30
“மீரா! யார் வந்திருக்கினம் எண்டு வந்து பார்!” என்ற பெரியதாயாரின் அழைப்புக்கு முன்னரே, வாயிலில் அரவம் உணர்ந்திருந்தாள், இவள்.
முதல்நாள் நடந்த பயங்கரத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் அவள் வெளிவரவில்லை. உள்ளம் அந்நிகழ்வின் அதிர்வைத் தாராளமாகவே காட்டி நின்றாலும், அதை, வீட்டிலுள்ளவர்களுக்கு வெளிக்காட்ட விரும்பவில்லை. அவர்களும் மிகவும் பயந்து போனார்கள் தானே? அதன் தாக்கம் அவர்களில் இன்னுமுண்டே! ஆதலால், சமாளிப்போடுதான் வளைய வந்து கொண்டிருக்கிறாள்.
அதோடு, ‘அம்மாவோட கதைக்கக் கிடைக்கேல்லயே! எத்தினை தடவைகள் எடுத்திட்டன். ஒவ்வொருதடவையும் அங்க இங்க எண்டு ஒவ்வொரு கதை சொல்லினம்.’ என்ற மனச்சிணுக்கத்தோடு இருந்தவள், வாயிலில் ஏற்பட்ட அரவத்தில் அவ்வளவு ஆர்வம் செலுத்தவில்லை.
முதல் நாள் நிகழ்வைக் கேள்விப்பட்ட நண்பர்கள், உறவுகள் என்று அடிக்கடி எவராவது வந்து போனதால், அதை அவ்வளவாகப் பொருட்படுத்தாது இருந்துவிட்டாள்.
அதுமட்டுமா? மீண்டும் ஒருமுறை ஜோரிக்குக்கு அழைத்துவிடத் துடித்த மனத்தைக் கட்டுப்படுத்திட பெரும் பாடுபட்டுப் போனாள் அவள்.
‘இப்படி எண்டு எடுத்துச் சொல்லியும்…அவன்…எனக்கு என்னவானாலும் ஒண்டுமேயில்லை என்று இருந்திட்டானா?’
கேள்வி கேட்ட உள்ளத்தின் எதிர்பார்ப்பு என்னவோ பெரிதாக இருந்தது.
உயிருக்கு ஆபத்து என்றதும் அவன் நினைவு தானே வந்திருந்தது!
ஒருதரமேனும் அவன் குரலைக் கேட்டு விட வேண்டும் என்று அவளுள் எழுந்த துடிப்பு, வாழ்வுக்கும் மறக்காதே!
அவனுக்கும் இவளுக்குமான பிணைப்பை பட்டவர்த்தனமாக்கிய கணமல்லவா அது!
அதற்கு அவனிடமிருந்து பிரதிபலிப்பு வேண்டாமா?
‘ஹ்ம்…ஒருவேள அவன் எனக்குக் கால் பண்ணியிருந்தாலும் அது எனக்கு எப்பிடித் தெரியும்? என்ர ஃபோன் தான் அப்படியே போச்சே! அந்தப் பயங்கரத்தில அதை ஆர் பார்த்தது? இந்த வீட்டுப் ஃபோன் நம்பரும் அவனுக்குத் தெரியாதே!’
அவனுக்காகப் பரிந்த இதயத்துக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகி இருந்தது. அவனிடமிருந்து வந்த ‘மீரா’ என்ற அழைப்பு அவன் இதயத்தில் இருந்து வந்திருந்ததை அந்தத் திகிலிலும் அவளால் உணர முடிந்திருந்ததே!
அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது! உடனே!
ஒரே பாய்ச்சலாக வீடு செல்லப் பரபரத்த உள்ளத்தை அடக்க முடியாது தடுமாறிகொண்டிருந்தவள், இத்தனை மகிழ்வோடு பெரியதாயார் அழைத்ததும், ஏதோவொரு உந்துதலில் சட்டென்று எழுந்து, அங்கிருந்தே எட்டிப் பார்த்தாள்.
அங்கோ, அவள் விழிவட்டதினுள் பளிச்சென்று ஓருரு மட்டுமே விழுந்தது.
கண்களிரண்டிலும் ஏக்கம் ததும்பி வழிய, வாடி வதங்கி நின்றவன், அவனேதானா?
சட்டென்று தாக்கிய அதிர்வில் மிகையாகத் தடுமாறிப்போனது அவளுள்ளம்; அவளும் தான்.
அப்போதும், அவனை நாட விளைந்த புலன்கள் அதீத வஞ்சனை செய்கின்றனவோ என்கின்ற சந்தேகமும் உரசிச் சென்றது!
அதுவே, கண்களில் பட்டு, கருத்தில் பதிந்ததை உண்மையா என ஆராயவும் தூண்டியது.
இவையெல்லாமே மிகச்சில விநாடிகள்தான்.
அவளுள்ளத்தோடு கைகோர்க்கும் எண்ணமோ, தோன்றிய வேகத்தில் மறைந்திருந்தது.
கையில் ஆரணியின் கைபேசியை வைத்திருந்தாள். அது நழுவி விழுந்ததையும் உணராது, மின்னலென நகர்ந்தாள்,மீரா.
“காண்டீப்!” கூவலோடு பாய்ந்து வந்தவளின் கரங்கள் அவனை இறுகத் தழுவி நிற்க, தள்ளாடினான் ஜோரிக். தன் நெஞ்சில் உரசிய அவள் வதனத்தை, இமைதட்ட மறந்து பார்த்து நின்றவனில் சிலகணங்கள் அசைவில்லை.
இக்கணத்தை, கனவில் கூட கற்பனை பண்ணியவன் இல்லை, அவன்.
இனி, இல்லவே இல்லையென்றளவுக்கு வந்துவிட்ட நிலையில், தன்னுள் ஆழ ஊறிவிட்ட அவ்வுறவின் நினைவுகளை உதற முடியாது தவித்தாலும், அணுகிப் பார்க்கவும் முயலாது தானே இருந்தான்?
இருந்தும், அவளுக்கு ஆபத்தென்றதும் உயிர் போகும் வலியோடு ஒருவித ஆவேசம் உந்தப் புறப்பட்டிருந்தானே! ஆபத்தில் இருந்து மீண்டு விட்டாள் என்றதும் தான் சீராக மூச்சு விட்டான். பின்னரோ, ‘என்னை எப்பிடி எதிர்கொள்வாள்?’ என்கின்ற, சிறு கலக்கத்தோடு தானே வந்து சேர்ந்தான்.
அப்படியிருக்க, கிடைத்த வரவேற்பில் தன்னை மறந்து நிற்காவிட்டால் தானே அதிசயம்!
எப்போதுமே இவனைத் திக்கு முக்காட வைத்துவிடும் அவள் அன்பு, இப்போதும், கனகச்சிதமாக அவ்வேலையைச் செய்தது.
‘இத்தூய்மையான அன்பையா அன்று துச்சமென உதறிட நினைத்தேன்?’
தன் உயிர் மூச்சு எங்கிருக்கு என்றதைத் தெளிவாக உணர்த்து கொண்டவன் தன்னைத்தானே சாடிக்கொண்டான்.
அவன் மனதுள் இருந்த கொஞ்சநஞ்ச சிணுக்கங்களும் விழிவழி உப்பு நீராகக் கரை கடக்க, நடுங்கும் கரங்களால் அவளை வளைத்துக்கொண்டான், ஜோரிக்.
இருவருக்குமே தாம் நிற்கும் இடமோ, சூழலோ சற்றும் உறைக்கவில்லை.
அக்கணம்,
மதிமயக்கும் புஷ்பலோகத்தில்
பிரிந்தவர் ஒன்று சேர்ந்திருந்தனர்!
மனங்களில் சுற்றிச்சுழன்ற
மலர்களின் நறுமணத்தில்
மயங்கி நின்றனர் இருவரும்!
ஆண்டாண்டு காலமாய் இப்படியே நின்ற உணர்வு, இருவருக்குமே!
பரபரவென்று கணங்கள் கடந்திருக்க, அவன் கரங்கள் கொடுத்த அழுத்தத்தில் மெல்ல உயர்ந்தன, மீராவின் விழிகள்!
உள்ளத்தில் பதிந்த அவனுருவை இத்தனை அருகில் பார்க்க அனுமதியேன் என்றால் எப்படி? அப்படியென்ன பொறாமை உனக்கு?
தன் பார்வையை மறைக்கும் கண்ணீரைச் சபித்தாள் அவள்.
அதற்கோ, ‘இனி எப்போதோவது வெளிவரும் சந்தர்ப்பம் வாய்க்காவிட்டால் என்ன செய்வதாம்?’ என்ற ஆதங்கம்! மொத்தமாக வெளியேற நினைத்தது போல், சரசரவென்று வடிந்து தொலைத்தது.
“கா..ண்…டீப் நீயா? எனக்கு நம்பவே முடியேல்லை”
அவள் வதனம் துடித்தது போலவே குரலும் நடுங்கியது.
கேள்விக்கு விடையறிய முயன்ற தளிர்க்கரங்கள் மேலெழுந்து அவன் கன்னமிரண்டையும் அழுந்தப் பற்றின!
இருநாட்கள் சவரம் செய்யாத கன்னத்து முடிகளின் ஸ்பரிசம் அவளின் மயக்கத்தைக் கலைக்க முயன்று நிற்க, “இது கனவில்லையே!” தழுதழுத்தவளுக்கு, வார்த்தைகள் கொண்டு விடை சொல்லவில்லை அவன். சற்றும் முடியவில்லை அவனால்!
இக்கணத்திலும், கடைசியாக, இரு வருடங்களுக்கு முன், அவளின் பிறந்தநாளின் போது எத்தனை வருத்தி அனுப்பினான்? அன்று அவள் கோபத்தோடு நின்ற கோலமும், விழிகளில் கசிந்த வெறுப்பும், வார்த்தைகளில் தெறித்த வெம்மையுமே சிந்தையில் எட்டிப்பார்த்துச் சென்றது.
‘டேய் அடிமுட்டாளே! நான் உன்ர உயிரடா!’ தெள்ளத் தெளிவாக உணர்த்தி நிற்பவளின் விழிநீரைத் தடுக்க நினைத்துயர்ந்தது அவன் வலக்கரம்.
கண்ணீரும் பிடிவாதம் பிடித்து நிற்கின்றதே! அதைத் தடுக்கமுடியவில்லையே என்று சுணங்கிய அவன் உள்ளமோ, வார்த்தைகளைக் கொட்ட மறுத்து நிற்கும் உதடுகளையே அவசரத் தூதனாக்கியது.
துளியும் தயங்காது, அவள் முகமெங்கும் முத்தங்களை அள்ளித் தெளித்தான் அவன். அப்படியே துவண்டு போனாள், மீரா.
தாயைத் தொலைத்துவிட்ட கன்றுக்குட்டி, கண்டுகொண்டதும், எத்தனை சந்தோசமும் பிரிவின் தவிப்பைக் காட்டும் கதறலுமாக ஓடிவரும்! அப்படியோடி வந்தவளைச் சுற்றி நின்ற குடும்பத்தினர் அனைவருமே அசைவின்றித்தான் பார்த்திருந்தார்கள்.
அவளின் கதறலும் ஜோரிக்கின் கண்ணீரும் எல்லோர் விழிகளையும் கசிய வைத்துவிட்டன.
அவன் வரவை அத்தனை இரசிக்காத கார்த்திகேயனின் தமக்கையும் அவர் கணவரும் கூட, தம் விழிகளின் கசிவைத் தடுக்க முடியாதுதான் நின்றார்கள்.
அதிலும் நித்தியோ, மகளைக் கண்டதும் தன்னை மறந்து அவளை நோக்கி அடியெடுத்து வைத்தவர், அவள், அவரைத் தாண்டிச் சென்று அவனை அணைக்க, சுவாசிக்க மறந்து நின்றார்.
மகளின் செய்கை நிச்சயம் அதிர்வைத் தந்ததுதான்.
‘ஆபத்திலும் அவனைத்தானே தேடினாள்? அப்படியிருக்க, இதில் என்ன அதிசயம்?’ சுதாரித்துக்கொண்டவருக்கு, அவளின் பார்வையில் தான் விழவில்லை என்பதும் புரிந்தது.
‘என்னைக்கண்டுவிட்டு, தாண்டி அவனட்டப் போகேல்ல.’ தன்னைத்தானே சிறுபிள்ளையாகச் சமாதானம் செய்து கொண்டவர், இப்போதோ, அவர்கள் இருவருக்கும் தாம் சூழ இருப்பதே மறந்து போயிற்று என்றதையும் உணர்ந்து கொண்டார்.
தத்தம் கண்களைத் துடைத்துக்கொண்ட சந்துரு, ராகுலன் தம்பதிகள் ஒருவர் ஒருவரைப்பார்த்து மந்தகாச முறுவல் செய்ய, பெரியவர்கள் முகமோ அஷ்டகோணலாகியது.
அதிலும் ‘நான் விருப்பமின்றியே அவனை வரவேற்கத் தயாராகினேன்’ என்பதை வெளிப்படையாகக் காட்டியபடி, வேண்டா வெறுப்போடு நின்ற தமக்கையின் முகத்தில் உருவான எரிச்சலைக் கவனித்த நித்தி, “மீரா!” சட்டென்று நகர்ந்து மகள் முதுகில் அழுந்தக் கரம் பதித்தார்.
இதுவரை, உள்ளத்தில் குடியிருந்தவனில் மயங்கி நின்றவளின் மயக்கம், படீரென்று கலைந்து போக நித்தியின் குரல் துணை செய்தது.
விசுக்கென்று அவனை விட்டு விலகியவளின் விழிகள் கொட்டைப்பாக்காய் விரிந்தன.
அடுத்தநொடி, “ம்மா!” கதறலோடு பாய்ந்து தாயைக் கட்டிக் கொண்டவளோடு சேர்த்து ஒலித்தது நித்தியின் அழுகையொலி.
“ம்மா…நான்..நேற்றிரவில இருந்து உங்களோட கதைக்க முடியேல்லையே எண்டு …” இறுக, மேலும் மேலும் இறுகக் கட்டிக்கொண்டவள், “எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருந்தன் தெரியுமா?” கேவல்களிடையே சொல்லவும் செய்தாள்.
“என்ர செல்லமே! உனக்கு ஒண்டுமில்லையே!” அரற்றலோடு பரபரப்பாய் மகளை ஆராய்ந்தார், நித்தி.
“நீ..நீ வீட்ட வந்திட்ட எண்டு சொல்லுற வரைக்கும் என்ர உயிர் என்ர வசம் இருக்கேல்லயம்மா!” சொல்லி சொல்லிக் கேவியவரை, ஓடிவந்து ஆறுதல் படுத்த முனைந்தார்கள், ஆரணி, ஆரபி.
“சரி சரி…அதுதான் இப்ப ஒரு பிரச்சினையும் இல்லையே! இப்படி வாசலில நிண்டு அழாமல் உள்ள வாங்க.” என்றபடி நகர்ந்தார் சந்துருவின் தந்தை.
“ம்ம்…உள்ள வாங்க ஜோரிக்!” தந்தை தாய் அழைப்பார்கள் என்றிருந்தால் அது சிலவேளை நடக்காதும் போகலாம் என்பதால், வீட்டவனாக ஜோரிக்கின் கரம் பற்றி உள்ளே நடந்தான், சந்துரு.
தாயின் கரங்களுள் சிறைப்பட்டு நின்றவளையே பார்த்தபடி அவனைத் தொடர்ந்தான், ஜோரிக்.
“உங்களுக்கு ஆரம்மா சொன்னது? உங்களுக்குத் தெரியாதெண்டு சொன்…” கேட்டுக்கொண்டே, தாயோடு உள்ளே நகர்ந்த மீராவின் நடை சடக்கென்று தடைப்பட்டது.
“ம்…மா!” இதய ஆழத்திலிருந்து அழைத்தாள். அவள் தாய், யாரோடு வந்திருக்கிறார்? அத்தனை பெரிய அதிர்வின்பின், அடுத்தடுத்துத் தாக்கிய மகிழ்வில் இதை உணரவில்லையே!
“அம்மா…அவன்…நான் நேற்று அவனுக்கு…” தடுமாறிய மகளை கண்ணீரோடு அணைத்தபடி உள்ளே வந்த நித்தி, ஜோரிக் மூலம் தாம் விபரம் அறிந்ததை இரத்தினச்சுருக்கமாகச் சொன்னபடி சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.
தாயோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்தவளின் பார்வை என்னவோ எதிரில் அமர்ந்திருந்த ஜோரிக்கில்தான். அவனோ, இமைக்கும் கணத்தையும் வீணாக்காது இவளையே பார்த்திருந்தான்.
“அதுவும் நீ கதைச்சுக் கொண்டிருக்கேக்க ஃபோன் கட்டாகீட்டு எண்டதும் தான் நல்லாப் பயந்து போனம்!” குரல் நடுங்கச் சொன்னபடி, மகளைத் தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டார், நித்தி.
மீராவின் உடலில் முதல் நாள் அனுபவித்த பயங்கரத்தின் சிலிர்ப்போடியது.
தாயின் கதகதப்பில் அடங்கிக்கொண்டே நடந்ததைச் சொன்னாள்.
“அந்த ரெண்டு பேரும் ரெஸ்டாராண்டுக்கு வந்த ஆட்கள் போல சாதாரணமாத்தான் வந்தவே. திடீரெண்டு பார்த்தால் துவக்கோட நிற்கிறான்கள். பயத்தில ஆருக்கும் சத்தமே வரேல்ல.
அங்க இருந்த எல்லாரையும் ஒண்டா ஒரு இடத்தில நிற்கச் சொன்னான்கள். நானும் ஃப்ரெண்ட்ஸும் கடைசியிலதான் நின்றிருந்தம். உடனே இவனுக்கு…” படபடவென்று சொல்லிக்கொண்டு வந்தவள், நிறுத்திவிட்டு ஜோரிக்கைப் பார்த்தாள்.
அக்கணத்தை எண்ணியவளின் நயனங்கள் தளம்ப, அவன் விழிகளும் மினுங்கின.
சட்டென்று இவள் பார்வை மாறி, முறைப்பைத் தத்தெடுத்துக்கொண்டது.
“இவனுக்கெல்லாம் மெசேஜ் அனுப்ப வேணும் எண்டே நான் நினைக்கேல்லம்மா! ஏதோ கைதவறி இவனுக்குப் போயிட்டு!” என்றவள், அவனின் தொலைபேசி எண்ணை மனதில் கல்வெட்டாகப் பதித்து வைத்திருந்தாளே! அந்நினைவே இதழ்களில் அழகிய முறுவலைப் பூசியது. நேசம் ததும்பும் பார்வையால் அவனைத் தொட்டாள், மீரா. அவனோ, ‘கை தவறி எடுத்தியா?’ பார்வையால் கேளாமல் கேட்டான்.
‘ஓம் டா ஓம்!’ வம்புக்கு நின்றது இவள் விழி வீச்சு!
மகளையும் அவனையும் மாறி மாறிப்பார்த்த நித்தி, “நீ சொன்னாச் சரியாகத்தான் இருக்கும். நீ அனுப்பின மெசேஜ் என்ன எண்டுதான் ஆதவ் பார்த்திட்டுச் சொன்னானே!” என்றார் கேலியாக!

