“இந்த வீடு அப்ப காலியா இருந்தது. அத்தை வந்து இந்த வீட்டில் உக்காந்துக்கிட்டாங்க. அப்பறம் நாங்க வீட்டை வித்ததும் இந்த வீட்டுக்குத் தான் வரப்போறோம்னு அப்பா சொல்லிட்டு பக்கத்தில் வேற வீட்டை வாடகைக்கு பிடிச்சுக்க சொல்லிட்டாரு. நாங்க இங்க வந்துட்டோம். அத்தை பக்கத்து தெருவில் வாடகைக்குப் போன வீடு ரொம்ப சிறுசு. அதில் அத்தானுக்கு தனி ரூமெல்லாம் இல்லை. அதனால எங்க வீட்டுல இருக்குற ரூமிலேயே தங்கிட்டான்”
“உங்க வீட்டை விக்க வச்சவங்க உங்க காசு மூலமா முன்னேறி இதே தெருவில் மச்சு வீடு வாங்கிட்டாங்க. நீங்க நிலம் காசு எல்லாம் இழந்துட்டு ஓட்டு வீட்டில் தனியா நிக்கிறிங்க”
“நீயும் இதையே சொல்லணுமாடி. அந்த சமயத்தில் எங்கப்பா கிட்டக்க நீதான் உங்க அக்கா குடும்பத்துக்கு ஆதரவு, நீதான் இவங்களுக்கு செய்யணும்னு பஞ்சாயத்து பேசின பஞ்சுமிட்டாய்ங்க எல்லாம் இப்ப எங்க போனானுங்கன்னே தெரியல”
“உங்க ஐத்தான் ஏமாத்துனதும் நீ அவனுங்க வீட்டுக்கு போயி அவனுங்க காலுல விழுந்து கதறுனியா? கண்ணகி மாதிரி நியாயம் கேட்டியா?”
“அந்தக் கண்ராவி எல்லாம் கேக்கல. ஆனால் அந்த ஏமாத்துக்காரன் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலைன்னா செத்துடுவேன்னு அந்த பொண்ணு அழுதுச்சாம். என்கிட்டே சொல்லிட்டு அப்படியே நழுவிட்டாங்க”
“இவனுங்க தீர்ப்பு சொல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சைஸ்ல தராசை எடுத்துகிட்டு வருவானுங்க. இந்த பஞ்சுமிட்டாய்ங்க பஞ்சாயத்தை எல்லாம் மதிச்ச ஆளுங்களை என்ன சொல்ல… ஆமா உங்க அத்தனையும் நம்பி ஒருத்தி எப்படி கல்யாணம் பண்ணிக்கிறாளே. அவ பேரு என்ன?”
“கவிதா… கூடப் படிச்ச பொண்ணாம். படிக்கும்போதே காதலாம்”
“கத்திரிக்கா… போடி போ… அவனுக்கு வீட்டையும் விடக் கூடாது. உன் மூலமா வர்ற சொத்தும் வேணும். அதே சமயத்தில் காலேஜூலையும் ஒரு பொண்ணை ரூட்டு விட்டிருக்கான். ஐயோ இந்தக் குடும்பத்தைப் பத்தி நினைச்சாலே எனக்கே கொலை வெறி ஏறுதுடி. நீயெல்லாம் எப்படித்தான் சகிச்சு கிட்டு இருந்தியோ?”
“எனக்கும் தெரியலடி. கொஞ்சம் கூட நம்மை சிந்திக்க விடாம கூடவே இருப்பாங்க. எங்களை விட்டு விலகினதும்தான் என்னால யோசிக்கவே முடிஞ்சது”
“அதுவும் உன் அத்தைக்காரி இருக்காளே வயித்துப்புள்ள வாய் வழியே வந்து விழுந்துடுற மாதிரி இனிக்க இனிக்க பேசுவாளே”
“ஏய் ஜலப்பிரியா எங்கிருந்தடி இப்படி எங்கூரு பாஷை எல்லாம் கத்துகிட்ட?”
“அதென்னடி எங்கூரு பாஷை. பல நூறு வருஷத்துக்கு முன்னாடி நாங்களும் இதைத்தானே பேசிகிட்டு இருந்தோம். இப்பயும் மலையாளத்தில் புழங்கும் பாதி வார்த்தைகள் சுத்தத் தமிழ்தான்”
“அப்ப எனக்கு அவ்வளவா கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்”
“நீ போற வீடு தமிழர்கள் ஒருத்தங்களோடதுதான்னு சொன்னியே”
“ஆமாம். ஆனால் வீட்டாளுங்களைவிட நம்மை மாதிரி தொழிலாளர்கள் கிட்டத்தானே என்னோட பேச்செல்லாம் இருக்கும். அதுக்கு அந்த ஊர் மொழி தெரிஞ்சுக்கிறது அவசியமாச்சே”
“அதெல்லாம் ஆறேழு மாசம் பேசினால் தன்னால வரப்போகுது. அதுவும் மலையாளம் சுலபமா கத்துக்கலாம்” என்று தைரியம் சொன்னாள்..
பத்திரமாக சென்று வரச் சொல்லி ரயில் நிலையம் வரை வந்து ஏற்றிவிட்ட மற்றொரு குடும்பம் ஜலப்பிரியாவினது. அவளது அம்மா வழியில் சாப்பிட பொதி சோறு, முறுக்கு, உன்னியப்பம் எல்லாம் டிபன் பாக்சில் கட்டித் தந்திருந்தார். உறவினர்கள் ஒருவர் கூட அவள் செத்தாளா பிழைத்தாளா என்று எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் நண்பர்களும் , சில நாட்களே அறிந்த நபர்களும் ரயில் நிலையம் வரை வந்திருந்தனர்.
ஜாதி ஜனம் என்பது எண்ணிக்கைக்கு மட்டும்தானா? ஊர் முழுவதும் அவளுக்கு உறவினர்கள் ஆனால் அவள் இருக்கிறாளா செத்தாளா என்று கூட அவர்களுக்கு அக்கறையில்லை.
“யாருமே இல்லாம அனாதையா போறேன்னேனு அழுகையா வந்தது. நீயும் அம்மாவும் வந்தது எவ்வளவு தைரியமா இருக்கு தெரியுமா?” ஜலப்பிரியாவிடம் கலங்கினாள்.
“யாருடி அநாதை? நீயா? நாங்க எங்க ஊர்லேருந்து எப்படி வந்தோம் தெரியுமா? கடன்காரங்களுக்கு பயந்து ஆளுக்கு ஒரு பஸ் ஏறி, திருட்டுத்தனமா ராவோடு ராவா உங்க ஊருக்கு வந்தோம். எங்கப்பன் கடன் வாங்கிக் குடிச்சதுக்கு எங்க குடும்பமே ஒளிஞ்சு மறைஞ்சு வந்தோம். இங்க வந்து மங்கிலால் கடையால மாசம் முழுசும் சாப்பிடுறோம். இப்ப நீ தந்த வீட்டில் பயமில்லாம உக்காந்து உன் புண்ணியத்தால் ஒரு நாளைக்கு மூணு வேளையும் சாப்பிடுவோம்.
நல்ல மனுஷங்க எல்லா இடத்துலயும் இருக்காங்கடி. நமக்கான அந்த இடத்தை நாமதான் தேடிக் கண்டுபிடிக்கணும். சொந்தக்காரங்க எல்லாராலும் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு பெண் சிங்கம், போகும்போது ஒரு வயசு பிள்ளைல இருந்து தொண்ணூறு வயசு கிழவி வரை அம்மா அம்மான்னு கண்ணீர் விட்டு அழ ஜாம் ஜாம்னு போயி சேர்ந்தாங்க. இதைவிடவா சொந்தங்க செய்யப் போகுது?
ஒரு நல்ல வேலையோட எதிர்காலத்தைத் தேடிப் போற… உனக்கான இடமும் உன்னை நோக்கி சீக்கிரம் வந்து சேரும்னு நம்புறேன். அந்த சாஸ்தாவையும் வேண்டிக்கிறேன்”
அவள் மனதில் அந்த பூரிப்புடனும், புதிய இடத்திற்கு முதல் முதலில் சொல்வதைப் பற்றிய அச்சத்துடனும் பயணத்தை ஆரம்பித்தாள்.
காவ்யாவை மறுபடியும் பார்த்தாகிவிட்டது. ஆனால் அவள் வரமாட்டாள் போலிருக்கிறதே. அப்ப அவினாஷ்? அவனைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமா? பார்த்தாலும் அவனுக்கு என்னை நினைவு இருக்குமா? நினைவு இருக்கோ இல்லையோ அவன் வாங்கித் தந்த அந்த குர்த்தி அவளுடனே பயணிக்கிறது.