ஆட்டநாயகன் 12.2

இந்தக் குட்டிப் பெண்ணுக்கு என்னால் என்றைக்குமே சிறு தீங்கும் செய்ய முடியாது என்று சொன்னவன் வாழும் காலம் முழுவதும் அவன் இல்லை என்கிற சோகத்துடனேயே வாழும் நிலைக்கு அவளைத் தள்ளிவிட்டதில் என்ன நியாயம் இருக்கிறது?

பேசாமல் போய் அந்த வாங்கிலில் அமர்ந்தாள். அவன் எப்போதும் அமரும் இடம் இன்று வெறுமையாய் இருந்தது. கண்களில் திறந்துவிட்ட நீருடன் அந்த இடத்தை வருடிக்கொடுத்தாள். நெஞ்சிலிருந்து அழுகை வெடித்துக்கொண்டு கிளம்பிற்று.

அப்போது, “மேம், நீங்க ஆதினி மேம்தானே.” என்று தயக்கமும் மரியாதையுமாக வந்து வினவினாள் ஒரு மாணவி.

வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து ஆம் என்று தலையை அசைத்தாள்.

“டீன் உங்களக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவர் மேம்.” என்றாள் அவள் பணிவுடன்.

அவள் தந்தையின் ஏற்பாடு. நிச்சயம் தன் மனநிலை நன்றாய் இராது என்று தெரிந்து தகவல் சொல்லியிருப்பார்.
ஒரு ஆழ்ந்த மூச்சுடன் எழுந்து, கைப்பையில் வைத்திருந்த சின்ன தண்ணீர் போத்தலை எடுத்து அருந்திவிட்டு அந்த மாணவியோடு நடந்தாள்.

*****

டவுனில் சேகரித்த ஃபுட்டேஜுகளை எல்லாம் ஒரு பென் டிரைவில் போட்டுக் கொண்டுவந்திருந்தான் கதிரவன். எல்லாளனும் அவனுமாகச் சேர்ந்து அதைப் போட்டுப் பார்த்தார்கள்.

கதிரவன் சொன்னதுபோன்று நால்வருமே ஹெல்மெட் போட்டிருந்தனர். அவர்களின் உடை, கையில் அணிந்திருந்த மணிக்கூடு, ஹெல்மெட், அதன் டிசைன் என்று அணுவணுவாகக் கவனித்தாலும் எந்தச் சின்ன துப்பும் கிடைக்க மாட்டேன் என்றது. அடுத்த கட்டமாக இதை எந்தத் திசை நோக்கி நகர்த்துவது என்று தெரியவில்லை.

எல்லாளனின் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது. இருட்டில் கிடைத்ததை வைத்தே இவ்வளவு தூரம் வந்தவனால் இத்தனை ஃபுட்டேஜுகள் கிடைத்தும் ஒன்றும் தெரியவில்லை என்றால் எப்படி?

இன்று காண்டீபனின் நினைவும் அளவுக்கதிகமாக அவனை ஆக்கிரமித்தது. நன்றாக யோசி, ஆழமாக யோசி என்று அவனே அவனுக்குச் சொல்லிக்கொண்டான். ஒரு கட்டத்துக்கு மேல் அவற்றைத் திரும்ப திரும்ப பார்க்க முடியவில்லை. இப்படி ஒரு மனநிலையில் இருந்து பார்த்தால் எதுவுமே சிக்காது என்று அவனுக்கே புரிந்தது.

கதிரவனை ஜீப்பை எடுக்கச் சொல்லிவிட்டு முதல்நாள் கடலில் பிடிபட்ட மீனவர்கள் வசிக்கும் கிராமத்திற்குப் போகச் சொன்னான்.

“என்னத்த தேடி அங்க போறம் சேர்?”

“எனக்கும் தெரியேல்ல கதிரவன். ஆனா என்ர உயிர் எங்கயோ ஒரு மூலைல இருந்து அழுதுகொண்டே இருக்கு. என்னை விட்டுடாத விட்டுடாத எண்டு சொல்லுற மாதிரியே இருக்கு. ஏன் அங்க போறன், என்ன தேடிக்கொண்டு போறன் எண்டு தெரியாது. ஆனா ஆழ்மனம் சொல்லுற ஏதோ ஒரு நூலைப் பிடிச்சுக்கொண்டு அலையிறன்.”

இப்படித் தன் கட்டுப்பாட்டை இழக்கிறவன் எல்லாளன் இல்லை என்று கதிரவனுக்குத் தெரியும். ஆதினி யாழ் பல்கலைக்கு வகுப்புக்காகப் போவது அவனுக்கும் தெரியும். அந்தப் பல்கலை, அது நினைவூட்டிய காண்டீபன் இவைதான் காரணம் என்று உணர்ந்துகொண்டான்.

அன்று வாசுசேனன் படுத்திருந்த அதே கோவளம் கடற்கரை. முதலில் சும்மா நடந்து பார்த்தார்கள். அன்று வாசுசேனன் படுத்திருந்த இடத்திற்குப் பக்கத்தில் நின்றிருந்த அதே போட்டில் இன்று எல்லாளன் இரு பக்கமும் கைகளை ஊன்றிக்கொண்டு இலேசாகச் சாய்ந்து நின்றிருந்தான்.

பார்வை கடலில் இருந்தது. பார்க்க அமைதியாக இருந்தாலும் அந்தக் கடல் அமைதியாய் இல்லை. அலையடித்துக்கொண்டிருந்தது. அப்படித்தான் அவன் நிலையும். மனத்தில் ஒரு துடிப்பு. என்னவோ பெரிதாக நடக்கப்போவதாக அவன் உள்ளம் சொல்லிக்கொண்டேயிருந்தது.

என்ன அது? ஏன் இப்படி எதையும் சிந்திக்க இயலாமல் ஆழ்துளைக்குள் சிக்குப்பட்டது போன்று மூச்செடுக்க முடியாமல் திணறுகிறோம் என்று அவனுக்குப் புரியவேயில்லை.

“சேர்…”

“நடப்பம் கதிரவன்.”

அந்த இருவர் வீடுகளையும் தேடிக்கொண்டு போனார்கள். ஒருவன் அன்று கடலுக்குப் போகாததால் கூலி வேலைக்குப் போயிருந்தான். மற்றவன் கடலுக்குப் போய்விட்டு வந்ததால் உறங்கி எழுந்து அங்குதான் இருந்தான்.

முதல் நாள் கடலுக்கு ஏன் போனார்கள், எப்போதும் அப்படிப் போவார்களா என்று கேட்ட கேள்விகளுக்கு டான் டான் என்று பதில்கள் வந்தன. ஆனால் அவனிடம் ஏதோ ஒரு பொய் இருப்பதாக எல்லாளனுக்குப் பட்டது. என்ன என்று தூண்டித் துருவி விசாரித்துப் பிடிப்பதற்குள் அவன் கைப்பேசி அணுங்கிற்று.

எடுத்துப் பார்த்தான். சம்மந்தன் மாமா என்று விழுந்தது. முக்கிய அலுவலாக இல்லாவிட்டால் அழைக்க மாட்டார். அழைப்பை ஏற்று, “சொல்லுங்க மாமா.” என்றான்.

“அண்ணா, நான் மாதவன்ர வைஃப். ஆக்சிடெண்ட். ஓடி வாங்க. உங்கட மாமா… அவர் செத்திட்டார்…”

ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போயிற்று எல்லாளனுக்கு. நெஞ்செல்லாம் உலர்ந்துபோயிற்று. சிந்திக்கவே முடியவில்லை. அந்தப் பெண் சொன்னவற்றை உய்த்து அறிவதற்குச் சில நொடிகள் பிடித்தன. புரிந்த கணம் பதறிக்கொண்டு, “ஹலோ ஹலோ…” என்று அவன் இந்தப் பக்கமிருந்து கத்தியது அங்கு யார் காதிலும் விழவில்லை.

பல பேச்சுக்குரல்கள் பயமும் பதற்றமுமாய் ஒலித்தன. ஒன்றையும் நிதானமாய் நின்று செவிமடுக்க முடியவில்லை. ஆனாலும் தன் கவனத்தை எல்லாம் கூர்மையாக்கிக் கேட்டதில் அவன் விளங்கிக்கொண்டது சம்மந்தர் உயிரோடு இல்லை என்பதும் மாதவனின் மனைவி ஆபத்தான நிலையில் இருக்கிறாள் என்பதுமே.

இது எங்கே நடந்தது? எப்படிக் கண்டுகொள்வது? கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது அவனுக்கு. ‘சேர் சேர்’ என்ற கதிரவனின் பதற்றமான குரல் அவனை வந்தடைவதற்குக் கூடச் சில நொடிகள் பிடித்தன. வேகமாய்ச் சிந்தித்து மிதிலாவுக்கு அழைத்து சம்மந்தர் எங்கே என்று கதிரவனைச் சாதாரணமாகக் கேட்கச் சொன்னான்.

இன்று மனநிலை சரியில்லை என்று கோயிலுக்குப் போனாராம். பிள்ளை பெறு மாதம் நெருங்கிவிட்டதில் நடப்பது நல்லது என்று மாதவனின் மனைவியும் கூடப்போயிருக்கிறாள் என்று அறிந்துகொண்டு அங்கே ஓடினார்கள் இருவரும்.

error: Alert: Content selection is disabled!!