ஆட்டநாயகன் 35.1

யாழ்ப்பாணத்தை நெருங்கியதும் எல்லாளன் நேராக வீட்டுக்கு விடச் சொன்னான். அதைக் கேளாமல் வைத்தியசாலைக்கு அழைத்துப்போனான் கதிரவன். தையல் போட்ட இடத்தை ஆராய்ந்து, புதிதாகக் கட்டுப்போட்டு, வைத்தியர் கடிந்துகொண்டதையும் கேட்டுக்கொண்டு, அவர் எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டு வீடு வந்தபோது, சூரியன் அன்றைய தன் வேலையை முடித்துக்கொண்டிருந்தான்.

அவனைக் கண்டு வீட்டினர் எல்லோரும் அதிர்ந்துபோயினர். அந்தளவில் இரத்தப் பசை இழந்து, சோர்ந்து, வாடியிருந்தான். அது கூடப் பரவாயில்லை. அவன் விழிகள் ஏதோ ஒரு வகையான மரண வேதனையைச் சுமந்திருந்தன.

“என்னடா, ஏன் இப்பிடி இருக்கிறாய்?” என்று விரைந்து வந்த அகரனையோ, “என்னண்ணா, காய்ச்சல் விடவே இல்லையா?” என்றுகொண்டு வந்த சியாமளாவையோ கவனிக்காமல், எப்படி இருக்கிறாள் என்பதுபோல் ஆதினியைப் பார்த்தான் எல்லாளன்.

அவளுக்கு என்ன? முழு நாளும் ஓய்வில் இருந்ததும், சுற்றி இருந்த குடும்பத்தின் நல்ல கவனிப்புமாக நன்றாகவே தெளிந்திருந்தாள். ஆனால் அவன்?

எல்லோர் முன்னும் எதையும் சொல்ல முடியாமல் ஆதங்கத்துடன் அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். இந்த நிலையிலும் அவன் ஓட்டம் எதற்கு என்று அவளுக்கு தெரியாமல் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் உள்ளத்தில் இருக்கிற பரிதவிப்பும் போராட்டமும் அவளுக்குள்ளும் உண்டு. அதனால்தான் காலையில் அவன் புறப்பட்டபோது ஒன்றுமே சொல்லாமல் அனுப்பிவைத்தாள்.

ஆனால் இப்போது வந்து நிற்கிறவனைப் பார்த்தபோது அழுகை வரும் போலாயிற்று. அப்படி அழுதால் கோபப்படுவான். தனக்குத் தன்னைப் பார்க்கத் தெரியாதா என்பான். அவள் அவனையே பார்த்தபடி அமர்ந்திருக்க, “மேல போவம் வா!” என்றான் அவளிடம்.

“நீ மேல ஒண்டும் கிழிக்க வேண்டாம். கெஸ்ட் ரூம் ஒண்டுலதான் ஆதி இண்டைக்கு முழுக்க இருந்தவள். நீயும் அங்க போ.” என்று கோபத்துடன் இடைமறித்துச் சொன்னான் அகரன்.

அப்போதும் அப்படியா என்பதுபோல் ஆதினியைத்தான் பார்த்தான் எல்லாளன். ஆதினி ஒன்றுமே சொல்லவில்லை. எழுந்து, “வாங்க!” என்று அவள் இருந்த அறைக்குள் அழைத்துக்கொண்டு போனாள்.

கதவை அவள் சாற்றிய கணத்தில் அவளைக் கட்டிக்கொண்டு தோள் வளைவில் முகம் புதைத்தான் எல்லாளன். ஆதினிக்குக் காரணமறியாப் படபடப்பும் பதற்றமும். இலேசில் எதற்கும் கலங்காதவனாயிற்றே. “என்னப்பா?” என்றாள் அவன் முதுகை வருடிக்கொடுத்தபடி.

அவன் பதில் சொல்லவில்லை. எதற்கோ பயந்து அன்னையின் மார்புக்குள் ஒளிந்துகொள்ளும் குழந்தை போன்று இன்னுமின்னும் அவளுள் புதைந்து, எதிலிருந்தோ தப்பிக்க முயன்றான்.

“அவர் அண்ணா இல்லையா?” என்றாள் குரல் அடைக்க. வேறு எதற்கும் அவன் இப்படி உடைவான் என்று அவள் நினைக்கவில்லை.

“இல்ல, அவன் காண்டீதான்.” என்றான் மெல்ல நிமிர்ந்து.

“பிறகும் ஏன் இப்பிடித் தவிக்கிறீங்க? என்ன எண்டாலும் பாக்கலாம்.” என்று அவனுக்குத் தைரியம் கொடுத்தபடி, வாடிக் களைத்திருந்த அவன் முகத்தைத் தன் இரு கைகளாலும் துடைத்துவிட்டாள்.

கொஞ்ச நேரம் அந்தச் சுகத்தை அனுபவிக்கிறவன் போன்று நின்றுவிட்டு, “இதுக்கு அவன் செத்திருக்கலாம்.” என்று குரலடைக்கச் சொன்னான் எல்லாளன்.

அவன் முகத்திலேயே கைகள் நின்றுவிட திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் ஆதினி.

இன்னதுதான் நடந்திருக்கிறது என்று தெரியாதபோதும் சிறை, அங்கு நடக்கும் கொடுமைகள் பற்றி அவளும் அறிவாள். கலக்கத்துடன் அவனையே பார்க்க, “எந்தக் காலத்திலயும் அவனுக்குப் பழைய நினைவு திரும்பவே கூடாது எண்டு கடவுளக் கேள் ஆதி.” என்றான் மிகுந்த வருத்தத்தோடு.

ஆதினியின் தொண்டை ஒரு முறை ஏறி இறங்கிற்று. அப்படி என்ன நடந்தது என்று கேட்கவே பயந்தாள். அவன் தலையில் இருக்கிற வெட்டுக்காயத்தின் அடையாளம், இயல்பே மாறிப்போய் நிற்கிற அவன் நிலை எல்லாம் என்னென்னவோ பயங்கரங்களையெல்லாம் அவளுள் தோற்றுவித்தன.

அவன் முகத்தையே பார்த்துவிட்டு, “அந்தச் சத்தியநாதன், அண்ணாவை அந்தளவுக்குக் கொடுமப்படுத்தி இருக்கிறானா?” என்று கலக்கத்தோடு வினவினாள்.

அவன் ஆம் என்று தலையை அசைத்தான். “செத்துப் பிழைச்சு வந்திருக்கிறான். அவனுக்காக என்ர யூனிபோர்ம்ல கறை படுறதில எனக்குக் கவலையே இல்ல ஆதிம்மா. அவனுக்கு நடந்த அநியாயத்துக்கு ஏதாவது செய்யோணும். அப்பதான் என்ர மனம் கொஞ்சமாவது ஆறும்.” என்று சொல்லிவிட்டு, “நாளைக்கு யூனிபோர்ம் போடேலாத நிலை கூட எனக்கு வரலாம். அப்பிடி வந்தா கவலைப்படுவியா?” என்றான் அவளிடம்.

“இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கே தெரியும்.” என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு, “இண்டைக்கு இருக்கிற அண்ணாக்கு எதுவும் தெரியாம இருக்கலாம். ஆனா காண்டீபன் அண்ணான்ர ஆசை எண்டைக்கும் உங்கட யூனிபோர்ம நீங்க கழட்டக் கூடாது எண்டுறது. நானும் சொல்லுறன். அத நீங்க கழட்டக் கூடாது. அந்த நிலைக்கு உங்களை நீங்களே கொண்டு போகாதீங்க. இத எனக்காகச் சொல்லேல்ல. உங்கட துறைல உங்களை மாதிரி நேர்மையான அதிகாரிகள் சரியான குறைவு. மக்களுக்கு நீங்க வேணும். அநியாயங்களத் தட்டிக் கேக்க, இந்தச் சமுதாயத்த நல்ல வழில நடத்த உங்களை மாதிரி ஆக்கள் கட்டாயம் வேணும். அதை மட்டும் மைண்ட்ல வச்சுக்கொண்டு என்ன செய்யோணுமோ அத்தனையையும் செய்ங்கோ.” என்றவளை இமைக்காது பார்த்தான் எல்லாளன். அவன் உள்ளம் பெருமையில் ததும்பியது.

“எல்லா அநியாயத்தையும் எங்களால சட்டத்துக்கு முன்னால நிப்பாட்ட முடியிறேல்ல தானே? அப்பிடியே நிப்பாட்டினாலும் சரியான சாட்சி இல்லாம எத்தினை குற்றவாளிகள் தப்பினம்? சட்டம் காட்டுற கருணையப் பயன்படுத்தியே கேடுகெட்டவன் எல்லாம் வாழுறான். ஆனா நீங்க எந்த நல்லவனையும் தண்டிக்கப் போறேல்ல. இன்னும் சொல்லப்போனா இந்தச் சமுதாயத்துக்கு நல்லதுதான் செய்யப்போறீங்க. அதால நேர்மை தவறி நடக்கிறேனோ, சட்டத்துக்குப் புறம்பா நடக்கிறேனோ எண்டு எண்டைக்கும் நினைக்காதீங்க. உங்களால எந்த நல்லவனையும் காயப்படுத்தேலாது. எனக்கு என்ர எல்லாளனைத் தெரியும்.” என்றதும் திரும்பவும் அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான் அவன்.

“தையல் போட்ட இடம் வலிக்கப் போகுது.” என்று அவனுக்குச் சொல்லிவிட்டு, “எனக்கு விளங்குற மாதிரிக்கு அந்த சத்தியநாதன் உயிரோட இருக்கிற வரை அண்ணாவை அவன் கொடுமை செய்திருக்கோணும். இண்டைக்கு அண்ணா எங்களுக்குக் கிடச்சதுக்கு அண்டைக்கு அவன் செத்ததும் ஒரு காரணம். உங்களுக்கு விளங்குதா நான் சொல்லுறது?” என்றவளிடம் ஆம் என்று தலையசைத்தவனின் உள்ளம் அப்போதுதான் ஓரளவிற்குச் சமன்பட்டிருந்தது.

error: Alert: Content selection is disabled!!