதுக்கு வந்த வரையில் மகன் செய்தது அவளுக்குப் பெரும் தவறு என்று புரியாமல் இல்லை. ஆனால், மூன்று வருடங்கள் கடந்தும் அதையே பிடித்துக்கொண்டு நிற்பதை ஏற்க முடியவில்லை.

தவறுகள் விட்டு, அதிலிருந்து பாடம் கற்று வாழ்வதுதானே வாழ்க்கை. அவருக்கு இதை இப்படியே விடும் எண்ணமில்லை. அதே நேரத்தில் அவசரப்படவும் விருப்பமில்லை. கொஞ்ச நாள்கள் போன பிறகு அவனோடு பேசுவதாகக் கலைமகளிடம் சொன்னார்.

*****
அவள் பணிபுரியும் அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையில் அமர்ந்திருந்தாள் ஆரபி. அவள் முன்னே ஆடை படர்ந்துவிட்ட தேநீர்க் கோப்பை. பார்வை எங்கோ வெறித்திருந்தது. ஊரிலிருந்து வந்த தினம்தொட்டு இப்படித்தான் இருக்கிறாள்.

அத்தனை காலமும் சுமந்து திரிந்த அவன் மீதான கோபங்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லை. என்னை வேண்டாம் என்றுவிட்டானா என்பதிலேயே நின்றாள்.

இல்லை, அவள்தான் அவனை உதறினாள். அவளுக்கு அவன் பொறுத்தமில்லை என்றாள். அதை ஈர்ப்பு என்றாள். அதெல்லாம் உண்மையானால் வினோ சொன்னது போன்று அவள் உள்ளம் ஆசுவாசமாகியிருக்க வேண்டாமா?

பெரும் தளை ஒன்றிலிருந்து விடுபட்ட உணர்வோடு உற்சாகமாய் அவள் சுற்றித் திரிந்திருக்க வேண்டாமா? இங்கே அப்படி எதையும் காணோமே.

சதா உள்ளம் அழுதுகொண்டே இருந்தது. பார்க்கும் வேலையில் ஈடுபாடில்லை. சுற்றுப்புறத்தில் கவனமில்லை. உணவில்லை, உறக்கமில்லை. மனம் விட்டு யாரிடமும் பேச முடியவில்லை. பைத்தியமாகிவிடுவோமோ என்கிற அளவில் பயந்தாள்.

அபிசா கூட வார இறுதிக்குக் கொழும்புக்கு வரச் சொன்னாள். இவள் போகவில்லை. தன்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று பயம்.

அவனுக்கும் அவளுக்குமிடையில் இனி எதுவுமே இல்லையா? உண்மையாகவே எல்லாம் முடிந்துவிட்டதா? அவன் வேறு ஒரு பெண்ணுடனும் அவள் வேறு ஒரு ஆணுடனும்… அதற்கு மேல் யோசிக்க முடியாமல் கண்ணீர் வழிந்துவிட வேகமாக துடைத்துக்கொண்டாள்.

நமக்கு மிக மிகப் பிடித்த ஒன்று நம்மை விட்டுப் போகாது என்கிற வரையில் இருக்கிற அலட்சியம், இனி அது நமக்குச் சொந்தமில்லை என்றதும் அப்படியே மாறி, என்ன செய்தாவது நம் கைக்குள் பொத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு வெறி வருமே. அந்த நிலையில் இருந்தாள் ஆரபி.

அன்றைய நாளையும் பணியிடத்தில் எப்படியோ கடத்திவிட்டுப் புறப்பட்டாள். அலுவலகத்திலிருந்து அரை மணி நேரப் பயணத் தூரத்தில் அமைந்திருந்தது அவளின் அறை. பஸ் பிடித்துப் போவதை நினைக்கவே உடலும் உள்ளமும் துவண்டன.

பேருந்து நிலையம் இருக்கும் திசையை நோக்கி அவள் நடக்க ஆரபிக்க, “ஆரபி!” என்று கேட்டது ஒரு குரல்.

இது அவன் குரல். அவள் உள்ளம் ஆர்ப்பரித்துச் சொல்ல வேகமாகத் திரும்பி குரல் வந்த திசையை நோக்கினாள். அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவன்தான். ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு பக்கமாக அமர்ந்திருந்தான்.

அவன் முன்னே சென்று நின்றவள் உள்ளம் ஒரு நிலையாய் இல்லை. வந்துவிட்டானா, அவளைத் தேடி வந்துவிட்டானா என்று ஆர்ப்பரித்தது. அது கண்ணீர்ச் சுரப்பிகளைத் திறந்துவிட, பேச இயலாமல் அவனையே பார்த்து நின்றாள்.

அவன் பார்வையும் அவளிலேயேதான். அவனும் வார்த்தைகளைச் சரியாகக் கோக்க முயல்கிறான் என்று விளங்க அவளுள் ஒரு வலி. என்றுமே பேச யோசியாதவன் ஆயிற்றே அவன்.

அவள் தவிப்புடன் பார்த்து நிற்க, “இனி எனக்கும் உனக்குமிடையில ஒண்டுமே இல்லையா ஆரபி?” என்று கேட்டான் அவன்.

அவளுக்கு மூக்கு விடைத்து இதழ்கள் நடுங்கின.

“அப்பிடித்தான் நீயும் சொன்னாய். நானும் சொன்னனான். எண்டாலும் இன்னொருக்கா கேட்டுக்கொண்டு போவம் எண்டு வந்தனான்.”

வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டாலும் வழியும் கண்ணீரையும் நடுங்கும் இதழ்களையும் அவளால் கட்டுப்படுத்தவே இயலவில்லை. சுற்றவரா அவர்கள் அலுவலகத்து ஆள்களின் நடமாட்டம் இருக்கிறது என்று புரிந்தாலும் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை.

“பொருத்தமில்லாத இடத்தில மனதை விட்டதால வாற கண்ணீரா இது?” வழியும் அவள் கண்ணீரையே பார்த்து வினவினான்.

என்ன சொல்வாள்? என் உயிரைப் பிரிந்து நிற்கும் வலியைத் தாங்க இயலாமல் உகுக்கும் கண்ணீர் என்றா?

இமைக்காது அவளையே பார்த்தான். அவளிடமிருந்து பதிலே இல்லை என்றதும், “என்னவோ உன்னைப் பாத்து இதையெல்லாம் கேக்கோணும் மாதிரி இருந்தது. அதான் வந்தனான். வாறன்!” என்று பைக்கில் ஏறி அமர்ந்தான்.

அப்போதுதான் அது புரிய அதிர்ந்துபோனாள். “பைக்லயா வந்தனீங்க?” என்றாள் அந்த அதிர்ச்சி விலகாமலேயே.

“வர எண்டு இருக்கேல்ல. திடீரெண்டு வரோணும் மாதிரி இருக்கவும் வெளிக்கிட்டுட்டன்.”

இவனுக்கு என்ன விசரா என்று பார்த்தாள் ஆரபி. கிட்டத்தட்ட முன்னூறு கிலோமீற்றர். அவ்வளவு தூரம் பைக்கிலேயே வருவது என்பது சின்ன காரியமா என்ன? அப்படி வர வைத்தது அவள் மீதான அன்பா? இமைக்க மறந்து அவனையே பார்த்தாள். என்னவோ அவனைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போலாயிற்று அவளுக்கு.

அவன் பைக்கை உதைத்துக் கிளப்பவும், “எங்க வெளிக்கிட்டீங்க?” என்றாள் வேகமாக.

அவளுக்கு அவனைத் தடுக்க வேண்டும். போக விடக்கூடாது. “வீட்டுக்கு வாங்க.” என்றாள் மீண்டும் தன்னை மீறி.

வேகமாகத் திரும்பிப் பார்த்தான் அவன். அவள் தடுமாறி, “இல்ல அது… களைப்பா இருக்கும் எல்லா. அதான் நான் தங்கியிருக்கிற அறைக்கு வந்திட்டுப் போங்க எண்டு சொன்னனான்.” என்று மெல்லச் சொன்னாள்.

இப்போதும் அவன் பார்வை அவளிலேயே தங்கி நின்றது. இதற்குமேல் என்ன சொல்லி அவனைத் தடுப்பது என்று தெரியவில்லை அவளுக்கு. நெஞ்சு படபடத்தாலும் அவனைப் பாராமல் சென்று, அவன் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள்.

இதை அவனும் எதிர்பார்க்கவில்லை. திரும்பி அவளைப் பார்த்தான். “என்ன பாக்கிறீங்க? உங்கட பைக்ல நான் ஏறக் கூடாதா?” என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

ஒன்றும் சொல்லாமல் பைக்கைக் கிளப்பினான். அவள் வழிகாட்ட அவன் பைக் சென்று ஒரு வீட்டின் முன்னே நின்றது. அது ஒரு இரண்டு மாடிக் கட்டடம். கீழே விசாலமான வீடு ஒன்று இருந்தது. மேலே இவளைப் போன்றவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கவே தெரிந்தது.

வெளிப்புறமாக இருந்த மாடிப்படிகளில் ஏறி, அவள் அறையின் கதவைத் திறந்துவிட்டுத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

உள்ளே அழைக்கிறாள். புரியாமல் இல்லை. ஆனாலும் நின்ற இடத்தை விட்டு அசையாமல் நின்று, “ஆரோ ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர அறைக்க சும்மா கூட நான் வரக்கூடாது ஆரபி.” என்றான் அவளையே பார்த்து.

ஒரு கணம் உதட்டைக் கடித்தாலும், “என்ர அறைக்க நீங்க வரலாம்.” என்றுவிட்டு உள்ளே சென்றாள் அவள்.

தானும் நுழைந்து கதவைச் சாற்றிய கணத்திலேயே அவளைத் தன் அணைப்பினுள் கொண்டு வந்திருந்தான் சகாயன்.

error: Alert: Content selection is disabled!!