அத்தியாயம் 15 – 2

இப்படியிருக்கையில் தான், சத்யன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்; அதுவும் கம்பஸ் வாயிலில் வைத்து, குற்றச் செயல்களுக்கு, குற்றவாளிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும், ‘ஏஎஸ்பி எல்லாளன்’ கொத்தாகப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றிருந்தான்.

அதோடு போயிருந்தால், பைரவிக்கு, அதுவொரு செய்தியாக இருந்திருக்கும். ஏன், அப்பாடா தொல்லை விட்டதென்ற நிம்மதியாகக் கூட உணரப்பட்டிருக்கலாம். ஆனால், மறுநாளே, ‘நீ தான் அவன் லவ்வராமே!’ என்று, அவள் முன் வந்து நின்றால்?  

டினோசன் விடயம் பேரதிர்ச்சி! அந்நேரம், அது முழுமையாக இவள் மீது விழாதிருக்க சொந்தம் இருந்தது; அன்னை, தந்தை இருந்தார்கள்; தந்தை உடல்நிலை, பெரும் கவலையும் பயமும் கொடுத்துமிருந்தது. 

இக்கணமோ, ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போனாள், பைரவி. அதுவும், வீட்டு அங்கிளும் ஆன்ட்டியுமே கேள்வியாகப் பார்த்தார்கள்; அந்தப் பார்வையும் கேள்வியும், காவலர்கள் சொல்வது உண்மையோ என்று கேளாமல் கேட்கிறதே! 

“காவல் நிலையத்துக்கு வர வேணும்” என்றதைக் கூட கருத்தில் கொள்ள முடியாது அலங்க மலங்க விழித்தாள், அவள்.

“அவா இப்பத்தான் இங்க… இந்த நாட்டுக்கே வந்தவா. சின்னப்பிள்ளை. அதோட, அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லை.” மனதில் எழுந்த ஐயத்தை, கேள்வியை ஒதுக்கிவிட்டு, ஒரு விரிவுரையாளராக, தன் வீட்டில் தங்கியுள்ள மாணவியில் அக்கறையுள்ளவராகக் கதைத்தார், வீட்டு அங்கிள். 

ஆன்ட்டியோ, “தம்பி அலுவலா நிக்கிறீரோ? இங்க…” என்று, ஆரூரனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டார்.

“இதென்ன விசர்க் கதை? அவவ, அவேயோட போக விட வேணாம் ஆன்ட்டி. நான் மயூரனுக்குச் சொல்லுறன், இப்ப வருவான்.” என்று வைத்தவன், மயூரனுக்கு அழைத்தான்.

அடுத்த இரு நிமிடங்களில், அங்கு நின்ற இரு காவலதிகாரிகளில்  ஒருவருக்கு அழைத்திருந்தான், எல்லாளன்.

“என்னதான் எண்டாலும் நீங்கள் ஒருக்கா ஸ்டேசன் வரை வர வேணும் மிஸ். இண்டைக்கே வருவீங்க எண்டு நினைக்கிறம்.” என்றுவிட்டு, அவர்கள் சென்ற ஐந்தாவது நிமிடம் வந்து நின்றான், மயூரன். அவன் பின்னால் ஆரூரன்.

விம்மி வெடித்து அழுகை வந்தது, பைரவிக்கு. பெற்றோருக்கு அழைக்கவும் முடியவில்லை; இந்நேரம் அங்கு நடுயிரவு.

“நான் இங்க படிக்க வந்தது எவ்வளவு பெரிய பிழை எண்டு இப்ப விளங்குது. நான் வீட்டயே போறன்.” விம்மலை விழுங்கியபடி மைத்துனனிடம் சொன்னாள்.

“விசரே உமக்கு? இவ்வளவு நடந்திருக்கு, என்னட்ட ஒரு வார்த்த சொல்லேல்ல! அவன், கம்பஸ் முழுக்க, தன் ஆள் இவா எண்டு சொல்லி வச்சிருக்கிறான். அதால தான் அவே விசாரிக்க வந்திருக்கினம். இப்பிடி, அவனால பிரச்சினையா இருக்கு எண்டு, ஒரு வார்த்தை சொன்னீரா என்ன?” சீறிய மயூரனுக்கு, மைத்துனியில் கோபம் கோபமாக வந்தது. 

அவளையே பார்த்து நின்றான், ஆரூரன். கண்ணீர் கோடாக இறங்க நின்றவளைப் பார்க்கப் பெரும் பரிதாபமாக இருந்தது;  இல்லையோ, என்ன விசுக்கு விசுக்குவாள்; வாய் அமைதியாக இருக்குமா என்ன? 

“இப்பவும் அண்ணா சொல்லித்தான் எனக்குத் தெரியும். நீரா சொல்லேல்ல பைரவி. பொலிஸ் வந்திருக்கு எண்டு, ஆன்ட்டி மட்டும் அண்ணாக்குச் சொல்லேல்லையோ, இப்ப உம்மக் கூட்டிக்கொண்டு போயிருப்பினம் தெரியுமா?” எரிந்து விழுந்தான். 

“பச்! இப்ப அதையிதைக் கதைச்சு என்ன பிரயோசனம் மயூரன்? அவே அவேட கடமையைச் செய்ய நினைக்கினம். நாம போய், இதில உண்மை இல்லை எண்டு கதைச்சிட்டு வந்திட்டாச்  சரி. நீர் கூட்டிக்கொண்டு போறீரா?” இடையிட்டிருந்தான், ஆரூரன்.

“இல்ல தேவேல்ல, நானே போறன். பிறகு, மாமாவுக்கு பெரிய பரிசிகேடா இருக்கும். ஆருக்கும் ஆக்கினை(வீண் தொல்லை) குடுக்க எனக்கு விருப்பம் இல்ல!” விம்மியபடி சொன்னவள் முகத்தில் அவ்வளவு ரோசமும் பிடிவாதமும். கடைசிவரை, தம்மை வீட்டில் சேர்க்காத மாமாவின் முன்னால், ஒரு சிறு தவறு செய்துவிட்டவளாகவும் சென்று நிற்க அவளுக்கு விருப்பமில்லை. மயூரன் எவ்வளவு சொல்லியும், ‘இல்ல, மாட்டன், நானே போவன்’ திரும்ப திரும்ப அதையே சொன்னாள்.

“சரி பின்ன, என்னோட வாரும்!” ஆரூரன் குரல் மீண்டும் இடையிட்டிருந்தது.

வெடுக்கென்று அவனைப் பார்த்தாள், பைரவி.

வரும்போது சில நொடிகள் பார்வைகள் உரசியது தான்; அதுவும், கூரான  கத்திகளின் உராய்வில்! அதன் பிறகு, அவளும் இவனொருவன் அங்கு நிற்கிறான் என்றது போலவே காட்டிக் கொள்ளவில்லை.

“என்ன? வாரும் போய்ட்டு வருவம்?” உற்ற உறவு போன்ற உரிமையும் அவள் பார்வைக்கு, என்ன என்ற தோள் குலுக்கலுமாகக் கேட்டவனை முறைத்த வேகத்தில், பார்வையை மயூரன் முகத்தில் நிறுத்தினாள், பைரவி.

“நான் ஒண்ணும்  சின்னப்பிள்ள இல்ல மயூரன். தனியாப் படிக்க வந்த எனக்கு, என்ன எண்டாலும் பாத்துக் கொள்ளவும் தெரியும். நீங்க ஆரும் வீணாச்  சிரமப்பட வேணாம்.” சொல்லி முடிக்கையில், விளங்கிச்சா என்ற வகையில் ஆரூரனைப் பார்த்து வைத்தாள்.

“அப்பிடி எல்லாம் நீர் தனியப் போகேலாது! வாரும், நானே கூட்டிக்கொண்டு போறன்.” மயூரன் குரலில் கடுமை. 

“அது தான் பைரவி, வேற எங்க எண்டாலும் வேற கதை. இது பொலிஸ் ஸ்டேசனுக்கு.” அங்கிள் ஆரம்பிக்க, “அதானம்மா, முதல் அந்தப் பெடிய என்னத்துக்குப் பிடிச்சினமோ? என்னவோ எல்லாம் கதைக்கினம். தனியாப் போறது எனக்கும் உசிதமாப் படேல்ல. ஆருரனோடவே போயிட்டு வாருமன்.” என்றார், சுகி. 

தம் வீட்டில் ஒருத்தியாக நடத்துபவர்கள் சொல்கையில் மறுக்கவோ, மீறவோ கடினமாக இருந்தது. வேண்டா வெறுப்பாகவே, “நீங்க முன்னால போங்க, பின்னால வாறன்.” என்று விட்டு உள்ளே சென்று, ஐந்து நிமிடத்தில் தயாராகி, கைப்பையோடு வந்தவளையே பார்த்தபடி நின்றிருந்தான், ஆரூரன்.

“இப்ப என்ன?”

“ஒண்ணும் இல்ல, அண்ணாவோடவே போம் பைரவி. இங்க பாரும், சொல்லுறதக் கேளும். ஏதாவது எண்டா அத்தை, மாமாவுக்கு நான் தான் பதில் சொல்லோணும். ஓமல்லோ? பிறகென்ன? அண்ணாவோடவே போம்! என்னைப் போலவே அண்ணாவ நீர் நம்பலாம்.” அதட்டலாகத் தொடங்கித் தன்மையாக முடித்தான், மயூரன்.

அதன் பின்னரும் நின்று படம் போடாது ஆரூரன் பின்னால் தொத்திக் கொண்டாள்.

மயூரனுக்கும் வீட்டு அங்கிள் ஆன்ட்டிக்கும் தலையாட்டிக்கொண்டே மோட்டாரைச் சீற விட்டான், ஆரூரன்.

“வடிவாப் பிடிச்சுக் கொள்ளும் என்ன?” சற்றே மெதுவாக்கிச் சொன்னவனுக்குப் பதில் சொல்லாது அமர்ந்திருந்தாள், அவள். 

வேகமெடுத்தவன் கண்ணாடியால் பின்னால் பார்த்தான். அழுகிறாள். பச்! பாதையோரமாக நிறுத்தி விட்டான்.

கேள்வியோடு பார்த்தவள், அவன் பின்னால் திரும்பிப் பார்க்கவும் பட்டென்று இறங்கிவிட்டாள். அவன் இறங்கவில்லை. அவள் விழிகளைக் கூர்மையாகப் பார்த்தான். 

“உமக்கு… உண்மையாவே…. உங்களுக்குள்ள அப்பிடி ஒண்டும் இல்லைத் தானே?” வெகு தயக்கமாக இருந்தாலும் அது தெள்ளெனத் தெரிய வேண்டியிருந்தது. 

அழுகையில், கவலையில் கசங்கிக் கிடந்த பைரவியின் முகம் பட்டென்று சிவந்தது, கோபத்தில்; பார்வையில் சீற்றம். குறிப்பெடுத்து விட்டான், அவன். இனிப் பதில் தேவையில்லை.

“ஏறும், போவம்.” சொல்லி முடிக்கவில்லை, இடையிட்டிருந்தாள், பைரவி.

“இப்ப இதுக்குத்தானா கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டனீங்க? நான் தனியவே போறன்.” வெடுக்கென்று சொல்லிவிட்டுத் தள்ளி நின்று கொண்டவள், பாதையின் இரு பக்கத்தையும் பார்த்தாள். ஒரு ஓட்டோ வந்தால் அவளே போய் விடுவாள். இவர்கள் யாராவது துணைக்கு வருவார்கள் என்று நினைத்தா இங்கு படிக்க வந்தாள். கலங்கும் விழிகளை மறைக்க மறுபுறம் திரும்பி நின்றவளை என்ன செய்வது? 

“நீங்க ரெண்டு பேருமா, அங்க, எங்கட ஹோட்டலில இருந்ததக் கண்டனான். சரி சரி, அதுக்கு ஏன் இப்பிடி அடிக்கிற கணக்கில முறைக்கிறீர்? அவ்வளவு கெதியா அந்தளவு நண்பர்களாக ஆன நீங்க…” சற்றே தயங்கினான். 

“எனக்கு எப்பிடித் தெரியும் சொல்லும்? கேட்டுத்  தெரிஞ்சு கொள்ளுறதில பிழையில்லத் தானே?” தன்மையாகக் கதைத்தது ஆரூரனே தான்.

இவனை எரிச்சல் படுத்த, நீ என்ன எனக்குக் கதை சொல்லுறது, நான் யாரோடும் பழகுவேன் என்று தானே, அன்று, அவனோடு சென்றமர்ந்தாள். இப்போ, அதைச் சொல்லவா முடியும்? தூரத்தே ஒரு ஓட்டோ வருவது தெரிய, அதை நிறுத்த ஆயத்தமானாள்.


“சின்னப்பிள்ள போல விளையாடாதேயும். நீர் தனியாப் போனா எல்லாம் சரி வராது. இது, நீர் நினைக்கிற மாதிரிச் சின்ன விசயம் இல்ல. உமக்கு ஏன் அது விளங்குது இல்ல? அதோட, சத்யன் வீட்டுக்காரர் அரசியல் சம்பந்தம் உள்ளவே. சின்னன் எண்டா உம்மையும் அதுக்க இழுத்தும் விட்டிருவினம். உமக்குப் பயம் வர வேணும் எண்டு சொல்லேல்ல, மயூரன்ட தகப்பனிட்ட விசாரிச்ச மட்டில, போதைப்பொருள் கடத்தல் கும்பலோட அவனுக்குத் தொடர்பு இருக்கிறதால தான் பிடிபட்டு இருக்கிறான். சின்ன கேஸ் இல்ல விளங்குதா? தயவு செய்து என்னோட வாரும். சொல்லுறதையும் கேளும்.” என்றபடி, நிறுத்த ஆரம்பமான ஓட்டோவுக்குச் செல்லும் படி கை காட்டி விட்டான், ஆரூரன்.

திரும்பவும் போதைப்பொருள்? அவன் சொன்ன விடயத்தில் அதிர்ந்து நின்றவள், பொம்மை போல் தான் பின்னால் ஏறியமர்ந்தாள். டினோசன்  நினைவுக்கு வந்தான். இது என்ன திரும்ப? அவளைப் பிடித்து உள்ளே வைத்து விடுவார்களோ! பயமும் கலவரமுமாகவே காவல் நிலையம் சென்றடைந்தாள், பைரவி.

 

error: Alert: Content selection is disabled!!