அன்று மாலை க்ளினிக்கில் இருந்து வீட்டினுள் நுழைந்த கார்த்திகேயன், வெளியே புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த மதுராவைக் கண்டதும், “எங்கே, வாக் போகவா மதுரா?” கேட்டவாறே வந்தவன்,
“ம்ம்ம்…ஒரு அரைமணியில் வந்து விடுவேன்!” என நகர முயன்றவளிடம், “பத்து நிமிடம் நில்லுங்க, நானும் வாறேன்!” சொன்ன வேகத்தில் அவள் பதிலை எதிர்பாராது படிகளைத் தாண்டி ஏறி மறைந்தான்.
“இல்ல, நான் போய்ட்டு வாறேன்!” எனச் சொல்ல முயன்றவள், செய்வதறியாது அப்படியே நின்றாள்.
வழமையாக, மாலையில் நித்தியும் இவளுமாகத்தான் ஒரு சுற்று நடந்துவிட்டு வருவார்கள். எப்போதாவது கார்த்திகேயனும் இவர்களோடு சேர்ந்து கொள்வான்தான்.
ஆனாலும், அன்று வைத்தியசாலையில் இவளை அவன் மனைவி என விளித்துக் கதைத்த பின், அவனோடு தனியாகச் செல்வதற்கு மிகவும் சங்கடப்பட்டாள்.
அவனோ, போன வேகத்தில் ஜாக்கிங் சோர்ட்ஸ் டீ-ஷர்ட் சகிதம் இறங்கி வர, முகத்துக்கு நேராக மறுக்க முடியாமல் திண்டாடிப்போனாலும், “உங்களுக்கு காஃபி ஏதாவது வேண்டுமா? குடித்துவிட்டே போகலாம்!” அக்கறையாக உபசரிக்க, அவன் விழிகளோ மலர்ந்தன!
‘களைத்துப் போய் வந்தாரே, நித்தி இருந்திருந்தால் கொடுத்திருக்க மாட்டாளா என்று கேட்டால், அதற்குப் போய் இந்தப் பார்வை ஏன்?’ மனதில் சிடுசிடுத்தாள் இவள்.
“காஃபியோ டீயோ எந்த நேரம் தந்தாலும் குடிப்பேன் மதுரா!” முறுவலோடு சொன்னவன், “நீங்க இருங்க, நானே போட்டுக்கொண்டு வாறேன்!” என்றவாறே சமையலறை நோக்கி நகர்ந்த வேகத்தில் திரும்பினான்.
“உங்களுக்கும் ஏதாவது கொண்டு வரவா?”
“காஃப்பி வேண்டுமா என்று நான் தானே கேட்டேன்! நீங்க இருங்க, நான் போட்டுத் தாறேன்.”
காலணிகளைக் கழற்றிவிட்டு அவனை முந்திக்கொண்டு சமையலைறைக்குள் நுழைந்தாள் அவள்.
தன்னைக் கடந்து செல்பவளை சிலநொடிகள் பார்த்திருந்தவன், அக்கணம், குளுகுளு தென்றலில் நனைந்து புத்துணர்ச்சியின் சில்லிடும் சுகந்தத்தை நுகர்ந்தான்.
இதுவரையிலும் உணராத புத்தம்புது உணர்வுகளின் தலைகாட்டலில் மெல்லத் தடுமாறவும் செய்தான்.
தமக்கையின் திருமணத்தின் பின், பெற்றோர் தங்கை என, நால்வருமாக சிறகடித்துப் பறந்த அழகிய கூடு அவர்கள் இல்லம்! பெற்றவர்களின் மறைவில் களையிழந்து, பொலிவிழந்து, மூழியாக நின்ற அவ்வீட்டை, இயக்கம் மறந்து இயந்திரமாகி நின்ற அண்ணன் தங்கையை, உயிர்ப்பூட்டி, மதியின் குளிர்மையில் அவர்களை இளைப்பாற வைத்து, அவ்வில்லத்துக்கு புதுப்பொலிவு சேர்த்திருந்தாள் இவள்.
வந்த சில நாட்களிலேயே தம்மையும் அறியாது அவளில் இதம் காண முனைந்து விட்டார்கள், அண்ணன் தங்கை இருவருமே!
அந்த இதத்தின் கதகதப்பில் அவளை ஆராயந்தவனுக்கு அவளின் அனாதரவான நிலை உறுத்தாமலிருக்குமா?
அதை அப்படியே வழித்துத் துடைத்தெறிந்திட அவன் மனம் அவாக் கொண்டதைத்தான் அவன் சிறிதும் உணரவில்லை; தன் செயல்களில் அதைக் காட்டினான்.
தங்கையை எப்படி கருத்துடன் கவனிக்க விளைந்தானோ அதையே மதுராவின் விடயங்களிலும் காட்டினான் .
“மதுரா இங்கே தான் இருப்பார்!” சுதாவிடம் அவ்வளவு அழுத்தமாகச் சொன்னதும் அந்த உணர்வில்தான்!
அதோடு, அவள், தனக்கே தனக்கென்று புரியும் இப்படியான சிறுசிறு செயல்களிலும் மனம் குளிர்பவன் அதன் காரணம் தேடிச் செல்ல நினைத்தும் ஏனோ தட்டிக் கழித்து வந்தான்.
அவ்வுணர்வுகளை அசட்டையாக உதறிவிடமும் முயன்றான் என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் அதில் அவன் தோல்வியே கண்டான். அவன் அவளால் பாதிக்கப்படுகிறான் என்கின்ற நிஜம் அப்பப்போ முகத்தில் அடித்தாலும் அதை, ‘அவ்வளவு இலகுவில் ஏற்பேனா!’ என்று மல்லுக்கு நின்றது அவன் மனம்.
‘அவள் நிலையில் எனக்குள்ள பரிதாபம் மட்டுமே இவை அனைத்துக்கும் காரணம்!’ என முடிவெடுத்து, தன்னைத்தானே சமாதானம் செய்ய முயன்றிருந்தான் அவன்.
இப்போதோ, ‘அப்பரிதாபமெல்லாம் கடந்து வெகுதூரம் முன்னேறிவிட்டேனோ!’ என, ஐயத்தோடு எண்ணிக்கொண்டே, சமையலறைக்குள் சென்று மறைந்தவளை பார்த்திருந்துவிட்டு, வராண்டாவில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தவன், இப்போதும் மனதைத் திசைதிருப்ப எண்ணி பாதையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
அதேநேரம், வெகு நாட்களுக்குப் பிறகு இப்படியொரு இலகுவான மனநிலையில் தான் இருப்பதை உணர்ந்தவன் இதழில், ஒரு முறுவல் உதித்து பிரியமனமின்றி உறைந்து நின்றது!
கால்களிரண்டையும் இழுகுவாக நீட்டி கதிரையில் சாய்ந்தமர்ந்து, கரங்களிரண்டையும் முகத்துக்கருகில் குவித்து ஆட்காட்டி விரல்களால் தாளம் போட்டவாறே, மனதுள் மிகப்பிடித்த பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தவன், “இந்தாங்க காஃபி” என, நீட்டியவளின் வதனத்தில் ஒட்டிய பார்வையை பிரித்தெடுக்கும் எண்ணமின்றி பார்த்திருந்தான்.
கப்பை வாங்காது அவன் பார்த்திருக்க, நேராக அவன் விழிகளைச் சந்தித்தவள், “காஃபி” சற்றே அழுத்தமாகவே உச்சரித்திருந்தாள்.
சரேலென்று பார்வையை விலக்கி, “தாங்கஸ் மதுரா!.” கப்பை வாங்கிக்கொண்டவன், “நீங்க…நீங்க எதுவும் குடிக்கவில்லையா?” வினவியவாறே ஒரு வாய் உறிஞ்சினான்.
“நான் அப்போதே குடித்துவிட்டேன்!” என்றவள், அங்கிருந்த இன்னொரு கதிரையில் அமர்ந்து தனது காலணிகளை அணியத் தொடங்கினாள்.
“நித்தி மதியம் கால் பண்ணினாளா மதுரா? அவள் இல்லாமல் வீடே வெறிச்சென்றிருக்கு இல்லையா?” எனத் தொடர்ந்து, தன்னுள் இடறிய தடுமாற்றத்தை அழகாகச் சமாளித்தானோ!
“மதியம் நீங்க சாப்பிட்டுவிட்டுப் போன பிறகு கால் பண்ணினாள்.” என்றவளின் முகம், நித்தியின் நினைவில் கனிந்தது.
“இரவைக்கு எடுக்கிறேன் என்றாள்; நீங்க சொல்வது சரிதான், அவள் இல்லாத வீடே ஒரு மாதிரித்தான் இருக்கு!” ஸ்போர்ட்ஸ் சப்பாத்துகளை அணிந்து அதன் நூல்களை இழுத்துக் கட்டியவாறே சொன்னவளை, காஃபியை அருந்தியவாறே கடைக்கண்ணால் நோட்டமிட்டவனின் கவனத்தை, வாசலில் சரக்கென்று வந்து நின்ற கார் கலைத்தது.
நிமிர்ந்து, யாரென்று நோக்கினாள் மதுரா. அடுத்த நொடி, அமைதியாக இருந்த வதனம் இறுகிச் சிறுக்க, சட்டென்று எழுந்து வீட்டினுள் நகர்ந்தாள்.
“யார் வருவது? அதுவும் கால் பண்ணாது!” என்றவாறே தானும் எழுந்த கார்த்திகேயன், உள்ளே நகர்ந்த மதுராவின் முகம் பிரதிபலித்த உணர்வுகளைக் கண்டதும், “என்ன மதுரா?” தன்னையறியாது வினவியவாறே அவள் பார்வையைத் தொடர்ந்து வாயிலை நோக்க, அங்கே, கேட்டைத் திறந்து நுழைந்து கொண்டிருந்தான் கணேஷ்.
தலை கலைந்து கிடக்க, ஒருவித அகங்காரத் தோற்றத்தோடு வெறித்த பார்வை மதுராவை கூறுபோட நுழைந்தவனை அடையாளம் கண்டு கொண்ட கார்த்திகேயன், “மறுபடியும் இந்த ராஸ்கல் இங்கு ஏன் வருகிறான்!” முணுமுணுத்தவன் உடல் விறைத்தது.
மறுநொடி, “உள்ளே போங்க மதுரா!” அவன் குரல் உயர்ந்து ஒருவித கட்டளையாக வந்திருந்தது.
காலில் போட்டிருந்த காலணிகளையும் மறந்து உள்ளே நகர்ந்தவள், “ஏய், உன்னைப் பார்க்கத்தான் அங்கிருந்து வந்தேன்; நீ எங்கே உள்ளே ஓடுகிறாய்?” கணேஷின் குரலில் உடல் விறைக்க நின்று, அவனை எரித்து விடுவது போலப் பார்த்தாள்.
“மதுரா, உங்களை உள்ளே போகச் சொன்னேன்!” மீண்டும் கடினத்தோடு சொன்ன கார்த்திகேயனை, ஏளனப் பார்வையோடு நெருங்கினான் கணேஷ்.
“அவள் என் பெஞ்சாதி; நடுவில் நீங்க ஏன் வாறீங்க? உங்க வீட்டில் இருக்கிறாளே ஒழிய உங்க பெஞ்சாதியாக…” என்று அவன் கேட்டு முடிக்க முன், “பளார்!” விளாசி இருந்தான் கார்த்திகேயன்.
“யார் வீட்டில் வந்து நின்று என்ன பேச்சுப் பேசுகிறாய்?” கேட்டு முடிய முதல் மீண்டும் ஒரு, “பளார்ர்ர்ர்!”
‘இத்தனை நாட்களாக இவள் அனுபவித்த வேதனைகளுக்கெல்லாம் இன்றே இவனைத் தண்டித்து மருந்திட்டுவிடு!’ கார்த்திகேயனின் உள்மனம் கடுமையாக ஆணையிட்டது.
சற்றும் எதிர்பாராது விழுந்த முதல் அடியில் விதிர்விதிர்த்து சுதாகரிக்க முன் இரண்டாவதும் விழ, நெருப்பாகத் தகித்த கன்னத்தை இரைந்த செவிகளோடு சேர்த்துத் தாங்கிய கணேஷ், “கார்த்தீ, வேண்டாம்..வேண்டாம்!” என, வேகமாக வந்து அவன் கரத்தைப் பற்றிய மதுராவின் செயலில் மிருகமானான்.
“ஏன்டி, நீயாடி ஒன்றுமே தெரியாதவள் போல இத்தனை நாட்களும் நடித்தது? எப்போடா ஆள் பிடிக்கலாம் என்று தருணம் பார்த்துக் காத்திருந்தாய் போலிருக்கே! சீரும் சிறப்புமாக வாழ இவனைத்தான் பிடித்திருக்கிறாயா?” நெருப்பாகக் கொட்டிய வார்த்தைகள் மதுராவின் மூச்சையே தடுமாறச் செய்தன!
அதே, கார்த்திகேயனை வெறி கொள்ள வைத்தது.
“யாரைப் பார்த்து என்ன வார்த்தைகள் சொல்கிறாய்? என்னைக் கேவலப்படுத்துவது உனக்குப் பிடித்தமான வேலை; அதே, இவரைப் பேச உனக்கு என்ன துணிவிருக்க வேண்டும்?” கார்த்திகேயனைப் பற்றியிருந்த கரத்தை விட்டுவிட்டு, வாங்கிய அடியில் சிறிது பின்னால் சென்று நின்ற கணேஷை நோக்கி நகர்ந்தவளை எட்டி, பற்றி நிறுத்தினான் கார்த்திகேயன்.
“ராது, இவனோடு என்ன பேச்சு; கள்ள ராஸ்கல்; இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்; உள்ளே போங்க!” என்றவனை கருத்தில் கொள்ளாது, அவன் கரத்தை பட்டென்று விலக்கிவிட்டு கணேஷை நெருங்கினாள் அவள்.
“என்ன ராதுவா?!” இரைந்தபடி, தீக்கங்குகளாக ஜொலித்த விழிகளால் நம்பவே முடியாது இருவரையும் மாறி மாறிப் பார்த்தான் கணேஷ்.
அவன் பார்வையில் சிறிதும் கலக்கம் கொள்ளவில்லை மதுரா. கார்த்திகேயனின் ராதுவும் அவள் மனதைச் சற்றும் எட்டவில்லை. கணேஷின் முகத்தைப் பார்க்கப் பார்க்க உள்ளே சுரந்த அருவருப்பில் குமட்டியது அவளுக்கு!
“நீயே ஒரு கேவலம் கெட்ட ஜீவன்; இவரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறாயா? உனக்கு அதற்கென்ன அருகதை இருக்கு! அதற்கும் மேல், யார் யாருக்கு பெஞ்சாதி? உனக்கும் எனக்குமிடையில் எதுவும் இல்லை என்று முடிவாகி எத்தனையோ மாதங்களாச்சே!” வெறுப்பில் சுளித்த உதடுகள் வார்த்தைகளை அருவருப்போடு உமிழ்ந்த வேகத்தில், “அங்கே, அவள் உன்னை கலைத்து விட்டுவிட்டாளா?” ஏளனத்தோடு தொடர, தன்னையே மறந்தான் கணேஷ்.
“ஏய்ய்ய்! என்ன துணிவிருந்தால் என் முன்னால் நின்று கதைப்பாய்? அதுவும் மரியாதையில்லாமல்!
ஆள் வைத்து அடிக்கிறாயாடி? அந்தளவுக்கு அவனுக்கு நீ முக்கியமாகி விட்டாயா? அவன் என்னை அடிக்க, அவன் கையைப் பிடித்து நாடகம் போட்டுக் காட்டுகிறாயா? செல்லப் பெயர் வேறு வைத்திருக்கிறானோ!?
ச்சே! ச்சே! உனக்கு வெட்கம் மானம் இல்லையாடி ராட்ஷசி? உன் வயிற்றில் இருப்பது என் குழந்தைகள் தானே? அல்லது, அதுவும் யாருக்குமா?” கேட்டவன், தன்னை நோக்கிப் பாய்ந்த கார்த்திகேயனிடம் இருந்து விலகியவாறே, அடங்கா ஆவேசத்தோடு மதுராவைப் பிடித்து பலம் கொண்ட மட்டும் எக்கித் தள்ளி விட்டான்.
அவன் செய்கையை உணர்ந்த கார்த்திகேயன் “ரா..து…!” அலறியவாறே அவளை எட்டிப் பிடிக்கமுன், பக்கச் சுவரில் சென்று ‘நங்’ என்று நெற்றியோடு சேர்ந்து முன் வயிரும் அடிபட, மின்சாரமாகப் பாய்ந்த அதிர்வும் பயமும் கழுத்தை நெரிக்க, வாய் திறந்து பேச முடியாமல் வழி தப்பிய மூச்சுக்காற்று நாசித் துவாரங்களைத் தேடி அலைய, தடுமாறி, கண்கள் சொருக அப்படியே சரிந்தவளை, சட்டென்று ஏந்திக்கொண்ட கார்த்திகேயனின் உலகம், அக்கணம் செயலிழந்து நின்றது.
தன் உயிரை யாரோ வலிக்க வலிக்க கொடுமையாகப் பறித்த வேதனையில் துடித்தவன், முயன்று மீண்டு, “ராது ..ராது, இங்க பார்; ராது.. உனக்கு ஒன்றுமில்லையடா!” கன்னம் தட்டி எழுப்ப முயன்றான்.
அவள் அசையாதிருக்கவே, அப்படியே நிலத்தில் கிடத்திய வேகத்தில் இடக்கை ஷோர்ட்ஸிலிருந்த கைபேசியை எடுத்து 112 அழுத்த, காவல் துறைக்கும் அம்புலன்ஸுக்கும் சொன்னவன், அடுத்த நொடி, மயங்கி விழுந்தவளை அதிர்வோடு பார்த்து நின்ற கணேஷை மின்னலாக அணுகியிருந்தான்.
ருத்திர தாண்டவ கோலத்தில் தன்னை நெருங்கியவனைப் பார்த்து வாயிலை நோக்கி நகர முற்பட்டவனை எட்டிப்பிடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் துவைத்தெடுத்து விட்டான் கார்த்திகேயன்.
மூச்சுவிட நேரம் கொடாது சரமாரியாக விழுந்த அடிகளாலும் மிதிகளாலும் நிலைகுலைந்த கணேஷ், தீனமான ஒலியோடு அலங்கோலமாகப் புரண்டு கிடக்க, ஓரெட்டில் மதுராவை அணுகினான் கார்த்திகேயன்.
“ராதும்மா இங்க பார், கண்ணைத் திற ராது!” அருட்டியவாறே அவளைத் தூக்கி, உள்ளே சென்று சோஃபாவில் கிடத்திவிட்டு, நீரை எடுத்து வந்து தெளித்து எழுப்ப முயன்றவன் மீண்டும் அவசரப்பிரிவுக்கு அழைக்கவும், அவர்களின் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
மயங்கிக் கிடந்தவள், கார்த்திகேயன் நீரைத் தெளித்து அருட்டியதும் மெல்ல முழித்து வலதுகரத்தை அசைக்கவே பெரிதும் முனகினாள்.
இடதுகையால் வயிற்றைப் பிடித்துக்கொண்டு மருண்டு அழுதவளை, “ஒண்ணுமில்லை மதுரா, இதோ டாக்டர் வந்து விட்டார். ஒன்றுமில்லை பயப்படாதே!” அதுவரை பதறித்துடித்துக் கொண்டிருந்தவன், அவள் கண்மலர்ந்ததும் சிறிதே சிறிதாக ஆசுவாசம் கொண்டாலும் நடுக்கம் மறையாது அணைத்து ஆறுதல் படுத்த முனைந்தான்.
அதைக் கண்ணுற்ற கணேஷ், உடலும் மனமும் நெருப்பாய் தகிக்க, வாங்கிய அடியில் நிலையாக எழுந்து நிற்க முடியாது சுருண்டு கிடந்தான்.
“என் முன்னால் அவளைத் தொடுறான்; கொஞ்சமும் சுரணையே இல்லாமல் இருக்கிறாளே! அப்போ, இவன்தான் இவளை சீரும் சிறப்புமாக வைத்திருக்க வந்த வள்ளலா? மாட்டையும் கன்றுகளையும் சேர்த்துப் பராமரிக்கப் போகிறானா? வெட்கங்கெட்டவன்! மானம் இல்லாதவன்.” அரட்டியவனை காவல் துறையினர் எழுப்பி நிறுத்தினர்.
“நான்…நான் எதுவுமே செய்யவில்லை! குழந்தைகள் பிறக்கும் நாள் கிட்டுவதால் ஏதாவது உதவி தேவையா என்று பார்த்துவர வந்த என்னை, கதைத்துக் கொண்டிருக்கும் போதே அடித்து வெளியில் தள்ளியது அவன் தான்! நான் எந்தப் பிழையும் செய்யவில்லை!“ காவல்துறையிடம் சாதித்தான் கணேஷ். அவர்களோ, அவன் பேச்சை காதில் வாங்க மறுத்தனர்.
இதையெதையும் உணராத மதுரா, வலக்கைவலியோடு அடிவயிற்றிலும் வலிப்பதுபோல் உணர்ந்தவளின் நெஞ்சிலும் மிகையாக வலியெடுத்தது! தலையோ விண்ணென்று தெறிக்க, திறந்த விழிகளை மூடிக்கொண்டு கார்த்திகேயனின் நெஞ்சிலேயே சாய்ந்து விட்டாள்.
அவனையோ, அவன் பேச்சையோ, அவனின் அருகாமையையோ அவள் புத்தி சிறிதும் உணர்ந்து கொள்ளவில்லை. சற்றுமுன் நடந்தவை பயங்கரமாக நினைவில் உலாவர, தான் சென்று சுவரில் மோதியதே மீண்டும் மீண்டும் நினைவில் வர, “அய்யோ! கடைசியில் என் குழந்தைகளுக்கு எதுவோ ஆகிவிட்டதா?” திடீரென்று குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாள்.
“நான் ஒரு பாவி! பாவி! என் குழந்தைகளையே வெறுக்க நினைத்தவள் தானே; அதுதான் அவர்களே போய் விட்டார்கள்.”
எவ்வளவோ மனம் சுணங்கினாலும், தன்னுள் இருந்த இரு உயிர்களையும் உற்ற துணையாக மிகையாக எதிர்பார்த்திருந்தவள், அவர்களுக்கு எதுவோ நடந்து விட்டது என்றே முடிவு செய்து கதறினாள்.
“ராது…இல்லம்மா…ஒன்றுமில்லை! இங்க பார்.” மீண்டும் அவள் கன்னம் தட்டிய கார்த்திகேயனை விரைந்து விலக்கிய முதலுதவி மருத்துவர், நடந்ததை அவனிடம் கேட்டவாறே மதுராவைப் பரிசோதித்தவர், அவளின் வலதுகை, பெருவிரலோடு இலேசாக வீங்கிப் போய் இருக்கவும், வயிறு நோவதாக அவள் மீண்டும் மீண்டும் அரட்ட, “ம்ம்ம்…ஹாஸ்பிட்டலுக்குப் போவோம்!” மடமடவென்று அவளை அழைத்துச் செல்ல முயன்றனர் .
“நான்…நான் நடந்தே வாறேன்!” திக்கியவள், மருத்துவரும் தாதியும் இருபக்கமும் பற்றிக்கொள்ள மெல்ல மெல்ல வெளியில் நடந்து வருகையில் வெறுப்பும் இயலாமையும் ஆத்திரமுமாக கணேஷை பார்த்தாள்.
“உனக்கு…உனக்கு நான்…என்ன கெடுதல் செய்தேன்? விலகியவளை… தொடர்ந்து வந்து…வதைக்கிறாயே! உனக்கு…உனக்கு என்னதான் வேண்டும்?” ஈனஸ்சுவரத்தில் முனகியவள்,
அதுவரை கணேஷின் புலம்பலைக் கேட்டிருந்த காவல்துறையினர் கார்த்திகேயனை நெருங்கி, “நீங்களும் ஸ்டேஷன் வரை வரவேண்டும்!” என்றதும் அதிர்வோடு நின்றாள்.
‘எனக்கு அடைக்கலம் தந்து, உற்ற சொந்தமாக கவனித்துக் கொண்டதைத் தவிர இவர்கள் என்ன தவறு செய்தார்கள்?!’ மனம் அரட்ட, ‘பதிலுக்கு நான் கஷ்டத்தையா கொடுக்கப்போகிறேன்! எவ்வளவு மரியாதையாக வாழ்பவர்கள் வீட்டில் இன்று..’ விழிநீருடன் கார்த்திகேயனை பார்க்க, அவனின் கலங்கிய பார்வையும் அவள் மீதுதான் இருந்தது!
“இவரில்…எந்த தப்புமில்லை; இவன்…இவன் தான்..” கணேஷை வெறித்தாள். “என்னை கண்டபடி பேசி, தள்ளி விட்டான். அதனால் தான் அவர் கைவைக்க வேண்டி வந்தது!” ஒரே மூச்சில் சொல்லிவிட்டுத் தள்ளாடினாள்.
“அடிப்பாவி! உன் புருஷனைவிட அவன் முக்கியமாகிப் போனானா?” தமிழில் கீரிச்சிட்டான் கணேஷ். அப்படியே மதுராவை துவைத்தெடுக்கத் துடித்த கரத்தை காவல்துறையினரைக் கருத்தில் கொண்டு அடக்கிக் கொண்டவன் மனமோ, வஞ்சினம் கொண்ட மிருக நிலைக்கும் சூழ்ச்சியும் சூதும் கொண்ட மனித நிலைக்கும் இடையில் பாலம் அமைத்து அதில் ஏறியமர்ந்து கொண்டது.
‘விடமாட்டேண்டி! ஒரு நொடி நிம்மதியாக மூச்சு விடவும் விடமாட்டேன்!’ மனதில் வன்மத்தோடு கறுவிக் கொண்டான் கணேஷ்.
“ஸ்டேசனுக்கு வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், முதல், மதுராவுக்கு ஒன்றுமில்லை என்று வைத்தியர் சொல்லட்டும்; இப்போ அவர்களோடு நானும் போகிறேன்!” தன் தந்தைக்கு மிகவும் பரிச்சயமான காவலதிகாரியின் கரம் பற்றி கிட்டத்தட்ட கெஞ்சினான் கார்த்திகேயன்.
“ம்ம்…சரி, போயிட்டு வா…” என்றவர்கள் கணேஷை ஏற்றிக்கொண்டு புறப்பட, மதுராவை ஏற்றிச் செல்லும் அம்புலன்சை தன் காரில் பின் தொடர்ந்தான் கார்த்திகேயன்.
இயந்திரம் போல காரைச் செலுத்திக் கொண்டிருந்தவன் மனமோ அவனிடம் இல்லை. பொங்கிப் பேரலையாகப் புறப்பட்ட உணர்வுகளின் பிடியில் முழிபிதுங்கித் திண்டாடிப் போனான் அவன்.
செல்லத் தங்கை; அவள் ஆசைகள், சந்தோஷம், விருப்பு வெறுப்பு என, பெற்றோர் மறைவுக்குப் பின்னான அவன் எண்ணங்கள், செயல்கள் அனைத்துமே நித்தியை முன்வைத்தே! இப்போது, அதில் மிகமிக அழகாக இணைந்திருந்தாள் மதுரா. அவள் வந்த நாளிலிருந்து எக்கணமும் அவளை வேற்றாளாக பிரித்துப் பார்த்ததில்லை இவன்.
நாட்கள் உருள உருள, அவளில் அப்பப்போ தடுமாறினான். தன்னைத்தானே தட்டிக்குட்டிக் கொண்டான். அவள் நினைவில் தான் இடறிவிழும் போதெல்லாம் அதைச் சிறிதும் ஏற்காது, அதிலிருந்து தப்புவதற்கான காரணங்களைத் தேடித் தேடிக் கற்பித்துக் கொண்டான் .
‘அவள் மீதான ‘பரிதாபம்’ என்கின்ற கம்பளிப்போர்வைக்குள் என் மனதையும் ஒழித்திருந்தேன் போலும்! இல்லையேல், அந்த ‘ராது’ என்கின்ற அழைப்பு வந்திருக்குமா?’ இவ்வெண்ணம் குறுக்கிட்ட கணம், கால்கள் சர்ரென்று பிரேக்கை அழுத்த, சற்றே தடுமாறி, சமாளித்து, முன்னே சென்றுவிட்ட அம்புலன்சை தொடர்ந்தான்.
நிலையில்லாது தத்தளித்த அவன் மனமும் அலைந்து திரியத் தொடங்கியது!
‘அவளின் துன்பத்தில் என் மனம் சுணங்கியதேன்! அவளின் முகம் கன்றலை சகிக்காத மனமோ, அதைப் போக்கிவிடு என்று எனக்கு ஆணையிட்டதேன்! அவளின் அவமானமும் மனவேதனையும் என்னுடையதாக, அனைத்தையும் அகற்றி அவளை மகிழ்விக்க சங்கல்பம் கொண்டு செயல்பட்டதேன்!’ பெருமூச்செறிந்தான்.
காரணம், இத்தனைக்கும் தன்னை அவளோடு இணைத்துமட்டும் பார்க்க முனையவில்லை அவன். அது தானாக இணைந்திருந்ததை இத்தனை நாட்களாக அவன் கவனிக்கவில்லையோ!
இப்படியான தருணத்தில், அவளின் இந்நிலைக்குக் காரணமானவன் தேடி வந்து வம்பிழுக்கையில் கையைக் கட்டிக்கொண்டிருப்பானா?
ஆனால், “அது அவளுக்கே ஆபத்தாகி விட்டதே!” அடங்க மறுத்த வருத்ததோடு முணுமுணுத்தான்.
‘எத்தகையை ஆபத்தென்றாலும் இனி அவளை அணுக அனுமதியேன்!’ என்று துணிந்த அவன் மனம், ‘இன்று நடந்ததில் அவளுக்கு எப்பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது!’ மானசீகமாக இறைவனை மன்றாடியது.
‘என் தங்கை, பலவந்தமாகத் தன்னைச் சுற்றி முள்வேலி போட்டு, அதில் முட்டி முட்டி வேதனைப்படுவதை கையாலாகாத்தனத்தோடு அல்லவா பார்த்திருந்தேன்! அதிலிருந்து அவளை இலாவகமாகக் காப்பாற்றி, என் மனதிலும் அமைதி தந்தாளே என் ராது!’
“ஆமாம்! அம்மாவை தொலைத்திருந்த நான், அவளுருவில் அம்மாவை கண்டேன்!” முணுமுணுத்தவன், இக்கணம் தன் மனதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து மகிழ்வை மீறி, திகைக்கவும் செய்தான்.
“அவளை எப்படி உங்கள் வீட்டில் வைத்திருக்கலாம்!” அன்று சீறியிருந்தார் சுதா. அவள் தொடர்ந்தும் அங்கே இருப்பதில் அவர் மனதில் கோபத்தோடுதான் இன்னும் இருக்கிறார்.
“நீ என்னதான் சொன்னாலும் இதெல்லாம் தேவையில்லாத வேலைகள்; சுமைகள்! இதுவரை உதவியதே பெரியவிடயம் தம்பி. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யாரும் வேற்று மனிதர்களுக்காக மினக்கட மாட்டார்கள்; அதை நினைவில் வைத்துக்கொள். கஷ்டத்தில் இருக்கும் சொந்தங்களையே பார்க்கத் தயங்கும் காலம் இது. இப்போ கமலாவும் அங்கே வருகிறார் தானே; குழந்தைகள் பிறந்த கையோடு அவர்களை அவரோடு இங்கு அனுப்பி வைத்துவிடு.” என, தன் அதிப்ருதியை வெளிப்படுத்தி, என்ன செய்ய வேண்டும் என்றும் கோடி காட்டியிருந்தார் அவர்.

