பணம் கொடுக்க, உள்ளே சென்றவனோடு கூட நடந்தபடி, “நான் கொடுக்கிறேன் சூர்யா…” என்றாள் அவசரமாக.
அவன் நடை ஒரு நொடி தயங்கி மீண்டும் தொடர்ந்தது. “ஏன், அங்கே நான் கட்டிய பணத்துக்குப் பதிலாகவா..?” என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.
அவள் நினைத்ததையே அவன் கேட்டதில் பதில் சொல்லச் சற்றே சிரமப் பட்டாள் லட்சனா.
என்றாலும் உண்மையை அவனிடம் ஒப்புக்கொள்ளாது, “அந்தத் தொகைக்கும் இந்தத் தொகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது சூர்யா…” என்றவள் அவன் என்னவோ சொல்லவர, “எனக்குச் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறதென்றால், உங்களுக்குச் செய்ய எனக்கு உரிமை இல்லையா..?” என்று வேகமாக அவனை மடக்கினாள்.
அவன் விழிகளில் மெச்சுதலான பார்வை ஒன்று வந்துபோனது. “கெட்டிக்காரிதான்…!” என்றான் புன்னகையோடு.
“புரிந்தால் சரிதான்..” என்றபடி பணத்தைச் செலுத்தச் சென்றவளிடம், “கொஞ்சம் பொறு..” என்றவன், ஒரு பியர் டின்னையும் சிகரட் பெட்டியையும் எடுத்து வைத்து, “இதற்கும் சேர்த்துக் கொடு..” என்றான்.
அவற்றைப் பார்த்து அதிர்ந்தவளின் பாதங்கள் இரண்டடி வேகமாக பின்னால் நகர்ந்தது.
“என்ன..?” அவளின் செய்கையின் அர்த்தம் புரியாது கேட்டான் சூர்யா.
“இது.. இது எதற்கு…?”
“இதென்ன கேள்வி.. எதற்கு என்று தெரியாதா..?” என்று பதிலுக்குக் கேட்டான் அவன்.
“தெரியாமல் என்ன? நன்றாகத் தெரியும்! ஆனால் இவை இல்லாமல் உங்களால் இருக்க முடியாதா…?” என்று வெடுவெடுத்தாள் லட்சனா.
பெட்ரோல் செட்டில் வேலைக்கு இருந்த மனிதன், புரியாத மொழியில் கதைக்கும் இவர்களை வேடிக்கை பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “நாம் அடுத்தவர்களுக்கு வேடிக்கைப் பொருளாக வேண்டாம். முதலில் பணத்தைக் கொடுத்துவிட்டு வா. நம் சண்டையை வெளியே வைத்துக்கொள்ளலாம்…” என்றான் சூர்யா.
அவனை மீண்டும் முறைத்துவிட்டு, ‘இந்தக் கருமத்தை எல்லாம் நான் வாங்கிக் கொடுக்கவேண்டி இருக்கிறதே..’ என்று தன்னையே நொந்தபடி, பணத்தைக் கொடுத்து சில்லறையை வாங்கியவள், வேகமாக வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
ஒரு கையில் பியர் டின்னும் மற்றக் கையில் சிகரட் பெட்டி சகிதம் வந்தவனும், காரிலமர்ந்து எதுவும் பேசாது காரைக் கிளப்பினான்.
சனாவோடு சைந்தவி விளையாடச் செல்லும் பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு, “இனி நாம் நமது சண்டையைத் தொடங்கலாமா..?” என்றவனின் குரலில் கேலி இருந்தது.
“என்னைப் பார்த்தால் உங்களுக்குச் சண்டைக்காரி மாதிரி இருக்கிறதா..?” என்றபடி அவள் அவனை முறைக்க, “அம்மாடி.. பயமாயிருக்கிறதே…” என்று நடித்தான் அவன்.
அவள் அப்போதும் சிரிக்காமல் இருக்க, “இப்போது என்ன கோபம் உனக்கு?” என்று விளையாட்டை விட்டுவிட்டுக் கேட்டான் சூர்யா.
அவள் அப்போதும் பேசாமல் இருக்கவே, சிகரட் ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தி நெருப்பை மூட்டியவன், கார்க் கதவின் கண்ணாடியைக் கீழே இறக்கினான். அதைப் பார்க்க அவளுக்குப் பத்திக்கொண்டு வந்தது.
வேண்டாம் என்று சொன்னதைக் காதில் வாங்காமல், அவள் முன்னாலேயே புகைக்கிறானே.
“அந்தக் கருமத்தை முதலில் தூக்கி எறியுங்கள்…” என்று சீறினாள் சனா.
ஆட்காட்டி மற்றும் நடுவிரலால் அதைக் கைகளில் ஏந்தி, அந்தக் கையை காரின் வெளியே நீட்டிச் சாம்பலைத் தட்டியபடி, “ஏன்..?” என்று கேட்டவனின் மூக்கில் இருந்து புகை வெளியேறியது.
“என்ன ஏன்? இதெல்லாம் நல்ல பழக்கமா சூர்யா? உடம்புக்கு கேடு என்று தெரியாதா? உங்கள் வீட்டில் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?” என்று பொரிந்து தள்ளினாள் அவள்.
“ஹேய்.. நிறுத்து.. நிறுத்து! இப்படிக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டால் நான் எப்படிப் பதில் சொல்ல? ம்..?” என்றவனின் உதடுகளில் புன்னகைதான் தவழ்ந்தது.
எப்போதும் அந்தப் புன்னகையில் மயங்குபவளுக்கு இன்றைக்கு கோபம் வந்தது.
“சிரிக்காதீர்கள் சூர்யா…” என்றாள் கடுப்பை மறையாது.
புன்னகை விரிந்தபோதும், “சரி..சிரிக்கவில்லை.” என்றான் அவன் தன்மையாக.
“இது நல்ல பழக்கம் இல்லைதான். நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பழக்கமாகிவிட்டது லட்டு. அதற்காக எப்போதும் என்றில்லை. எப்போதாவதுதான்.” என்றான் அவள் கேள்விகளுக்குப் பதிலாக.
“உங்களுக்கே தெரிகிறதுதானே, நல்லதில்லை என்று. பிறகும் ஏன் சூர்யா இவற்றைச் செய்கிறீர்கள்?”
“அதுதான் சொன்னேனே.. பழகிவிட்டது. விடமுடியவில்லை என்று…” என்றான் சிகரட்டை புகைத்தபடி.
“இப்படிச் சொன்னால் எப்படி சூர்யா? தயவுசெய்து விட்டுவிடுங்கள். இந்த மணமே எனக்கு என்னவோ செய்கிறது…” என்றாள் முகத்தைச் சுளித்தபடி.
“ஓ.. சாரி. இனி உன்னருகில் புகைக்கவில்லை….” என்றவன் உடனேயே காரிலிருந்து இறங்கி, அருகே இருந்த குப்பை வாளியில் அதைப் போட்டுவிட்டு வந்தான்.
“ப்ச் சூர்யா! புரியாமல் பேசாதீர்கள். என்னருகில் மட்டுமல்ல எப்போதுமே புகைக்காதீர்கள்.” மீண்டும் வந்து காருக்குள் அமர்ந்தவனிடம் சொன்னவள், அங்கிருந்த பியர் டின்னைக் காட்டி, “இந்தக் கருமத்தையும் குடிக்காதீர்கள்..” என்றாள் கோபத்தோடு.
“என்னால் அது முடியும் என்று நான் நினைக்கவில்லை லட்டு.” என்றான் அவன்.
“எனக்காகத்தன்னும் விடமாட்டீர்களா சூர்யா..:?” அவளுக்காக அவன் எதையும் செய்வான் என்கிற நம்பிக்கையில் கேட்டாள்.
“அதென்ன உனக்காக விடுவது..? எனக்குப் பிடித்தால் தான் ஒன்றை என்னால் செய்யமுடியும் லட்டு! அவ்வப்போதுதான் என்றாலும் என்னால் இவை இல்லாமல் இருக்கமுடியாது.” என்றான் அவன் தெளிவாக.
அதில் அவள் உள்ளம் தான் பெரிதாக அடிபட்டது. கண்கள் வேறு கலங்கியது. மறுபக்கமாகத் தலையைத் திருப்பி, இமைகளை மூடித் திறந்து கண்களில் சேரப்பார்த்த நீரைத் தடுத்தாள்.
“உங்களுக்குப் பிடிகிறது என்றுதானே நான் கண்களுக்கு லென்ஸ் வைத்தேன். அதேபோல எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக உங்களால் இதை விடமுடியாதா.?” என்று வாதாடினாள்.
“இதென்ன புதுக்கதை? லென்ஸ் உனக்கு அழகாக இருக்கும், அதைவிட வசதியாக இருக்கும் என்றுதான் சொன்னேன். உனக்கும் அது பிடித்ததில் செய்தாய். நான் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லையே! அதேபோல நீ சொல்லும் ஒன்று எனக்கும் பிடிக்க வேண்டாமா? பிடிக்காமல் ஒன்றைச் செய்ய என்னால் என்றுமே முடியாது.” என்றான் உறுதியான குரலில்.
அவளுக்கு வலித்தது. லென்ஸ் வைத்தபிறகு அவளுக்கு அது பிடித்துவிட்டதுதான். ஆனால் வைக்கச் சென்றது அவனுக்குப் பிடிகிறது என்பதால் தானே! அது புரியவில்லையா அவனுக்கு?
அவள் முகத்தில் எதைக் கண்டானோ, “முடிந்தவரை குறைக்கப் பார்க்கிறேன் லட்டு…” என்றான்.
அவளுக்கும் அதற்கு மேல் அவனைக் கட்டாயப்படுத்த வாயெழவில்லை. உனக்காக என்னால் செய்யமுடியாது என்று அவன் சொன்னது பெரிய அடியாக இருந்தது. ஆனாலும் குறைக்கப் பார்க்கிறேன் என்றதில் ஆறுதல் கொண்டாள்.
“ம்.. முடிந்தவரை நன்றாகக் குறையுங்கள் சூர்யா. உங்கள் உடல் நலமும் இதில் அடங்கியிருகிறது.” என்றாள், அவன் மேல் கொண்ட அக்கரையில்.
“கட்டாயம்…” என்று அவன் சொல்ல, இதற்காவது சம்மதித்தானே என்று இருந்தது அவளுக்கு!
“அதுசரி சூர்யா. அந்த பியரை ஏன் வாங்கினீர்கள்?”
“இந்தப் பேச்சை விடவே மாட்டாயா…?” அலுத்துக்கொண்டான் அவன். “இப்போது குடிக்கலாம் என்றுதான் வாங்கினேன். அதுதான் நீ கத்துகிறாயே.”
“அதைக் குடித்துவிட்டுக் காரை ஓடுவது தப்பில்லையா சூர்யா? தப்பித்தவறி போலிஸ் மறித்தால் என்ன செய்வீர்கள்..?”
“பியர் தானே லட்டு. இல்லாவிட்டாலும் உன்னை உன் வீட்டில் இறக்கிவிட்டு, என் வீட்டுக்குப் போக ஒரு பத்து நிமிடம் பிடிக்குமா? அதுவே அதிகம். அதற்குள் வெறிக்காது, நான் எப்போதும் செய்வதுதான். ”
“எப்போதும் செய்வதாலே ஒன்று நியாயம் ஆகிவிடாது சூர்யா. இதை விடத்தான் உங்களால் முடியாது என்று விட்டீர்கள். குடித்துவிட்டுக் காரோட மாட்டேன் என்றாவது சொல்லுங்கள். நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்!” என்று உறுதியான குரலில் கேட்டாள் லட்சனா.
அவன் பதில் சொல்லாது அவளைப் பார்க்க, “ப்ளீஸ் சூர்யா.. உங்கள் நல்லதுக்காகத்தான் கேட்கிறேன். இல்லையானால் நீங்கள் குடித்துவிட்டு ஓடி எங்கே என்ன நடந்ததோ என்று எனக்கு ஒரே பயமாக இருக்கும். எனக்…” எனக்காக என்று சொல்லப் பார்த்தவள், அவன் அவளுக்காகச் செய்யமாட்டானே என்று நினைவில் வர, தொண்டை அடைக்க அதற்கு மேல் எதுவும் சொல்லாது நிறுத்தினாள்.
“சரி! உனக்காக இனிக் குடித்துவிட்டுக் கார் ஓடவில்லை.. சரிதானா..” என்றவன் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டான்.
அந்த மெல்லிய அணைப்பில் அவள் உள்ளம் பெரும் அமைதி கொண்டது. இதைத்தானே.. அவனின் இந்த அருகாமையைத்தானே அவள் விரும்புவது!
சில நொடிகள் கண்களை மூடி அவனிடமிருந்து கிடைக்கும் அந்தக் கதகதப்பை அனுபவித்தாள். விலக மனம் இல்லாதபோதும் வீட்டுக்குச் செல்லவேண்டுமே என்று தோன்ற, “நான் கிளம்பவா சூர்யா…” என்று மெல்லக் கேட்டாள்.
அவனுக்கும் அதில் விருப்பம் இல்லை போலும். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், “ம்.. வா வீட்டில் இறக்கி விடுகிறேன்…” என்றபடி அவள் தோளில் இருந்து கையை எடுத்தான்.
“இல்லை சூர்யா. நான் இப்படியே நடந்து போகிறேன். வீடு கிட்டத்தானே..” என்றவளிடம், “இவ்வளவு தூரம் காரில் வந்துவிட்டு இப்போது என்ன..?” என்று கேட்டான் அவன்.
லென்ஸ் வைத்ததுக்கே அக்காவிடம் கேள்வி எழும்பும், இதில் இவனோடு போய் இறங்குவதை அவர்கள் கண்டால் அதுவேறு அடுத்த பிரச்சினை. வீட்டில் மறைக்கும் எண்ணம் இல்லாதபோதும் இப்போதைக்கு வேண்டாம் என்றே அவளுக்குத் தோன்றியது. அவனிடம் இதைச் சொன்னால் மீண்டும் ஒரு வாக்குவாதம் வரும். இருக்கும் நல்ல நிலையை கெடுத்துக்கொள்ள அவள் தயாரில்லை.
அதனால், “இன்று முழுவதுமே காரில் சுத்துகிறேன். நடந்தால் நல்லதுதானே சூர்யா…” என்றவள், அவன் எதிர்பாராத நேரத்தில் தன் பட்டிதழ்களை அவன் கன்னத்தில் அழுத்தமாகப் பதித்தாள்.
வியப்பில் அசந்து நின்றவனிடம், “பை சூர்யா! நாளைக்குப் பார்க்கலாம்…” என்று மலர்ந்த புன்னகையோடு சொன்னவள் காரை விட்டு வேகமாக இறங்கினாள்.
“ஹேய் லட்டூ! என்னைச் சொல்லிவிட்டு நீ இப்படிச் செய்யலாமா…?” என்று, அவள் முத்தத்தை அனுபவித்த ஆனந்தக் குரலில் அவன் கேட்க,
“நான் செய்யலாம். ஆனால் நீங்கள் செய்யக் கூடாது…” என்றாள் அவள் கலகலத்துச் சிரித்தபடி.
அவளின் சிரிப்பில் மலர்ந்த முகத்தோடு, “ராட்சசி! இன்று தப்பிவிட்டாய். நாளை மாட்டுவாய் தானே. அப்போது இருக்கிறது…” என்றான் அவன் உல்லாசக் குரலில்.
“நாளை விஷயத்தை நாளை பார்க்கலாம்! பாய் சூர்யா!” என்றவள் அங்கிருந்து சிட்டாகப் பறந்தாள்.

