அத்தியாயம்-34
மனைவியை அதிர்ந்துபோய் பார்த்தான் ரஞ்சன். அவளின் கேள்விகள் சாட்டைகளாய் மாறி நெஞ்சில் கோடிழுத்தன.
இன்று இப்படிக் கேட்பவள் இவ்வளவு நாளும் அவன் அணைக்கையில் உருகியதும் மார்போடு ஒன்றியதும் பொய்யா? அவனைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டாளே.. அதெல்லாம்…?
இல்லையே.. அதெல்லாம் பொய்யில்லையே!
அவள் விழிகளில் கசிந்த காதல், அவனைக் கவனித்துக் கொள்வதில் காட்டிய கருணை, அவன் மீது அவள் கொண்ட அக்கறை, நேசம், பாசம் இப்படி எதுவும் பொய்யில்லையே!
பிறகும் ஏன் இப்படிப் பேசுகிறாள்?
அதுவும், ‘கணவனாக வாழ்ந்துவிட்டு என்னை விட்டு ஓடமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?’ என்று அவள் கேட்டதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
காதலித்துவிட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிவதும் கட்டிய மனைவியைக் கைவிடுவதும் ஒன்றா?
இவ்வளவு நாளும் அவன்மீது நம்பிக்கை இல்லாமல், எப்போது என்னைக் கைவிட்டு விடுவானோ என்கிற பயத்துடன்தான் அவனோடு குடும்பம் நடத்தினாளா?
அவன் மனவோட்டம் அறியாமல் தன் மனதில் இருந்த அத்தனை ஆத்திரங்களையும் குமுறல்களையும் சீறிப்பாயும் எரிமலையெனக் கொட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.
“உங்களை மலைபோல நம்பினேனே, என் நம்பிக்கையைக் கொன்ற துரோகி நீங்கள்! உயிராய் உங்களைக் காதலித்தவளை ஏமாற்ற நினைத்த ஏமாற்றுக்காரர்! செய்வதை எல்லாம் செய்துவிட்டு இன்று வந்து நல்லபிள்ளைக்கு நடிக்கும் உங்களுக்கு என்னைப் பார்த்து நடிக்கிறாயா என்று கேட்க எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்?”
அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கூர் ஈட்டிகளாய் வந்து அவன் நெஞ்சைப் பதம் பார்த்தன.
தாய் பொறுப்பில்லாதவன், சுயநலக்காரன், பேராசைக்காரன் என்கிற பட்டங்களை வழங்கினார் என்றால் தாரம் நம்பிக்கைத் துரோகி, ஏமாற்றுக்காரன், நடிப்பவன் என்கிற பட்டங்களை வழங்குகிறாள்.
இன்னும் என்னவெல்லாம் அவனுக்காகக் காத்திருக்கிறது?
“உன்னை நான் வருத்தியிருக்கிறேன் தான். ஆனால், அதெல்லாம் நம் திருமணத்துக்கு முதல் நடந்தவைகள். இப்போது உனக்கு என்ன குறை வைத்தேன்? இந்த மூன்று மாதங்களாக நாம் மகிழ்ச்சியாக வாழவில்லையா? அதை எப்படி உன்னால் நடிப்பு என்று சொல்ல முடிந்தது.” வறண்ட குரலில் தவிப்போடு கேட்டான் ரஞ்சன்.
உண்மைதானே என்று தோன்றினாலும் அதை அவனிடம் ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை அவளுக்கு.
“உங்களோடு போராடி உங்களை நான் திருமணம் செய்துகொண்டதால் தானே இந்த வாழ்க்கை எனக்குக் கிடைத்தது. இல்லையானால் என் கதி என்ன? மானம் மரியாதையை இழந்து நின்றிருப்பேனே. ஆனால் நீங்கள்? இன்னொருத்தியைக் கட்டி அவளுடன் சந்தோசமாக இதே வாழ்க்கையை வாழ்ந்துதானே இருப்பீர்கள்?” என்று குமுறியவளை இயலாமையுடன் பார்த்தான் ரஞ்சன்.
சந்தோசமாக வாழ்ந்திருப்பனா என்றால் நிச்சயமாக இல்லைதான். ஆனால் இன்னொருத்தியை நிச்சயம் கட்டித்தானே இருப்பான். அவன் மனதே அவனைச் சுட்டது.
“இல்லை சித்ரா…
“என்ன இல்லை? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள், இன்னொருத்தியைக் கட்டியிருக்க மாட்டேன். உன்னிடத்தில் வேறு ஒருத்தியை நிறுத்தியிருக்க மாட்டேன் என்று.”
அவனைப் பேசவிடாது ஆணித்தரமாய் அவள் கேட்டபோது, அதிலிருந்த உண்மை அவன் வாயை அடைத்தது.
“சொல்ல முடியாது இல்லையா? இப்போது புரிகிறதா, நீங்கள் எவளையும் உங்கள் மனைவியாக்கி இருப்பீர்கள். அவளுடன் வாழ்ந்தும் இருப்பீர்கள். ஆனால் நான்.. எனக்கு? நீங்கள் மட்டும் தான். உங்களைத் தவிர வேறு எவனையும் உங்கள் இடத்தில் வைத்துப் பார்க்க என்னால் முடியாது! உங்களைக் கட்டியிராவிட்டால் வாழ்க்கையை இழந்து நின்றிருப்பேனே.”
“அப்படி உன் வாழ்க்கையை இழப்பாய் என்று நான் நினைக்கவில்லை. இந்தக் காலத்துப் பெண்ணான நீ சிறிது நாட்களில் என்னை மறந்து இன்னொரு வாழ்க்கையைத் தேடிக்கொள்வாய் என்றுதான் நினைத்தேன்.”
“அதென்ன இந்தக் காலத்துப் பெண்? எந்தக் காலத்துப் பெண்ணாக இருந்தாலும் அவள் மனது என்றுமே ஒன்றுதான்.” என்று சிடுசிடுத்தவள்,
“உங்களைப் போல, ஒருத்தி இல்லாவிட்டால் இன்னொருத்தி என்று ஆட்களை மாற்றிக்கொண்டே இருப்பேன் என்று நினைத்தீர்களா?” என்று சீறினாள்.
“நானும் அப்படியானவன் அல்ல. உன்னையும் அப்படி நினைக்கவில்லை!” என்றான் அவன் அழுத்தமான குரலில்.
இதழ்கள் ஏளனமாக வளைய சித்ரா அவனைப் பார்க்க, “என்னைத் தூக்கி எறிந்துவிட்டு இன்னொருவனைக் கட்டி எனக்கு முன்னால் வாழ்ந்து காட்டுவாய் என்றுதான் நினைத்தேன். அதோடு, ஒரு காதல் தோல்வியாலேயே யாரினதும் வாழ்க்கை அழிந்து விடுவதில்லை.” என்றான் கணவன்.
“அதனால்தான் என்னைக் காதலிப்பதாகப் பொய் சொன்னீர்களா? அதாவது நீங்கள் ஏமாற்றினாலும் என் வாழ்க்கை அழிந்துவிடாது என்று தெரிந்ததால் அப்படிச் செய்தீர்கள் போல.” இகழ்ச்சியோடு கேட்டாள் சித்ரா.
“திரும்பத் திரும்ப அதையே சொல்லி எத்தனை தடவைதான் குத்திக் காட்டுவாய் யாழி?”
“நானென்ன பொய்யா சொல்கிறேன். நீங்கள் செய்ததைத் தானே சொல்கிறேன். அதற்கே உங்களுக்கு வலிக்கிறதே, அன்று கடையில் வைத்து எவ்வளவு உதாசீனமாகப் பேசினீர்கள். எவ்வளவு அலட்சியம் காட்டினீர்கள். அப்போது எனக்கு எப்படி இருந்திருக்கும். அன்றிலிருந்து இன்றுவரை அதையெல்லாம் மறக்கவும் முடியாமல் உங்களை வெறுக்கவும் முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு மருகுகிறேனே, எனக்கு ஏன் இந்த நிலை? எல்லாம் உங்களால் தானே.”
உண்மைதானே! பூவைப்போல இருந்தவளை புயலாக மாற்றிய பெருமை அவனைத்தானே சேரும்!
“என்னால் தான் நீ இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்தாய். நான் பேசியது நடந்துகொண்டது எல்லாமே பிழைதான். நீ சொன்னதுபோல நிச்சயம் நான் இன்னொருத்தியைக் கட்டியிருப்பேன் தான். ஆனால், உன்னோடு வாழ்வது போல என்னால் ஒன்றி வாழ்ந்திருக்கவே முடியாது. அதை நினைக்கவே கசக்கிறது. நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கையே நரகமாகியிருக்கும்.” உணர்ந்து சொன்னான் ரஞ்சன்.
அதைக் கேட்டவளின் விழிகள் கலங்கின.
“இன்று வந்து நீயில்லாவிட்டால் என் வாழ்க்கை நரகம் என்று சொல்கிறீர்களே, இதனால் இனி என்ன பயன்? நடந்தவைகளை மாற்றத்தான் முடியுமா அல்லது நான் இழந்தவைகளை உங்களால் திருப்பித் தரத்தான் முடியுமா?” என்று வலியும்வேதனையும் நிறைந்த குரலில் சொன்னவளைப் புரியாமல் பார்த்தான் ரஞ்சன்.

