துளியும் எதிர்பாராத சந்தோசம். முதல் இது உண்மையா? அப்போ அவள் எதிர்காலம் வறண்டு விடவில்லை. அவளுக்கு மிகப் பிடித்த வகையில் பூத்துக்குலுங்கும்! இதய ஆழத்திலிருந்து வந்த கேவலை ஆதித் தலையுச்சியில் இதழ் பதித்து கட்டுப்படுத்தப் போராடினாள், கயல்விழி.
இவர்கள் தன்னைத் தேடி வருவார்கள் என்றளவில் அவள் துளி கூடச் சிந்திக்கவேயில்லையே! அதுவும் இந்த ஒரு கிழமைக்குள்! அதையும் தாண்டி, இப்படி வீட்டுக்கே வருவதென்றால்…அவளால் சுத்தமாகவே நம்ப முடியவில்லை. சந்தோசத்தில் திக்கு முக்காடிப் போயிற்றாள். அம்மம்மா, சித்தி எல்லோரும் சம்மதிக்காது இது நடக்கச் சாத்தியமே இல்லையே! நிச்சயம் சாந்தா ஆன்ட்டி கதைத்துச் சமாதானம் ஆகியிருக்க, சம்மதம் பெறும் அளவுக்குச் செல்ல வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு அசுமாத்தத்தையும் அவள் இங்கு உணரவே இல்லையே! அதோடு, அம்மம்மா அந்தளவுக்கு அவர்களில் கோபமாக இருந்தாரே! அப்போ, பூபாலன் தான் கதைத்திருக்க வேண்டும்!
கைவளைக்குள் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களின் தகப்பன் முகம் காணத் துடித்திட்டு, அவளிதயம்!
அவனோ, அவர்கள் வீட்டு வரவேற்பறையில் தான் அமர்ந்திருந்தான். கயல், பிள்ளைகள் அழுகை, கொஞ்சல் குரல் கேட்டும் அவனால் அவர்களருக்குச் செல்ல முடியாதிருந்தது. மனமோ உன்னித் தள்ளிற்று; துளியும் வெளிக்காட்டாது வலு அமைதியாக இருப்பது போல் கரங்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். அருகில் வந்தமர்ந்த கரன், பயணம் பற்றிப் பொதுவாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் தந்தையும் தாத்தாவும் தமக்குள் கதைத்தபடி அங்கேதான் இருந்தார்கள்.
சமையலறையோடு இருந்த ஓடைப் பக்கமாக பின்புறம் சென்ற அம்மம்மாவைத் தொடர்ந்து சென்ற சாந்தா, “நான் என்ன கதைச்சிருந்தாலும் மன்னிச்சுக்கொள்ளுங்க அக்கா. வீடு தேடி வந்திரக்கிறம் கதைக்காமல் போனா எப்பிடி? இன்னும் எத்தின நாளுக்குக் கோபம் சாதிப்பீங்க அக்கா?” அம்மம்மாவின் கரம் பற்றினார். அவரோ, பட்டென்று உதறிக்கொண்டார்.
“என்னதான் சொல்லு, நரம்பில்லா நாக்கச் சுழற்றி என்ன எல்லாம் சொல்லிப்போட்ட? கடைசில நீ நினைச்சத நடத்திறத்திலயே குறியா நிண்டு வெற்றியும் கண்டிட்ட எல்லா? உன்னில உள்ள கோவத்த ஆரிலும் ஏன் சாதிப்பான் எண்டுதான் அமைதியா இருக்கிறன். இப்பிடியே என்ன விட்டிரு!”
“அக்கா, என்ர பக்கமும் நீங்க யோசிக்க வேணும்.” தொடர்ந்த சாந்தாவை அழைத்த அவர் கணவர், “தயவு செய்து இப்ப ஒண்டும் கதைக்க வேணாம் விடுங்க.” என்றுவிட்டார். ஏற்கனவே அரைமனமாகத் தலையாட்டியிருக்கிறார், அம்மம்மா. அதற்குள் சமாதானம் செய்விக்கிறேன் என்று வெளிக்கிட்டு உள்ளதையும் உடைத்து விடவோ என்றிருந்தது, அவருக்கு.
வேலைக்கு நிற்கும் பெண்ணோடு சேர்ந்து, தேநீர் மற்றும் காலையுணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார், வேதா. அவர் கரம் வேலைகளைச் செய்தாலும் மனமோ மீண்டும் மீண்டும் நடப்பதை எண்ணிப் பார்த்திட்டு. இப்பவுமே அவருக்கு இதில் முழுதாயொப்புதல் இல்லை. ஆனால், “நம்மட மகளும் விரும்புறாள் வேதா. கடைசில அவள் இப்பிடியே தனியா இருந்திட்டா நம்மளால நிம்மதியா இருக்கேலுமா சொல்லுங்க?” என்ற கரனின் வாதமே கடைசியில் வென்றிட்டு.
கயலோடு இங்கு வந்த அன்று…
கைபேசியில் அழைப்பு வர, ‘வெளிநாட்டுக் கோல், ஆர்?’ என்ற யோசனையோடு அழைப்பை ஏற்ற கரன், சர்வநிச்சயமாக பூபாலனை எதிர்பார்க்கவில்லை.
“அங்கிள்…எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்க?” என்றவன், பதிலை எதிர்பாராதே “வீடியோ ஒன் பண்ணுறன் அங்கிள்.” என்றிருந்தான்.
உண்மையில் கரனுக்கு அவனோடு கதைக்க விருப்பமேயில்லை. சற்றுமுன் மகள் சொன்னவையும் கடைசியில் பார்த்த பார்வையும் நெஞ்சில் தங்கி மிகப் பாரம் கொடுத்திட்டு. எங்காவது தனியாகச் சென்றமர்ந்து யோசிக்க வேண்டியிருந்தது. அதுபார்த்தால்…
வீடியோவை போட்ட கரன் திரையில் தெரிந்தவனை ஆழ்ந்து பார்த்திருந்தார்.
அவர் பார்வை பூபாலனைத் தடுமாற வைத்திட்டு.
“அங்கிள்..” ஆரம்பித்தவன், தலையைக் கோதினான். முன்னால் இருந்த போத்தலில் இருந்த நீரை மடமடவென்று அருந்தினான். “ஒரு நிமிசம் அங்கிள், தம்பி எழும்பினது போல இருக்கு!” என்றுவிட்டு மறைந்தவன், திரைக்கு அப்பால் தள்ளி நின்று ஆழ் மூச்செடுத்துவிட்டான். “ஏலாது தம்பி, அதெல்லாம் சரிவராது எண்டு எத்தனை தரம் தான் சொல்லுறது?” என்று சொல்லிவிட்டால்! ‘அதுக்குப் பிறகு?’ என்ற கேள்வியே கசந்திட்டு.
‘இல்ல, கதைக்க முதலே அப்பிடி எல்லாம் எதிர்மறையா நினைக்காத!’ கயல் மீதான நேசம் உரமளித்தபடி வந்தமர்ந்தவன், கரனை நேருக்கு நேராகப் பார்த்தான். “சொறி அங்கிள், நீங்க ப்ரீ தானே? அலுவலா இல்லையே!”
“பரவாயில்ல சொல்லும்.” கரன் முடிக்கவில்லை, “கயலை எனக்குக் கலியாணம் செய்து தருவீங்களா அங்கிள்?” கேட்டே விட்டான். வார்த்தைகள் உதிர்ந்து விழுந்த பின்னர் பதற்றம் மீண்டும் ஓடி வந்து ஒட்டிட்டு! அதை மறைக்க முயன்றபடி, தான் கேட்டதற்கு எதிரொலியாக கரன் முகபாவனையில் ஏதேனும் தெரிகிறதா என்று அவசரமாய் தேடினான், பூபாலன்.
அவரோ, மிக அமைதியாக கூர் பார்வையால் அளந்து கொண்டிருந்தார்.
இதுவரை அவர்களுக்கு இந்தக் கலியாணத்தில் விருப்பமில்லை என்று இவனுக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியுமே. இருந்தும் கோபம் கூடப் படவில்லை என்றால்? மனம் சற்றே துணிவு கொண்டு நிமிர்ந்திட்டு.
“அங்கிள்…நான்…பிள்ளைகள் அவா இல்லாமல் இராயினம் அங்கிள். ரெண்டு நாளுக்கே என்னைப் போட்டுப் படாதபாடு படுத்திப் போட்டினம். சூட்டி இங்க வரவேணும் இல்லையோ நாம அங்க போவம் எண்டு நிக்கிறான் மகன்.” தொடர்ந்தான்.
“ஓ! அப்ப… கயலிட அமம்ம்மா சொல்லுறது போல உங்கட பிள்ளைகள் பார்க்க ஆள் தேவை எண்டதுதான் இப்பிடி மரியாதையா கலியாணத்துக்குக் கேட்க வைக்குதோ!” அவர் கேட்ட தொனியிலும் பார்வையிலும் திகைத்து விட்டான், பூபாலன்.