“முதல் ஆதினிக்கு வலை விரிச்சதா சொன்னவன். ஆதினிய இல்லாம ஆக்கினா அது எனக்கும் வலிக்கும், அவன்ர தம்பிக்குத் தூக்குத் தண்டனைத் தீர்ப்பைச் சொன்ன மாமாக்கும் வலிக்கும் எண்டு யோசிச்சிருப்பான். அதுக்காக ஆதினியப் பற்றி விசாரிச்சுக்கொண்டு போன இடத்திலதான் காண்டீபனைப் பற்றி அவனுக்குத் தெரிய வந்தது எண்டும் சொன்னவன். காண்டீபனை விசாரிச்ச இடத்திலதான் அவன் என்ர உயிர் நண்பன் எண்டுற விசயத்தைக் கண்டுபிடிச்சிருக்கிறான். அது இஞ்ச யாழ்ப்பாணத்தில ஆருக்கும் தெரியாது கதிரவன்.” என்றவன் தான் சொல்கிறவை எல்லாம் சரிதானா என்று யோசிக்கிறவன் போன்று ஒருமுறை தனக்குள் அலசிவிட்டு மறுபடியும் பேசினான்.
“நான் சியாமளாவோட தனியாத்தான் யாழ்ப்பாணம் வந்தனான். இன்னும் சொல்லப்போனா காண்டீபனில இருந்த கோபம் அவனைப் பற்றி இஞ்ச ஆரிட்டயும் என்னைக் கதைக்க விட்டதே இல்ல. ஏன் அகரனுக்குக் கூட அப்ப தெரியாது. என்னையும் அவனையும் தெரிஞ்ச ஆக்கள் எங்கட ஊர் ஆக்கள் மட்டும்தான். சோ அவன் அங்க வரைக்கும் போயிருக்கிறான். அங்க அப்பிடி என்ன அறிஞ்சவன்?” அதற்குமேல் அவனால் யோசிக்க முடியவில்லை.
அவன் பரபரப்புற்றுப் போகும் பாதைகள் அத்தனையும் அந்தரத்தில் நின்றன. ஆனால் இந்த முறை அவன் விடுவதாய் இல்லை.
“இப்பவே பூநகரிக்குப் போவம் கதிரவன்.” என்றான்.
பூநகரி என்பது கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேசங்களில் ஒன்று. அதைவிட முக்கியமானது கடலும் நீரேரியும் சூழப்பட்ட இடம் அது. கடல், அதற்குள்ளேயே விழுந்து கிடப்பது, ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு நடுக்கடல் வரைக்கும் போவதெல்லாம் அந்த நாள்களில் அவர்களுக்குள் சாதாரணமாக இருந்தவை. இதையெல்லாம் யோசிக்க யோசிக்க எல்லாளனால் அமைதியாக இருக்க முடியவில்லை.
கோவளம் கடற்கரை, அங்கே வந்துபோகும் அந்த மொட்டையன், கடலுக்குள் நடக்கும் புதிரான சம்பவங்கள், அவனின் சொந்த ஊரான பூநகரி, அங்கே அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்று இவற்றை எல்லாம் இணைக்க முயன்றான்.
*****
சிவநாதர் கொதிப்பின் உச்சத்தில் இருந்தார். திருகோணமலைக்குச் சென்றிருப்பதாக அவரிடம் சொல்லிவிட்டு என்ன செய்திருக்கிறான் இந்த வேந்தன்? உடனேயே அவனுக்கு அழைத்து அப்போதே வரச் சொன்னார்.
வேந்தனும் இதை எதிர்பார்த்தான். வாசுசேனனை எதிர்த்த இரண்டு முறைகளும் மண்ணைக் கவ்வியிருக்கிறான். அது அவனை இன்னுமின்னும் அவமானத் தீயில் போட்டு எரித்தது. வெஞ்சினம் மிகுந்து நின்றான். இன்னும் என்ன செய்து வாசுசேனனை அடித்து வீழ்த்தலாம் என்று யோசித்தான்.
முதலே திட்டம் போட்டு, ஒன்றுக்குப் பத்துப் பேராகச் சென்றும் தோற்று வந்திருக்கிறான். அவன் தாக்க வருவான் என்று வாசுசேனன் எதிர்பார்த்திருக்க மாட்டான். அப்படி இருந்தும் எதிர்பாராமல் நடந்த தாக்குதலாக இருந்தும் அதை முறியடித்து இவனைத்தானே திரும்பவும் துரத்தியடித்திருந்தான். தோற்றது மட்டுமில்லை அத்தனை பேருக்கும் பயங்கரமான காயங்கள்.
அந்தக் காயங்களோடு வந்தவனைக் கண்டு பயந்துபோனார் சிவநாதர். வாசுசேனனை விடவும் மோசமான நிலையில் இருந்தான் அவன். நாய் கடித்த கடிகள் வேறு. ஆத்திரம்தான் வந்தது அவருக்கு. “அறிவே இல்லையா உனக்கு. திருந்தவே மாட்டியா நீ. நீயெல்லாம் என்னடா ஆம்பிளை?” என்றதும் அவன் முகம் அவமானத்தில் சிவந்து போயிற்று.
“ஐயா!” என்றான் அதட்டலாக.
“என்னடா குரலை உயத்துறாய். இது மட்டும்தானே தெரியும் உனக்கு. ஒரு விசயத்துல இறங்கக் கூடாது. இறங்கினா தோக்கக் கூடாது. ஆனா நீ…” என்றவர் பார்த்த மோசமான பார்வையில் மண்ணுக்குள் புதைந்துவிடலாம் போலிருந்தது அவனுக்கு.
இதுதான், இவரின் இந்த வார்த்தைகள்தான் அவனை எரிப்பவை. இதனாலேயே அவரிடம் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று ஒரு வெறி அவனுக்குள் எப்போதும் இருக்கும்.
பிறந்ததில் இருந்தே முறையான ஒரு அங்கீகாரத்துக்காய் ஓடிக்கொண்டிருப்பவன் அவன். அப்படியிருக்க ஒவ்வொரு முறையும் நீ எதற்கும் தகுதியானவன் இல்லை என்று சொல்லி சொல்லி அவனுக்குள் வெறி பிடிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
அதுதான் அவனை அவசரப்பட வைப்பதும். ஒவ்வொரு முறையும் எதையாவது செய்துவிட்டு அவர் முன்னே வந்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கவேண்டும் என்று நினைப்பான். ஆனால், ஒரு முறை கூட அது நடப்பதேயில்லை.
இன்றும் அவர் முன்னே முகம் கறுக்க நின்றிருந்தான்.
“சொல்லு, இனி என்ன செய்யப் போறாய்?”
அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு பிடிவாதமாக நின்றிருந்தான்.
“சொல்லடா!”
“எனக்கு அவள் வேணும்!” என்றான் அவரைப் பாராமல்.
அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் சிவநாதர்.
“ஆனா அவன் இனி அவளைத் தரமாட்டான்.” என்றார் நடையை நிறுத்தி.
“என்ன சொல்லுறீங்க?” என்றான் அதிர்வுடன். “நீங்க அவளைக் கொல்லப்போறீங்க எண்டு பயந்துதான் கூட்டிக்கொண்டு வரப் போனனான். அவளுக்கு முன்னால அவன் நாய விட்டுக் கடிக்க விட்டவன். அந்த ஆத்திரத்திலதான் வெட்டப் போனனான். அது வேற. அவளை நீங்கதான் அவனிட்ட குடுத்தனீங்க. நீங்க கேட்டா அவன் தரோணும்தானே?” என்றான் ஒரு வேகத்துடன்.
அதற்கு அவன் பழைய வாசுசேனனாக இருக்க வேண்டும். அவன் வீடு தேடி வந்து சொல்லிவிட்டுப் போனதைச் சொன்னார் சிவநாதர்.
“இதுக்குத்தான் ஐயா சொன்னனான், அவனுக்கு அளவுக்கதிகமா இடம் குடுக்காதீங்க எண்டு. நீங்க கேக்கேல்லையே?”
“அவனுக்கு இடம் குடுத்தது பிழை இல்லை. நீ எனக்கே தெரியாம நடுவுக்க புகுந்து பாத்த தேவை இல்லாத வேலைகள்தான் எல்லாத்துக்கும் காரணம்.” என்று சீறினார் அவர்.
திரும்பவும் அங்குமிங்குமாய் நடந்துவிட்டு வாசுசேனனுக்கு அழைத்தார். “உன்னோட சேத்து அவளையும் அழிக்க எனக்கு நிறைய நேரம் ஆகாது வாசு. ஆனா எனக்கு அதில விருப்பம் இல்ல. உன்ர கோவத்துல இருக்கிற நியாயம் எனக்கு விளங்குது. நான் பெத்த அவசரக் குடுக்க பாத்த வேலைய எல்லாம் நீ பெருசா எடுக்காத. எனக்கும் உனக்குத்தான் பேச்சு. நான் சொன்ன மாதிரி உன்னை உன்ர கேஸுகளில இருந்து விடுவிக்க எனக்கு டைம் வேணும். அது வரைக்கும் அவள் அந்தக் கேதகி என்ர மகனோட இருக்கட்டும். அவன் ஆசைப்படுறான். அவளைக் கொண்டுவந்து விடு.”
தன்மையாகச் சொன்னபோதும் சொன்னதைச் செய் என்கிற தொனி இருந்தது அவரிடம். அளவுக்கதிகமாகக் குழைந்தாலும் கண்டுபிடித்துவிடுவானே. ஆனால், அவன் எதற்கும் அசைவதாக இல்லை.
“என்ன சிவநாதா? கெட்டித்தனமா கதைக்கிறதா நினைப்பா? ஒரு கைல என்ர விடுதலையத் தா. மற்றக் கைல நான் அவளை வைக்கிறன். அதுக்கு முதல் எனக்கு ஃபோன் போடுற வேலையப் பாக்காத. நீ வேலைய ஆரம்பிச்சிட்டியா இல்லையா எண்டு சொல்ல எனக்கு ஆள் இருக்கு. உனக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன். இதையும் தாண்டி எதையாவது செய்ய நினச்சியோ கேதகி எல்லாளனிட்ட போவாள். வேந்தன் நிரந்தரமா இந்த உலகத்த விட்டே போவான்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

