Skip to content
“டோய் டோய்..” மகன் எதிர்பாராது பாய்ந்துவிட தடுமாறிப் பிடிக்கப் பார்த்தான் பூபாலன். அதற்கிடையில் அவன் கயல்விழியிடம் தாவி அவள் கழுத்து வளைவில் நல்ல பிள்ளைபோல் படுத்தும் விட்டான்.
குழந்தையின் கால் பாதம் லாதியின் முகத்தில் இடித்திட்டு.
“பச் வலிக்குதடா!” கால்களை அப்பால் அவள் விலக்க, அவன் மறுபடியும் கால்களை நீட்ட என்று கயல்விழியை ஒரு வழி பண்ணினார்கள், இருவரும்.
“இனி நான் இதில வேண்டாத ஆள்.” என்றபடி, மகன் மகள் தலையில் தடவிவிட்டு “தேத்தண்ணி போடுறன்.” நகர்ந்து விட்டான் பூபாலன்.
பிள்ளைகளோடு தன்னருகில் வந்தவளைக் கட்டிப் பிடித்து அழுதார் காயுவின் அன்னை.
சரசு வாயால் கேள்விப்பட்ட விசயமே என்றாலும் குழந்தைகளுக்கும் கயல்விழிக்குமான பிணைப்பை இப்போது கண்கூடாகவே கண்டு கொண்டார்கள், காயு குடும்பத்தினர்.
அன்று, லாதியின் பிறந்தநாள் ஆர்ப்பாட்டமில்லாவிட்டாலும் அவளுக்குப் பிடித்தவகையில் நடந்திருந்தது. அப்போதும், அடுத்தடுத்த நாட்களும் அவ்வளவு சொந்தங்கள் வீட்டில் நின்றாலும் பிள்ளைகளுக்கு எல்லாவற்றுக்குமே கயல்விழியே தேவைப்பட்டாள்.
‘ஐயனே! இப்ப நான் என்ன செய்யிறது?’ வந்து நுழைந்த நேரம் தொட்டு கண்ணீரையும் துக்கத்தையும் அடக்க முடியாது தவிக்கும் காயுவின் அன்னை மனம், அரற்றியபடியிருந்தது.
‘நீ இலங்கை போகாத குஞ்சு, இங்கயே இருந்திரன்.’ நாக்கு உண்ணினாலும் வார்த்தை விடுபடவில்லை. பார்க்கும் இடமெல்லாம் மகள் நிற்பது போன்ற பிரேமை ஒருபக்கம் என்றால் இந்தப் பிஞ்சுகள் இரண்டின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற பயமும் சேர்ந்து அவரைத் தள்ளாட வைத்திட்டு.
மறுநாள், அருகிலிருந்த பூங்காவில் லாதியின் நெருங்கிய சிநேகிதிகளுக்கு என்று சிறு விருந்து ஏற்பாடு செய்திருந்தார், லாதியின் நெருங்கிய நண்பியின் தாயார்.
பாடசாலைகளும் இணையவழி ஆதலால் இப்போதிருக்கும் நிலையில் நண்பர்களை எல்லாம் ஒன்றாகச் சந்திக்கையில் லாதிக்கும் மன மாறுதலாக இருக்கும் என்றவர், பிடிவாதமாக பூபாலனிடம் கதைத்து ஏற்பாடு செய்திருந்தார்.
நடந்து செல்லும் தூரம் தான். காயுவின் தங்கை, லாதியின் மாமி, கயல்விழியோடு வீட்டில் நின்ற சிறுவர்களுமே சென்றிருந்தார்கள்.
நீண்ட நாட்களின் பின்னரான சிறு ஒன்றுகூடல் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்குமே மிகவும் கலகலப்பாக இருந்தது. புத்துணர்ச்சி தந்திட்டு. லாதிக்கு மீண்டும் கேக் வெட்டி சிறு சிறு பரிசுகள் அளித்தார்கள். கயலும் வந்திருந்த சிறார்களுக்கு இனிப்புகள் அடங்கிய பொதிகளைக் கொண்டு வந்திருந்தாள். அதையும் லாதியின் மூலம் எல்லாருக்கும் கொடுக்கச் செய்திருந்தாள். இதெல்லாம் அங்கிருந்தவர்களுக்கு வெகு வெகு மகிழ்வைக் கொடுத்திட்டு.
எல்லாம் கிட்டத்தட்ட பாதி நேரம் தான். “இவா உங்கட ஸ்டெப் மதரா லாதி?” ஆதித்தோடு நின்ற கயல்விழியைக் காட்டிக் கேட்டார், ஒரு நண்பியின் தாய். லாதிக்கோ, அதுவரை அவளுள் இருந்த புத்துணர்வு சுர்ரென்று வடிந்திட்டு. தாய் இருந்த இடத்தில் இன்னொருவரை, அது அவள் பாசத்துக்குரிய ஸ்வீட்டியாக இருந்தாலுமே கற்பனை செய்ய முடியவில்லை.
முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்த மகிழ்வைத் தொலைத்திட்டு. அது போதாதென்று கண்கள் சுரந்து நிறைந்தன. பதில் சொல்லாதவள் பார்வை பட்டென்று கயல் நோக்கித்தான் திரும்பிற்று.
சற்றும் எதிர்பாராது அவர் அப்படிக் கேட்கவும் கயலுமே திகைத்துப் போனாள் தான். திகைப்பு என்றதை விட மிகவும் அந்தரப்பட்டுவிட்டாள். காயுவின் சகோதரி, மற்றும் மைத்துனி பார்வை அவளைத் துளைப்பது போலவே இருந்திட்டு. ‘உதவுறன் எண்டு வீட்டில் இருந்து அப்பிடியே என்ர அக்கா வீட்டில் நிரந்தரமா இருக்க வேலை செய்யிற போல!’ என்ற எண்ணத்தோடு பார்ப்பதுபோல் சிந்தனை செல்ல, லாதியைச் சமாதானம் செய்யும் வகையில் சரி எதையும் சொல்ல முடியாது நின்றாள், அவள்.
“நோ நோ அது என்ர ஸ்வீட்டி! எனக்கு ஸ்டெப் மதர் இல்ல, அம்மா மட்டும் தான். ஷி இஸ் நோ மோர்!” என்றவள் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்.
“பச் லாதிம்மா!” அவளையும் அறியாது நகர்ந்தாள், கயல்.
“ஒருநாளும் என்ர வீட்டுக்கு ஸ்டெப் மதர் வரமாட்டா; அப்பா சொல்லி இருக்கிறார்.” வேக வேகமாகச் சொல்லிவிட்டு கயல் பிடியில் அகப்படாது அப்பால் ஓடியவள், அதன் பிறகு கலகலப்பாக விளையாடவில்லை.
“ஜஸ்ட் சும்மா கேட்டது செல்லம் அதுக்கு ஏன் இப்பிடி?” பின்னாலே சென்ற அவள் சித்தி சமாதானம் செய்விக்க முயன்றார்.
“நான் வேலைக்கு எண்டு இங்க வந்தனான், இவே ஃப்ரெண்ட்ஸ் ஃபாமிலி. இன்னும் கொஞ்ச நாளைக்கு நிப்பன், பிறகு ஸ்ரீலங்கா போயிருவன்.” என்று கயல் அப்பெண்மணியிடம் சொன்னது இவளுக்கும் போல இருக்கவே, மீண்டும் கயல் முகம் பார்த்தவள் விழிகள் இப்போது நிறைந்தே விட்டிட்டு.
பிறகு அதிக நேரம் இராது வீடு வந்துவிட்டார்கள். லாதியின் முகம் அவ்வளவாகத் தெளியவே இல்லை. அன்றொருநாள், ‘பிள்ளேட அப்பா ஸ்வீட்டியக் கலியாணம் செய்தாத் தான் அவா இங்கயே உங்களோட இருப்பா.’ என்று விமலா சொன்னதை அப்படியே மறந்துவிட்டவளுக்கு, இக்கணம் மீண்டும் அது நினைவுக்கு வந்து இயல்பாக இருக்க விடவில்லை. கூடப் படிக்கும் பிள்ளைகள் சொல்லும் ஸ்டெப் மதர் பற்றிய எதிர்மறை விடயங்களும் சேர்ந்திட்டு. அவற்றை அவளின் ஸ்வீட்டியோடு கொஞ்சமும் பொருத்த முடியவில்லை தான். இருந்தாலும் …
இந்தக் குழப்பங்கள் எல்லாம் கடந்து, ‘கொஞ்ச நாட்களில் போயிருவன்’ என்று கயல் சொன்னது மனதுள் ஒருவகைப் பயத்தையே உருவாக்கிற்று.
‘பிறகு…குட்டித் தம்பியும் நானும்?’ அவளுக்குப் பெரிதாக அழ வேண்டும் போலிருந்தது. ஓடிச் சென்று தன்னறைக்குள் புகுந்தவள் வெளியில் வரவே இல்லை.
“நல்லாத்தானே வந்தவள், இப்ப என்ன முகத்தை நீட்டிக்கொண்டு அறைக்க பூந்திட்டாள்?” விசாரித்தார், காயுவின் அன்னை.
நடந்ததைச் சொன்னாள், காயுவின் சகோதரி.
கயல் உள்ளே சென்றுவிட்டாள். அவளையே பார்த்திருந்த பெரியவருக்கு உண்மையில் மனதுள் பெருத்த கலவரம். அதில் குழந்தைகள் பற்றிய பயம் மிகையாக இருந்தது.
சிலகாலம் இங்கே நிற்க வந்தவரால், திரும்பிய பக்கமெல்லாம் மகள் நினைவு ஒரு கணமேனும் நிம்மதியாக மூச்சு விட முடியாது செய்திட்டு என்றால்…இது அடுத்தது.
எப்பவும் இங்கு வந்துவிட்டுச் செல்கையில் எப்போ அடுத்த முறை வருவோம் என்ற எண்ணத்தோடுதான் செல்வார். இம்முறையோ, மூன்றாம் நாள் விடியலில், “கனடா போயிருவம்.” என்று, அவர் விம்மி வெடித்து அழுததில் எல்லோருமே பயந்து போனார்கள்.
“வந்ததில இருந்து ஒரு பொட்டுத் தூக்கம் இல்ல; எங்க திரும்பினாலும்…” சொல்லி அழுதவர் லாதியைப் பார்த்துவிட்டு வார்த்தைகளை விழுங்கி விட்டார்.
“கூட்டிக்கொண்டு போங்க, கொஞ்ச நாட்களால வரலாம். பிறகு மாமிக்கு ஏதாவது வருத்தம் வந்திட்டா.” பூபாலன் சொன்னதையே ஆமோதித்தான், காயுவின் சகோதரன்.
“ஒரு கிழமை சரி நிண்டிட்டுப் போகலாம் எண்டு வந்தம். இந்தக் கொரோனாவால இனி எப்ப வரேலுமோ தெரியாதே!” சலித்துக்கொண்டாள், காயுவின் சகோதரி.
“அம்மா இப்பிடிக் குழம்புவா எண்டு ஆருக்குத் தெரியும்? நான் ரெண்டு கிழமைகள் சரி நிண்டிட்டுத்தான் போவன். வெளிக்கிடுங்க.” தங்கையைச் சமாதானம் செய்வித்து வெளிக்கிட வைத்தான், காயுவின் சகோதரன்.
“இங்க வான ஆச்சி!” லாதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார், காயுவின் அன்னை.
“அப்பாட சொல்லுக்கேட்டு நல்ல குஞ்சா இருக்கோணும் என்ன? வடிவாப் படிக்கோணும்; தம்பியப் பாத்துக்கொள்ள வேணும்; ஸ்வீட்டிக்கு கரைச்சல் குடுக்கிறேல்ல; அம்மம்மா எப்பவும் பிள்ளைகளிட யோசனையில தான் இருப்பன்.” அவள் முகம் வருடி வருடிச் சொன்னவர், “சம்மருக்கு வாறனே குஞ்சு?” கண்ணீர்வழிய வழியக் கொஞ்சினார்.
error: Alert: Content selection is disabled!!