Skip to content
“என்னையா?” என்று பாலாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள் செம்பருத்தி.
அய்யாவின் கோபம் இவ்வளவு சீக்கிரமா மறைஞ்சுடுமா என்ன? அவளுக்கு நம்பிக்கையில்லை. அவன் மிகவும் வெறுக்கும் பெரியவீட்டில் இருந்துதான் இவளை வேலைக்குத் தேர்ந்தெடுத்தார்கள் போலும். அப்படியென்றால் வக்கீல், சுகுமாரன் முக்கியமாய் காவ்யா மூவரும் பெரிய வீட்டைச் சேர்ந்தவர்களோ?
வேலையாட்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது பெரிய வீட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்தால் இவனது உடல் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்கள் போலவும், இவனது சுகவீனத்தைச் சரி செய்ய எந்தவித தீவிரமான நடவடிக்கைகளுக்கும் பயப்படாதவர்களாகவும் தோன்றுகிறார்கள். இவன் என்னடாவென்றால் அவர்கள் இவனைக் கொல்ல இவள் வந்திருப்பதாக முடிவே செய்துவிட்டான்.
இப்போது அவளை அழைத்ததற்குக் காரணம் திட்டுறதை முறைப்படி நிக்க வச்சு அர்ச்சனை ஆராதனை எல்லாம் செய்வானாயிருக்கும்.
நடக்கும்போதே தபால்களை ஒருவர் தர, அதனைப் பெற்றுக் கொண்டான் பாலா. பின்னர் அவளை அழைத்துச் சென்று ஒரு தேக்கு மர அலமாரியைக் காண்பித்துத் தந்தான். அதில் ஒரு சிறிய சாவியை வைத்துத் திறந்து அதனுள் இருந்த வேலைப்பாடுகள் அமைத்த சிறு மரப்பெட்டியைத் திறந்தான்.
அந்தப் பெட்டியைத் திறந்தவுடன் செம்பருத்தியின் முகம் திகிலால் உறைந்தது. ஏனென்றால் அதனுள் குறுவாள்கள். அவற்றின் கைப்பிடிகள் ஒவ்வொன்றும் கண்ணைப் பறிக்கும் வேலைப்பாட்டுடன். யாளியின் தலை கொண்ட பிடி ஒன்று, பவளம் பொருத்திய கைப்பிடி, கவர்ச்சியான நடன மங்கை ஒருத்தி இப்படிப் பல வடிவங்களில். அவற்றை சோதித்து இரண்டைத் தேர்ந்தெடுத்து செம்பருத்தியிடம் தந்தான்.
ஒன்று தங்க நிறத்தில் முழுவதுமாக வேலைப்பாடு செய்யப்பட்டது. மற்றொன்று மரத்தினால் செய்யப்பட்டது. அந்த வெண்ணை வெட்டும் கத்திகளைப் பார்த்தவள்.
“இது கூர்மையாவே இல்லையே” என்றாள்.
“ஆமாம்மா. கூர்மையானது எதுவும் அய்யா கைல தர வேண்டாம். அவர் லெட்டர் வெட்டக் கத்தி கேட்டாருன்னா இந்த மாதிரி கத்தியே தாங்க” என்றான்.
லெட்டர் வெட்டக் கத்தியா? அதுவும் இவ்வளவு வேலைப்பாட்டுடன். ஆள்காட்டி விரலை வச்சு சரக் சரக்குன்னு கிழிக்கிறதை எவ்வளவு ப்ரமாண்டமா செய்றானுங்கப்பா? என்று வியந்தவண்ணம் பாலாவுடன் அலுவலக சென்றாள்.
அறைக்குள் நுழைந்த போது அலுவலகத்தில் லக்சுரி நாற்காலி ஒன்றில் அய்யா அட்டகாசமான லைட் நிற ஒரு பருத்தி சட்டை ஒன்றில் இருந்தான். முழு நீள உடையை பாதியாய் மடித்து விட்டிருந்தார்கள். மிக சிறிய வகை காலர் ஒன்று குர்திகளில் இருப்பதைப் போல. குர்தி போலவே சட்டையிலும் முன்புறம் இரண்டு மூன்று பொத்தான்கள் மட்டுமே. அதில் கூட மேல் பட்டனைத் திறந்துவிட்டிருந்தான். வெள்ளை நிறத்தில் பேண்ட் கொஞ்சமாய் தெரிந்தது.
உள்ளே நுழைந்ததும் “பாலா, இந்த ஹிப்பி காசுவல் காட்டன் ஷர்ட்டை இந்த வாரம் மார்னிங் வார்டுரோபில் எடுத்து வைக்க சொல்லிடு. ஈவினிங் இந்த வாரம் நம்ம வீட்டில் மூணு டின்னர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. அதுக்கு மூணு டின்னர் சூட் ரெடி பண்ணிடு”
“யாரு கூடங்கய்யா”
“அந்த லிஸ்ட் எல்லாம் இவங்ககிட்ட சொல்லி அனுப்புறேன். மெனு பிளான் ஈவினிங் வேணும்”
“சரிங்கய்யா” என்று சொல்லிவிட்டு உத்தரவு வாங்கிக் கொண்டு நகர்ந்தான் பாலா.
அவன் சென்றதும் “க்கும்…” என்று குரலை சரி செய்தவாறே தன் முன் வைத்திருந்த பழச்சாறை எடுத்து மிக மெதுவாக சிப் செய்ய ஆரம்பித்தான். அந்த உடல் மொழியைத் தனக்குப் பேச அளித்த அறிகுறியாக எடுத்துக் கொண்டு செம்பருத்தி ஆரம்பித்தாள்.
“சாரி சார். காலைல உங்க அனுமதி வாங்காம அறைக்குள்ள நுழைஞ்சதுக்கு. உங்க இருமல் கேட்டதும் உடனே தண்ணி தரணும்னு தோணுச்சே தவிர அனுமதி வாங்கணும்னு என் மூளைக்கு உரைக்கவே இல்லை. மன்னிச்சுடுங்க”
அவன் முகத்தில் இருந்து அவளால் எதையும் சொல்ல முடியவில்லை. பேனாவை எடுத்து பேப்பர்களில் என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தான்.
“உன் பேர் என்ன சொன்ன?”
“செம்பருத்தி”
“சரி, இந்த கெஸ்ட் லிஸ்ட்டை பாலாகிட்ட கொடுத்துடு. அங்கிருக்குற டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் யூசர் நேம் பாஸ்வேர்ட் இதில் இருக்கு. மனப்பாடம் பண்ணிட்டு இந்தப் பேப்பரை உடனே கிழிச்சுப்போட்டுடு. அதில் என்னோட அப்பாயிண்ட்மெண்ட்ஸ் பத்தின விவரங்களைப் பார்த்து இனிமே பாலாகிட்ட கம்யூனிகேட் பண்ண வேண்டியது உன் பொறுப்புகளில் ஒண்ணு”
“சரிங்க சார்”
“முதலில் லெட்டர்ஸ் எல்லாம் அரேஞ் பண்ணி தா”
அடுக்கித் தரணுமோ? எப்படி அடுக்கித் தருவது? சிறிய கவர்கள் பெரிய கவர்கள் எல்லாவற்றையும் அப்படியே சைஸ் வாரியாகப் பிரித்து அடுக்கித் தந்தாள்.
அதைப் பார்த்ததும் அவனது எரிச்சல் ஆரம்பமானது. “இப்படியா அரேஞ் பண்ண சொன்னேன்? நான் படிக்கிறதுக்கு வசதியா பிரிச்சு அடுக்கித் தா”
ஓ கட் செய்து பிரித்து அடுக்கச் சொல்கிறானோ? அந்த குட்டி லெட்டர் பிரிக்கும் கத்தியை எடுத்து கவனமாகக் கிழிக்க ஆரம்பித்தாள். ஒரு நான்கைந்து கடிதங்களைப் பிரித்ததும் மற்ற கடிதங்களைப் பிரிக்கும் நேரத்தில் அவன் அதனைப் படித்துவிடலாமே என்ற ஓவர் சிந்தனையில் அடுக்கி அவனிடம் தர,
“இதெல்லாம் ஏதோ நிகழ்ச்சிக்கு வந்த அழைப்புகள். இதை ஏன் இப்பவே தர? நீ முதலில் படிச்சுப் பாத்தியா?”
“சார், அதெல்லாம் உங்களுக்கு வந்த லெட்டர்ஸ். உங்களோட அனுமதி இல்லாம எப்படி பாக்குறது” திகைப்போடு கேட்டாள்.
“கடவுளே! இப்படி ஒருத்தியை அனுப்பி என் உயிரை வாங்குறியே. இந்த பாரு என் ரூமுக்குள்ள வர அனுமதி வாங்கணும். ஆனால் என்னோட ஆஃபீசியல் லெட்டரைப் பிரிச்சு படிச்சு தேவையானதை மட்டும் எனக்குப் படிக்கத் தரணும், பெர்சனல் லெட்டரைப் படிக்காம என் பார்வைக்குத் தரணும்”
“வந்து, ஒரு சந்தேகம்”
கடுப்போடு “சொல்லு”
“படிக்காம எப்படி கடிதம் அஃபிஷியலா இல்லை பெர்சனலான்னு கண்டு பிடிக்கிறது”
“ஹ்ம்… டூ அட்ரஸ்ல ராஜா, பேலஸ், வீரபாகு இந்த மாதிரி டிராமாத்தனமா இருந்தா அதெல்லாம் அபிஷியல். என் பேரில் வந்திருந்தா அது பெர்சனல் போதுமா?”
“போதாதே சார்”
“இன்னும் என்னம்மா உனக்கு சந்தேகம்?”
“உங்க பேரு சார். எல்லாரும் அய்யா, அய்யான்னு சொல்றாங்க உங்க பேரே எனக்குத் தெரியல”
“என்ன? என் பேரு கூட உனக்குத் தெரியாதா? இந்தக் கதையெல்லாம் வேற யார்கிட்டயாவது விடு”
“சத்தியமா சார். சொல்லவே இல்லை. கான்டராக்ட்ல கூட இல்லை. ஒரு நபர்ன்னு தான் சொன்னாங்க. நான் யாராவது பாட்டிம்மாவா இருக்கும்னு நினைச்சேன்”
“நானா… பாட்டிம்மாவா? ஆமா யாரு உன்னை இன்டெர்வியூ பண்ணது”
விவரங்களைச் சொன்னாள்.
error: Alert: Content selection is disabled!!