மலருமோ உந்தன் இதயம் 1- 2

“வேலைக்கு எதுவும் போவாரோ! கேட்க மறந்து போனமே!” யோசனையுடன் சொன்ன நித்தி, “என்ன செய்யிறதண்ணா? இந்தச் சனி ஞாயிறு நேரம் ஒதுக்கிப் போய்ட்டு வருவமா?” அமைதியாக இருந்த தமையனிடம் கேட்க, பெரிதாக விருப்பமின்றியே தலையாட்டிய கார்த்திகேயன், “குளித்துவிட்டு வாறன்மா, இரவுக்கு பாஸ்டா செய்வம்!” எழுந்து சென்றான்.

தமையன் வரும் வரை தொலைக்காட்சியில் அமர்ந்தாள் நித்தி.

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவளின் தந்தை தாய், நெதர்லாந்து வந்து பலவருடங்களாச்சு!

பிள்ளைகள் மூவருமே இங்குதான் பிறந்தார்கள். மூத்தமகளை அருகில் மணமுடித்துக் கொடுக்கத்தான் பெற்றவர்கள் விரும்பினார்கள். ஆனால், உறவுக்குள் நல்ல சம்பந்தம் அமைய, தூரமென்றாலும் பரவாயில்லை என முடிவெடுத்துத் திருமணம் முடித்து அவள் அவுஸ்திரேலியா சென்றுவிட்டாள்.

மகனும் தந்தையோடு வேலை பார்க்கத் தொடங்க, பெண் பார்க்கும் முயற்சியில் இருந்த பெற்றோர் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் அந்தரத்தில் போவார்களென்று யார் கண்டது?

“கவனம் செல்லங்கள், அம்மா இரண்டு மாதத்தில் வந்திருவன்; அக்காவுக்குப் பிள்ளை பிறந்ததும் அப்பா வந்திருவார்!” என்றுவிட்டு, திரும்பி திரும்பிப் பார்த்தவாறு சென்ற தாயின் வதனத்தை மறக்க முடியாது தவித்துத் திண்டாடும் அண்ணனும் தங்கையும், பல சமயங்களில், மீளவே முடியாத சுழலில் சிக்கியது போன்ற உணர்வில் தவித்துப் போவார்கள்.

“அப்பா! அம்மா!” முனகினாள் நித்தி. முன்னால் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்த பெற்றோர் தன்னை நோக்கி மென்முறுவல் பூக்கும் உணர்வு ஏற்பட்டது அவளுக்கு!

 

தந்தையின் மடியின் கதகதப்பு; அன்னையின் பரிவான தலை கோதல்; பார்த்துப் பார்த்து ஆசையாகச் சமைத்துத் தரும் உணவுவகைகள்; செல்லமான கண்டிப்பு; ஏக்கத்தில் அடங்க மறுத்தது அவளுள்ளம்!

இனி இவை இல்லவேயில்லை என்பதை நிச்சயமாக உணர்ந்த பின்னும், வேண்டும் வேண்டுமென்று அடம்பிடிக்கின்றதே பாழும் மனம்!

விழிகளில் துளிர்த்த நீரோடு அமர்ந்திருந்தவளிள் தலையில், பரிவுடன் படிந்தது தமையனின் கரம்!

“நித்தி என்னடாம்மா?” கண்டிக்கும் குரலில் கேட்டவன், “வா வா… பசிக்குது சாப்பாட்டைச் செய்வம்.” அவள் எண்ணத்தை மாற்றும் விதமாக இழுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

*****

திட்டமிட்டபடி, அந்த வார இறுதியில் நேரத்தோடு மதிய உணவை முடித்துக்கொண்ட அண்ணனும் தங்கையும், மதுராவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

தமையன் காரைச் செலுத்திக் கொண்டிருக்க, அருகிலிருந்தவாறே, சிறு நப்பாசையில் மீண்டும் அழைத்துப் பார்த்தாள் நித்தி.

“பச்.. போங்கண்ணா! எவ்வளவு தடவைகள் எடுத்துப் பார்த்திட்டம்? இப்பவும் ரிங்க் போகுதண்ணா; அந்த மதுரா எடுக்கிறாரே இல்லை. சித்தியோ, நம்பர் இதுதான் என்று சாதிக்கிறார். அங்க இருந்து எடுத்தால் எடுபடுதாம்! என்ன கதையோ எனக்கு விளங்க இல்லை!” சலித்துக்கொண்டாள்.

சிறியதாயார் மீண்டும் மீண்டும் கேட்கிறாரே என்று ஒருவித அசுவாரஸ்சியத்தில் புறப்பட்டிருந்த கார்த்திகேயனின் மனதில், சலனத்தின் சாயல் விழுந்திருந்தது.

‘எதுவோ சரியில்லை போலிருக்கே!’ எண்ணிக்கொண்டவன், “அதுதான் நேரிலேயே போறமே, பார்ப்பம் நித்தி.” தங்கையைச் சமாதானப்படுத்தியவாறே காரைச்சீற விட்டான்.

ஏறக்குறைய இரு மணிநேர ஓட்டத்தின் பின் குறித்த வீட்டின் முன்னால் வந்து நின்று, கடமையைச் செவ்வனே செய்த களைப்பில் மூச்சு வாங்கியது கார்!

சிலகணங்கள் வீட்டை அளந்தவன், “காரில் இரு நித்தி, நான் போய்ப் பார்த்திட்டு வாறன்.” இறங்க, “இல்லண்ணா, நானும் வாறன்; வாங்க!” அவளும் இறங்கினாள்.

வேலியில்லாத சிறு முன்தோட்டத்தைக் கடந்து உள்ளே சென்று அழைப்புமணியில் கைவைக்க நினைத்தவர்கள், குட்டையான பூச்செடிகளுக்கு அப்பாலிருந்த அடுத்த வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வந்த பெண்மணியைப் பார்த்து முறுவலித்தார்கள். அவரோ, துளியும் சிநேகமின்றி ஆராயும் பார்வையில் அளவெடுத்தார்.

‘இவரும் தமிழ் போலிருக்கே! ஏன் இப்படிப் பார்க்கிறார்?’ மனதுள் முணுமுணுத்தவாறே அழைப்பு மணியை அழுத்தினான் கார்த்திகேயன். இரு தடவைகள் அழுத்திய பின், ஒருவித அவசரத்துடன் படாரென்று திறபட்டது கதவு.

“என்ன விசயம்?” கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு அண்ணனும் தங்கையும் ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொண்டனர்.

“விலாசம் சரியண்ணா! இதுதான் வீடு.” கூறியவாறே, கைபேசியில் மீண்டும் ஒருதரம் விலாசத்தைச் சரி பார்த்தாள் நித்தி. வீட்டினுள் நின்ற வெளிநாட்டுப் பெண்மணியின் பொறுமை சென்றிருக்க வேண்டும்.

“என்ன விசயம்? யார் வேணும்?” மீண்டும் கேட்டவளின் குரலில் அலுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“மதுரா..மதுரா கணேஷன் வீடு இது தானே?” என்ற கார்த்திகேயனை, மெல்லிய அதிர்வோடு பார்த்த அப்பெண்மணி, “கொஞ்சம் நில்லுங்க!” சட்டென்று உள்ளே சென்று மறைந்தாள்.

சற்று நேரத்தில், ஒருவன், அப்பெண்மணி பின்தொடர இவர்களை நோக்கி வந்தான். அவனோடு ஒட்டிக்கொண்டே சிறு பையனொருவனும் வந்தான். பார்த்ததும், ‘நான் தமிழன்’ அவன் சொல்லாமலே தெரிந்து கொண்டனர், கார்த்திகேயனும் நித்தியும்.

‘அப்ப, சரியான விலாசத்துக்குத் தான் வந்திருக்கிறம்! மதுரா எங்கே? இந்தப் பெண்மணி யார்?’ எண்ணியவாறே அவளை நன்றாகப் பார்த்தவர்களுக்கு, அவள் கருவுற்றிருப்பதும் புரிந்தது.

“ம்ம்…சொல்லுங்க, என்ன வேணும்?” கறாராகக் கேட்டான் அவன்.

“மதுரா கணேஷ்…அவர் இங்கதான் இருக்கிறாரா? அவரின் அம்மாவை எங்களுக்குத் தெரியும்; எப்பவோ போய்ப் பார்க்கச் சொன்னார்; இன்றைக்குத்தான் நேரம் கிடைச்சுது.”

கார்த்திகேயன் சொல்ல சொல்ல அவன் முகமும் கலவரத்தோடு கன்றியதோ! சட்டென்று சமாளித்துக்கொண்டு, “அவே இங்க இல்லையே!” என்றான்.

“என்ன? இங்க இல்லையா? இந்த வீட்டு விலாசம் தானே தந்தவே!” வியப்புடன் கேட்டாள் நித்தி.

“இல்லை…அது வந்து…இங்கதான் வாடகைக்கு இருக்கீனம்; இப்ப வெளியூருக்கு போய்டீனம்; உங்கட ஃபோன் நம்பர் தாங்க, வந்தோன்ன கதைக்கச் சொல்லுறன்.” என்றவனை, உற்றுப்பார்த்த கார்த்திகேயனின் மனதில் சந்தேக மணியின் பலத்த சத்தம்!

“இல்லை பரவாயில்லை, நாங்க இன்னொருமுறைக்கு வாறம்; அவர்களை நேரில் சந்திக்க விருப்பம்.”

“அப்படியென்றால் சரிதான்!” சொன்னவன், கதவை அவசரமாகச் சாத்திக் கொண்டான்.

வெளியில் வந்து காரில் ஏறப் போன கார்த்திகேயனின் பார்வை யோசனையோடு மதுரா வீட்டில் பாய, யன்னலோரமாக, இவர்களையே பார்த்திருந்துவிட்டு விலகினான் சற்றுமுன் பேசியவன்.

காரில் ஏறியமர்ந்து செலுத்த தொடங்கிய கார்த்திகேயனால் ஏனோ நிம்மதியாக வீடு செல்ல முடியவில்லை. மனதில் ஒருவகை பரபரப்பு!

‘ஆர்வமாக விசாரிக்கும் சித்திக்கு என்ன பதில் சொல்வது? இப்படிப் பொறுப்பில்லாமலா இருப்பது? வெளியூருக்குப் போறது என்றால் சொல்லீட்டுப் போனால் என்ன? பாவம் அந்த மதுராவின் அம்மா!’ எண்ணியவனுக்கு, மதுராவின் மீதுதான் கோபம் ஏற்பட்டது.

“மினக்கெட்டு இவ்வளவு தூரம் வந்து பார்த்தம், ஆட்கள் இல்லை என்றால் நாம என்னண்ணா செய்யிறது?” சலித்துக் கொண்டாள் நித்தி.

“அந்த ஆளைப் பார்த்தால் தமிழ் போல இருக்கண்ணா! அந்த மனிசி நெர்தர்லாந்து இல்லை, ஆனால் வெளிநாட்டுக்காரி!”

“ம்ம்ம்…” கொட்டியவன் யோசனையிலிருந்து விடுபடவில்லை.

“அவர்கள் யாராகவும் இருந்திட்டுப் போகட்டும் நித்தி! ஆனால், அவர்களும்…” இழுத்தவன், “எதுவோ சரி இல்லை! இந்த மதுராவுக்கு ஏதாவது பிரச்சனையோ!” என்ற தமையனை, யோசனையோடு பார்த்தாள் நித்தி.

“அப்படி என்னண்ணா பிரச்சனை? சித்தி, அவா எக்ஸ்பெக்டிங் என்றாரே! அதில் ஏதாவது? ஒருவேளை ஆஸ்பத்திரியில் இருக்கிறாரோ! நாம இன்னும் கொஞ்சம் … அட…பக்கத்து வீடும் தமிழ்தான்ணா; அவேட்டயே கேட்டிருக்கலாம்!” என்ற நித்தி,

“சரி திருப்புங்க, அந்த மனிசியும் ஒருமாதிரி பார்த்துக் கொண்டு நின்றாரே கவனிச்சீங்களாண்ணா? போய்க் கேட்டுட்டே போவம்! இல்லையோ, சித்தியிட்ட தப்ப முடியாது!” இவள் சொல்லிக் கொண்டிருக்கையில், மெல்லிய ஹாரன் ஒலியோடு இவர்கள் காரை முந்திச்சென்ற காரொன்று, முன்னிருந்த எமர்ஜன்சி பார்க்கிங்கில் நின்றது.

இந்நாட்டில், மிக மிக அத்தியாவசிய தேவையில்லாது ‘ஹாரனை’ யாரும் பயன்படுத்தாததில், சட்டென்று சுதாகரித்தனர் அண்ணனும் தங்கையும்.

“நமக்குத்தான் எதுவோ சொல்லீட்டு…பாருங்க காரையும் நிப்பாட்டுறார்!” என்றவாறே உற்றுப் பார்த்த நித்தி,

“அண்ணா! அந்தப் பக்கத்து வீட்டு மனிசிதான், காரை நிப்பாட்டுங்க!” பரபரப்பானாள்.

 

error: Alert: Content selection is disabled!!