காதல் காயங்களே 29 – 3

அவளுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? குருவிக்கூடு மாதிரி அழகான குடும்பம். நல்ல படிப்பு, வேலை என்று எல்லாமே நன்றாகத்தான் போனது. காதலும் கூட. நல்லவனைத்தான் விரும்பினாள். பிறகும் ஏன் சூறாவளியில் சிக்கிய படகாய் அவள் வாழ்க்கை சின்னாபின்னமாக மாறிப்போயிற்று? நினைக்க நினைக்க கழிவிரக்கத்தில் தொண்டை அடைத்துக்கொண்டது.

 

“அப்பா! இங்க வாங்கோ!” ஆதிராவின் உற்சாகக்குரல் ஓங்கி ஒலித்தது. ‘அப்பா படுத்திருக்கிறார் ஆது’ என்று இவள் சொல்ல நினைக்கையிலேயே எழுந்துபோனான் பிரதீபன். மனம் சரியில்லை என்பதை முகம் காட்டிக்கொடுத்துவிடும் என்பதில் மயூரிக்கு போகப்பிடிக்கவில்லை. அங்கேயே அமர்ந்துகொண்டாள்.

 

சற்று நேரத்தில் ஆதிராவின் குரல் கேட்டது.

 

“யுவர் ஆனர்! இந்தக் குற்றவாளிக் கூண்டிலே நின்றுகொண்டிருக்கிறாரே, இவர் யார் தெரியுமா? பிரபல சீட்டிங் சாம்பியன்.. கொர்ரங்கு குப்பன்! இவர்.. இங்கு நின்றுகொண்டிருக்கும் எனது கட்சிக்காரர் முள்ளம்பன்றி முனியாண்டியிடம் தனது தங்கை திருமணத்திற்காக ஒரு லட்ச ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். பணம் கொடுத்த எனது கட்சிக்காரர் பணத்தை ஒருநாள் திரும்பக் கேட்டிருக்கிறார். அப்படி கேட்டதற்கு இந்தக் கொரங்கு குப்பன் என்ன பதிலளித்திருக்கிறார், வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்கும் பழக்கம் எங்கள் கொரங்கு வம்சத்துக்கே இல்லை என்று பேசியிருக்கிறார். அப்படி பேசியதுமல்லாமல் இந்தக் கொரங்கு குப்பன் தனது கொரங்கு புத்தியை என்னுடைய கட்சி காரரிடம்..” என்றது ஆதிராவின் குரல்.

 

“அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்!” என்றார் எதிர்க்கட்சி வக்கீல்.

 

“யோவ்! ஏன்யா இன்னைக்குனு இப்படி உயிரை வாங்குற. நீ வாதாடும்போது என்னைக்காவது நான் குறுக்க பூந்திருக்கிறனா? அடிக்கடியா ஒரு மனுஷன் கிராஸ் பண்ணுவான். ஒரு ஆடறா.. புலோவா போய்க்கிட்டு இருக்கன்ல. கூட கூட பேசினா மறந்திட மாட்டனா?” என்றது மீண்டும் ஆதிராத்தான்.

 

“அடச்சீ! சும்மா இருயா!”

 

“ஐம் ஸ்பீக்கிங்! நோ கிராஸ் ஸ்பீக்கிங்! சிட் டவுன் பிளீஸ்!”

 

“மிஸ்டர் வண்டு! கோர்ட்ல இப்படியெல்லாம் அடிக்கடி கத்தக்கூடாது!” செல்லமாய் உத்தரவிட்டார் ‘கனம் கோட்டார் அவர்கள்’.

 

“கடுப்பேத்துறார் மைலாட்!”

 

கலீர் என்று நகைத்தாள் மயூரி. அதுவும் குரங்கு குப்பனாக திருநாவுக்கரசை நிறுத்தி வைத்திருந்தாள் ஆதிரா. வண்டுமுருகனின் கட்சிக் காரராக புஸ்பவதி அம்மையார் நிற்க, நீதிபதியாகவும் எதிர்க்கட்சி வக்கீலாகவும் டபிள் ஆக்ஷனில் கலக்கிக்கொண்டிருந்தான் பிரதீபன். அந்தக் காட்சியே அத்தனை ரம்மியமாக மனதில் பதிந்து போயிற்று மயூரிக்கு. அதுவும் திருநாவுக்கரசு குரங்கு குப்பனாக முழித்த முழியும், பாவியைப்போல் புஸ்பவதி அம்மையார் கையைக் கட்டிக்கொண்டு நின்ற கோலமும் பார்த்து, மாமனார் மாமியார் என்பதையும் மறந்து அடக்கமாட்டாமல் சிரித்தாள் மயூரி.

 

இதில் பிரதீபனின் சகோதரிகள் யாருடையதோ உடையாக இருக்கவேண்டும், நிலத்தில் அரைந்துகொண்டிருந்த ஒரு கறுப்புக் கோர்ட்டினை மாட்டிக்கொண்டு அச்சு அசல் வண்டுமுருகனாக குரலிலாகட்டும், பேசும் விதத்திலாகட்டும், அங்க அசைவிலாகட்டும் எல்லாத்திலும் கலக்கிக்கொண்டிருந்தாள் ஆதிரா.

 

இதில் நீதிபதிக்கும் பொருந்தும் எதிர்க்கட்சி வக்கீலுக்கும் பொருந்தும் வகையில் பிரதீபனும் ஒரு கருப்பு கோர்ட்டுடன் நின்றுகொண்டிருந்தான்.

 

“அம்மா! நாங்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டு ரெக்கோர்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறம். நீங்க வந்து சிரிக்கிறீங்க. இனி முதல்ல இருந்து எடுக்கவேணும்.” என்ற மகளை அப்படியே கட்டிக்கொண்டு கொஞ்சினாள் மயூரி.

 

“சரிசரிசரி! இன்னொரு நாளைக்கு எடுப்போம். ஸாரிடாம்மா!” என்றவள் மகளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட பழக்கதோசமாக ஆதிராவும் அன்னைக்கு முத்தமிட்டாள். மனம் குளிர்ந்துவிட, சுற்றி இருப்பவர்களையே மறந்து, இவள் மற்றக் கன்னத்துக்கு கொடுக்க, அவள் கொடுக்க இப்படியே நெற்றி மூக்கு என்று பயணித்தது அவர்களின் முத்தக்கொஞ்சல்.

 

என்ன அடக்கமுயன்றும் முடியாமல் ஏக்கத்தோடு மனைவியைப் பார்த்துக்கொண்டிருந்தான் பிரதீபன். மகளுக்கு முத்தம் முத்தமாக அள்ளி அள்ளி வழங்குகிறவள் சின்னதாய் கட்டிப்பிடிக்க மாட்டேன் என்றுவிட்டாளே.

 

அவனின் பார்வையைக் கவனித்துவிட்டார் புஸ்பவதி அம்மா. அவருக்கும் கவலையாய் போயிற்று. மகனின் மனது புரிந்தது. ஆனால் அவரால் என்ன செய்ய முடியும்?

 

சந்தோசமாய் பொழுதைக் கழித்துவிட்டு அவர்கள் புறப்பட்டபோது, ஆதிராவின் கண்களில் உறக்கத்தைக் கண்டுவிட்டு, “சின்னக்குட்டி இங்கேயே நிக்கட்டுமே தம்பி. எங்களுக்கும் பேத்தியோட இருக்க ஆசைதான.” என்றார்.

 

“இன்னொருமுறை பாப்பமே அம்மா. இண்டைக்குத்தான் நானும் என்ர மகளோட படுக்கப்போறன்.” என்றான் அவரின் மகன்.

 

அவனே சொல்லிவிட்டபிறகு அவரால் என்ன செய்ய இயலும்? “ஆதும்மா, பிறகு அப்பம்மா வீட்டை வந்து படுப்பீங்களா? நாங்க இன்னும் நிறைய டிக்டாக் செய்யலாம்.” என்று ஆசைகாட்டினார் அந்தப் பாசக்காரப் பெண்மணி.

 

வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள் ஆதிரா. அவளுக்குத் தன்னுடன் சேர்ந்துகொண்டு டிக்டாக்கில் கலக்கும் அப்பப்பா அப்பம்மாவை மிகவுமே பிடித்துப்போயிருந்தது.

 

வீட்டுக்கு போவதற்குள்ளேயே உறங்கிவிட்டிருந்தாள் ஆதிரா. மயூரி எழுப்பப் போக, “எழுப்பாத!” என்றுவிட்டு வந்து அப்படியே தூக்கிக்கொண்டான் பிரதீபன்.

 

“எழுப்பிவிடுங்கோ. எப்படியும் உடுப்பு மாத்தி பல்லுத்தீட்டி, கைகால் கழுவித்தான் படுக்க விடவேணும்.” என்ற மயூரி வீட்டுக்குள் வந்தபிறகு அவளோடு மல்லுக்கட்டி எல்லாம் செய்யவைத்து ஒருவழியாக உறங்கவிட்டாள்.

 

அதுவரை நேரமும் ஆதிராவை வைத்துத்தான் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. அவள் உறங்கிவிட்டதில் முழு அமைதி. உடை மாற்றிக்கொண்டு வந்த பிரதீபனும் மகளருகில் படுத்துக்கொண்டான்.

 

எந்தக் கேள்வி பதிலும் இல்லாமல் அவன் சென்று அவர்களின் கட்டிலிலேயே படுத்துக்கொண்டது மயூரிக்கு இதமா படபடப்பா என்று அறியாத கலவையான உணர்வைக் கொடுத்தது. முதல் நாளும் தங்கினான் தான். சொல்லப்போனால் அவர்கள் இருவரும் மட்டுமே தான் தங்கினார்கள். ஆனால், கிடைக்கிற நேரத்தில் கொஞ்சமாவது உறங்கி எழுந்துவிட வேண்டும் என்று அவன் சோபாவிலும் அவள் அறையிலும் கோழித்தூக்கம் தான் போட்டார்கள். இப்போதோ அவர்களின் கட்டிலில் அவன் படுத்திருந்த காட்சி மனதில் அப்படியே பதிந்தது. தலையணையைச் சற்று உயர்த்தி வைத்து அதில் சாய்ந்துகொண்டு ஒரு கையால் அவளின் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான். பார்வையோ கனிவுடன் உறங்கும் மகளின் முகத்திலேயே இருந்தது.

 

தானும் உடைமாற்றிக்கொண்டு வந்து விளக்கை அணைத்துவிட்டு ஓரமாய் படுத்துக்கொண்டாள் மயூரி. பழக்கத்திலா என்னவோ முதலில் தகப்பனை ஒண்டிக்கொண்டு படுத்திருந்த ஆதிரா உறக்கத்திலேயே உருண்டுவந்து அன்னையைக் கட்டிக்கொண்டிருந்தாள்.

 

மகள் விலகியதும் திரும்பிப் படுத்தான் பிரதீபன். மனமும் உடலும் களைத்துப் போயிருந்தாலும், அவனால் உறங்கவே முடியவில்லை. கணக்கில்லாத முத்தங்களை மகளுக்கு வழங்கியவள் ஒற்றை அணைப்பை அவனாகத் தூண்டியபோதும் தர மறுத்துவிட்டாளே. அதோடு அவள் சொன்ன வார்த்தைகள்? முறையற்றுச் செய்ததை முறையோடு செய்ய நினைத்தானாமா? அதையா அவன் எதிர்பார்த்தான்? இப்படி அவள் வார்த்தைகளால் அவனைக் கூறு போடுவது இது முதல் தடவை அல்லதான். ஆனால், அப்போதெல்லாம் ஒரு நியாயம் இருந்தது. திருமணமானபிறகுமா?

 

அவன் செய்தது பெரும் பிழைதான். ஆனாலும், இன்றைய நிலையில் அதை எப்படியெல்லாம் நேராக்க முடியுமோ அப்படியெல்லாம் நேராக்கித்தான் இருக்கிறான். அது போதுமா என்றால் இன்னும் என்னதான் செய்வது? தெரிந்தால் அதையும் செய்யத் தயாராகத்தான் இருக்கிறான். மனமெங்கும் ரணமாய் வலித்தது அவனுக்கு. தனிமையில் இருந்த நாட்களில் கூட துணையாக அவளின் அழகிய நினைவுகள் இருந்தது. இதோ கையெட்டும் தூரத்தில் இருக்கிறாள், ஆயினும் தனிமையில் வேகிறான் அவன். தாங்கமுடியாத வலியில் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டான் பிரதீபன்.

 

 

அடுத்துவந்த ஒரு வார இறுதியில் பிருந்தா அவர்களை விருந்துக்கு அழைத்திருந்தார். மூவருமாகப் புறப்பட்டனர். காருக்குள் பாடலை ஒலிக்கவிட்டான் பிரதீபன். மயூரிக்குமே இதமான மனநிலைதான். அவனின் அருகில் அமர்ந்து செல்வதும் பின் இருக்கை முழுவதிலும் காலை நீட்டி காற்று முகத்தில் மோத ஒரு இளவரசியைப்போல் ஓய்யாரமாக அமர்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்த மகளையும் பார்த்தபோது மனது நிறைந்து போயிற்று!

 

‘என் காதலே.. என் காதலே.. 

என்னை என்ன செய்ய போகிறாய்?

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ 

ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்?’ 

 

காரில் ஒலித்த பாடலோடு குரலில் ஜீவனைத் தேக்கி தன்பாட்டுக்கு பாடினான் அவன். உயிரை உருக்கும் அந்தக் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் மயூரி. அதுவரை இருந்த இதமான மனநிலை மாற நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.

 

லாவகமாய் காரைச் செலுத்தியபடி, வீதியில் பார்வையைப் பதித்து வாய்க்குள் முணுமுணுப்பதுபோல் அவன் பாடிய காட்சி அப்படியே அவளின் இதயப் பெட்டகத்தில் பத்திரமாகப் பதிந்து போயிற்று!

 

“அப்பா நல்லா பாடுறீங்கப்பா. ஏன் அப்பா இவ்வளவு நாளும் பாடேல்ல.” முன்னிருக்கைகளின் நடுவே வந்து கேட்டாள் ஆதிரா.

 

“கேக்கிறதுக்கு ஆள் இருந்தா தானேம்மா பாட..” என்றவன் தொடர்ந்து பாடலோடு சேர்ந்து பாடினான்.

 

“காதலே நீ பூ எறிந்தால் 

எந்த மலையும் கொஞ்சம் குழையும்.. 

காதலே நீ கல்லெறிந்தால் 

எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்.. 

இனி மீள்வதா இல்லை வீழ்வதா 

உயிர் வாழ்வதா இல்லை போவதா..” பாலசுப்ரமணியத்தோடு சேர்ந்து அவன் குரலும் அழுதது.

 

தேகமெல்லாம் நடுங்க பாட்டை நிறுத்திவிட்டாள் மயூரி. உயிர் வாழ்வதா இல்லை போவதா என்றால் என்ன அர்த்தம்? வேதனையில் விழியகலக் கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

பாடல் வரிகளின் வழியே வலியை அவளிடம் கடத்திவிட்டு, உணர்வுகளைக் காட்டாமல் பாட்டை நிறுத்தியதற்கு எதுவுமே சொல்லாமல் காரைச் செலுத்துவதிலேயே கவனமாக இருந்தான் அவன்.

 

பிருந்தாவின் வீடு ஊரின் உட்புறமாக பெரிய காணி தோட்டத்தோடு அமைதியாய் அழகாய் வீற்றிருந்தது. வாசலுக்கே விரைந்து வந்து அன்போடு வரவேற்று உபசரித்தார் பிருந்தா. அவனுடைய மற்றச் சகோதரி, பெற்றவர்கள் எல்லோருமே வந்திருந்தனர். ஆதிராவைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. பிரதீபனின் சகோதரிகளின் குழந்தைகளோடு ஐக்கியமாகி இருந்தாள். கிண்டல் கேலி பிரதீபனோடு செல்லச் சண்டை என்று குறை சொல்லவே முடியாத அளவில் தான் விருந்து நடந்தது.

 

மயூரிக்குத்தான் அவர்களோடு மனதார ஒன்ற முடியாமல் அவன் பாடிய பாடலும் அதில் வழிந்த சோகமும் அவளைப்போட்டுச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது.

 

திருமணத்தன்று நடந்ததற்குப் பிறகு அவளை நெருங்கவே இல்லை. பேசுவது கூட தேவை என்றால் மட்டுமே. ஆதிரா இல்லாத பொழுதுகளில் அதுவும் இல்லை. அவனுடைய பேச்சு, சிரிப்பு, விளையாட்டு எல்லாமே ஆதிராவுடன் மட்டும் தான். அந்த விலகல் தான் அவளைப் பாதித்தது!

 

உண்மையைச் சொல்லப்போனால் விலகிநின்று தன்னை நோக்கி அவளை இழுத்துக்கொண்டிருந்தான் அவன்.

 

தூரத்தில் இருக்கிறவரை அவன் மீதான கோபங்களை பிடித்துவைத்திருக்க முடிந்தது. ஆனால், ஒரே வீட்டில் இருக்கையில், குடும்பமாய் உறங்குவது, அவனுக்கும் சேர்த்துச் சமைப்பது, போதுமான அளவு உண்டானா என்று அவனறியாமலேயே கவனிப்பது, அவனுடைய உடைகளையும் அலசிப்போடுவது, வேலைக்குப் போகும் நேரமாயிற்றே என்று காலையிலும், எங்கே இன்னும் இவனைக் காணவில்லையே என்று மாலையிலும் சிந்திப்பது என்று மனதளவில் அவனுடன் இயைந்து வாழ்ந்துகொண்டிருந்தாள் மயூரி.

 

அப்படியிருக்க, இத்தனை நாட்களாகக் காலைச் சுற்றும் நாய்க்குட்டியாக அவளைச் சுற்றியவன் மகள் மட்டுமே போதும் என்பதுபோல அவளுடன் மட்டுமே பேசுவதும், சிரிப்பதும், விளையாடுவதும் என்று இருந்துகொண்டு இவளை வதைத்துக்கொண்டிருந்தான்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!