எல்லா பிரச்சனைகளும் முடிகிற வரைக்கும் அவனைப் பள்ளிக்கூடத்துக்கு போக வேண்டாம் என்றுவிட்டான் எல்லாளன். இன்னொரு முறை யார் உயிரோடும் விளையாட அவன் தயாராக இல்லை. அவனே நேரில் சென்று சம்மந்தரின் இறப்பு முதல் அவன் உயிருக்கு இருக்கிற ஆபத்து வரை விளக்கி சொன்னதில் பாடசாலையும் கேட்டுக்கொண்டது.
தினமும் இரவில் மகனோடும் மிதிலாவோடும் வீடியோ கோலில் பேசுவான் காண்டீபன். ஆனால் தான் எங்கிருக்கிறோம் என்று கண்டுகொள்ளாதபடிக்குத் தன் பின்னணியை மறைத்துக்கொள்வான். பேசுவதும் எல்லாளனிடம் இருக்கிற இன்னொரு கைப்பேசியில்தான்.
சின்னவன் உறங்குகிறவரை அவனிடம் பேச்சுக்கொடுத்தாலும் கணவன் மனைவி இருவரின் பார்வையும் மற்றவரில்தான். அவன் உறங்கியபிறகுதான் இருவருக்குமே திணறும். இருவருமே அதிகமாய் மற்றவரின் அண்மைக்காய் மிகவுமே ஏங்கினாலும் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தடை இழுத்துப் பிடித்தது.
அவனுக்கு அவன் கடந்து வந்த கசப்புகள் தடை என்றால் அவளுக்கு அவன் ஏன் மனம் விட்டு எதையும் பேசாமல் தள்ளி நிற்கிறான் என்கிற குழப்பம். அவர்களைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளும் சேர்ந்து அவர்களைத் தள்ளி வைத்து வேடிக்கை பார்த்தன.
நெருப்பில் குளித்து வந்தது போல் அத்தனையையும் கடந்து வந்த பிறகும் ஆறுதல் இல்லையே என்கிற ஆற்றாமையோடு, “எங்கட வாழ்க்கை இப்பிடியேதான் போகப்போகுதா தீபன்? ஒரு காலம் நீங்க எவ்வளவோ சொல்லியும் கேக்காம நான் ஒதுங்கிப்போனன். திடீரெண்டு ஒரு நாள் நீங்களே இல்லையாம் எண்டு சொல்லிச்சினம். இப்ப…” என்றவளுக்கு மேல பேசமுடியாமல் போயிற்று.
“மிதும்மா” என்றவனுக்கும் வார்த்தைகள் தடைப்பட்டுப் போயின. குரலைச் செருமிச் சீர் செய்துகொண்டு, “இன்னும் கொஞ்ச நாள். நான் வந்திடுவன். அதுவரைக்கும் கவலைப்படாம தைரியமா இரு.” என்று அவளைத் தேற்றிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் நடுக்கடலில் ஒரு மீன்பிடிக் கப்பலில் இருந்தான்.
அங்கே சிவநாதரால் இருக்க முடியவில்லை. தினமும் அழைத்து எல்லாளனிடம் பேரனைக் கேட்டுக்கொண்டிருந்தார். அன்றும் காலையிலேயே அழைத்து, “என்ர பேரன் எங்க?” என்றார்.
“வருவான்.”
“வராட்டி?”
“போன முறை வந்தவனா இல்லையா?”
“திரும்பவும் பிடிச்சிட்டீங்களே.”
“ஓகே! நாளைக்கு வருவான்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்த எல்லாளன் உதட்டில் முறுவல்.
போன முறை லட்டுப் போன்று கிடைத்தவனை அப்படிச் சும்மா விட்டுவிட்டு நிற்க அவன் என்ன ஏமாளியா? அதுவும் உயிரற்றுக் கிடந்த சம்மந்தரின் உடலைக் காண்டீபன் வந்து பார்த்துவிட்டுப் போனதை சட்டமோ நீதிமன்றமோ சாதாரணமாக விட்டுவிடாது.
நிச்சயமாக அதற்குச் சரியான சாட்சிகளை அவர்கள் வைத்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாய் அவனுக்கும் ஏதோ ஒரு தண்டனை கட்டாயம் கிடைக்கும் அதனாலேயே யோசித்து சிவநாதரின் பேரனின் கைப்பேசியில் அவனைப் பின் தொடரும் ஆப்பினை செயல்படுத்தி, அதனைத் தன்னுடையதோடு இணைத்திருந்தான்.
கிரைம் பிராஞ்சில் இருந்த நண்பன் அதனை டெக்னிக்களாக செயல்முறைப்படுத்த அவனுக்கு உதவியிருந்தான்.
அவனை அவர் அனுராதபுரத்தில் யாருமே கண்டுபுடிக்க முடியா வகையில் உயர்தர ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்திருந்தார். அவர் அறியாமலேயே அவனை இவன் ஆள் ஒருவன் கண்காணித்துக்கொண்டேயிருந்தான். தேவை என்று வருகையில் அலுங்காமல் குலுங்காமல் அள்ளிக்கொண்டான்.
அடுத்த நாள் காலை, “தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சியின் தலைவர் சிவநாதரின் பேரன் கஜன் சத்தியநாதன் பெரும்தொகையான போதைப்பொருள்களோடு கைது” என்கிற அவசரத் செய்திதான் சிவநாதரின் தலையில் இடியாக விழுந்தது.
அது போதாது என்று அந்தச் செய்தியின் தொடர்ச்சியாக அவன் தகப்பன் சத்தியநாதன் இதே போதைப்பொருள் கடத்தலில் இருந்து, யார் என்று இனம் தெரியாதவர்களால் கோரமாகச் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டது தொடங்கி, கஜனின் சித்தப்பா ஒருவனும் இதே போன்ற போதைப்பொருள் கடத்தலின் போது எஸ்எஸ்பி எல்லாளனால் சுட்டுக்கொல்லப்பட்டது, இன்னொரு சித்தப்பா கொலை கொள்ளைக் குற்றங்கள் புரிந்து தூக்குத் தண்டனைக் கைதியாக இருப்பது வரை திரும்ப திரும்பச் சொல்லப்பட்டது.
அதனோடு கூடவே தூக்குத் தண்டனைக் கைதியாக இருக்கும் சதீஸ்வரனுக்கு அவன் அன்னையால் இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருக்கும் கருணை மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், இப்படியான சொந்த நாட்டையே சுடுகாடாக மாற்ற முயலும் ஒரு குடும்பத்திற்கு ஜனாதிபதி சிறு கருணையும் காட்டக் கூடாது என்றும் காரசாரமாக செய்திகள் பரவிக்கொண்டிருப்பதைக் கண்டு நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டார் சிவநாதர்.
இத்தனை வேகமாக ஒரு செய்தி எப்படி பரவ முடியும்? அத்தனையும் திட்டம் போட்டுக் கச்சிதமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று புரிந்தது. வெறிகொண்ட மிருகமாகி எல்லாளனுக்கு அழைத்தார்.
“எல்லாளா! இத நீ செய்தே இருக்கக் கூடாது. என்ர மொத்தக் குடும்பத்தையும் கருவருத்திட்டியேடா நம்பிக்கைத் துரோகி!” என்றவரின் பேச்சைக் கேட்டுக் கடகடவென்று சிரித்தான் எல்லாளன்.
“கோபம் வருதா உனக்கு? ஆத்திரம் வருதா? என்னை ஏதாவது செய்யோணும் மாதிரி இருக்கா? ஆனா எனக்கு இன்னும் வெறி அடங்கவேயில்லையே கிழவா? என்ன செய்யலாம்?” என்று அவரிடமே திருப்பிக் கேட்டான்.
பட்டென்று அழைப்பைத் துண்டித்தவருக்கு ஆத்திரம் அடங்கவேயில்லை. நிதானம் என்பது மருந்துக்கும் இல்லை. இனியும் அவர் எதற்காகப் பொறுத்திருக்க வேண்டும், இல்லை யாருக்காகப் பொறுத்திருக்க வேண்டும்?
அந்த நிமிடமே கூலி ஆட்களைப் பிடித்து எல்லாளனை மொத்தமாக முடிக்க ஏவிவிட்டார். அன்று வைத்தியசாலைக்குப் போய்க்கொண்டிருந்த எல்லாளனை இரண்டு வாகனங்களில் வந்தவர்கள் சுற்றிவளைத்தார்கள்.
இதை எல்லாளன் எதிர்பார்த்துத்தான் இருந்தான். இன்னும் சொல்லப்போனால் இது நடக்க வேண்டும் என்று விரும்பினான். அப்படி அவன் நினைத்தது போன்று நடந்ததில் அவன் முகத்தில் சின்னதாய் ஒரு முறுவல்.
முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு வாள்களும் கட்டைகளுமாக அவன் காரைச் சூழ்ந்தவர்கள் கதவைத் திறக்க முயன்றனர். முடியவில்லை என்றதும் கார் கண்ணாடியை உடைக்க ஆரம்பித்தனர். இதற்குள் கதிரவனுக்கு அழைத்துத் தகவல் கொடுத்திருந்தான் எல்லாளன். அவனுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தால் எந்த நேரத்திலும் வருவதற்குத் தயாராக இருந்தவன் அடுத்த வினாடியே ஜீப்பைச் சீறவிட்டிருந்தான்.
படங்களில் வருவதுபோல் ஹீரோயிசம் காட்ட முடியாது. கதிரவன் வரும் வரையில் சமாளிக்கத்தான் வேண்டும் என்கிற முடிவில் அவன் கதவைத் திறக்கையிலேயே காண்டீபனும் அவன் நண்பர்களும் வந்து சேர்ந்திருந்தனர்.
இது போதுமே. அவர்களில் ஒருவனிடம் இருந்து கட்டை ஒன்றைப் பறிக்கிற வரையில்தான் சிரமம் எல்லாம். அதைப் பறித்த நொடியில் நால்வரும் கடோத்கஜன்களாக மாறி சுழன்று விளையாடினார்கள்.
இதற்குள் கதிரவன் வந்துவிட்டான். காவல்துறையைக் கண்டதும் கல்லடி பட்ட தேனீக்களாகச் சிதறி ஓட ஆரம்பித்தவர்களை ஒருவர் விடாமல் எல்லோருமாகச் சேர்ந்து வளைத்துப் பிடித்தார்கள்.
அவர்களைக் கொண்டுபோய்க் கதிரவன் கவனித்த கவனிப்பில் உண்மையை ஒத்துக்கொண்டிருந்தனர். அது போதாது என்று காண்டீபன் தந்த ஆதாரங்களை வைத்து சிவநாதருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தாள் ஆதினி.
அதன் அடிப்படையிலும் எல்லாளனைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காகவும் தேவன் தலைமையில் சிவநாதரைக் கைது செய்யச் சென்றனர்.
அதற்குள் சிவநாதர் தலைமறைவாகியிருந்தார்.
தொடரும்…

