தன் வேலையோடு, சரசுவுக்கு உறுதியளித்தபடி, இயன்ற அளவை விட அதிகமாகவே பிள்ளைகளைக் கவனிக்க முயன்றாள், கயல்விழி. பூபாலன் அதற்கும் மேலே சென்று சமையல், வீட்டு வேலைகளோடு பிள்ளைகளின் வேலைகளையும் தானே பார்க்க நின்றான்.
“நீர் இன்னும் கொஞ்ச நாளில போன பிறகு நான் தானே செய்யப் போறன், இப்பவே செய்யிறன் விடும்.” இதையே பலதடவைகள் சொல்லி, பிள்ளைகளினுடனான பிரிவை எண்ணி எண்ணி ஏற்கனவே துவண்டு நின்றவளுக்கு மேலும் எரிச்சல் ஊட்டினான்.
அதுவரை, அதிக நேரம் அவ்வளவாகக் கதைக்காவிட்டாலும் கதைக்கும் போதெல்லாம் அன்பாகக் கதைப்பவன், இப்போதெல்லாம் வெடு சுடு தான்.
அன்று, “நாளைக்கு நேரத்துக்கே நான் வெளில போகோணும். மத்தியானம் வந்திருவன், அதுவரைக்கும் சமாளிக்க ஏலுமா கயல்?” கேட்டிருந்தான். அவள் பதில் சொல்லவில்லை, நகர்ந்து விட்டாள்.
மறுநாள், பிள்ளைகள் எழ முதல் எழுந்து வந்தவள், கைகளை இடுப்பில் வைத்து முறைத்தபடி தான் சமையலறையில் நின்றாள்.
நிற்க வைத்திருந்தான், பூபாலன்.
‘உண்மையாவே இவருக்கு தட்டிட்டு. என்ன நினைச்சு இப்பிடிச் செய்யிறார். நீ இங்க இருந்தது காணும் போ எண்டு செயல்களில காட்ட நினைக்கிறாரா?’ மனம் கோணியது.
பார்வையோ, ‘எல்லாம் செய்து ரெடியா இருக்கு பேக் பண்ணினால் சரி’ என்று ஓவனில் ஒட்டப்பட்டிருந்த துண்டுச் சீட்டில் இருந்து நகர்ந்து, செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த ரைஸ் குக்கரில் பதிந்துவிட்டு அடுப்புக்குச் சென்றது.
மூடியிருந்த பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள். கத்தரிக்காய் பிரட்டல். பட்டென்று மூடிவிட்டுத் திரும்ப, ‘சின்னவனுக்கு வேண்டிய மரக்கறி எல்லாம் வெட்டி பானில இருக்கு. அவிச்சு எடுத்தாச் சரி’ குளிரூட்டியில் ஒரு துண்டு.
சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டு, ‘உப்ப்!’ பெருமூச்சோடு கோப்பி ஒன்றைப் போட்டு எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தவள், பூபாலனை புரிந்து கொள்ள முயன்றாள். இருந்தும் தன்னுடனான அவன் சிடுசிடுப்பை மட்டும் நியாயப்படுத்தவே முடியவில்லை. அவளுக்குப் பக்கச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காயு தன்னையே பார்ப்பது போலிருந்தது.
‘முன்னப் பின்ன பிள்ள வளத்தோ தூக்கிப் பராமரிச்சோ பழக்கமே இல்லாத ஆள் நான் காயு; நீர் சொல்ல சொல்ல ஒண்டு ஒண்டும் செய்துதான் உம்மட பிள்ளைகளப் பார்த்தனான். பிறகு, இப்ப வரைக்கும் என்னால இயன்றளவுக்கு கவனமாப் பார்த்துக்கொண்டிருக்கிறன். இனி?’ நிறைந்துவிட்ட கண்கள் சிமிட்டிலில் கசிந்தன.
‘எனக்குமே அவே ரெண்டு பேரையும் விட்டுப் போட்டு எப்பிடி இருக்கப் போறன் எண்டு தான் இருக்கு. ஆனா என்ன செய்யிறது சொல்லும்? நீர் இங்க இல்ல எண்டாலும் எப்பவும் அவேக்கு நீர் தான் துணையா இருக்க வேணும்.’
அளவான இனிப்பு, கசப்பு என்று கலந்திருந்த எப்போதும் விரும்பிக் குடிக்கும் பால் கோப்பி சுவையற்றுத் தெரிந்தது. அப்படியே வைத்துவிட்டுக் கால்களை தூக்கிக் குறுக்கிக்கொண்டு அமர்ந்தவள், காயுவைப் பாத்துக்கொண்டே இருந்தாள்.
‘எல்லாத்துக்கும் முதல் உம்மட மனுசன் மூஞ்சியத் தூக்கி வச்சிக்கொண்டு சிடுசிடுக்கிறார். என்னை விடும், இன்னும் எத்தினை நாளுக்கு அதையெல்லாம் பாக்கப் போறன்! லாதி முகம் சுருங்கிப் போறாள், காயு. சின்னவனுக்கு என்ன தெரியும் சொல்லும்.’ அவள் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்ற மாதிரி மன ஆதங்கத்தைக் கொட்டிக்கொண்டு இருந்தாள்.
‘பேசாமல் பிள்ளைகள நான் வீட்ட கூட்டிக்கொண்டு போயிறவா காயு?’ கேட்டவள், முழங்காலுள் முகத்தைப் புதைத்து விம்மினாள்.
“சூட்…டி” அவள் போட்டிருந்த பிஜாமாவின் கால் பக்கத்தில் இழுபட்டது.
அனிச்சையாய் திடுக்கிட்டு விட்டாள். கைகோர்த்த செயலாய் நெஞ்சு படீர் படீரென்று அடிக்க ஆரம்பித்திருந்தது. அதன் பின்னரே குரலை இனம் கண்டுகொண்டாள். அங்கோ, கண்களைக் கசக்கிக்கொண்டு நின்றிருந்தான், சின்னவன்.
“ச்சு ச்சு செல்லக்குட்டி எழும்பிட்டிங்களா? சத்தமே போடேல்ல!” அப்படியே அணைத்துத்தூக்கி மடிக்குள் வைத்து கட்டிக் கொண்டவள் பார்வை காயுவையே நாடிற்று.
முதலில் லாதியைத் தன்னுடன் தூங்க வைத்த பூபாலன், காயுவின் அன்னையின் இறப்புக்குச் சென்றுவந்த அன்றிலிருந்த இவள் பின்னலை பிடித்து உருட்டிக்கொண்டே தூங்கும் ஆதித்தையும் சிணுங்க சிணுங்க தூக்கிச் சென்று விடுவான்.
விடிய நாலு மணிபோல் பாலுக்கு எழும் சின்னவன், பெருத்த அடம்பிடித்து இவளிடம் வந்து விடுவான். அது எல்லாம் பூபாலனுக்கு பெரும் எரிச்சலை உண்டு பண்ணியது.
“என்ன பழக்கம் பழகி இருக்கிறான், இப்பவே இவ்வளவு அடம்.” என்று ஆரம்பிப்பவன், “அதென்ன பின்னலப் பிடிச்சுக்கொண்டு தூங்கிறது ம்ம்? அக்கா எல்லாம் அப்படித் தூங்கிறேல்ல. தன்ர பாட்டில தூங்குவா. உனக்கு பக்கத்தில ஒரு ஆள் வேண்டிக் கிடக்கு!” குழந்தைக்கு விளங்கும் என்ற வகையில் சொல்வதெல்லாம் தனக்கே போலிருக்கும் கயல்விழிக்கு.
‘எனக்கு அப்ப அவன் தூங்கினா காணும் எண்டு இருந்தது காயு.’
குழந்தையைக் கொஞ்சிக்கொண்டு காயுவைப் பார்த்தவள், ‘கனவில சரி வாறீர் ஓகே. நல்ல பேச்சும் முதுகு கிழிய நாலு அடியும் குடுக்கிறீர். அதோட உம்மட மனுசன ஒரு டோப் வாங்கிப் போட்டுக்கொண்டு பிள்ளையத் தூங்க வைக்கச் சொல்லுறீர் சரியோ?” என்றவளுக்கு, அவள் நினைவு சென்ற விதமே முறுவலைக் கொண்டு வந்திட்டு.
அதன் பிறகு ஓய்ந்து அமரவில்லை. லாதியும் எழுந்துவர அவர்களின் காலை வேலைகளைப் பார்த்துத் தானும் முடித்துக் கொண்டவள், “வேலைக்குச் சைன் வச்சாச்சு!” கணனியை இயக்கி வைத்தாள்.
சின்னவன் ‘ப்ளேபென்’னுள் இருந்து சுற்றிக் குவிந்திருந்த விளையாட்டுப் பொருட்களில் மூழ்கி விட்டான். லாதி, கயல் பார்வையில் தெரியும் வகையில் கயல் தங்கும் அறைக்குள் இணைய வழி வகுப்பில் அமர்ந்துவிட, இரு பிள்ளைகளிலும் கவனம் பதித்தபடி வேலையைச் செய்து கொண்டிருந்தாள், கயல்விழி.
மத்தியானம் பதினொன்று வாக்கில் எழுந்தவள், கோழியை பேக் பண்ணி பிள்ளையின் மரக்கறியை அவித்து, லாதியின் உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு, சின்னவனை உணவுண்ணும் இருக்கையில் அமர்த்தினாள். அவன் முன்னால் தட்டை வைத்து, கொஞ்சம் சோறும் மசித்த சிக்கன் துண்டுகளையும் வைக்க, இடக்கையின் முதல் இரு விரல்களாலும் நுள்ளி எடுத்து செப்பு வாய் திறந்து உள்ளே வைத்தான். மேலும் கீழுமாக முன்னால் முளைத்திருந்த ஐந்து பற்களாலும் நன்னி நன்னி அவன் உண்பதே அவ்வளவு அழகாக இருந்தது.
“எங்கட செல்லக்குட்டியன் கெட்டிக்காரனே!”
“யெஸ் யெஸ் அப்பிடித்தான் சாப்பிடோனும். இங்க அக்காவப் பாருங்க, இப்பிடி எடுத்து ஆ செய்து இப்பிடி வச்சி நல்லாச் சப்பி விழுங்கோணும்.” தம்பிக்காரனோடு விளையாடிபடிதான் உண்டு கொண்டிருந்தாள், லாதி.
அவித்து நருவலாக மசித்திருந்த கோழிச் சதை, உருளைக்கிழங்கு, மரக்கறிகள், பாலாடைக்கட்டி சேர்த்த உணவுக் கிண்ணத்தோடு கயல் அவன் முன்னால் அமரவும் பூபாலன் உள்ளே வரவும் சரியாகவிருந்தது.