Skip to content
“லாதிம்மா ஹனி பொப்ஸ் சாப்பிடுவமா?” மீண்டும் கேட்க, அசிரத்தையாக தலையசைத்தபடி எழுந்தாள்.
“சாப்பிட்டுட்டு அப்பாக்கு எடுப்பம், குஞ்சு வாங்க.” அங்கு கிடந்த சின்ன மேசையில் சீரியல் கிண்ணத்தை வைக்க, வந்தமர்ந்தவள் மளமளவென்று உண்ணத் தொடங்கிவிட்டாள்.
“நான் இத மேல படியில் கொண்டு போய் வச்சிப்போட்டு வாறன், சாப்பிடுங்க.” சாப்பாடு, தேநீர் இருந்த தட்டை எடுத்துக்கொண்டு நகர, “நோ ஸ்வீட்டி நானும் அந்தப் படியடிக்கு வாறன்.” எழுந்தாள் லாதி.
“எங்கட செல்லம் சொன்னா கேட்கோணும்; நான் வீட்டுக்குள்ள போக மாட்டன், வச்சிப்போட்டு ஓடி வந்திருவன்.”
“நானும் தான் உங்களுக்குத் பின்னாலயே நிக்கிறன். அப்பாவப் பாக்கலாம்., ப்ளீஸ்!” சிறுமி கெஞ்சவும் கையில் இருந்த தட்டை வைத்துவிட்டு பிரணவ்வுக்கு அழைத்தாள்.
“கயல்…”
“சாப்பாடும் தேத்தண்ணியும் இருக்கு. குறைநினையாமல் வந்து எடுத்துக்கொண்டு போவீங்களா? லாதி சாப்பிடுறா.” சிறுமிக்கும் கேட்கும் வண்ணமே சொல்லிவிட்டு மறுபுறமாகத் திரும்பினாள்.
“அதுக்கென்ன, இந்தா வாறன்.”
“நான் கொண்டு வரப் பார்த்தன், லாதி தானும் மேலே வரப் போறன் எண்டு நிக்கிறா.” சின்னக்குரலில் சொல்லி விட்டு வைக்க, சில நிமிடங்களின் பின்னால் பேஸ்மென்ட் படிகளில் அரவம் கேட்டது.
“பிரணவ் அங்கிள் வாறார், குடுத்திட்டு வாறன் சாப்பிடுங்கோ!” தட்டை எடுத்துக்கொண்டு நகர முதல், லாதியின் பார்வையில் பட்டான், பிரணவ். கையுறை மாஸ்க் சகிதம் நின்றாலும் அவன் கண்கள் சிறுமியில்.
“அங்கிள்!” எழப் போனவளுக்குக் கைகாட்டிவிட்டு, “சாப்பிடுங்கோ லாதிம்மா, அங்கிள் இங்க தான் நிப்பன், பிறகு கதைக்கிறன் என்ன?” என்றபடி கயலிடம் தட்டை வாங்கியவன், “நீர் சாப்பிடேல்லையா?” அவள் கண்களையே பார்த்தபடி விசாரித்தான்.
தம் திருமணத்துக்குக் கயல் தெரிவித்த மறுப்பின் பின் அடங்கியிருந்த நெருக்கமும் அவள் மீதான விருப்பமும் இப்போது, நம்பிக்கையோடு வளர்ந்து வருவதை பிரதிபலித்து நின்றன, அவன் குரலும் பார்வையும்
அவள் அதை எதையுமே கவனிக்கவில்லை.
“இனித்தான். வேணாம் எண்டு சொன்னாலும் பூபாலன் அண்ணாக்குச் சாப்பிடக் குடுத்திருங்கோ! நீங்களும் சாப்பிடுங்கோ!” என்றுவிட்டு, “ஹொஸ்ப்பிட்டலில இருந்து ஏதாவது கதைச்சவையோ?” தாழ்ந்த குரலில் கேட்டாள்.
ஒரு கணம் அவள் முகத்தில் தரித்து நின்றது, பிரணவ் பார்வை. சட்டென்று பதில் சொல்லவும் வரவில்லை. பதிலை எதிர்பார்த்து நின்றவள் பின்னால் திரும்பி லாதியைப் பார்த்துவிட்டு இவனை ஏறிட்டாள்.
“இன்னும் இல்ல, கொஞ்சத்தால எடுத்துப் பாக்க இருக்கிறம்…வாறன்.” விறுவிறுவென்று சென்று மறைந்தான், அவன்.
சின்னவன் எழ இன்னமும் நேரம் இருக்கவே, லாதியைப் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்துகொண்டவளுக்கு செய்ய எத்தனையோ வேலைகள் இருந்தும் எதிலும் நாட்டம் செல்லவில்லை. மளமளவென்று சாப்பிடும் சிறுமியின் பார்வை மட்டுமல்ல ஒரு கையும் ஐபாட்டில்.
சாப்பிட்டு முடித்த மறுகணமே, “அம்மாக்கும் அப்பாக்கும் பேஸ் டைமில் எடுப்பம் ஸ்வீட்டி.” சொல்லப் போகிறாள்.
காயு வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டதை இவளிடம் எப்படி மறைக்கவியலும் என்றெழுந்த எண்ணம், ‘இப்ப எதச் சொல்லிச் சமாளிக்கிறது? சரி, தகப்பனோட கதை எண்டு விட்டாலும் இப்ப இருக்கிற மனநிலையில அவர் ஒழுங்காக் கதைப்பாரா?’ பதில் தெரியாது குழம்பி நின்றாள் அவள்.
‘எது எப்படியோ இண்டைக்கு நிச்சயம் லாதியைச் சமாளிக்கிறது லேசான விசயம் இல்ல.’ நன்றாகவே விளங்கிற்று.
“ஸ்வீட்டி எனக்குக் காணும்; கொஞ்சம் மிச்சம் இருக்கு, வேணாம் ப்ளீஸ்.” கெஞ்சலாகச் சொன்னபடி எழுந்த லாதி, “அம்மாக்கு எடுப்பமா?” அவளை ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள்.
பதில் சொல்ல முடியாது தடுமாறிய கயல், “தம்பி அருளுறான்.” அயர்ந்து உறங்குபவன் பக்கமாகச் சரிந்தவள் மனம், ‘காயு…காயு’ சத்தமாகவே அழைத்தது.
‘உம்மட ரெண்டு பிள்ளையளுக்காகவும் உம்மையே நினைச்சுப் பைத்தியம் போல நிக்கிற பூபாலன் அண்ணாவுக்காகவும் சரி, நீர் கெதியாகச் சுகமாகி வர வேணும் காயு!” மனதுள் அதட்டல் போட்டவள் விழிகள் நிறைந்திட்டு.
மறுபுறமோ, கயல் சகோதரன் பக்கம் சரிய அவள் அனுமதிக்குக் காத்திராது தாய்க்கு அழைத்துவிட்டாள், லாதி.
மறுபுறம் எடுபடவில்லை என்றதும், “இன்னும் அம்மா எழும்பேல்ல போல ஸ்வீட்டி. அப்பாக்கு எடுக்கிறன்.” சொல்லிக்கொண்டே அழைத்துவிட்டாள். அப்படியே பார்த்திருந்தாள் கயல். திரையில் பிரணவ் தான் தெரிந்தான். “டோய் குட்டி அதுக்கிடையில சாப்பிட்டாச்சா?” என்றவன் கையில் கோப்பிக்கோப்பை.
“சாப்பிட்டிட்டன் அங்கிள், அம்மாக்கு எடுத்தன் தூக்கம் போல. அப்பா எங்க?” பிள்ளை காரியத்தில் கண்ணாக இருந்தாள்.
பிரணவ் அதைக் காதில் வாங்காத பாவனையில் வேறு வேறு கதைகள் கதைத்தான். “தம்பிக்குட்டி இன்னுமா எழும்பேல்ல?” ஒரு புறமாகத் தெரிந்த கயலிலும் பார்வை அடிக்கடிப் படிந்து மீள, கதை வளர்த்தான்.
அவளோ, எல்லாவற்றுக்கும் பதில் சொன்னாலும், “அப்பா எங்க அங்கிள்?” என்றே தான் முடித்தாள்.
“குளிக்கிறார் செல்லம். வெளில வந்தோன்ன எடுக்கச் சொல்லவோ?”
“ஓ! அப்ப வெளில வந்தோன்ன கதைக்கச் சொல்லுங்க.” என்றவள் பார்வை அவளையே பார்த்திருந்த கயலிடம் திரும்பிற்று.
லாதியின் முகம் கூம்பிப் போனதில் கயல் விழிகள் கலங்கிற்று.
‘கண்டறியாத வருத்தம். எத்தின பேர என்ன பாடு படுத்துது.’ மனம் அரற்ற, சிறுமியை அன்போடு அணைத்துக் கொண்டாள்.
அவளுள் அடங்கிவிட்ட சிறுமியின் எண்ணமோ மேல் வீட்டில்.
“ஸ்வீட்டி, நாம இங்க இருக்க வேணாமே! அம்மா அப்பாவை பார்க்க வேணும். நேர்ல.” கண்கள் கலங்கச் சொன்னபடி அவள் நெஞ்சில் சாய்ந்து விட்டாள்.
சிறுமியின் உள்ளுணர்வுக்குத் தாய் வைத்தியசாலை சென்றிருப்பது புரிந்திட்டோ! அந்த வகையில், கடந்த நாட்கள் எல்லாம் இல்லாதபடிக்கு மேலே போவோம் என்று பிடிவாதம் பிடித்தாள். அதையும் இதையும் சொல்லிச் சமாதானம் செய்விக்க முனைந்தாள், கயல்.
இதையெல்லாம் பிரணவ் பார்த்துக் கொண்டிருந்தான் என்றால், அவனருகில் அமர்ந்திருந்த பூபாலன் செவிகளுள்ளும் அவர்களின் பேச்சுக்கள் விழவே செய்தன.
மகளை இனியும் அப்படித் தனியாக விட்டுச் சமாளிக்க முடியும் போல் அவனுக்குத் தெரியவில்லை. அதோடு, காயு வைத்தியசாலைக்குப் போன கையோடு திரும்பி வந்துவிட்டால் பிரச்சினை இல்லை. மகளுக்குச் சொல்லவே தேவையில்லை. அதைவிட்டு…தொடர்ந்து சிந்திக்க முடியாது தலையை அழுந்தக் கோதியவன் பிரணவைப் பார்த்தான்.
“அவையள மேல வந்திரச் சொல்லுவம் என்ன? நாங்க பிளங்கின இடங்கள ஒருக்கா கிளின் செய்திட்டு வரச் சொல்லுவம். இங்கயே கவனமா இருக்கலாம் எல்லா? லாதி இனி…கஷ்டம் பிரணவ். கயல் பாவம், குழந்தையையும் பாக்க வேணும், இனி வேலையும் தொடங்க, சாமாளிக்க மாட்டா!”
அவன் சொல்வது சரிதான் என்றாலும், “கயலுக்கும் வருத்தம் வந்திட்டா எண்டு இருக்கு பூபாலன்.” தயங்கினான் பிரணவ்.
அவனுமே பூபாலன் வீடு சென்று வருவதால் தம் வீட்டில் பேஸ் மென்ட் வாசம் தான். தொற்று நோய் என்று தெரிந்த பின்னும் கவனியீனமாக இருப்பான் ஏன் என்றது அவன் மனம்.
கயல் மீதான அவன் அக்கறை அதன் பின்னணி விளங்கியது பூபாலனுக்கு.
“நீ நினைக்கிறது சரிதான், ஆனா இன்னும் எத்தினை நாளைக்கு எண்டு…” பூபாலன் சொல்லிக்கொண்டிருக்கையில், வைத்தியசாலையில் இருந்து அழைத்தார்கள்.
error: Alert: Content selection is disabled!!