ஆட்டநாயகன் 22.1

அத்தியாயம் 22

எல்லாளனின் நெஞ்சு உலைக்களமெனக் கொதித்துக்கொண்டிருந்தது. சிவநாதரின் தொண்டைக் குழிக்குள்ளேயே குண்டை இறக்கினால் என்ன என்கிற அளவுக்கு அவனின் நரம்புகள் புடைத்து எழும்பின. பல்லைக் கடித்துத் தன்னை அடக்கினான்.

முதலே அவன் சதேகம் மொத்தமும் அந்த மனிதர் மீதுதான். இப்போது அது உறுதியாகிப்போயிற்று. மகனைக் கொண்டே தகப்பனைப் போட்டுத் தள்ளியிருக்கிறார் என்று ஊகிக்க அவனுக்குப் பெரிய புத்திசாலித்தனம் தேவையாகவே இல்லை. கடலில் நடந்த கடத்தலைச் செய்தவனும் இவன்தான்.

தயாநிதி இல்லை என்றதும் அந்த இடத்துக்கு இவனைக் கொண்டுவந்திருக்கிறார். அவன் மூலம் அவருக்குக் காரியமானாலும் அவர் பக்கம் இலாபம்தான். அதே நேரத்தில் இவன் கையில் மாட்டுப்பட்டு அவனுக்கு ஒன்று நடந்தால் அது இன்னும் சந்தோசம்.

ஆக அப்பனுக்கும் மகனுக்கும் வாசுசேனனை முதலே தெரிந்திருக்கிறது. ஆனால் காண்டீபனின் சகோதரன் எப்படி இப்படிப் பாதை மாறிப் போனான்?

யுத்தம் முடிந்த காலப்பகுதியில் ஒழுங்கான உணவு உறக்கமற்று, உயிரைக் காத்துக்கொள்ளப் போராடி, பயந்து பயந்தே செத்து, சொந்த பந்தங்களை இழந்து, காயப்பட்ட, அங்கவீனர்களைப் போதும் போதும் என்கிற அளவில் பக்கத்திலேயே இருந்து பார்த்து, இரத்தம், மரண ஓலம், உடல்கள் எல்லாம் இறைச்சித் துண்டங்களாகத் துண்டாடப்பட்டது, வன்புணர்வு, கொலை, கொள்ளை என்று அந்த நேரத்தில் என்னதான் நடக்கவில்லை?

அதையெல்லாம் அனுபவித்த, சந்தித்த, கடந்துவந்த மக்கள் உடலளவிலும் மனத்தளவிலும் முற்றிலுமாகப் பாதிப்புற்றிருந்தார்கள். அந்த நேரத்து வெறுப்பு, விரக்தி, வேலையில்லாத் திண்டாட்டம், பசி இவையெல்லாம் சேர்ந்து பல இளைய தலைமுறைகளைத் தவறான பாதையில் செலுத்தியிருந்தது.

அப்படி ஒன்று நடந்து சிறைக்குச் சென்றவனுக்கும் சத்தியநாதன் குழுவுக்கும் பழக்கம் உண்டாகியிருக்க வேண்டும். அதன் பிறகு அவன் அந்த வழியிலேயே போயிருக்கலாம்.

விதி வசத்தால் அப்படி மாறியிருந்தாலும் கூட எப்படி இப்படிப் பெற்ற தகப்பனையே கொல்ல முடிந்தது? அந்தளவில் ஈவிரக்கமற்ற மிருகமாக மாறிவிட்டானா? முதலில் அந்த அப்பாவி மனிதரைக் கொல்லும் அளவுக்கு அவனுக்கு என்ன வெறி? காண்டீபனின் சகோதரன் என்றுகூடப் பாராமல் அவனை ஏதாவது செய்துவிடத் துடித்தான் எல்லாளன்.

இத்தனைக்கும் சூத்திரதாரியாக இருக்கும் சிவநாதர் அவனை ஏன் வெளியில் எடுக்கிறார்? அதைச் செய்வது வேறு யாரும் என்று நினைக்க அவன் என்ன முட்டாளா? ஆனால் ஏன்? அவனைக் கொண்டே முடிந்தவரை இவனை அடித்துவிட்டு, அதன் பிறகு இவனிடம் அவனை மாட்டிவிடுவதற்கா? இது தெரியாமல் அவரிடம் நன்றாகச் சிக்கிக்கொண்டுவிட்டான் வாசுசேனன்.

அதைவிட இவன் சிறையில் இருந்த காலத்திலேயே காண்டீபனும் இருந்திருக்கிறான். என்ன வேதனை இது? ஒருவன் அநியாயமாகக் கொல்லப்பட்டான் என்றால், இன்னொருவன் பாதை மாறி,கொலைகாரனாகி நிற்கிறான். அவர்களைப் பெற்றவர்கள் இன்று உயிருடன் இல்லாமல் இருப்பதே நல்லதோ என்று தோன்றிற்று. இல்லாமல் இதையெல்லாம் எப்படி தங்குவார்கள்?

பிணையில் வர ஆரம்பித்த வாசுசேனன் தன் தந்தை, சகோதரனை ஏன் தேடவில்லை? கண்டுபிடிக்க முடியாது போயிருக்கலாம். தேடாமல் இருந்தது எப்படி? அவன் அன்னைக்கு அவர்கள் கடைசியாகப் பூநகரியில் இருந்திருக்கிறார்கள் என்கிற வரை தெரிந்திருக்கிறது. இன்று அவர் இல்லை என்றாலும் அவனிடம் சொல்லித்தானே இருப்பார். அப்படியிருக்க வெளியே வந்தவன் முதல் வேலையாகப் பூநகரிக்குத்தானே போயிருக்க வேண்டும்.

அப்படி யாரும் வந்ததாக ஊரில் யாருமே அவனிடம் சொல்லவே இல்லையே.

முதல் வேலையாக எல்லாளன் போனது வாசுசேனனைப் பிணையில் எடுத்த சதீஸ் என்கிறவனின் வீட்டிற்கு. பிணையில் வெளியே வருகிற வாசு தங்குகிற வீடாகவும் அந்த வீட்டினைத்தான் குறிப்பிட்டிருந்தார்கள். அது வாசுசேனன் அதுவரை காலமும் இருந்த வீடு. அங்கே ஆட்கள் இருந்ததற்கான தடயங்கள் இருந்தனவே ஒழிய யாருமே இல்லை. பூட்டியிருந்தது.

ஒரு கணம் யோசித்துவிட்டு வாரா வாரம் வாசுசேனன் சென்று கையெழுத்துப் போடவேண்டிய காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தான். தவறாமல் வந்து கையெழுத்திடுகிறான் என்று சொன்னார்கள்.

அங்கே போய் காவல்நிலையத்தில் இருக்கும் சிசிடிவியை செக் பண்ணினான். இன்னும் இருவரோடு வந்து அவன் கையெழுத்திடுவது வெகு தெளிவாகத் தெரிந்தது. அதில் ஒருவன் அந்த சதீஸாக இருக்கலாம். ஆனால், மிகத் தெளிவான ஃபுட்டேஜில் உருச் சிதைந்துபோயிருக்கும் நண்பனின் உருவை, அவன் நடமாட்டத்தைப் பார்ப்பது இலகுவாகவே இல்லை அவனுக்கு.

துக்கமும் துயரமும் தொண்டையை அடைத்தன. வாசுசேனன் மீதான கோபத்தையும் மீறிக்கொண்டு அவனைப் பார்த்துவிடத் துடித்தான். இவனையாவது காப்பாற்றிவிட முடியாதா என்று தவித்தான். நண்பனின் இழப்பு இன்னும் அதிகமாய் அவனைத் தாக்கிற்று.

தன்னை மீறித் திரையில் தெரியும் அவன் உருவை வருடியவனுக்கு நெஞ்சுக்குழி அடைத்துக்கொண்டு வந்தது. அடுத்து இன்னும் ஐந்து நாள்கள் கழித்துக் கையெழுத்திட வருவான் என்று அறிந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

ஏனோ அவனுக்கு வாசுசேனனை விரட்டிப் பிடிக்கத் தோன்றவில்லை. அவனையும் தன்னையும் சுற்றிச் சிவநாதர் பின்னும் வலையைக் கண்டுபிடிக்க எண்ணினான். போனமுறை போன்று அவசரப்பட அவன் தயாராயில்லை.

வாசுசேனன் முதன்முதலில் கைதானபோது அவன் வசிப்பிடமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது முல்லைத்தீவு வீட்டு விலாசம். அதன் பிறகு யாழ்ப்பாண விலாசம். அந்த இடத்தைத் தேடிப் போய் விசாரித்தார்கள்.

காண்டீபனின் அன்னைக்குக் குடற்புற்றுநோய் வந்து, கவனிப்பாரோ வைத்தியம் பார்ப்பாரோ இல்லாமல் அரச வைத்தியசாலையில் அயலவர்களால் சேர்க்கப்பட்டு, 2023ஆம் ஆண்டு கடைசிக் காலப்பகுதியில் அங்கேயே இறந்துபோயிருக்கிறார். வைத்தியசாலையில் சென்று விசாரித்தபோது இதைத் தவிர்த்து வேறு எந்தத் தகவலும் இல்லை. அதைவிட முக்கியமான விடயம் அவர் இறந்த பிறகு அவரைத் தேடி யாருமே வரவில்லையாம்.

உடனேயே கோவளம் கடற்கரைக் கிராமத்திற்குச் சென்று அந்த மீனவர்களிடம் காவல் நிலையத்தில் எடுத்த வாசுசேனனின் தெளிவான ஃபுட்டேஜை காட்டி விசாரித்தார்கள். அவர்களும் அவன்தான் என்று உறுதி செய்தனர். ஆக, அவன் கணிப்புகள் அத்தனையும் சரிதான்.

இனி? கதிரவன் அவன் முகம் பார்த்தான்.

“வீட்டுக்கு விடுங்க கதிரவன்.” ஜீப்பின் இருக்கையில் தலை சாய்த்துக் கண்களை மூடியிருந்த எல்லாளன், விழிகளைத் திறந்து பாராமலேயே சொன்னான். அன்றைய நாள் முழுவதுமே அவர்கள் இருவருக்கும் பெரும் அலைச்சலில் கடந்திருந்தது. அதற்காகவெல்லாம் களைத்துப்போகிறவன் இல்லை அவன். மனத்தளவில் போராடி போராடி மிகவுமே ஓய்ந்துவிட்டான் என்று கதிரவனுக்குப் புரிந்தது.

“அவரின்ர தலைல அந்தக் காயம் எப்பிடி வந்தது? அது பற்றின பெரிய விவரம் ஒண்டும் இல்லை. ஜெயில் கலவரத்தில நடந்தது எண்டு மட்டுமே இருக்கு. என்னதான் கெட்டவனா இருந்தாலும் ஒண்டுமே செய்யாத அப்பாவை ஒருத்தன் கொல்லுவானா? சரி அப்பாவிலதான் கோவம் எண்டாலும் அவர் அவரின்ர அம்மாவைத் தேடி ஏன் போகேல்ல? வாசுசேனனுக்குப் பின்னால ஏதோ மர்மம் இருக்கு. அதே நேரம் நாங்க அதுக்குக் கிட்ட நெருங்கிட்டம் எண்டுறதும் தெரியுது. சோ எல்லாமே ஒரு முடிவுக்கு வரும் சேர்.” ஆறுதலாகவும் அவனுக்குத் தெம்பு வருவது போலவும் சொன்னான் கதிரவன்.

நிமிர்ந்து அமர்ந்து அவன் புறம் திரும்பி, “என்ன முடிவு கதிரவன்?” என்று நிதானமாக வினவினான் எல்லாளன்.

“எந்த நல்ல முடிவும் வரப்போறேல்ல கதிரவன். அவனை மாதிரியே இவனையும் இந்தக் கையாலேயே பிடிச்சுச் சிறையில போடப்போறன். ஒண்டு காண்டீபனுக்கு மாதிரியே இவன்ர உயிரும் போகும். இல்லையா சாகிற வரைக்கும் ஜெயில்லையே இருப்பான். இதைத் தவிர வேற ஏதாவது முடிவு வரும் எண்டு நினைக்கிறீங்களா?”

“நீங்க நினைச்சா…” எனும்போதே இல்லை என்று மறுத்துத் தலையசைத்தான் எல்லாளன். “மாமாவையும் ஒரு கர்ப்பிணிப் பொம்பிளையையும் கொன்டிருக்கிறான் கதிரவன். அவா எப்பிடித் துடிச்சவா எண்டு பாத்தனீங்கதானே. ஒரு பொம்பிளைப் பிள்ளை தாயில்லாம நிக்குது. ஒரு ஆம்பிளை தன்ர மனுசிய அநியாயமா பறிகொடுத்திட்டு நிக்கிறார். இதுக்கெல்லாம் ஒரு நியாயம் கிடைக்க வேணாமா?”

“எல்லாருமே நியாயப்படி நடக்கிறேல்ல சேர். உங்கட குடும்பத்துக்கு ஆர் நியாயம் செய்தவே? காண்டீபன் சேரின்ர குடும்பத்துக்கு ஆர் நியாயம் செய்தவே? அஞ்சலி, மாதவன், தமயந்தி, சாமந்தி, சாகித்தியன் எண்டு இப்பிடிச் சொல்லிக்கொண்டே போகலாம் சேர்.”

“ப்ச் விடுங்க கதிரவன்.” என்றான் எல்லாளன் சலிப்புடன்.

அவன் வீட்டின் முன்னே கொண்டுவந்து ஜீப்பை நிறுத்தினான் கதிரவன். இறங்க முதல், “வேந்தனை விடாம கவனிங்க கதிரவன். நான் நினைக்கிறது சரியா இருந்தா, இந்தப் பக்கம் எங்களைத் திசை திருப்பிப்போட்டு அந்தப் பக்கம் அவனை ஊரோ, நாடோ கடத்துவான் அந்தச் சிவநாதன். அப்பிடி அவனைத் தப்பிப்போக விடவே கூடாது. கேதகி அவனிட்டத்தான் இருக்கிறா.”

“என்னைத் தாண்டி அவன் போக மாட்டான் சேர்.” மிகுந்த உறுதியோடு சொன்னான் கதிரவன்.

அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு எல்லாளன் இறங்க, “கடிடவன் மாமா!” என்று கூவிக்கொண்டு வாசலுக்கே ஓடி வந்தாள் தீபனா.

இரண்டு காவல்துறைகளினதும் முகங்களும் அன்றைய நாளின் அலைச்சலால் உண்டான களைப்பையும் மீறிப் புன்னகையில் மலர்ந்துபோயிற்று. ஓடி வந்த மகளை அப்படியே வாரித் தூக்கி மேலே போட்டுப் பிடித்துக் கொஞ்சினான் தகப்பன்.

“அப்பா கடிடவன் மாமாட்ட போகோணும்!” செல்லமாய் அதட்டல் போட்ட மகளை அதற்குள் இறங்கி வந்த கதிரவனிடம் கொடுத்தான் எல்லாளன்.

இதற்குள் ஆதினியுடன் வந்த தீபனை எல்லாளன் தூக்கிக்கொண்டான். சும்மாவே அவனுக்குப் பிள்ளைகளோடு செலவழிக்க நேரமிருக்காது. இப்போது அது மருந்துக்கும் இல்லை. அதனாலோ என்னவோ தீபன் அவன் கழுத்தைத் தன்னால் முடிந்தவரையில் இறுக்கிக் கட்டிக்கொண்டு கழுத்தில் முகம் புதைக்க, “என்ர சிங்கக்குட்டிக்கு என்னவாம்?” என்றான் அவன் கேசம் கோதிவிட்டபடி.

error: Alert: Content selection is disabled!!