“கொடுமைக்கார புருசன் மனுசி சொல்லுறதை கேக்கமாட்டான் தெரியுமோ?” மிதமான அலங்காரத்தில் நின்று அவனை மயக்கியவளின் கன்னத்தை உதட்டினால் வருடினான் அவன்.
“ஆனா என்ர மனுசன் நான் சொல்லுறதை கேப்பார்.” என்றவள் அவன் கைகளுக்குள்ளேயே திரும்பி, “இந்தச் சாறியோட இப்பவே எனக்குக் களைக்குது தீபன். எப்படா கழட்டுவன் எண்டு இருக்கு. இதுல நீங்க வேற நேரத்தை மெனக்கெடுத்திக்கொண்டு இருக்கிறீங்க.” என்று சிணுங்கினாள்.
“பிறகு என்னத்துக்கு இத கட்டினனீ? சல்வார் ஏதும் போட்டிருக்க வேண்டியது தானே..” அவளின் வயிற்றைத் தடவியபடி சொன்னான் அவன்.
“சாறி கட்ட விருப்பமா இருந்தது..” ஆசையோடு சொன்னாள் மயூரி.
கைகள் தானாக அவளை அணைத்துக்கொள்ள, “அப்ப இலகுவான வேற ஏதாவது உடுப்பு எடுத்து வை. ஃபோட்டோக்கு நிண்ட பிறகு அதை மாத்து!” என்றான், அவள் மீது கரிசனம் கொண்டவனாக.
“அப்பா வெளிக்கிட்டாச்சா?” ஆதிரா வரும் அரவம் கேட்டது. அவசரமாக அவளின் நெற்றியில் உதடுகளை ஒற்றிவிட்டு, “இன்னும் வெளிக்கிடேல்ல என்று பேசப்போறா. எல்லாம் உன்னால!” என்றபடி வேகமாக உடையை மாற்றினான் அவன்.
அவனுடைய வேகத்தைக் கண்டு நகைத்தாள் மயூரி. அவன் முகத்திலும் தானாகச் சிரிப்பு அரும்ப, “சிரிக்காத மய்யு!” என்று அதட்டியவன் மின்னல் வேகத்தில் தயாராகி இருந்தான்.
போடமாட்டேன் என்று அடம்பிடித்த நகைகளையும் அம்மாவும் மகளுமாகச் சேர்ந்து அவனைப் போடவைத்து, பழச்சாறையும் அருந்த வைத்து, மயூரிக்கான மாற்றுடையும் எடுத்துக்கொண்டு, மூவருமாக வீடு பூட்டிப் புறப்பட்டபோது, அங்கே காரில் பிரபா உறங்கியிருந்தான்.
எல்லோரும் ஒன்றாகப் போவதற்கு வசதியாக ஏழு இருக்கைகள் கொண்ட ‘VW Family Wagen’ ஒன்று எடுத்திருந்தான் பிரதீபன். அவனுடைய குடும்பம் மட்டுமே செல்வதாக இருந்தால் மயூரியின் காரை பயன்படுத்துவார்கள்.
பிரதீபனின் வாகனம் நேராக நந்தினியின் வீட்டுக்கே சென்றது.
“வாங்கோ மாமா! வாங்கோ மாமி!” வாசலுக்கே விரைந்து வந்து எல்லோரையும் வரவேற்றாள் நந்தினி. இத்தனை நாள் பழக்கத்தில் மயூரியின் மாமா மாமி நந்தினிக்கும் மாமா மாமியாகிப் போயிருந்தனர்.
மயூரியைப் பார்த்துவிட்டு, “நல்ல வடிவா இருக்கிறாயடி மாடு!” என்றாள் நந்தினி. காதுக்குள், “சொன்ன மாதிரியே உன்ன ரெண்டு பிள்ளைக்கு அம்மா ஆக்கிட்டார் கேகே, பாத்தியா?” என்று கிசுகிசுத்தாள்.
எல்லோரையும் வைத்துக்கொண்டு ஒன்றையும் சொல்ல முடியாமல், ‘பேசாம இரடி!’ என்று முறைத்தாள் மயூரி.
“நந்தினி ஆன்ட்டி, அம்மா மாடு எண்டால் நீங்க எருமையோ?” என்று கேட்டுச் சிரித்தாள் ஆதிரா. உண்மையிலேயே இன்னுமே அவர்கள் இருவருமே மற்றவருக்கு மாடும் எருமையும் தான்.
“பாத்தியாடி உன்ர மகளுக்கு இருக்கிற நக்கல. அச்சு கேகேதான்.”
அவளின் அந்த அழைப்பில் பிரதீபனுக்கும் முறுவல் அரும்பிற்று! ‘எண்டைக்கு நீங்க அவளை எனக்குப் பழைய மயூரியா காட்டுறீங்களோ அண்டைக்குத்தான் என்ர வாயில இருந்து உங்கட பெயர் வரும்.’ என்றவள், பழைய மயூரியை அல்ல அதைவிடவும் மகிழ்வான நிறைவான குடும்ப வாழ்வை அனுபவித்து வாழும் மயூரியைப் பார்த்தபிறகும், அவனுடைய பெயரைச் சொல்லவே இல்லை. அவளுக்கு அவன் கேகே தான்.
பிரதீபனுக்கும் அவள் அப்படி அழைக்கும் பொழுதுகளில் எல்லாம் இனிமையாய் கழிந்த ‘காதல் காலங்கள்’ நினைவில் வந்துபோவதில் அதை மாற்ற முயலவும் இல்லை.
பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக நடந்தது. கேக் வெட்டும் நிகழ்வு, சிறுவர்களுக்கான விளையாட்டுகள், அருமையான விருந்து என்று அனைத்துமே குறை சொல்லமுடியாதவாறு அமைந்திருந்தது.
மகன், மருமகள், பேரன் பேத்தி என்று தம் மக்களுடன் புகைப்படத்துக்காக மேடை ஏறி நின்றபோது திருநாவுக்கரசு புஸ்பவதி தம்பதியினரின் மனம் நிறைந்து தளும்பிப் போயிற்று! என்னாவானோ என்று எண்ணித் தவித்த மகனின் வாழ்க்கை, அவர்களே நினைக்காத அளவிற்கு மிகுந்த மகிழ்வுடன் மாறிப்போன சந்தோசம் முகத்தில் மிளிர, புகைப்படத்துக்கு முகம் கொடுத்தனர் மூத்த தம்பதியர்.
விழா முடிந்திருக்க, எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு, மண்டபத்தை ஒதுக்கும் வேலைகளுக்கு உதவி செய்யத் திரும்பச் சென்றான் பிரதீபன்.
சேலையைக் களைந்துவிட்டு, கணவருக்கான மாத்திரைகளைக் கொடுக்க எண்ணி, அவர்களின் அறையிலிருந்து வெளியே வந்த புஸ்பவதி அம்மாவிடம், “நான் கொண்டுவாறன் மாமி. நீங்க போங்கோ. உங்களுக்கும் கால் வீங்கிப்போச்சு.” என்று அவரை அனுப்பிவிட்டு, சமையலறைக்கு நடந்தாள் மயூரி.
பாலை இதமான சூட்டில் காய்ச்சி, இருவருக்குமான மாத்திரைகளோடு அவர்களின் அறைக்கு சென்று கொடுத்தாள்.
“பிள்ளைகள் எங்கயம்மா?” தளர்வாகச் சரிந்திருந்த திருநாவுக்கரசு எழுந்து அமர்ந்தபடி கேட்டார்.
“தம்பி படுத்திட்டான் மாமா. ஆது குளிக்கிறா.” என்றவள், “குடிச்சிட்டு நீங்களும் படுங்கோ. ரெண்டுபேரும் நல்லா களைச்சு தெரியுறீங்க.” என்று இதமாகச் சொன்னாள்.
“ஓம் அம்மாச்சி. செய்த வேலை எண்டு ஒண்டும் இல்ல. சாறியை கட்டிக்கொண்டு போயிருந்து சாப்பிட்டு வந்தது மட்டும்தான். ஆனா என்னவோ மலையைப் புரட்டின மாதிரி இருக்கு.” என்றார் புஸ்பவதி.
“அது சன வெக்கையெல்லோ மாமி. அதுதான்.” என்றவள், அவர்களைப் படுக்கச் சொல்லிவிட்டு, அவர்கள் அருந்தி முடித்த கப்புக்களோடு அங்கிருந்து வெளியேறினாள்.
“நாங்க பாத்திருந்தா கூடி இப்பிடி ஒரு அருமையான பிள்ளையைக் கண்டு பிடிச்சிருப்பமா தெரியாது அப்பா!” கணவரிடம் எப்போதும்போலத் தன் மனத்தைப் பகிர்ந்தபடி சரிந்துகொண்டார் புஸ்பவதி அம்மா.
எப்போதும்போலத் தன் மௌனத்தால் அதை அங்கீகரித்தபடி தானும் உறங்கினார் திருநாவுக்கரசு.
பிரதீபன் வீடு திரும்பியபோது பொழுது நடுச்சாமத்தை எட்டியிருந்தது. வந்தவன் நேராகச் சென்று எட்டிப் பார்த்தது பிள்ளைகள் உறங்கும் அறைக்குள் தான். எப்போதும்போல ஆதிரா மட்டும் அங்கு உறங்க மகனோ தாயருகில் கிடந்தான். அரும்பிய முறுவலோடு வேகமாக உடம்பை நனைத்துக்கொண்டு வந்து சத்தமே இல்லாமல் மயூரியின் உறக்கம் கலையாமல் அவளருகில் படுத்துக்கொண்டான்.
ஒரு நிமிடம் கூடக் கடந்திருக்காது. “கள்ளன் மாதிரி வந்து படுக்கிறீங்களே.. நீங்க கட்டின புருசனா கட்டாத புருசனா?” என்று காதுக்குள் கிசுகிசுத்தாள் மயூரி.
மௌனச் சிரிப்பில் உடல் குலுங்க, அவள் புறமாய்த் திரும்பிப் படுத்து, “நித்திரை வரேல்லையா?” என்று ரகசியம் பேசியவனின் கை அவளின் வயிற்றை வருடிக் கொடுத்தது.
“வந்த நித்திரையையும் நீங்க வந்து கெடுத்திட்டீங்க தீபன்.” என்றவள், மகனைத் திரும்பிப் பார்த்து அவன் நல்ல உறக்கம் என்றதும் போர்வையையும் நன்றாகப் போர்த்திவிட்டு, கணவனை நெருங்கி அவன் தோளில் தலை சாய்த்தாள்.
கை வாகாக அவளை அணைத்துக்கொள்ள, “கால் நோகுதா? தடவி விடவா?” என்று கேட்டான் அவன்.
“ஒரு நோவும் இல்ல எனக்கு. உங்களைக் கட்டிப்பிடிக்காம நித்திரை வரமாட்டன் எண்டது. அவ்வளவுதான்!” என்றவள் பேச்சு முடிந்தது என்பதுபோல் அவன் தோளில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக்கொண்டாள்.
பிரதீபனும் அதற்குமேல் எதையும் பேசாமல் விழிகளை மூடிக்கொண்டான். அமைதியான உறக்கம் வந்து அவனை அரவணைத்துக்கொண்டது. அதைக் கொடுத்தவள் அவனுடைய மய்யு!
முற்றும்!

