ஆட்டநாயகன் 49.1

அத்தியாயம் 49

எல்லாளன் மீதான கொலை முயற்சியும், சம்மந்தர் கொலை வழக்கில் காண்டீபனை மாட்டிவிடப் பார்த்த வழக்கிலும் சிவநாதர் கைதாவார் என்பது எல்லாளன் காண்டீபன் இருவருக்குமே தெரியும். அப்படி ஒரு நிலையில் அவரை நிறுத்தவேண்டும் என்பதற்காகத்தானே அத்தனையையும் செய்தார்கள்.

அதே நேரத்தில் அப்படி அவரை லட்டுப்போல் தூக்கிக் காவல்துறையின் கையில் கொடுத்துவிடுவார்களா என்ன? இந்தப் பக்கம் ஆதினியைக் கொண்டு எல்லாளன் வழக்குத் தாக்கல் செய்கையிலேயே, தேவன் மூலம் நடப்பதை அறிந்துகொண்டு அந்தப் பக்கம் தப்பியோட முயல்வார் என்று தெரிந்து, காத்திருந்து சிவநாதரைத் தூக்கியிருந்தான் காண்டீபன்.

அன்றிலிருந்து நடுக்கடலில் தரித்து நிற்கும் கப்பலில் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறார்.

வாயில் துணியை அடைத்தே வைத்திருந்ததால் கத்தவோ, பேசவோ, அழவோ, கெஞ்சுவோ வழியில்லை. அவர் உயிர் போய்விடக்கூடாது என்பதற்காக மட்டும் நேரா நேரத்திற்கு உணவையும் அருந்துவதற்கு நீரையும் மட்டும் கொடுத்தார்கள்.

இரவுகளில் குளிர்ந்த கடற்காற்று அவர் உடலைத் துளைத்து, எலும்புகள் வரை கிடுகிடுக்க வைத்து, விறைத்துப்போக வைத்துவிடும் என்றால் பகல்களில் சுட்டெரிக்கும் வெய்யிலில் உள்ளாடையோடு மட்டும் இருந்து கருவாடாகிப்போய்விடுவார்.

இன்றைக்கு அவருக்கு இந்தத் தண்டனை என்றாலும் இத்தனை காலமும் ஊர் உலகத்திற்குப் பெரும் பாவங்களை இழைத்துக்கொண்டு ராஜபோக வாழ்க்கைதானே வாழ்ந்தார். அந்தக் கோபம் மருந்துக்கும் ஈவிரக்கம் பார்க்க விடவில்லை.

கட்டித் தொங்கவிடப்பட்ட கைகள் இரண்டும் தனியாகக் கழன்றுவிடுமோ என்கிற அளவில் வலிக்க, “ம்ம்!” என்று அழுது காவலுக்கு இருந்தவர்களின் கவனத்தைக் கவர முயன்றார். அவர்கள் இருவரும் காண்டீபனின் நண்பர்கள். முக்கியமாக வேந்தனால் பெற்ற அன்னையை இழந்தவர்கள். அந்த நினைவு வருகிற பொழுதுகளில் எல்லாம் அவரைத் துடிக்க துடிக்கத் துன்புறுத்தினார்கள். பாவம் பார்க்கவேயில்லை.

அங்கே வெளியுலகம் தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சியின் தலைவர் சிவநாதர் தலைமறைவைப் பற்றியே பேசின. இத்தனை காலமும் அவரின் அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் பயந்து வாயை மூடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பேசாமல் விட்ட அவர் குடும்பத்தின் கறுப்புப் பக்கங்களை எல்லாம் பேசித் தீர்த்தார்கள். அவர் மறைத்துவைத்த அவரின் கறுப்புப் பக்கங்கள் எல்லாம் அம்பலத்துக்கு வந்தன.

இனியும் அங்கேயே இருந்தால் தம் அரசியல் வாழ்க்கையும் மொத்தமாக இருண்டுவிடும் என்று பயந்து அதுவரை காலமும் அவரோடு இருந்தவர்கள் அங்கிருந்து விலகி மற்ற மற்ற கட்சிகளில் இணைந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

காவல்துறை இன்னுமே அவரைத் தேடிக்கொண்டிருந்தது. டிஐஜி எல்லாளனைக் கூப்பிட்டு விசாரித்தார். “அவர் உங்கட ஆள் சேர். அவர் எங்கட டிப்பார்மென்ட்ல மாட்டி, எல்லா உண்மையையும் சொல்லிட்டார் எண்டா உங்களை மாதிரி நிறையப் பேர் பெயரும் சேர்ந்து வெளில வரும். அதால நீங்கதான் அவரை எங்க மறச்சு வச்சிருக்கிறீங்க எண்டு சொல்லோணும்.” என்று சொல்லிவிட்டு வந்தான் அவன்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன நடக்கும்? அவனைத் திரும்பவும் டிரான்ஸபர் செய்வார்கள். அவ்வளவுதானே. செய்துவிட்டுப் போகட்டும். சும்மாவே அவனை யாராலும் அசைக்க முடியாது. இப்போது காண்டீபனும் வந்த பிறகு கேட்கவே வேண்டாம்.

அடுத்து வந்த நாள்களில் காண்டீபனை அஞ்சலியோடு கதைக்க வைத்தான். சாகித்தியன், அஜய் என்று அந்த நாள்களில் அவனுக்கு விருப்பமான மாணவர்களிடம் அழைத்துச் சென்று, அவர்களிடம் இவனைக் காண்டீபனின் இரட்டைச் சகோதரன் வாசுசேனன் என்றே அறிமுகப்படுத்தி, காண்டீபன் மீதான அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் அவர்கள் மூலமே இவனுக்குத் தெரிய வைத்தான்.

கொழும்புக்கே அழைத்துச் சென்று தமயந்தியைக் காட்டினான். விவாகரத்தாகி ஒரு மகனோடு இருந்த ஆணை மணந்து, அவளுக்கும் இப்போது ஒரு ஆண் குழந்தை இருந்தான்.

உண்மையில் அவளை அப்படிக் குடும்பமாக, முக்கியமாக ஒரு குழந்தையைப் பெற்ற அன்னையாகப் பார்த்தபோது காண்டீபனுக்குள் பெரும் ஆசுவாசம்.

ஆனாலும் கூட அன்று அனுபவித்த அவள் துன்பங்களுக்கு தான்தான் காரணம் என்கிற குற்ற உணர்வுடன், “சொறி தமயந்தி.” என்றான் உள்ளத்திலிருந்து.

அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவனை வாசுசேனன் என்றுதான் எல்லாளன் அறிமுகப்படுத்தியிருந்தான். பிறகும் ஏன் இவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பார்த்தாள்.

“இல்ல, அது என்ன இருந்தாலும் உங்கட அந்த நிலைக்கு இவன்ர சகோதரம் காண்டீபன்தானே காரணம். அதான் மன்னிப்புக் கேக்கிறான்.” என்று சமாளித்தான் எல்லாளன்.

கூடவே பாலியல் கொடுமைகளைத் தவிர்த்துவிட்டு இந்த வாசுசேனனனுக்குச் சத்தியநாதனாலும் சிவநாதராலும் கொடுக்கப்பட்ட துன்புறுத்தல்கள் பற்றியும் அவளிடம் பகிர்ந்துகொண்டான்.

கேட்டவள் பேசக்கூட முடியாதவளாய் அமர்ந்துவிட்டாள். பின் தன்னைத் தேற்றிக்கொண்டு, “அண்டைக்கு எனக்கு காண்டீபன் சேர்ல கோபம் வெறுப்பு எல்லாம் இருந்தது உண்மை. ஆனா இண்டைக்கு… நடந்தது எல்லாம் நல்லதுக்கு எண்டுதான் நினைக்கிறன். இல்லாட்டி நான் உயிரோட இருந்திருப்பனா எண்டு கூடத் தெரியேல்ல. அவனே என்னைக் கொன்றிருப்பானா இருக்கும். என்னைக் கட்ட முதலே அவனுக்கு ஒரு மகனும் இருந்திருக்கிறான் எண்டு இப்பதான் கேள்விப்பட்டனான்…” என்றவள், பேச்சை நிறுத்திவிட்டு விளையாடிக்கொண்டிருந்த சின்னவர்களில் பார்வையைக் குவித்தாள்.

கஜன் கைதுசெய்யப்பட்ட விடயத்தை இவர்கள்தான் பெரும் செய்தியாக்கினார்கள். அது அவள் பார்வைக்கும் வந்திருப்பது புரிந்தது.

“அவனுக்கு மனுசியா இருந்தேனே தவிர அவனைப் பற்றி எதுவுமே தெரியாது. தெரிய அவன் விட்டதே இல்ல. அவன் மூலம் எனக்கு ஒரு குழந்தை இருந்திருந்தா அந்தக் குழந்தையக் கூட வெறுத்திருப்பனா இருக்கும். அப்பிடிப் பாக்கேக்க காண்டீபன் சேர் எனக்கு நல்லதுதான் செய்திருக்கிறார்.” என்றாள் இப்போது கண்ணை எட்டாத ஒரு முறுவலோடு.

“வாழ்க்கை எப்பிடிப் போகுது?” காண்டீபன்தான் கேட்டான்.

“நல்லா இருக்கிறன் சேர்.” என்று மனத்திலிருந்து முறுவலித்தாள் அவள். “பெரிய வசதி இல்ல. மாதச் சம்பளத்திலதான் வாழ்க்கை. ஆனா இந்த நிம்மதியும் சந்தோசமும் இருக்கே… நானும் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறன் போல. இல்லாம அப்பிடி ஒரு குடும்பத்தில சிக்கித் தப்பி வந்ததும் இல்லாம, இவரை மாதிரி ஒருத்தர் கிடைச்சிருக்க மாட்டார்.” என்று அவள் சொன்னது மிகுந்த நிறைவைத் தந்தது.

தமயந்தியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு இன்னுமே கொஞ்சம் தெளிந்திருந்தான் காண்டீபன். நாளாந்த வாழ்க்கை ஓட்டத்தில் அவனைத் தள்ளிவிட வேண்டும் என்று வைத்தியர் சொன்னதை நினைவில் கொண்டு, காண்டீபனின் கல்வித் தகமைகளை சில பல தகிடுத்தத்தங்கள் செய்து வாசுசேனனின் பெயருக்கு மாற்றினார்கள்.

சட்டப்படி நிச்சயம் தவறுதான். ஆனால், அநியாயமாகத் தண்டிக்கப்பட்ட காண்டீபனுக்கு அந்தச் சட்டத்தால் கூட நியாயம் வாங்கிக்கொடுக்க முடியாதுதானே.

error: Alert: Content selection is disabled!!