ஆட்டநாயகன் 49.2

உடனேயே பேராசிரியனாக மாறிவிடுகிற நிலையில் காண்டீபன் மனநிலையும் இல்லை. அவனும் இன்னுமின்னும் நிறைய மாறவேண்டியிருந்தது. வைத்தியர் கொடுத்த மருந்து மாத்திரைகள், அவர் சொன்ன உடற்பயிற்சி, தியானப்பயிற்சி அனைத்தையும் தவறாது மேற்கொண்டபடி அவரிடம் போய்க்கொண்டிருந்தான். இப்போதெல்லாம் மிதிலாவின் முகம் பார்த்து இயல்பாகப் பேசுகிற அளவுக்கு முன்னேறியிருந்தான். இரவுகளில் உறக்கம் வர ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் பாதுகாப்பாக உணர ஆரம்பித்திருந்தான்.

கூடவே அவன் அறிவைத் திரும்பவும் தூசு தட்டி எடுக்கும் முகமாகத் தனியார் கல்விப் பயிற்சி நிறுவனங்களில் இணைந்துகொண்டான். எல்லாளனின் செல்வாக்கும், இளந்திரையனின் உதவியும் இதற்கெல்லாம் பெருமளவில் கைகொடுத்தன.

அந்த நாள்களில் எப்படி வீட்டில் வைத்துக் கொட்டகை அமைத்து வகுப்பு எடுத்தானோ, அதைப் போன்று இன்றைய நிலைக்கு ஏற்ப இணையவழி வகுப்புகளைச் சின்ன வகுப்பு மாணவர்களுக்குக் கொடுக்கும் முகமாக அவன் வீட்டோடு சேர்த்து இன்னொரு அறையை எழுப்புவதற்கு ஏற்பாடு நடந்தது.

இன்னும் இரண்டு நாள்களில் எல்லாளன் திரும்பவும் பணிக்குச் செல்ல வேண்டும். அவன் காயம் பெருமளவில் ஆறியிருந்தது. வலி இல்லை, உடற்பயிற்சி கூட செய்ய ஆரம்பித்திருந்தான். இப்போதெல்லாம் நண்பர்கள் இருவரும் காலையும் மாலையும் தவறாமல் ஓடுவது, இருவருக்கும் ஏற்ற வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்று வழக்கமாக்கியிருந்தனர்.

எந்தக் கோயிலில் வைத்து எல்லாளனைக் காண்டீபன் கத்தியால் குத்தினானோ அதே கோயிலில் வைத்து மிதிலாவின் கழுத்தில் இன்னொரு முறை தாலி கட்டினான் காண்டீபன்.

அத்தனை பேர் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர். அதுவும் மிதிலா நிற்கக்கூட இயலாமல் தள்ளாடினாள். இனி இந்த உலகில் இல்லவே இல்லை என்று நினைத்திருந்த ஒருவன். முடிந்ததே போயிற்று என்று நினைத்திருந்த வாழ்க்கை. அவன் தாலி கட்டியபோது கூடச் சமாளித்துவிட்டாள். நெற்றியில் திலகமிட்டபோது அடக்க முயன்றும் முடியாமல் விம்மினாள்.

காண்டீபனாலும் இத்தனை நாள்களைப் போன்று தள்ளி நிற்க இயலவில்லை. அந்தக் கோயில், அங்கே கிடைத்த ஆத்மார்த்தமான ஆறுதல், மனைவி கழுத்தில் மனதாரப் பூட்டிய பொன்தாலி, அவள் தன் மனைவி என்கிற உணர்வு, இனி எல்லாம் சரியாகிவிடும் என்று அவனுக்குள்ளேயே துளிர்விட ஆரம்பித்திருந்த நம்பிக்கை, அவர்களைச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்து நின்ற மகன், அவனைச் சுற்றி நின்ற அவன் நலத்தை மட்டுமே நாடும் உறவுகள், அவர்கள் விழிகளில் தேங்கி நின்ற ஆனந்தக் கண்ணீர் என்று எல்லாமாகச் சேர அவனும் நெகிழ்ந்துபோனான்.

“மிதும்மா!” என்றபடி பனித்துவிட்ட விழிகளோடு அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

இந்த ஒற்றை அணைப்புக்காகவும் அவனின் அன்புக்காகவும் என்ஜிப் போனவளாயிற்றே. அவன் கைக்குள்ளேயே நின்று இன்னுமே தேம்பி தேம்பி அழுதாள். “அதான் நான் வந்திட்டேனே. அழுதது எல்லாம் போதும் மிது.” என்றான் காண்டீபன் கரகரத்த குரலில்.

கண்ணீரில் மிதந்த விழிகளோடு அவன் முகம் பார்த்து, “இப்பிடியே எங்கட வீட்டுக்கே கூட்டிக்கொண்டு போங்க தீபன். எனக்கு உங்களோட தனியா இருக்கோணும் ப்ளீஸ்.” என்றவளை ஒரு கணம் அதிர்ந்து பார்த்துவிட்டுப் பக்கென்று சிரித்திருந்தான் அவன்.

இன்னும் குழந்தை போன்று தன் முகம் பார்த்து நிற்கிறவளைக் கண்டு மனம் கசிந்து போயிற்று. அதே நேரம் தான் இல்லை என்கிற உலகில் நீண்ட நெடிய எட்டு வருடங்களைச் சமாளிக்க என்ன பாடு பட்டிருப்பாள் என்கிற எண்ணம் ஓடவும் அவன் கை அவனை அறியாமலேயே அவள் தலையைத் தன் மார்புடன் சேர்த்து அனைத்துக்கொண்டது. அவன் பார்வை தன்னாலே மகனிடம் ஓட அவனும் ஓடி வந்து தந்தையைக் கட்டிக்கொண்டான்.

அடுத்து என்ன நடக்கும் என்று யாருமே சொல்லத் தேவையிருக்கவில்லை. பெரிய பெண்கள் சேலை அணிவது போலவே பட்டுப்பாவாடை சட்டையும் குட்டித் தாவணியும் அணிந்து, பூச்சூடி, பொட்டு வைத்து, நெற்றிச் சுட்டி என்று தங்கப்பெண்ணாக தகப்பனின் கைகளில் இருந்தவள் வேகமாக இறங்கி ஓடி வந்து, “என்ர காந்தி மாமா!” என்று அவன் கால்களைக் கட்டிக்கொண்டாள்.

வாய்விட்டு நகைத்தபடி அவளைத் தூக்கி உச்சி முகர்ந்தவனுக்கு அவன் நண்பனும் கூடப் பிறவாதவளும் சேர்ந்து ஒன்றாகக் கலந்த கலவையாகவே அவள் தெரிந்தாள். ஒற்றைக் கையில் அவளைத் தூக்கி வைத்துக்கொண்டு மகனைத் தன்னுடன் சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டான்.

எந்தச் சோகங்களும் அண்டாத நண்பனின் முகம் நிறைந்த சிரிப்பைப் பார்த்து நின்ற எல்லாளன், அவனை நெஞ்சார அணைத்து, கண்ணோரம் படிந்துவிட்ட கண்ணீருடன் வாழ்த்தினான். ஆதினி பேசும் நிலையிலேயே இல்லை. முகம் புன்னகையில் பூத்திருக்கக் கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது.

“என்னம்மா?” என்று அவன் ஒரு கேள்விதான் கேட்டான். ஒன்றுமில்லை என்று புன்னகையும் கண்ணீருமாக மறுத்துத் தலையசைத்தவள் அவனின் ஒற்றைக் கைக்குள் அடங்கிக்கொண்டு தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

அவர்களின் திருமணத்தை, அதன்போது கணவன் மனைவி இருவரும் பார்வையாலேயே பரிமாறிக்கொண்ட நேசத்தை, மிதிலா உடைந்து அழுததை, அவளை அவன் நெஞ்சில் தாங்கிக்கொண்டு அழகை எல்லாம் பார்த்திருந்த கேதகியின் உள்ளத்தில் கொஞ்ச நஞ்சமாக இருந்த தடுமாற்றங்கள் எல்லாம் விலகிய உணர்வு. அவன் சேர வேண்டிய இடம் சேர்ந்துவிட்ட மகிழ்ச்சியே உண்டாயிற்று.

அங்கேயே காலை உணவையும் முடித்துக்கொண்டு புறப்பட்டபோது, “எங்கட வீட்டுக்கே போவம் மச்சான்!” என்றான் காண்டீபன்.

ஒன்றும் சொல்லாமல் அவன் முகம் பார்த்தன் எல்லாளன். போகலாம் என்பதுபோல் சிறிதாக்கத் தலையசைத்தான் காண்டீபன். அதன் பிறகு எல்லாளன் ஒன்றும் சொல்லவில்லை. மிதிலாவின் முகம் வெளிச்சம் போட்டது போன்று மலர்ந்து போயிற்று.

அங்கே மிதிலாவைக் காண்டீபனின் அருகே அமர வைத்துவிட்டு எல்லோரையும் கவனிக்கும் பொறுப்பை ஆதினியும் சியாமளாவும் சாந்தி அக்காவின் துணையுடன் ஏற்றுக்கொண்டனர்.

மாதவனின் மகள் நன்றாகவே கேதகியோடு ஒட்டிக்கொண்டிருந்தாள். அன்று முழுக்க எல்லாளனுக்கு உதவியாக நின்றதில் அவள் வசம்தான் இருந்தாள். இப்போதும் அவன் அன்னை முடியாமல் அவர்கள் வீட்டில் ஓய்வுக்குச் சென்றுவிட அவளேதான் வைத்திருந்தாள்.

அப்படி அவளை வேலை வாங்குகிறோம் என்கிற சங்கடத்தோடு மாதவன் மக்களை வாங்க வர கேதகி கொடுக்கவில்லை. “காய் மாறினா சிணுங்குறா. நானே வச்சிருக்கிறன்.” என்றவளிடம் என்ன சொல்வது என்று தெரியாத சங்கடத்தோடு பார்த்துவிட்டு நகர்ந்தான் மாதவன்.

இந்தக் கொஞ்ச நாள்களாகவே இதைக் கவனித்துக்கொண்டிருந்த அகரன், “டேய், அந்தப் பிள்ளையை மாதவனுக்கே கட்டி வச்சா என்ன?” என்று எல்லாளனின் காதைக் கடித்தான்.

“எந்தப் பிள்ளைய?” என்றுகொண்டு நண்பனின் பார்வை போன திக்கில் பார்த்த எல்லாளன் விருட்டென்று திரும்பி, “ரெண்டாம் தாரமாவா?” என்றான் திகைப்போடு.

“உனக்கு ஏன் இவ்வளவு திகைப்பு? மாதவனால தனியா சமாளிக்கவே ஏலாது பார். இந்தப் பிள்ளையும் தனியாவே இருக்கப் போகுது. நீ கேட்டுப் பார். இல்லாட்டி அப்பாவை வச்சு பேசலாம்.” என்றான்.

அதன் பிறகுதான் எல்லாளனும் அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். அந்தக் குழந்தையே உலகம் என்பதுபோல் தனக்கும் அவளுக்கும் ஒரு வட்டம் போட்டுக்கொண்டு கேதகி இருப்பது போலிருந்தது. ஆனால் ஒரு பிரிவில் செய்வது வேறு, திருமணம் என்பது வேறாயிற்றே.

இவர்களைக் கவனித்துவிட்டு வந்து என்ன என்று கேட்டான் காண்டீபன். எல்லாளன் விடயத்தைச் சொன்னான். மாதவனையும் கேதகியையும் பார்த்துவிட்டு, “நல்ல பிள்ளையடா. எங்களிட்ட மாட்டுப்பட்டு நிண்ட காலத்தில தானுண்டு தன் பாடு உண்டு எண்டு இருந்தவள். மாதவன் நல்லவன் எண்டா கேக்கலாம்.” என்று சொன்னான் அவன்.

எல்லாளன் ஒன்றும் சொல்லாமல் அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தன.

“காணும் உன்ர பார்வை. அது வேந்தனிட்ட மாட்டிக் கொஞ்சம் கஷடப்பட்டுட்டாள் போல. என்னட்ட வந்த பிறகு அப்பிடி எதுவும் நடக்காததால நான் ஹீரோ மாதிரித் தெரிஞ்சிருக்கிறன். அவ்வளவுதான். அதைவிடத் தனியாவே வாழ்ந்த பிள்ளை. முதல் முதலா என்னட்ட பாதுகாப்பை உணந்திருப்பா. அதால வந்த தடுமாற்றமே தவிர வேற ஒண்டும் இல்லை.” என்று சொன்னவனின் கூற்றை எல்லாளனுமே ஆமோதித்துக்கொண்டான்.

தொடரும்…

error: Alert: Content selection is disabled!!