‘டொன்னா’, இவன் கடைக்குப் புதிதாக வந்து சேர்ந்த பொறுப்பாளினி; சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் மிக்கவள்; அழகுக்கும் குறைவில்லை; வந்த சில மாதங்களிலேயே கடைக்கும் ரெஸ்ட்டோரண்டுக்கும் இடையில் மாறி மாறி ஒடிக்கொண்டிருந்தவனின் வேலைப்பழுவில், கணிசமானதைப் பொறுப்பேற்றுக் கொண்டாள், விருப்புடனேயே!
குறுகிய காலத்தில் நல்ல நண்பியாகவும் மாறி விட்டிருந்தாள்.
அப்பப்போ வந்து செல்லும் பீட்டர் ஹெலனுக்கும் அவளை மிகவும் பிடித்திருந்தது. வேண்டாம் என்று சென்றவளை நினைவு வைத்திருந்து என்ன பயனாம்? பேரனுக்கும் இவளைப் பிடித்திருந்தால்?
‘எல்லா விதத்திலும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்’ பெரியவர்கள் தம்முள்ளே பேசிக் கொண்டார்கள்.
இப்பவெல்லாம், காலாகாலத்தில் ஒரு ஆணோ பெண்ணோ தமக்கான துணையைத் தாமாகத் தேடிக்கொள்ளாது இருக்கும் பட்சத்தில், குடும்பத்தினர், உறவினர், நட்பு என்று எவராவது, அவர்களுக்கான துணையைக் கைகாட்டி விடுதல் இங்கு சகஜமாகி வருகிறது.
அதைத்தான் இவர்கள் மீராவைக் கண்ட போதும் செய்ய நினைத்தார்கள்; இப்போதும் எண்ணினார்கள்.
இப்படியிருக்கையில், ஜோரிக், டொன்னா தம் பிரத்தியேக வாழ்க்கை பற்றியும் பரிமாறிக் கொண்டனர்.
உண்மையைச் சொன்னால், தனிமை தனிமை என்று வாடிய ஜோரிக்கின் உள்ளத்துக்கு, நல்ல தோழமையுடனான நட்பை வழங்க முடிந்தது, அவளால்.
அதையே அவளும் சொன்னாள். அதோடு நிறுத்தாது தன் உள்ளத்தையும் வெளிப்படையாகவே திறந்து காட்டினாள்
“உன்ன எனக்கு மிகவும் பிடித்திருக்கு ஜோரிக்!” எந்தவித அலங்காரமுமின்றி நேருக்கு நேரே பட்டென்று சொல்லிவிட்டாள்.
கேட்டவன் தான் திடுக்கிட்டு முகம் சுருங்கிப் போனான். நிச்சயம் இதை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதைச் சொன்னது அவன் அதிர்வு!
“நீ இப்பத் தனியாத்தானே இருக்கிற? நானும் தனியாத் தான் இருக்கிறன். நமக்கிடையில விருப்பு வெறுப்புகளில ஒத்துப் போகுது ஜோரிக். நாம ரெண்டு பேரும் ஏன் சேரக் கூடாது?” என்றவளுக்கு, கணமும் யோசியாது பதில் சொன்னான், அவன்.
“இல்ல டொன்னா, நீ எனக்கு நல்ல நண்பி. அதையும் தாண்டி வேறெதுவும் யோசிக்க முடியாது. நிச்சயம் முடியவே முடியாது.” பட்டென்று சொன்னவனை வியப்பாகப் பார்த்தாள், அவள்.
“என்ன ஜோரிக் கொஞ்சமும் யோசியாமல் பதில் சொல்லிட்ட? நல்லா யோசிச்சிட்டே சொல்லு!”
“இதில யோசிக்க என்ன இருக்கு டொன்னா?” என்றவனை, ஆராயும் பார்வை பார்த்தாள், அவள்.
“அப்படியெண்டா இன்னும் ‘லின்’னை நினைச்சுக் கொண்டிருக்கிறயா என்ன? அவளுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கினம். கணவன், குழந்தைகள் எண்டு சந்தோசமா வாழுறாள் எண்டும் நீதானே சொன்னனி.” என்றவளை, விரிந்த முறுவலோடு பார்த்தவன், “நல்ல கற்பனை போ!” என்று சொல்லவும் செய்தான்.
“லின் என்ர நல்ல சினேகிதி டொன்னா. அவளும் நானும் எப்பிடிச் சந்தோசமாச் சேர்ந்து வாழும் முடிவ எடுத்தமோ, அதேபோல, சுமூகமாகத்தான் பிரியிர முடிவையும் எடுத்தம்.” என்றான், தொடர்ந்து.
“அப்ப, இப்ப எனக்கு முடியாது எண்டு சொல்ல என்ன காரணம்? உனக்கு நான் பொருத்தமானவள் இல்ல எண்டு நினைக்கிறயா?”
“இதென்ன கதை டொன்னா? நீ மிகவும் நல்ல பெண்.”
“ஓ! பிறகு?”
“உன்ர மனசுக்குப் பிடிச்சவனா நல்ல காதலன் கெதியாக் கிடைப்பான்.” என்றவன், பார்வை எங்கோ அலைந்து தட்டுத் தடுமாறியது.
“அந்த நல்ல காதலனா நீயே இரன் எண்டு தானே சொல்லுறன். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ஜோரிக்.” மீண்டும் அழுத்திச் சொன்னவள், அன்போடு அவன் கையைப் பற்றி அழுத்தினாள்.
அக்கணம், “ஒரு ரெண்டு மூண்டு வருசங்களில கலியாணம் செய்வமே! அதுவரைக்கும் உன்னைக் காதலிக்கப் போறன் காண்டீப்!” கொஞ்சலோடு இவ்வார்த்தைகள் செவிகளை உரச, விசுக்கென்று கரத்தை விடுவித்துக்கொண்டு விலகியவனை விசித்திரமாகப் பார்த்தாள், டொன்னா.
ஜோரிக்கோ, மிகையாகவே தடுமாறித்தான் போனான்.
‘அவள்ட நினைவுகள் என்னை விட்டுப் போய்ட்டுது எண்டு எல்லா நினைச்சன்? பிடிவாதம் பிடிச்ச பிசாசு! இப்பிடி எனக்குள்ள அட்டையா ஒட்டிக்கொண்டு வதைக்கிறாளே!’
வெகுகோபத்தோடு புலம்பிய அவனுள்ளம், அவள் நினைவுகளை உதறமுடியாத தன் மீதே ஆத்திரம் கொண்டது.
அவனையே பார்த்திருந்த டொன்னாவினுள் பலத்த யோசனை!
‘இவனிட்ட என்ன இல்லை? அப்பிடியிருக்க, காதலி பிரிஞ்சு போயிருந்தாலும் இடையில இந்த சில வருடங்கள் தனியா இருக்கிறானே!’ அவளால் இதைக் கொஞ்சமும் நம்ப முடியாதிருந்தது.
“நான் என்னைப் பற்றி எதையும் உன்னட்ட மறைக்கேல்ல ஜோரிக். என்ர நண்பனும் அப்பிடியே இருக்க வேணும் எண்டு நான் நினைக்கிறதில பிழையில்லயே!”
யோசனை மாறாது கேட்டவள் மீது தடுமாறும் பார்வையைச் செலுத்தினான்,அவன்.
“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல டொன்னா. இப்போதைக்கு எந்த உறவிலும் சிக்க என்ர மனசுக்குப் பிடிக்கேல்ல.” அழகாகச் சமாளித்துவிட்டாலும் அதை நம்பவில்லை, அவள்.
‘என்ர மனச வெளிப்படையாச் சொல்லி மறுத்த பிறகு என்ன செய்யிறது? அவனிட்டக் கெஞ்சிறதா என்ன?’ என்று சுணங்கிய மனத்தைக் கட்டுப்படுத்தி, “உனக்கு என்னில அப்பிடி விருப்பம் வந்தா எப்பவும் சொல்லலாம்” என்றுவிட்டுச் சென்றவள், அதன்பின், வழமைபோலவே இருந்தாலும், அவளை மறுத்தவன் நிலைதான் திண்டாட்டமாயிற்று!
மீராவுடன் பிணக்கு ஏற்பட்ட ஆரம்ப நாட்கள் போன்றே வேதனையில் அகப்பட்டுத் திண்டாடினான், அவன்.
டொன்னா தன் விருப்பைத் தெரிவித்த கணம் மீராவின் நினைவு ஆழிப் பேரலையாக தன்னை இழுத்துக் கொண்டதை மறுக்க முடியாதே!
‘அவனுக்கு நான் தான் எண்டு சொல்லி வையுங்க!’
அன்றொருநாள் ஹெலனிடம் சொன்னதையும் அவர் சொல்லியிருந்தார்.
‘அப்படியெண்டா அவள் எனக்குள்ள கலந்திட்டாளா? என்னைவிட்டு அவள்ட நினைவுகள் பிரிஞ்சு போகாதோ! பிரிக்கவே முடியாதா?’ தன்னிலேயே கோபம் கொண்டான்.
‘அவளால் முடிஞ்சிதே! அவ்வளவு இலகுவாக உதறிச் சென்றாளே! ஒருவேள இப்ப இவ்வளவு நாட்களில கலியாணம் கூட முடிந்திருக்கலாம்.’ என்றெண்ணியவனுக்கு, அவள் தன்னைவிட்டு விலகிச் செல்லக் காரணம் தானே தான் என்று புரிந்தாலும், அவளின் உதாசீனப்படுத்தலையும் அத்தனை சுலபமாக ஏற்க முடியாதிருந்தது.
முடிவு? என்னதான் என்றாலும் இனி அவளைத் தேடியோ அவள் பற்றி விசாரித்தோ தான் செல்வது சாத்தியமற்ற ஒன்றென்றே முடிவெடுத்தான்.
‘மாற்றம் ஒன்றே மாறாதது’
‘அவள்ட நினைவுகளில இருந்து நான் விடுபடுற காலம் வரலாம், வராமலும் போகலாம். நடக்கும் பொழுது பார்த்துக் கொள்ளுவம்’ என்றெண்ணியவன் மனத்தில் விரக்திப் போர்வை!
அதைக் கிழித்தெறிந்து அவள் நினைவுகளில் இருந்து விடுபடப் போராடியவன் வேலையையே தன் மிகப்பெரிய ஆயுதமாகக் கைப்பற்றினான்.
கடை, ரெஸ்ட்டோரண்ட், அதோடு அடுத்த நகரில் விலைக்கு வந்த கடையையும் வாங்கி, தன் வேலையை அதிகரித்துக்கொண்டான். அப்படியிருந்தும், ‘இந்த உழைப்பெல்லாம் யாருக்காக?’ என்று, புதிதாக முளைத்த கேள்வியோடுதான் கழிந்தன அவன் நாட்கள்.
அன்றும் அப்படித்தான், தன் விருப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்த டொன்னாவின் பார்வைகள் ஒவ்வொன்றும், அவன் மறுப்பின் காரணமான மீராவின் பார்வைகளை நினைவுக்குக் கொண்டுவர, அதிலிருந்து விடுபட வெறித்தனமாக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான்.
நடுச்சாமத்தில் தான், இனிமேல் முடியாதென்ற நிலையில் வீடு வந்து சேர்ந்தவன் அப்படியே குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அரைமணித்தியாலத்தில் வெளிப்பட்டவன் உடல் ஓய்வை யாசித்து நின்றது. ஆனாலும், படுக்கையைப் பார்த்தவன் மனமோ முரண்டியது.
நினைவுகள் கண்டபடி ஆக்கிரமிப்பு நடத்தியது. வெறுப்பும் அழுத்தமுமாகத்தான் படுக்கையில் சரிந்தான் அவன், “எத்தின நாட்களுக்கு இந்த வாழ்வு?” என, என்றுமில்லா எரிச்சலோடு முணுமுணுத்தபடி.
எப்போ கண்ணயர்ந்திருந்தானோ தெரியாது, அந்த நிம்மதியற்ற உறக்கத்துக்கும் கைபேசியின் சிணுங்கல் முற்றுப்புள்ளியிட்டது.
‘இந்தச் சாமத்தில யார்? ஓமா ஓப்பாவோ?(பாட்டி, தாத்தா)’ பதறியபடி அழைப்பை ஏற்றவன் செவிகளில் வந்து மோதியது, அவன் உயிர் மூச்சு!
“காண்டீப்!” கிசுகிசுப்பாக வந்த குரல் நடுங்கியதோ என்னவோ இவன் உறக்கம் துளியுமின்றி நிமிர்ந்தமர்ந்தான்.
உடலினுள் மின்னலாகப் பாய்ந்தது, அவள் குரல். அதற்குத்தான் இத்தனை சக்தியா?
அவன் உலகமே வண்ணமய வெளிச்சத்தை மின்னவிட்டு, அதில் கலந்திட கரம் விரித்து இவனை அழைத்தது.
“மீரா!”
“அப்ப…என்னை நினைவிருக்கா உனக்கு? கடைசியா உன்ர குரலக் கேட்க நினைத்….” அவள் குரல் அறுபட, தட்டென்று சத்தத்தோடு அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
“மீரா…மீரா…மீரா…” மீண்டும் மீண்டும் அழைத்தான், ஜோரிக். அவன் சுற்றமே இருண்டு விட்டதே!
உடலும் உள்ளமும் பதற, மீண்டும் மீண்டும் அதே இலக்கத்துக்கு அழைத்தும் பார்த்தான். தொடர்பு கிடைக்கவில்லை.
அப்போதுதான் அதே இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தியொன்று வந்திருப்பதைக் கண்டு, அதைத் திறந்து வாசித்தவனோ, மறுகணம், கம்பளிப்போர்வையை உதறி விசிறிவிட்டுகட்டிலை விட்டிறங்கினான்.

