ஆனால் இன்று அப்படி இல்லை. அவன் பிறந்து வளர்ந்த ஊர் அவனிடம் எதையோ சொல்ல, அல்லது தெரிவிக்கக் காத்திருப்பதாக அவன் உள்மனம் சொல்லிற்று.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். ஊருக்குள் சென்றதும் என்னென்னவோ நினைவலைகள் வந்து அவனைச் சுழற்றி அடித்தன. அவர்களின் வீட்டுக்குத்தான் முதலில் போனான்.
சொந்த வீடுதான். கவனிக்க வேண்டிய அவனே கவனிக்காமல் விட்டுவிட்டதில் ஜன்னல்கள், கதவுகள் அனைத்தையும் பிடுங்கியிருந்தார்கள். ஓடுகள் உடைந்து விழுந்து, நிலம் உடைந்து, சுவர்கள் எல்லாம் வெடித்து, வீட்டினுள் கூட மரம் செடி கொடிகள் வளர்ந்து பாழடைந்து கிடந்தது.
அதையெல்லாம் கண்கொண்டு பார்க்க முடியாமல் வாசற்படியில் வந்து அமர்ந்தான். நெஞ்சினில் ஹோ என்று பெரும் இரைச்சல். கண்முன்னே காட்சிகள் ஓடின. அன்னை வந்து கனிவுடன் முறுவலித்து அவன் தலையைத் தடவிவிட்டார்.
இதே முற்றத்தில் அவன், மிதிலா, காண்டீபன் மூவரும் விளையாடியிருக்கிறார்கள். இரவுகளில் மின்சாரம் இல்லாது போனாலும் சிமினி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு, வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் முற்றத்தில் அமர்ந்திருந்து நாட்டு நடப்புத் தொடங்கி வெளிநாட்டுச் செய்திகள் வரை பேசியிருக்கிறார்கள்.
கடைசியாக அவன் அன்னை கத்தியால் குத்திக் கிழிக்கப்பட்டுக் கிடக்க, தந்தை உயிரற்ற உடலாக அந்த விறாந்தையில் மல்லாந்து கிடந்தார். சட்டென்று எழுந்து முற்றத்தில் வந்து நின்றவனுக்கு நெஞ்சு வெடிக்கும் நிலை.
பெற்றவர்களைத்தான் அநியாயமாகப் பறிகொடுத்தான் என்றால் உற்ற நண்பனையும் இழந்துவிட்டான். சோகம் என்பதே தெரியாத அந்த வயதில் தம் வாழ்க்கை இப்படியெல்லாம் மாறிப்போகும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
கதிரவன் புறம் திரும்பி, “இந்த விறாந்தையிலதான் நானும் அவனும் படுப்பம் கதிரவன். அவனுக்கு முல்லைத்தீவுதான் சொந்த ஊர். 2009 யுத்தம் நடந்த நேரம் அவன்ர அம்மாவும் சகோதரனும் காயப்பட்டுச் செத்திட்டினம். யுத்தம் முடிஞ்ச கையோட மாமாக்கு இஞ்ச டிரான்ஸபர் வந்திட்டுது. அப்பிடி வந்தவர் இஞ்சயே இருந்திட்டார். மனுசி மகன் இல்லாத ஊருக்குப் போய் என்ன காணப்போறன் எண்டு அங்க போகவே இல்ல. கடைசில…” என்றவன் விருட்டென்று வெளியே வந்துவிட்டான்.
ஜீப்பை நிறுத்திய இடத்திலேயே விட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தான். விசாரிக்கத்தான் வந்திருக்கிறான். ஆனால் யாரிடம் என்ன விசாரிக்கப்போகிறான் என்று தெளிவில்லை. அந்தச் சத்தியநாதன் யாரைக்கொண்டு யாரிடம் என்ன விசாரித்துத் தெரிந்துகொண்டான் என்று தெரியாதே. ஆனாலும் உள் மனம் சொல்வது பிழைக்காது என்று ஒரு நம்பிக்கை.
அயலவர்கள், அவனுக்குத் தெரிந்தவர்கள் வீடு என்று எங்கு போய்க் கதவைத் தட்டினாலும் அவனைத் தெரிந்திருந்ததே தவிர அவனுக்குத் தேவையான தகவல் அவர்களிடம் இல்லை.
காண்டீபனும் சம்மந்தரும் வாடகை வீட்டில்தான் இருந்தார்கள். இப்போது அந்தக் காணியில் இரண்டு மாடி வீடும், அதைச் சுற்றி மதில் சுவரும் எழும்பியிருந்தது. இவர்கள் இருந்த காலத்தில் உரிமையாளர்களாக இருந்தவர்கள் யாருக்கோ அந்தக் காணியை விற்றிருக்க, புது உரிமையாளர்களிடமும் உருப்படியாக எதையும் கேட்க முடியவில்லை.
மிதிலாவின் வீடு கொட்டில் வீடு என்பதால் அது அழிந்திருந்தது. வெறும் காணி மட்டும் கவனிப்பார் இல்லாமல் பற்றையாகியிருந்தது.
வீதியில் போய் வந்தவர்களை இனம் காண முடிகிறதா என்று பார்த்தான். அப்போது ஒரு வயதானவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இவன் மறிக்கும் அவசியம் இல்லாமல் அவரே நிறுத்தி இறங்கி, “தம்பியாக்கள் ஊருக்குப் புதுசா?” என்று விசாரித்தார்.
கோபால் ஐயா. இவர்கள் இருந்த காலத்தில் ஊருக்குள் மளிகைக்கடை வைத்திருந்தவர். சட்டென்று இனம் கண்டுகொண்டதில் உண்டான முறுவலுடன், “என்னைத் தெரியேல்லையோ ஐயா?” என்று வினவினான் எல்லாளன்.
பூஞ்சையான தன் விழிகளால் அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “எங்கயோ பாத்த முகம் மாதிரித்தான் இருக்கப்பு. எண்டாலும் வயசு போயிற்று. கண்ணும் மங்கலாயிற்றுது. அதாலயாக்கும் கண்டுபிடிக்கேலாம இருக்கு. நீங்க ஆரு?” என்று விசாரித்தார் அவர்.
“இராமச்சந்திரனை நினைவிருக்கோ? அவரின்ர வைஃப் பரமேஸ்வரி…” என்று அவன் சொல்கையிலேயே, “ஆரு? வீடு புகுந்து கொள்ளையடிச்சு, குத்திக் கொலையும் செய்துபோட்டுப் போனாங்களே, அந்த இராமசந்திரனோ?” என்று கேட்டார் அவர்.
“ஓம் ஐயா. அவரின்ர மகன் எல்லாளன்தான் நான்.”
“உண்மையாவோ? எல்லாளனோ? என்ர கடவுளே, எப்பிடி இருக்கிறாயப்பு. உனக்கு ஒரு தங்கச்சியும் இருக்கிறா எல்லா?” என்று ஆர்ப்பரிப்பும் அன்புமாக வினவிய மனிதருக்கு உணர்வு மேலீட்டில் விழிகள் கலங்கிப்போயின.
அடுத்துக் கழிந்த நிமிடங்கள் அத்தனையும் எல்லாளன், சியாமளா பற்றி அவர் அறிவதிலேயே கழிந்தது. “பிறகு என்னப்பு. திரும்ப இஞ்சயே வரலாமே. உங்கட வீடு பாழடஞ்சு போச்சு. அதைவிட உன்னோட ஒரு பெடியன் திரிவானே, தகப்பன் போலீஸ். என்ன பெயர் அவனுக்கு?”
சட்டென்று உள்ளம் பரபரப்பாக, “காண்டீபனைச் சொல்லுறீங்களோ? அவன்ர அப்பா சம்மந்தன் மாமாதான் போலீஸ்.”
“ஓமோம். அவேதான். நீங்க எல்லாரும் ஊரை விட்டுப் போன பிறகு காண்டீபன்ர அம்மா மனுசனையும் மகனையும் தேடிக்கொண்டு வந்தவா.” என்றதும், “என்ன ஐயா சொல்லுறீங்க? அவாவும் மற்ற மகனும் 2009 கடைசி யுத்தத்தில செத்திட்டினம் எண்டு மாமா சொன்னாரே.” என்றான் உச்சபட்ச அதிர்ச்சியில்.
“ஓமப்பு. நானும் அதைத்தான் அந்த தங்கச்சிட்டச் சொன்னனான். ஆனா அவே சாகேல்லையாம். உயிரோடதான் இருந்தவையாம். ரெண்டு பேருக்கும் நல்ல காயமாம். வெளில எடுக்கவும் ஆக்கள் இல்ல, மகனும் வாட்ட சாட்டமான ஆம்பிளை எண்டுறதால மூண்டு வருசத்துக்கு மேல காம்பிலேயே அடச்சு வச்சிருந்திருக்கிறாங்கள். வெளில வந்து ஊருக்குப் போயிருக்கிறா. அங்க காண்டீபன், சம்மந்தனைப் பற்றி ஆருக்குமே தெரியேல்லையாம். அதால அவே ரெண்டுபேரும் செத்திட்டினம் எண்டு அவாவும் அந்த மகனும் நினைச்சுக்கொண்டு இருந்தவையாம்.”
எல்லாளனுக்குப் பேச்சே வரவில்லை. கடைசி யுத்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டிலும், செல்லடியிலும், கிபீர் குண்டுகளின் தாக்குதலிலும் காயப்பட்டுத் துடித்துக்கொண்டிருந்தவர்களில் தப்ப மாட்டார்கள் என்று நினைத்தவர்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு, மிகுதி மக்களைக் குப்பையை அள்ளிப் போடுவதுபோல வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வந்து காம்புகளில் அடைத்தது என்பது சர்வ சாதாரணமாக நடந்த நிகழ்வு.
அதனாலேயே அவர்கள் எல்லோரும் இறந்து, இறந்த இடத்திலேயே மண்ணோடு மண்ணாகியிருப்பார்கள் என்று அறிவுக்குப் புரிந்தாலும், ஏதாவது அதிசயங்கள் நடந்து, உயிருடன் இருந்து தேடிக்கொண்டு வந்துவிட மாட்டார்களா என்று இன்றும் ஏங்கும் உறவுகள் தமிழர் பகுதியில் இன்னுமே இருக்கிறார்கள். ஆனால் இங்கே தலைகீழாக நடந்திருக்கிறது. இறந்துவிட்டதாக நினைத்த மனிதர்கள் உயிருடன் இருந்திருக்கிறார்கள். அதை அறிந்து மகிழ்ந்திருக்க வேண்டிய இருவரும் இன்று உயிருடன் இல்லை.
“இப்ப அவா எங்க எண்டு ஏதும் தெரியுமா ஐயா?” எல்லாளனின் நிலையைக் கவனித்துவிட்டுக் கதிரவன்தான் கேட்டான்.
“இல்லையே தம்பி. அந்த நேரம் மகன் என்னவோ கேஸ்ல ஜெயிலுக்கு போய்ட்டான் எண்டு சொன்னவா. அவனை எப்பிடி வெளில எடுக்கிறது எண்டு அலைஞ்சு திரிஞ்ச நேரம்தான் சம்மந்தர் உயிரோட இருக்கிற விசயம் தெரிய வந்ததாம் எண்டு சொன்னவாப்பு. அந்த நேரம் பக்கத்து வீட்டு டெலிபோன் நம்பரெல்லாம் தந்துபோட்டுப் போனவா. நானும் கடை இருக்கிற வரைக்கும் பக்குவமா வச்சிருந்தனான். பிறகு நீங்களும் வரேல்ல. நானும் கடைய மூடிட்டன்.”
அவரிடம் மேலே என்ன கேட்பது என்றுகூடத் தெரியாது நின்றான் எல்லாளன்.
“மிதிலா எண்டு தகப்பன் இல்லாத ஒரு பிள்ளை. அவாவும் உங்களோடதானே திரிஞ்சவா. அந்தப் பிள்ளையும் அந்த நேரம் போதை மருந்தெல்லாம் பழகி, கெட்டுச் சீரழிஞ்சு போயிற்றுது. தாய்க்கும் அடிச்சு, தாயும் புத்தி சுவாதீனம் இல்லாம ஆயிற்றா. பிறகு அந்தப் பிள்ளையையும் தாயையும் காண்டீபன்தான் வந்து கூட்டிக்கொண்டு போனவனாம். நான் பாக்கேல்லை. ஊருக்க சொன்னவே. அவன் போய்க் கொஞ்சக் காலத்திலதான் அவன்ர அம்மா இஞ்ச வந்தவா.” என்று, அந்த விடயங்களும் அவனுக்குத் தெரிந்திராது என்றெண்ணிப் பகிர்ந்துகொண்டார் அவர்.

