அவர்கள் வந்தபோது தேவன் புறப்பட்டிருந்தான். அங்கிருந்த நால்வரையும் கண்டு கேதகிக்கு இன்னும் பயம் கூடிற்றே தவிர தைரியம் வரவில்லை.
“பயப்பிடாதீங்கம்மா. நான் எல்லாளன். எஸ்எஸ்பியா இருக்கிறன். முதலும் நீங்க பாதுகாப்பாத்தான் இருந்திருப்பீங்க. காண்டீ… வாசு உங்களைப் பாதுகாப்பாத்தான் வச்சிருந்திருப்பான். இப்பவும் அதே பாதுகாப்போட தைரியமா இருக்கலாம் சரியா?” என்றான் அவளுக்குத் தைரியம் கொடுக்கும் விதமாக.
சரி என்று கேட்டுக்கொண்டாள். ஆனாலும் அவள் விழிகளில் தெரிந்த கலக்கம், விசாரணையை உடனேயே ஆரம்பிக்க எல்லாளனை விடவில்லை. மனத்தளவில் மிகவுமே பாதிக்கப்பட்டிருப்பாள் என்று புரிந்துகொண்டான்.
அதைவிட அவள் அமரும்போதும் நிற்கும்போதும் ஏதோ வித்தியாசம் தெரியவும் சியாமளாவை அழைத்து விசாரிக்கச் சொன்னான்.
அப்போதுதான் வேந்தன் குழுவுக்கும் வாசுசேனன் குழுவுக்கும் நடந்த வாள் வெட்டுச் சண்டை தெரிய வந்தது. உடனேயே அவளையும் வைத்தியரிடம் காட்டினார்கள். வெட்டுக்காயம் நல்லபடியாகவே ஆறி வருவதாகச் சொன்னவர் அவளுக்கும் மருந்து கொடுத்தார்.
இதற்குள் அந்த நாளே முடிந்துபோயிற்று. இரவாகிவிட்டதில் எல்லோருக்கும் இரவுணவைக் கொடுத்துவிட்டிருந்தார் சாந்தி. சியாமளாவைக் கூட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு அதை வாங்கிக்கொண்டு வந்திருந்தான் அகரன்.
நால்வரும் அங்கேயே உணவை முடித்தார்கள்.
“நீங்க ஓகேயாம்மா? உங்களிட்ட சில கேள்விகள் கேக்கலாமா? இல்லாட்டியும் பரவாயில்ல, நாளைக்குக் கதைப்பம்.” என்று கேதகியிடம் சொன்னான் எல்லாளன்.
“இல்ல சேர். நான் ஓகேதான். நீங்க இப்பவே கேளுங்க.” என்றாள் அவள்.
“உங்கட அப்பான்ர குடும்பமே கொல்லப்பட்ட வழக்கில வேந்தனை அரெஸ்ட் செய்திருக்கிறம். அதுக்கு இருக்கிற ஒரே சாட்சி நீங்கதான். கொழும்பில இருந்து இங்க வந்த வரைக்கும் என்ன நடந்தது எண்டு சொல்லுங்க. சின்ன விசயம்தானே எண்டு எதையும் விட்டுடாதீங்க.”
முதலில் அவள் வருவதற்குப் பிரியப்படாதது, பின் வந்தது, இருவர் வந்து காரில் அவளை அழைத்துப்போனது, அன்று இரவு அவர்கள் உடைகள் தந்தது, தான் மேலே உறங்கச் சென்றது, உறக்கம் வராமல் எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றபோது கேட்ட சத்தம், இறங்கி ஓடி வந்தது, புகையும் நெருப்புமாக மேலெழும்புவதைக் கண்டுவிட்டு மறுபடியும் மொட்டை மாடிக்கே ஓடிப்போனது, அங்கிருந்த சுற்றும் படியால் இறங்கி தப்பிக்க முயல்கையில் வேந்தன் குழுவிடம் மாட்டிக்கொண்டது, ஒரு வாரம் வேந்தன் தன் வீட்டில் அவளைச் சிறை வைத்திருந்தது, அதற்கு அவன் சொன்ன அந்தக் காதல் கதை, பின்னர் வாசுசேனனிடம் அவள் கைமாற்றப்பட்டது என்று அத்தனையையும் சொன்னாள்.
அப்போதுதான் கேதகியைக் கொல்லாமல் வேந்தன் எதற்குத் தூக்கிக்கொண்டு போனான் என்று எல்லாளனுக்குப் புரிந்தது. “அவன் ஏதும் உங்களிட்டத் தவறா நடந்தவனா?” என்றதும் அவளுக்கு முகம் சிவந்து கன்றிப்போயிற்று. எல்லாளனைப் பார்க்க முடியாமல் பார்வையைத் தழைத்தாள்.
அதுவே என்னவோ நடந்திருக்கிறது என்று சொல்ல, அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்தாள் ஆதினி. “நானும் உங்களோடதான் இருக்கிறன். அதைவிட அவரை ஆம்பிளையா பாக்காம ஒரு போலீஸ் அதிகாரியா நினைச்சுச் சொல்லுங்கோ. அவர் என்ர அண்ணா. அவரும் போலீஸ்தான்.” என்று அகரனைக் காட்டியும் சொன்னாள்.
சட்டென்று கன்னத்தில் இறங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “இல்ல, அது… கையால தொட்டு… பார்வையால கழுத்துக்கு கீழ… கொஞ்சம் கொச்சையா கதைச்சு… ஒருக்கா கிஸ் பண்ண வந்தவன். நான் விடேல்ல எண்டு அடிச்சவன்.” என்று சொன்னாள் அவள்.
முகம் துடைக்கப் பேப்பரும், அருந்த தண்ணீரும் எடுத்துக் கொடுத்தான் அகரன். அவள் தண்ணீரை அருந்தி, கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிரவும், “வாசு?” என்றான் எல்லாளன் சுருக்கமாக.
“ஐயோ இல்ல. அவர் நல்லவர். நான் கதைக்க போனா கூட பக்கத்திலயும் எடுக்க மாட்டார்.” என்று அவசரமாகச் சொன்னாள் அவள்.
அப்படி அதை அவள் சொன்ன வேகம் கண்டு ஆதினியிடம் எல்லாளனின் பார்வை ஒருமுறை சென்று வந்தது. கதிரவன் சொன்ன சில விடயங்களும் அவன் கவனத்தில் இருந்தன.
அவனுக்குள் என்ன ஓடுகிறது என்று அறியாத கேதகி, அவன் தான் சொன்னதை நம்பவில்லையோ என்றெண்ணி, “அங்க நான் மட்டும்தான் ஒரு பொம்பிளை. எனக்குத் தேவையான எல்லாமே வாங்கித் தந்தவர். முதுகில வெட்டு விழுந்த நேரம் முழுக்க முழுக்க என்னைப் பாத்தது அவர்தான். ஒரு ஆம்பிளை பார்வையாலயே ஒரு பொம்பிளையை எப்பிடிக் குறுகிப்போக வைப்பான் எண்டு வேந்தன் எனக்குக் காட்டினவன். ஆனா ஒரு ஆம்பிள தாய்க்குச் சமமா எப்பிடி ஒரு பொம்பிளையப் பாப்பார், எப்பிடிப் பாதுகாப்பா உணர வைப்பார் எண்டு சேனா… அது வாசுசேனன் காட்டினவர். அவர் ஏன் இப்பிடி எல்லாம் நடக்கிறார் எண்டு எனக்குத் தெரியாது. ஆனா நல்லவர்.” என்று சொல்லும்போதே அவள் விழிகளில் இருந்து மறுபடியும் கண்ணீர் இறங்கிற்று.
அவனை யாரும் தவறாக எண்ணிவிடக் கூடாது என்கிற தவிப்பு அவளிடம். அது அங்கிருந்த மற்ற மூவருக்குமே தெளிவாகப் புரிந்தது.
“அப்ப நீங்க உங்கட அப்பான்ர வீட்டில நேரடியா கீழ என்ன நடந்தது எண்டு பாக்கேல்லை?” என்று தன் விசாரணையை மீண்டும் தொடர்ந்தான் எல்லாளன்.
“இல்ல, பாக்கேல்லை. இன்னும் சொல்லப்போனா அவே உயிரோட இருக்காயினம் எண்டு அறிவு சொன்னாலும் உண்மையாவே அவே எல்லாரும் செத்துப்போயிட்டினமா, இல்ல ஆராவது தப்பி இருக்கினமா எண்டுற கேள்வி எனக்குள்ள இப்ப வரைக்கும் இருந்துகொண்டேதான் இருந்தது. நீங்க சொன்ன பிறகுதான் எல்லாருமே செத்திட்டினம் எண்டு தெரிஞ்சது.” என்று சொன்னாள் அவள்.
“நீங்க தப்பி ஓடி வரேக்க உங்களைப் பிடிச்சது வேந்தன் எண்டு தெரியுமா?” இதைக் கேட்டது ஆதினி.
“இல்ல, எல்லாரும் மிக்கி மவுஸ் முகமூடி போட்டிருந்தவே. நானும் பயத்தில மயங்கிட்டன். அவன்ர வீட்டுக்கு போன பிறகுதான் வேந்தன் முகம் காட்டினவன்.”
“உங்கட அப்பா ஏதும் எதைப் பற்றியாவது சொன்னவரா?” எல்லாளன் கேட்டான்.
“இல்லை. அவரோட நான் கதைக்கிறேல்ல. அவர் கதைக்க வந்தாலும் விடுறேல்ல.”
கொஞ்ச நேரம் யோசித்த எல்லாளனின் பார்வை, ஒரு முறை மனைவியிடம் சென்று வர, “வாசு ஏதாவது உங்களிட்டச் சொன்னவனா?” என்று கேட்டான்.
மறுத்துத் தலையசைத்தாள் அவள். “தேவை இல்லாம ஒரு வார்த்தை கூடக் கதைக்க மாட்டார்.”
“அவனுக்கு மனுசி பிள்ளை இருக்கு எண்டுமா சொல்லேல்ல?” அவனுக்கே தெரியாதபோது அவன் எப்படிச் சொல்லுவான்? எல்லாளனுக்குத் தேவை அதைக் கேதகிக்குத் தெரியப்படுத்துவது.
“மனுசி பிள்ளையா?” வாய் விட்டே அதிர்ந்தாள் கேதகி. பொல பொலவென்று கண்ணீர் கொட்டிற்று அவளுக்கு. ஏமாற்றம் ஒன்று மனமெங்கும் பரவிப் படர்ந்தது.
ஆம் என்பதுபோல் தலையசைத்தான் எல்லாளன். ஆதினியின் கைப்பேசியை எடுத்து அதிலிருந்த மிதிலாவையும் அதிரனையும் காட்டினான். அதிரன் மிதிலாவின் சாயலில் இருந்தாலும் வாசுசேனனின் மகன் என்று அப்பட்டமாகச் சொன்னான். பார்த்தவளுக்குக் கண்ணீர் நிற்பதாக இல்லை.
பிறகு ஏன் அவன் இப்படித் தனியாக இருக்கிறான் என்கிற கேள்வி, சிவந்து கண்ணீர் தேங்கியிருந்த விழிகளில் தொக்கி நிற்க எல்லாளனையும் ஆதினியையும் பார்த்தாள் கேதகி.
அந்தப் பார்வைக்குப் பதிலிறுக்கப் போகாது, “இஞ்ச உங்களுக்கு ஆரும் சொந்தக்காரர், தெரிஞ்சவே இருக்கினமா?” என்று விசாரித்தான் எல்லாளன்.
வாசுசேனனைத் தவிர யாரையும் தெரியாதே. இனி அவனும் அவளுக்குத் தெரியாதவன்தான். நெஞ்சடைக்க இல்லை என்று தலையசைத்தாள் அவள்.
“அப்ப எங்கட வீட்டிலேயே நிண்டு ரெஸ்ட் எடுங்கோ. மிச்சத்தை நாளைக்குக் கதைப்பம். ஒண்டுக்கும் பயப்பிடாதீங்க. எல்லாம் முடிஞ்சதும் நீங்க கொழும்புக்கே போகலாம். பழையபடி சுதந்திரமா இருக்கலாம். உங்கட வேலைக்கு எந்த ஆபத்தும் வராது. அதைத் திரும்பவும் வாங்கித் தாறது என்ர பொறுப்பு.” என்று தேற்றி, அவளை அகரனோடு அனுப்பிவைத்தான் எல்லாளன்.

