Skip to content
முடிக்க விடாமல் அவளது செல் மூன்று முறை அடித்து ஓய…
“அய்யா குளிக்க போயிட்டாரு, நான் ரூமை ரெடி பண்ணனும்” வேகமாக தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள் காளியம்மா. அவள் உள்ளே நுழைந்து ஒரு நிமிடத்திற்குள் இரண்டு மூன்று பேர் சத்தமில்லாமல் அறைக்கு உள்ளே நுழைய மெதுவாக பின்னே சென்று அறையின் திரைசீலையை விலக்கிப் பார்த்தாள் செம்பருத்தி.
பரபரவென காளியம்மா இன்னொரு வேலையாள் துணையுடன் படுக்கையைத் தட்டிப் போட்டு புது விரிப்பை விரித்து பொருத்தமான தலையணை உரைகளை மாற்றினாள். ஒருவன் சன்னல்களைத் தூசி தட்டித் துடைத்தான். விரிப்பினை விரித்தவுடன், காளியம்மா பெருக்க அவளுக்கு விரிப்பை விரிக்க உதவி செய்தவன் மாப்பை வைத்து துடைத்தான். முடித்தவுடன் அங்கே இருந்தவன் ஒரு சிறிய பொத்தானை அழுத்தி திரைசீலையைப் பாதி மட்டும் திறந்து வைக்க… இப்படித்தான் ஜன்னலைத் திறந்து வைக்கிறாங்களா என்று வியந்து பார்த்தாள் செம்பருத்தி.
பேச்சே பேசாமல் ஒரு குழுவே வேலை செய்ய, அய்யா குளியலறையில் இருந்தார். ஓ அவர் குளித்து விட்டு வருவதற்குள் இந்த வேலைகள் முடிய வேண்டுமாக்கும்! சொகுசு தான்…
எல்லா வேலையும் முடித்துவிட்டு மூச்சு வாங்க வெளியே வந்தாள் காளியம்மா… தன்னிடம் மிச்சமிருந்த அரை பாட்டில் மோரை அவளிடம் தந்தாள் செம்பருத்தி “என்னை விட உங்களுக்குத்தான் இப்ப அவசியம் தேவைக்கா… “
நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டதைப் போல வேர்க்க விறுவிறுக்க வெளியே வந்த காளியம்மா நன்றியுடன் வாங்கிக் கொண்டாள்.
“இதெல்லாம் துவைக்கணுமாக்கா?”
“அதுக்கு தனியா ஆளிருக்கு… அய்யா உபயோகிக்கிற ஒவ்வொரு ரக துணியையும் துவைக்க ஒவ்வொரு முறை இருக்கு. எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னை விட்டா எல்லாத்தையும் சர்ப்பில் ஊற வச்சு ரெண்டு கும்மு கும்மிக் காயப்போட்டுடுவேன். அப்பறம் துணி பாழாப் போயிடும்”
ஏற்கனவே கனமாய் இருந்த விரிப்புக்களை மற்றவர்கள் எடுத்துச் சென்றிருக்க, லேசாய் இருந்த படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், சோபாவின் புது திண்டுகள் இவற்றைத்தான் எடுத்து வந்திருந்தாள் காளியம்மா.
“இதை வெயிலில் காயப்போடணும்”
“நானும் வரேன்கா… இவரு கூப்பிடுவாரா இல்லையான்னே தெரியல”
யோசித்துவிட்டு “சரி வா… நீயும் இந்த வீட்டை சுத்திப் பார்க்கலையே” என்றபடி நடந்தாள். அவளைத் தொடர்ந்தாள் செம்பருத்தி.
மாடியின் மற்றொரு பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தபோது வெளியே இருந்த டால்பின் நீரூற்றை நிறுத்திவிட்டு சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர் இருவர்.
“அவங்க தோட்டக்காரங்க. வெளிய இருக்குற புல்தரையை பராமரிக்கிறது, மரங்களை ட்ரிம் பண்றது இதைத் தவிர இந்த நீரூத்து, நீச்சல் குளம், மீன் தொட்டி இதெல்லாம் கழுவி எந்த நேரத்துலையும் உபயோகிக்க தகுந்த மாதிரி வச்சுக்கிறது இதெல்லாம் இவங்க வேலைகள்”
“நீச்சல் குளம் வேற இருக்கா?”
“நீ பாக்கலையா… கிரௌண்ட் ப்ளோர்ல இருக்கு. துணிய காய வச்சுட்டுப் போகும்போது காமிச்சுத் தரேன்”
மொட்டை மாடிக்கு வந்துவிட்டார்கள். அங்கே மேலே ஒரு சிறிய கண்ணாடி அறை போன்ற ஒன்று. உறுதியான பிளாஸ்டிக் கூரை வேயப்பட்டு இருந்தது. அதனுள் துணிக்கடைகளில் துணிகளை ஹாங்கரில் அடுக்குவது போல நிறைய ஸ்டாண்டுகள். சில உடைகளை காயப்போட்டு இருந்தனர். திண்டுகளைக் கூட காயப்போடுவதற்கு ஒரு இடம் அங்கு இருந்தது. மேல் கூரையிலிருந்து சூரிய வெளிச்சம் பட்டு இவை காயும். ஆனால் மழை பெய்யும்போது நனையாது. நல்ல யோசனை இந்தக் கேரளாவில் மழை பெய்யும் நேரத்தில் இவ்வளவு தூரம் ஓடி படிகள் ஏறி வந்து துணிகளை எடுப்பது முடியாத காரியம்.
“தினமும் இவ்வளவு துணியும் துவைப்பிங்களாக்கா? அழுக்கே இல்லையே”
“அட உனக்குத் தெரியாது. இப்பத்தான் இவ்வளவு சுத்தமா இருக்கு. முன்னாடில்லாம் தண்ணி கறையும் புகை வாடையும் அப்படியே இந்தத் துணில இருக்கும். துவைச்சாத்தான் போகும். சில மாசத்துக்கு முன்னாடி வரை நம்ம அய்யா ஒரு மீன் மாதிரி தண்ணிலேயேதான் இருப்பார். புகை வண்டி மாதிரி சதா புகை விட்டுக்கிட்டே இருப்பார்”
“இப்பயும் சிகிரெட் குடிக்கிறாரே”
“அப்பக்கூட ஒப்பிட்டுப் பாத்தா இப்ப ஒண்ணுமே இல்லை. என்ன கோவம் அதிகமாயிருக்கு… உன் மேல இருக்குற கோபத்தில் காலைல சாப்பாட்டுத் தட்டை உடைச்சுட்டார் போலிருக்கு”
“அப்படியாக்கா… சத்தம் கேட்டது. ஆனா என்ன உடைஞ்சதுன்னு தெரியல. இப்படித்தான் எப்போதுமே இருப்பாரா”
“எந்திரிச்சதும் அவருக்குப் பழக்கமானது எதுவுமே இப்ப கிடைக்காதுன்னு தெரிஞ்சு கொதிப்புல இருப்பாரு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கோபம் குறைஞ்சுடும். அவரே கூப்பிட்டுப் பேசுவாரு”
அதையே செம்பருத்தியும் நம்பினாள்.
“நிறைய ஆளுங்க வேலை பாக்குறாங்க போலிருக்கேக்கா”
“இந்த வீடு ஆனை மாதிரி. இதைப் பராமரிக்க நிறைய ஆட்கள் தேவை”
உண்மைதான். ஒரே ஒரு நபர் தங்க ஒரு ‘கொச்சு’ வீடு. இந்த வீட்டை பராமரிக்க ஒரு பெரிய வேலையாட்கள் கூட்டம். அவர்களுக்கு மாதா மாதம் சம்பளச் செலவு மட்டும் லட்சக்கணக்கில். இவ்வளவு பணச்செருக்கு அவசியமா என்று திட்டுவதா இல்லை இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதே என்றெண்ணி வாயை மூடிக் கொள்வதா?
அத்தனை உயரத்தில் நின்று பார்க்கு போது சின்னச் சின்ன வீடுகள் தலையில் கவிழ்த்த ஓடுகளுடன் மழையில் முளைத்த காளான்களைப் போல இங்கும் அங்கும் தலை நீட்டி நின்றன. சுற்றிலும் தாராளமாக இடம். ஒவ்வொரு வீட்டிலும் நான்கைந்து தென்னை மரங்கள்.
அதனை காளியம்மாவிடம் பகிர்ந்த போது வீட்டை சுற்றிலும் மரவள்ளிக் கிழங்கு செடிகளைக் காணலாம் என்று சொன்னாள்.
“நம்ம ஊரு மாதிரி அரிசியை விதைச்சு, பாதுகாத்து, களையெடுத்து, அறுப்புக்கு ஆளுங்களைக் கெஞ்சி கூட்டிட்டு வந்து… இந்த வேலை எல்லாம் இங்க இல்லை. கிழங்கை விதைச்சா அடிக்கிற மழைக்குத் தன்னால வளந்துடும். வேணும்போது வீட்டுக்குப் பின்னாடி தோண்டி, நல்ல கிழங்கா வெட்டி எடுத்து, அவிச்சு, மீன் குழம்போ, மிளகா சம்மந்தியோ தொட்டு சாப்பாட்டை முடிச்சுக்குவாங்க”
“சம்மந்தியா?”
“சே! சேச்சி கிட்ட பேசிப் பேசி நானும் மலையாளத்தில் பேச ஆரம்பிச்சுருவேன் போலிருக்கு. சம்மந்தின்னா துவையல். நம்ம சேச்சி தோசைக்கு வழக்கமா செய்யுறது தேங்கா, தக்காளி, பூண்டு சம்மந்தி. அசைவத்தில் கூட இறாலில் செஞ்சு பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வச்சிருப்பாங்க. அது பேரு…ஹான்… ‘உனக்கா செம்மீன் சம்மந்தி’ ”
பேசிக் கொண்டே கீழ்த்தளத்திற்கு வந்துவிட்டார்கள். இரண்டாவது வரவேற்பறையில் இரவு கிட்டத்தட்ட ஒரு பக்கத்து சுவற்றையே மறைத்தவண்ணம் இருந்த திரைசீலை விலகி அங்கே நீல வண்ணத்தில் நீர் ததும்பிக் கொண்டிருந்த சிறிய நீச்சல் குளம் தெரிந்தது.
அப்படி அழகாய் பரிசுத்தமாய், நிர்மலமான நீலத்தில் மேற்கூரையில் தெரிந்த சூரியனின் ஒளி பட்டு ஒளிர்ந்தது. அவளுக்கு நீச்சல் தெரியாது இருந்தாலும் இந்த நீரில் இறங்கும் ஆசை வந்தது.
“இது சார் உபயோகிக்கிறதா?”
“ஆமாம். வீட்டில் இருந்தால் நீச்சல் குளத்தில்தான் வாசம். விபத்துக்கப்பறம் பைக்கில் போறதில்லை. அவர் சும்மா இருந்தாலும் நிகிலா விடமாட்டா, அவர் கவலையைப் போக்கன்னு சாக்கு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்துடுவா. ரெண்டு பேரும் இங்க நீச்சல் அடிச்சுட்டு இருக்கும்போது என்னென்ன வேணும்னு சொல்லுவாங்க. நாங்க சமைச்சுப் பரிமாறனும். அப்பறம் அங்க பாரு”
காளியம்மா சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு பெரிய தேக்கு மர அலமாரி. கண்ணாடி வேய்ந்திருந்த அதில் ஒரு பக்கம் முழுவதும் விதவிதமான கண்ணாடி கோப்பைகள். இன்னொரு பக்கம் அழகழகான வடிவங்களில் மதுபான பாட்டில்கள். அதில் பல காலியாக இருந்தது. சிலவற்றில் மிகக் குறைந்த மதுபானம்.
“பெரிய வீட்டில் இதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்லியும் அவரோட கவலையைப் போக்கன்னு சொல்லிச் சொல்லியே பக்கத்தில் உக்காந்து ஊத்தி ஊத்திக் கொடுப்பா”
இப்போது செம்பருத்திக்குத் தெளிவாகப் புரிந்தது எதனால் நிகிலா வெளியே அனுப்பப் பட்டாள் என்று. எதனால் அந்த விளம்பரத்தில் வித்தியாசமாய் அழகு குறைவு, மேக் அப் போடக் கூடாது என்றெல்லாம் கேட்டிருந்தார்கள் என்றும் தெளிவானது.
வீட்டின் பின்புறம் மட்டும் நாலைந்து கார்களை பார்த்த நினைவு. அதெல்லாம் அய்யாவின் உபயோகத்திற்காக என்று ஓவியா சொல்லி இருந்தாள். இவர்கள் டவுனுக்கு சென்று வர இண்டிகா கார் ஒன்று இருந்தது. இது தவிர பைக் வேறா. ஆனால் பைக்கைப் பார்த்த நினைவே இல்லையே. விபத்து என்று வேறு காளியம்மா சொன்னாளே…
“முன்னெல்லாம் அவர் பைக்கில்தான் சுத்துவார். வெளிநாட்டு பைக் அப்படியே காத்தாட்டம் பறக்கும்”
“விபத்தில் என்னாச்சுக்கா?”
அவளை புரியாது பார்த்தவள் “அதில்தான் அய்யாவோட கால் அடிபட்டது. அந்த விபத்தில் அவர் பொழைச்சதே பெரியய்யாவும் அம்மாவும் செய்த புண்ணியம். அந்த பைக் அப்படியே சல்லி சல்லியா உடைஞ்சுடுச்சு. என்னதான் சொன்னாலும் கம்பீரமா ஸ்டைலா நடந்து வந்தவர் இப்ப இருக்குற நிலமையைப் பார்த்து நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு”
செம்பருத்தியின் அதிர்ச்சியைக் கவனிக்காது பேசிக் கொண்டே சென்றாள் காளியம்மா.
அந்த அறைக்கு வந்த பாலா “அய்யா உங்களைக் கூப்பிடுறாரும்மா” என்றான்.
error: Alert: Content selection is disabled!!